Movie Review
2.0
16 Vayathinille
Aandavan
Aarulirunthu Arupathuvarai
Aayiram Jenmangal
Aboorva Raagangal
Adutha Varisu
Alavudinum Aruputha Vizhakkum
Anbulla Rajinikanth
Anbuku Naan Adimai
Annaatthe
Annamalai
Arunachalam
Annai Oru Aalayam
Athisaya Piravi
Aval Appaadithaan
Avargal
Baba
Baasha
Bairavi
Bhuvana Oru Kelvikuri
Billa
Chandramukhi
Darbar
Dharmadurai
Dharmautham
Ejamaan
Endhiran
Engeyo Ketta Kural
Garjanai
Gayathiri
Guru Sishyan
Illamai Oonjaladukirathu
Jailer
Jhonny
Kaali
Kaala
Kabali
Kai Kodukum Kai
Kazhugu
Kochadaiyaan
Kodi Parakuthu
Kupathu Raja
Kuselan
Lingaa
Manithan
Mannan
Mappillai
Maveeran
Moondru Mudichu
Moondru Mugam
Mr. Bharath
Mullum Malarum
Murattukalai
Muthu
Naan Sigappu Manithan
Naan Vazha Vaipen
Naan Adimai Illai
Naan Mahaan Alla
Naatukku Oru Nallavan
Nallavanukku Nallavan
Netrikan
Ninaithale Inikum
Oorkavalan
Padaiyappa
Padikathavan
Panakaran
Pandiyan
Payum Puli
Petta
Pokiri Raja
Pollathavan
Priya
Puthu Kavithai
Raanuvaveeran
Raja Chinna Raja
Rajathi Raja
Ram Robert Rahim
Ranga
Siva
Sivappu Sooriyan
Sivaji
Sri Ragavendra
Thaai Veedu
Thalapathy
Thambikku Endha Ooru
Thanga Magan
Thanikaattu Raja
Thappu Thalangal
Thee
Thillu Mullu
Thudikkum Karangal
Unn Kannil Neer Vazhindal
Uzhaipazhi
Valli
Velaikaran
Veera
Viduthalai
Hindi Movies
Blood Stone

  Join Us

Movie Review

Oorkavalan (1987)

மக்களைக் கவ்வி நிற்கும் இருளை அகற்றுவதில் கலைகள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். குறைந்த பட்ச நேர்மை இருக்குமானால் மக்கள் விரோத செயல்களையும் சமுதாய சீர் கேடுகளையும் பற்றி பேசவாது செய்ய வேண்டும்.

அந்த வகையில் கடவுள் பெயரை சொல்லி காலம் காலமாக வளர்த்தெடுக்கப்பட்ட மூட நம்பிக்கைகளின் மீதான எதிர்ப்பை முன் வைத்தது, விதவை மறுமணத்திற்கு ஆதரவான புரட்சிகரமான கருத்துக்களை பேசியது என ரஜினியின் நடிப்பு வரிசையில் வித்தியாசமான ஒரு படம் தான் ஊர்க்காவலன்.

படம் வெளியான ஆண்டு – 1987

கதை திரைக்கதை – இராம.வீரப்பன்

தயாரிப்பு – சத்யா மூவிஸ்

வசனம் – ஏ எல் நாராயணன்

திரைக்கதை – இராம.வீரப்பன்

இயக்கம் – மனோபாலா

இசை: சங்கர் கணேஷ்

படத்தின் துவக்க காட்சியில் ஒரு பெரியவர் கண்களில் தேங்கி நிற்கும் வாழ்க்கையின் களைப்போடு திரையில் தோன்றுகிறார். தளர்ந்த நடையிட்டு இரும்படிக்கும் பட்டறைக்குள் நுழைகிறார். ஒரு சின்ன சங்கிலியை எடுத்து காதில் வைக்கிறார். அவரது நியாபக திரையில் வாழக்கை பின்னால் திரும்பி நிற்கிறது….அந்த பெரியவர் முகம் மெல்லத் திரையில் விரிகிறது… முகத்துக்கு சொந்தக்காரர் ரஜினிகாந்த்.

