Sri Ragavendra

ராகவேந்திரர்,
குழந்தையாகப் பிறப்பதில் இருந்து படம் தொடங்குகிறது.
குழந்தைக்கு "வேங்கடநாதன்'' என்று பெயர் சூட்டுகிறார்கள்.
வேங்கடநாதன் சிறுவயதிலேயே மிகுந்த புத்திசாலியாகவும்,
சாஸ்திரங்களில் கரைகண்டவராகவும் விளங்குகிறான்.
ஒருநாள் அவன் பிரசாதமாக வாங்கி வரும் மாம்பழத்தை, கிருஷ்ணன்
வாங்கி சாப்பிடுகிறார். வீடு திரும்பும் வேங்கடநாதனிடம், "மாம்பழம்
எங்கே?'' என்று தந்தை கேட்க, "கிருஷ்ணன் வாங்கிச்
சாப்பிட்டு விட்டார்'' என்று அவன் கூறுகிறான்.
கோபம் கொண்ட தந்தை, "பொய்யா சொல்லுகிறாய்?'' என்று
வேங்கடநாதனை அடிப்பதுடன், தோப்புக்கரணம் போடச்சொல்கிறார்.
"கிருஷ்ணா! கிருஷ்ணா!'' என்று கூறியபடி அவன் தோப்புகரணம்
போட, கிருஷ்ணனே வந்து தோப்புக்கரணம் போடுகிறார்.
இக்காட்சியைக் காணும் தாயும், தந்தையும் வேங்கடநாதனின்
மகிமையை உணர்ந்து, கிருஷ்ணன் காலடியிலேயே உயிரை விட்டு,
சொர்க்கம் அடைகிறார்கள்.
அண்ணன் வீட்டில் வாழும் வேங்கடநாதன், வாலிப வயதை அடைந்ததும்
(ரஜினி) கும்பகோணம் சென்று அங்குள்ள மடாதிபதியின்
சீடராகிறார். வேத சாஸ்திரங்களை கற்றுத் தேர்ந்து,
மதுரைக்கும், பிறகு தஞ்சைக்கும் சென்று அங்குள்ள புலவர்களை
வாதத்தால் வெற்றி கொள்கிறார்.
குருவின் யோசனைப்படி, இல்லற வாழ்க்கையை மேற்கொள்கிறார்,
வேங்கடநாதன். சரஸ்வதி என்ற பெண் (லட்சுமி) அவருக்கு
மனைவியாகிறாள். ஒரு குழந்தையும் பிறக்கிறது.
சாதி வேற்றுமைகளைப் பாராது, மாட்டுக்கார சிறுவனை சீடனாக
ஏற்றதால், வேங்கடநாதனை அந்த கிராமத்து மக்கள் ஊரை விட்டே
விலக்கி வைக்கிறார்கள்.
இதற்கிடையே கும்பகோணம் சென்று, குருவை சந்திக்கிறார். "சம்சார
சாகரத்தில் இருந்து மீண்டு, சந்நியாசம் வாங்கிக்கொள்.
என்னுடைய வாரிசாக இந்த மடத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்''
என்று கூறுகிறார், குரு.
இதற்கு தன் மனைவியின் சம்மதத்தைப் பெற முயற்சிக்கிறார்,
வேங்கடநாதன். அவள் சம்மதிக்கவில்லை. இதனால் சஞ்சலப்படும்
வேங்கடநாதன் முன், சரஸ்வதி தோன்றி, "முன்ஜென்மங்களில் நீ
பிரகலாதனாகவும், பின்னர் வியாசராகவும் பிறந்தவன். இந்த
ஜென்மத்தில் நீ ராகவேந்திரர்'' என்று கூறி மறைகிறார்.
இதனால், மத்வ பீடாதிபதியாக பொறுப்பேற்கிறார்.
மனம் உடைந்த அவர் மனைவி, குழந்தையை உறவினரிடம் ஒப்படைத்து
விட்டு கிணற்றில் குதித்து உயிர் விடுகிறாள்.
ஆவியாக தன்னை வந்து சந்திக்கும் அவளை தூய்மையாக்கி,
சொர்க்கத்துக்கு அனுப்புகிறார், ராகவேந்திரர்.
பின்னர், நாடு முழுவதும் பிரயாணம் செய்கிறார்.
எழுதப்படிக்கத் தெரியாத இளைஞனை படிக்கச் செய்கிறார்.
முஸ்லிம் நவாப், "பரிசாக'' அளிக்கும் மாமிசத்தை மலர்களாக
மாற்றுகிறார்.
இப்படி பல அதிசயங்களை நிகழ்த்தும் ராகவேந்திரர், பல
ஜோசியர்கள் கூறிய கருத்துக்களை பொய்யாக்கி, 78-வது வயதில்
"ஜீவ சமாதி'' அடைகிறார்.

மாறுபட்ட ரஜினி
இந்தப் படத்தில், ரஜினிகாந்த் நடிக்கவே இல்லை.
ராகவேந்திரராகவே வாழ்ந்து காட்டினார்.
இளைஞனாக, திருமணம் ஆனவராக, இளம் துறவியாக, நடுத்தர
வயதுடையவராக, முதியவராக... இப்படி பல தோற்றங்களில் தோன்றி
நடிப்பில் புதிய உயரத்தைத் தொட்டார்.
அவர் மனைவியாக லட்சுமி பொருத்தமாக நடித்தார்.
கவுரவ வேடங்களில், அம்பிகா (ராஜ நர்த்தகி), சோழமன்னன் (மேஜர்
சுந்தர்ராஜன்), நவாப் (சத்யராஜ்) போன்றவர்கள் சிறிது நேரமே
வந்தாலும், மனதைக் கவர்ந்தனர்.
மற்றும் மோகன், கே.ஆர்.விஜயா, சோமயாஜ×லு, டெல்லி கணேஷ்,
மனோரமா, பண்டரிபாய், ஒய்.ஜி.மகேந்திரன், தேங்காய் சீனிவாசன்,
நிழல்கள்ரவி ஆகியோரும் உண்டு.
படத்துக்கு வசனம் எழுதும்
பொறுப்பை ஏ.எல்.நாராயணன் ஏற்றார். அவர் பக்தி சிரத்தையுடன்
வசனத்தை எழுதினார்.
வாலி எழுதிய பாடல்களுக்கு இளையராஜா இசை அமைத்தார்.
1-1-1985-ல் வெளிவந்த
இந்தப் படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு அளித்தது.
அந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதை, ரஜினிக்கு சினிமா
ரசிகர்கள் சங்கமும், சினிமா எக்ஸ்பிரஸ் இதழும் வழங்கி
கவுரவித்தன.
இப்படம் நூறு நாள் ஓடியது.
|