பின்னோக்கி செல்லும் நினைவுகளின் காலக்கண்ணாடியில் ஒரு சின்ன ஊர் காட்டப்படுகிறது. அங்கு இருக்கும் ஒரு இரும்பு பட்டறைக்குள் நுழைகிறது கதை. அந்த பட்டறைக்குச் சொந்தக்காரன் காங்கேயன், நாம் முதலில் பார்த்த பெரியவரின் இளவயது தோற்றத்தில் அதே ரஜினிகாந்த்.

காங்கேயனது உலகம், இரும்பு பட்டறை, நண்பர்கள், தம்பி மாணிக்கம் மற்றும் அவன் முறை பெண் வடிவு என சின்னது அமைதியானது, அழகானது.

தம்பியைப் படிக்க வைப்பதை லட்சியமாக கொண்டு உழைக்கிறான். தம்பிக்கு ஒரு வாழ்க்கையை அமைத்து கொடுத்த பின்பே தனக்கென ஒரு வாழ்க்கை என்று சபதம் எடுத்து வாழ்கிறான் காங்கேயன்.

காங்கேயனை தன் வாழ்க்கையென எண்ணி அவனை சுற்றி சுற்றி வரும் முரட்டு வெகுளி பெண் தான் வடிவு.

தாலியைக் கையில் வைத்து கொண்டு
காங்கேயன் போகும் இடமெல்லாம் அவனைப் பின்தொடர்ந்து மாமா மாமா என காதலை குழைந்து நெளிந்து வெளிப்படுத்தும் காட்சிகளில் வடிவு நம்மை சிரிக்க வைக்கிறாள் பல இடங்களில் நெகிழவும் வைக்கிறாள்.

படத்தின் ஆரம்ப கட்டக் காட்சிகள் காங்கேயன் கதாபாத்திரத்தை நிறுவதிலும், வடிவு காங்கேயன் காதலை பறைசாற்றுவதிலும் நகர்கிறது.

கலகலப்புக்கும் விறுவிறுப்புக்கும் கொஞ்சமும் குறைவில்லாமல் திரைக்கதை சீராக பயணிக்கிறது.

செண்பக வடிவாக ராதிகா, கிராமத்து பெண்ணாக அசத்தி இருக்கிறார். குறிப்பாக ரஜினிக்கும் இவருக்கும் இடையில் கோர்க்கப்பட்டிருக்கும் காமெடி கலந்த காதல் காட்சிகளில் ராதிகாவின் பங்களிப்பு ரசிக்கத்தக்கது.

குறிப்பாக தனக்கு வர போகும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என தன் நண்பர்களிடம் காங்கேயன் வருணிக்கும் இடம், அதை கேட்கும் ராதிகா அது போல் நடந்து தன் மாமாவின் மனம் கவர கிளம்பும் காட்சி சிரிப்பின் உச்ச கட்டம்.

ராதிகாவின் நடிப்பு அந்த காட்சியில் கொள்ளை சிரிப்பு என்றால் ரஜினியின் அடக்கமான நடிப்பு தருவதோ வெடி சிரிப்பு. தூக்கத்தின் பிடியில் இருக்கும் ரஜினியை இழுத்து வைத்து அர்த்த ஜாமத்தில் ரொமான்ஸ் செய்யும் ராதிகாவின் முயற்சிகளும் அதற்கு ரஜினி கொடுக்கும் reaction களும் அதகளம். பார்வையாளர்களுக்கு நல்லதொரு நகைச்சுவை விருந்து

கிராமத்தில் இருக்கும் முக்கிய பாத்திரம் சாமியாடி. அந்த ஊரில் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் சாமியாடியிடம் குறி கேட்ட பின்பே நடத்தும் வழக்கம் ஊர் மக்களிடம் இருந்து வருகிறது

இந்த சாமியாடி கதையின் போக்கில் ஒரு முக்கியத்துவம் பெற போகிறார் என்பதை இயக்குனர் ஆரமபத்திலே நமக்கு சில பல குறிப்புகளால் உணர்த்தி விடுகிறார்

சாமியாடியாக சங்கிலி முருகன். விழிகளை உருட்டியே மிரட்டுகிறார். வில்லத்தனம் கலந்த குணச்சித்திர வேடத்தில் மனிதர் அசத்துகிறார். ஊர்காவலன் இவரது திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல் கல் என்று தாராளமாய் கூறலாம்.

நகரத்தில் படித்து முடித்த காங்கேயனின் தம்பி மாணிக்கம் ஊருக்கு திரும்புகிறான். இங்கு படத்தின் முதல் முடிச்சு விழுகிறது. கிராமத்து பிரசிடெண்ட் ஐயா மகள் மல்லிகாவுக்கும் பட்டறைக்கார காங்கேயன் தம்பிக்கும் காதல் என்பதே அந்த முடிச்சு.

பிரசிடெண்டாக நடித்திருப்பது பாடகர் மலேசியா வாசுதேவன்.அதிகார திமிர், குல பெருமை, வறட்டு கவுரவம், பணக்கார மமதை என எல்லாம் சேர்ந்து கலந்து செய்த ஒரு பாத்திர படைப்பு, அதை மனிதர் அனாசயமாக செய்திருக்கிறார்.

தகப்பனாக ஏமாற்றம் அடைந்து ஆத்திரம் தலைக்கேற ஊர் தலைவர் என்ற அந்தஸ்து காக்க அவர் எடுக்கும் முடிவுகளும் மகள் மனம் நோக அவர் பேசும் கொடூர பேச்சுக்களும் படம் பார்க்கும் நமக்கு அவர் மீது கடும் வெறுப்பை ஏற்படுத்த தவறவில்லை.

படத்தின் டைட்டில் பாடலான முத்தம்மா மாரி முத்தம்மா பாடியதும் இவரே என்பது கூடுதல் தகவல்.

மலேசியா வாசுதேவன் வீட்டு கணக்கு பிள்ளையாக வெண்ணிற ஆடை மூர்த்தி. லேசாக கிச்சு கிச்சு மூட்டுகிறார் அவர் பாணியில்.

தம்பியின் காதலை அண்ணனிடம் சொல்லும் இடம் இன்னொரு குறிப்பிடத் தகுந்த காட்சி, அந்த தருணத்தில் ராதிகாவின் நடிப்பு மிகச் சிறப்பு.

ரஜினியின் யதார்த்த சிரிப்பு சட்டென மறைந்து சடாரென அவர் குரல் இரும்படிக்கும் முரட்டு தனம் கொள்ளும் போது அட்ரா சக்க அட்டகாசம்.

தம்பி மாணிக்கத்தின் காதல் கதையை வடிவு மூலம் தெரிந்து கொள்ளும் காங்கேயன் கடும் கோபம் கொள்கிறான். தம்பியை கண் மண் தெரியாமல் அடிக்கிறான். அந்த நேரத்தில் அங்கு வந்து சேரும் மல்லிகா காங்கேயன் காலில் விழுந்து தாலிப்பிச்சை கேட்கிறாள்.

பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள்.. காங்கேயன் மனம் கசியாதா என்ன? மனம் நெகிழும் காங்கேயன் மல்லிகாவிடம் அந்த திருமணம் நடக்கும் என வாக்கு கொடுக்கிறான். மல்லிகா மன நிம்மதியோடு வீடு போய் சேர்கிறாள்

பிரசிடெண்ட் தன் மகளுக்கு ஜமீன்தாரை சம்மந்தம் பேசி முடித்த நிலையில் அவர் தலையில் பேரிடியாக இறங்குகிறது இந்த செய்தி.

ப்ரெசிடெண்ட் வீட்டு மாப்பிள்ளையாக நிச்சயம் ஆன ஜமீன்தார் ராஜதுரைக்கும் காங்கேயனுக்கும் ஏற்கனவே ஒரு சின்னத் தகராறு நடந்து இருக்கிறது. படத்தின் ஆரம்ப காட்சிகளில் இதை நமக்கு இயக்குனர் காட்டியிருப்பார்.

ஜமீன்தாராக ரகுவரன், ரஜினிக்கு ஈடு கொடுக்கும் வில்லன். இவர் அறிமுக காட்சி ரஜினிக்கும் இவருக்குமான மோதலில் அனல் தெறிக்கிறது.

“காங்கேயன் ஊருக்குள் இருக்கான்ன்னா இடியும் புயலும் கூட யோசனை பண்ணி தாண்டா உள்ளே வரும்”

“காங்கேயன் ஊருக்குள் இருக்கான்ன்னா இடியும் புயலும் கூட யோசனை பண்ணி தாண்டா உள்ளே வரும்”

இப்போதும் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக உச்சரிக்கும் வசனம் இது.

ரகுவரனின் தோற்றமும் வசன உச்சரிப்பும் அவருக்கு திமிரான ஒரு வில்லத்தன கெத்தைக் கொடுக்கிறது.

ரகுவரனோடு வில்லத்தனம் செய்யும் கோஷ்டியில் ஒருவராக வந்து போகிறார் ஒய்.ஜி.மகேந்திரன்.

காங்கேயன் மூலம் ஏற்கனவே அவமானப்பட்ட ராஜதுரைக்கு இந்த காதல் விஷயம் மேலும் வேம்பு சுவையை ஊட்டுகிறது.

மறுநாள் கொடுத்த வாக்குப்படி பிரசிடெண்ட் வீடு போய் காங்கேயன் பெண் கேட்கிறான்.

பணம் அந்தஸ்து எனக் காரணங்களைக் காட்டி காங்கேயனை அவமானப்படுத்துகிறார் பிரசிடெண்ட். காங்கேயன் அவமானத்தில் தலையைத் தொங்கப் போட்டு துவளுகிற ஆள் இல்லையே. அதே இடத்தில் சீறும் சிங்கமாய் சிலிர்த்து நிற்கிறான்.

உக்காந்து சாப்பிடுறவங்க உழைத்து சாப்பிடுறவங்களோட சம்பந்தம் பண்ண மாட்டாங்க…

நம்ம உடம்பு தோல்ல தைச்சது இவங்க உடம்பு பணத்தாலே தைச்சது…

நாம செத்தா ஆறு அடி இவங்க செத்தா அறுபது அடி…

நாம செத்தா சவுக்கு கட்டையிலே எரிப்பாங்க… அவங்க செத்தா சந்தன கட்டையில எரிப்பாங்கன்னு…

பிரசிடெண்ட் வீட்டில் காங்கேயன் பேசும் வசனங்கள் வர்க்க பேதங்களை நான்கே வரிகளில் மிகவும் ஆழமாகவும், அழகாவும் அலசுவதாக அமைந்து இருக்கும்.

பட்டறையில் என் மகள் எரிவதற்கு நான் அனுமதிக்க மாட்டேன் என கொதிக்கும் ஊர் தலைவரிடம், என் பட்டறையில் இரும்பை எரிப்பது தான் வழக்கம் இதயங்களை எரிப்பதில்லை என காங்கேயன் கொடுக்கும் பதில் ரசிக்க வைக்கும் வார்த்தை ஜாலம்

தன் தம்பிக்கும் பிரெசிடெண்ட் மகளுக்கும் தான் திருமணம் நடத்தி வைப்பதாக ஊர் முன் சவால் விட்டு கிளம்புகிறான்.

படத்தில் பரபரப்பு இன்னும் உச்சம் பெறுகிறது. காங்கேயன் திருமணத்தை எவ்வாறு நடத்தப் போகிறான் என்ற ஆர்வம் நம்மையும் பிடித்து கொள்கிறது.

மல்லிகாவின் திருமண நாளன்று விழா மண்டபத்தில் அதிரடியாக நுழையும் காங்கேயன் போலீசின் துணையோடு நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்துகிறான். அதே மேடையில் தன் தம்பிக்கும் மல்லிகாவுக்கும் ஊரார் முன்னிலையில் மணம் முடித்து வைக்கிறான்.

இந்த திருமணத்தால் பிரசிடெண்ட் தன் சுற்றத்திடம் மரியாதை இழக்கிறார். அவமானத்தில் நெளிகிறார். மாப்பிள்ளை ஜமீன்தார்க்கு திருமணம் நின்றதில் காங்கேயன் மீதான வன்மம் கூடுகிறது. சாமியாடியும் தன் குறி தவறியதில் வருத்தம் அடைகிறார்.

காங்கேயனுக்கு விரோதமாக இப்போது மூன்று எதிரிகள் எழுந்து நிற்கிறார்கள். மூன்று பேரையும் சாமாளித்து தன் திருமண சவாலை வென்று தன் கெத்தை நிறுவுகிறான் காங்கேயன்

காங்கேயனிடம் தோற்ற மூவரும் நெஞ்சில் வஞ்சம் வளர்த்து கொண்டு சுற்றுகிறார்கள். காங்கேயனைப் பழி தீர்க்க வழிவகைகளை தேடுகிறார்கள்.

புதுமண தம்பதிகளை கோயிலுக்கு குறி கேட்க அழைத்து செல்லுகிறார்கள். சாமி கும்பிட்ட படி நிற்கிறார்கள் தம்பதிகள். அப்போது ஆவேசமடையும் சாமியாடி யாரும் எதிர்பாக்காத நிலையில் அங்கு இருக்கும் சூலாயுத்தை கையில் எடுத்து காங்கேயனின் தம்பியின் மீது பாய்ச்சுகிறான். அந்த இடத்திலலேயே அண்ணன் கண்ணுக்கு முன்னே தம்பி உயிர் பிரிகிறது

நடந்தது ஒரு கொலை என காங்கேயன் உணர்ந்து கொள்கிறான். அந்த அநியாயத்தைத் தட்டி கேட்க காங்கேயன் முயன்றும் அவனுக்கு நீதி கிடைக்காது போகிறது. இது சாமி கொடுத்த தண்டனை என்று வழக்கை திசை திருப்பி விடுகிறார்கள்.

இந்நிலையில் ஊரில் பல குடிசைகள் பற்றி எரிகின்றன. தெய்வக்குத்தம் நடந்தன் விளைவு என மக்கள் பேசிக் கொள்கிறார்கள். தெய்வம் கோபம் கொள்ள காரணம் ஊர்த்தலைவர் சாமியின் விருப்பம் கேட்டு நிச்சயிக்க பட்ட தன் மகள் திருமணத்தை முறித்து வேறு இடத்தில் கல்யாணம் நடக்க விட்டு வேடிக்கை பார்த்தது தான் காரணம் என்று நினைக்கிறார்கள். சாமி குத்தம் நீங்கி கடவுள் கோபம் தீர வேண்டுமென்றால் மல்லிகா அவளுக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கே கட்டி கொடுக்க பட வேண்டும் என ஊர்தலைவரை வற்புறுத்துகிறார்கள்.

மக்களின் அழுத்தம் காரணமாக மல்லிகாவுக்கு ஜமீனோடு மறுமணம் செய்ய பிரசிடெண்ட் முடிவு செய்கிறார். ஜமீன் வீடு போய் தன் மகளை மணக்கும் படி வேண்டுகோள் விடுக்கிறார். இதற்காக காத்திருக்கும் ஜமீனும் ஒத்து கொண்டு மல்லிகாவைக் கூட்டி போக வருகிறான். காங்கேயன் ஜமீனை திருப்பி அனுப்புகிறான்.

இனி மல்லிகாவுக்கு அவள் அப்பா வீட்டில் பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்து ப்ரெசிடெண்ட் மகளை தன் வீட்டு மருமகள் என அறிவிக்கும் காங்கேயன், தன் வீட்டுக்கு அவளை அழைத்து செல்கிறான்.

கணவனை இழந்து நிற்கும் மகளுக்கு சீர் கொடுக்க ஊர்த்தலைவர் வரும் காட்சி ஒரு இளம் விதவை பெண்ணின் மீது இந்த சமூகம் உமிழும் வன்மத்தை தோலுரித்து காட்டும் காட்சி.

அதே காட்சியில்,மகளுக்கு ஊர்த்தலைவர் கொடுக்கும் வெள்ளை புடவையைக் காங்கேயன் தீயிலிட்டு பொசுக்கும் நிகழ்வு பெரும் புரட்சியை எளிமையாக சொல்லும் தருணம். ரஜினியின் விழியும் நெருப்பை உமிழும் காட்சி அது

மல்லிகாவுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுப்பதாக சபதம் செய்கிறான் காங்கேயன்.

பூ வாடி கருகலாம் ஆனால் மொட்டிலே கருக கூடாது என்ற கருத்தை முன்வைத்து கைம்பெண் மறுவாழ்வை முன்னெடுக்கிறான்.

காங்கேயனின் இந்த நல்ல முயற்சிக்கு பிரசிடெண்ட் ஜமீன் தாரோடு இணைந்து தன் மகள் வாழ்வு என்றும் பாராமல் முட்டுக்கட்டை போட துணிகிறார் .

சாமியாடியும் இவர்களோடு கூட்டு சேர்த்து கொள்ளபடுகிறார். இந்த பெரிய மனிதர்களின் கூட்டு எதிர்ப்பைக் காங்கேயன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதும் தன் தம்பியை சாமியாடி கொன்றதன் பின்னால் இருக்கும் வஞ்சக சூழ்ச்சியை எப்படி வெளி கொண்டு வருகிறான் என்பதும் மீதி கதை.

சூழ்ச்சிகளை வெல்ல காங்கேயன் கொடுத்த விலை என்ன என்பதும் கதையின் முடிவில் தெரிந்து கொள்ளலாம்.

தன் எண்ணப்படி மல்லிகாவின் வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்தி கொடுத்தானா காங்கேயன் என்பது படத்தின் கிளைமேக்ஸ் சொல்லும் செய்தி

மல்லிகாவாக நடிகை சித்ரா, கலகல காதலியாக அறிமுகமாகி பின் கணவனை இழந்த மனைவியாக களை தொலைத்து நிற்கும் வேடம்.படமே இவரைச் சுற்றி தான் நகரும். நிறைவான நடிப்பு.

படத்திற்கு பாடல்கள் மிகப்பெரும் பலம். சங்கர் -கணேஷ் இசையில் அனைத்து பாடல்களும் கிராமிய பாணியில் கட்டமைக்கப் பட்டவை.

பாடல்களில் வரும் கோரஸ் பகுதிகள் கிராமபுறங்களில் புழங்கும் குலவை சத்தங்களை அடிப்படையாக கொண்டிருப்பதை கவனிக்க முடியும்.

மண் வாசத்துக்கு – முத்தம்மா மாரி முத்தம்மா..
காதலுக்கு – மாசி மாசம் தான்…
கனிவுக்கு – மல்லிகை பூவுக்கு கல்யாணம்..
கலகலப்புக்கு – பட்டுசட்டைக்காரன்
தத்துவத்துக்கு – ஆத்துக்குள்ளே தீ பிடிச்சா
ரசிகனுக்கு எடுத்த சபதம் முடிப்பேன்.

இப்போதும் சரி கிராமத்துக்கு போக மனம் எத்தனித்தால் கண் மூடி ஊர்க்காவலன் பாடல்களுக்கு காது கொடுத்தால் போதும், அந்த இசை நம்மையும் நம் நினைவுகளையும் தன்னால் கிராமத்து பக்கம் அழைத்து செல்லுவது உறுதி.

படத்தில் நடிகர் பாண்டியன் வண்டிக்காரனாக ஒரு முக்கிய வேடத்தில் வருகிறார். நெகிழ்ச்சியான நடிப்பு.

ஹாலிவுட் படங்களில் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் என்று சூப்பர் ஹீரோ படங்கள் வருவதுண்டு. அதில் அந்த நாயகர்கள் செய்யும் சகாசங்கள் உலகெங்கும் உள்ள ரசிகர்களால் உற்சாகமாக ரசிக்கப்படுகிறது அவர்களை உலக ரட்சகர்களாய் மக்கள் ஏற்று கொண்டாடுவதும் நாம் அறிந்ததே.

ஊர்க்காவலன் படத்தில் ஜமீன்தார் ரகுவரன் ஏறி கிளப்பும் ஜீப்பை வெறும் ஒரு கயிற்றை தன் காலில் நாலு சுத்து சுத்தி அதனால் சீறி கிளம்பும் ஜீப்பை இழுத்து நிறுத்தி இது காங்கேயன் புடி என்று ரஜினி சொல்லும் அந்த காட்சி இருக்கே…

ஹாலிவுட் கொண்டாடும் மேற்சொன்ன ஆயிரமாயிரம் சூப்பர் ஹீரோக்கள் இருக்கலாம்.. அந்த ஒட்டு மொத்த ஹீரோக்களையும் ஒற்றை ஆளாய் ஓரம் கட்ட கூடிய ஒருத்தர் எங்க கிட்ட இருக்கார் அவர் தான் ரஜினி என்று சொல்லாமல் சொல்லும் காட்சி அது

அந்தக் காட்சியில் ராதிகாவின் புடவை முந்தானையில் அதிமுக கொடி வண்ணம் இருக்கும். படம் சத்யா மூவிஸ் தயாரிப்பு என்பதை சொல்லாமல் சொல்லும் காட்சி அது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும் திரையின் மாயாஜாலம் ரஜினி.

ஊர்க்காவலனை பொறுத்த வரை ரஜினிக்கு கொஞ்சம் அமைதியான வேடம் தான் ஆனால் ஆங்கு ஆங்கு ரஜினி பிராண்ட் சரவெடிகள் படத்தில் இல்லாமல் இல்லை.

சண்டை வரும் போது தலையில் கட்டும் கருப்பு கர்ச்சீப் ஆகட்டும்…

பட்டற லோக்கல் பட்டற என வார்த்தைகளை தோரனையாக உதிர்ப்பது ஆகட்டும்..

படம் நெடுக பக்கா ரஜினி முத்திரைகள் பல உண்டு.

ரஜினி ஹேர் ஸ்டைல் தமிழகத்தில் ஒரு தலைமுறையின் அடையாளம். 80கள் வரை பக்கவாட்டில் முடி கோதிய ரஜினி ஸ்டைல் நடு வாகுக்கு மாறியதும் இந்த படத்தில் இருந்து தான். மாசி மாசம் தான்..பாடலைக் கவனித்து பார்த்தால் இது புலப்படும்

அன்பு,காதல், கோபம், குரோதம், மோதல், சவால், தமாசு என்று கதைக் களம் அனைத்து விதமான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தி நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கும் படம் ஊர்க்காவலன், வாய்ப்புக்களை கெட்டியாக பிடித்து கொள்ளும் ரஜினி இதை விட்டுவிடுவாரா என்ன?

வேகம் விவேகம் வீரம் என கலந்து கட்டி அடித்திருக்கிறார் ரஜினி.

பொதுவாக ரஜினி படங்களில் நகைச்சுவை நடிகருக்கு நாயகனுக்கு இணையான ஒரு பாத்திரம் நிச்சயம் இருக்கும் ரஜினிக்கும் நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு என்பது நாடறிந்த விஷயம் கிட்டத்தட்ட எல்லா நகைச்சுவை நடிகர்களுக்கும் ரஜினியோடு டைம்மிங் அற்புதமாக பொருந்தி நமக்கு பல சிறப்பான நகைச்சுவை காட்சிகள் காணக் கிடைத்துள்ளன. இந்தப் படத்திலும் அது தொடர்கிறது.

இதில் நகைச்சுவை நடிகர்களுக்கான வேலையை ராதிகா செய்திருக்கிறார். ராதிகாவுக்கு ரஜினியோடு காதல் மற்றும் காமெடி கெமிஸ்ட்ரி அழகாக ஒன்று கூடி வந்திருக்கிறது.

இது தவிர குமரி முத்து மற்றும் இடிச்ச புளி செல்வராஜும் சிரிக்க வைக்க ரஜினியோடு கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள். சிரிப்பும் சிறப்பாக வருகிறது.

குறிப்பாக தன் வருங்கால மனைவியை குளப்படிகளில் அமர்ந்து ரஜினி மேற்சொன்ன இருவரிடமும் விளக்கும் போது இருவரும் கொடுக்கும் ஆர்வகோளாறான முக பாவங்கள்.. சுளுக் சிரிப்பு.

அதிலும் ரஜினி வர போகும் மனைவி “ஜில்பான்ஸா” ஒரு சிரிப்பு சிரிக்கணும் என்பார்.
ஜில்பான்ஸ்னா என்ற குமரி முத்துவின் கேள்விக்கு
எதாவது வடமொழி சொல்லா இருக்கும்யா என்ற செல்வராஜின் டைமிங் பதில்.. அபாரம்

இயல்பான காமெடி கூட்டணி.

மனோபாலா பிற்காலத்தில் ரஜினியோடு பல படங்களில் நகைச்சுவை நடிகராக வந்திருக்கிறார். அவர் இயக்குனர் என்பதும், ரஜினியை வைத்து படம் இயக்கி இருக்கிறார் என்பதும் இன்றைய தலைமுறை சினிமா ரசிகர்களில் பலர் அறியாத விவரம்.

தேவைக்கு செலவு செய்து பொழுபோக்கு அம்சங்களைக் கோர்த்து சொல்ல வந்த கருத்துக்களை கச்சிதமாய் சொல்லி இருக்கிறார் இயக்குனர். சொன்னதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

ஒளிப்பதிவு லோக்நாத், கண்களுக்கு ஒரு இனிய கிராமத்து ஓவிய படைப்பு.

வேங்கைய்யன் மகனுக்கு எல்லாம் மூத்தவன் ஊர்க்காவலன் காங்கேயன்.

ஊர்க்காவலன் – ஊரில் நடக்கும் அவலங்களை மூடநம்பிக்கைகளை எதிர்த்து புது புரட்சி கருத்துக்களை பொழுது போக்கான கோணத்தில் மக்களுக்கு சொன்ன படம்.

ரஜினி எனும் நடிகர் ‘மசாலா’ படங்களை மட்டுமே செய்வார் என்ற கருத்து பரவலாக பலகாலமாக
இருந்து வந்திருக்கிறது. பரப்பப்பட்டும் இருக்கிறது.

ஆனால் மசாலா படங்களிலும் சமூகத்திற்குத் தேவையான கருத்துக்களை, சமூக மாற்றத்திற்கான கருத்துக்களை தைரியமாகப் பேசிய ரஜினி எனும் சூப்பர்ஸ்டாருக்கு ஊர்க்காவலன் முக்கியமான மைல்கல் படம்.

- தேவ்



OORKAVALAN - KALKI REVIEW

(18.10.1987 தேதியிட்ட கல்கி இதழிலிருந்து . .  .)





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information