|
Engeyo Ketta Kural

ஸ்டைல் மன்னனாகவும்,
சூப்பர் ஸ்டாராகவும் மதிக்கப்பட்ட ரஜினிகாந்தை, ஒரு மகா
நடிகராக உயர்த்திய படம் "எங்கேயோ கேட்ட குரல்.''
"பி.ஏ. ஆர்ட் புரொடக்ஷன்ஸ்'' பேனரில் பஞ்சு அருணாசலம்
தயாரித்த படம் இது. கதை-வசனத்தை அவரே எழுதினார். இளையராஜா
இசை அமைக்க, எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார்.
மாறுபட்ட படம்
ரஜினிகாந்த் நடித்த படங்களில் முற்றிலும் மாறுபட்டது "எங்கேயோ
கேட்ட குரல்.'' படம் முழுக்க நான்கு முழ வேட்டியுடனும்,
சாதாரண சட்டையுடனும் தோன்றினார். ஆரம்பத்தில் இளைஞன். படம்
முடியும்போது முதியவர்.
இதற்குமுன், "ஆறிலிருந்து அறுபது வரை'' படத்தில்
குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தாலும், அது குடும்பக்
கதை. இது, மாறுபட்ட கதை; யதார்த்தமான கதை; கம்பி மீது
நடப்பது போன்ற கனமான கதை. படம் முழுவதும் கிராமத்திலேயே
தயாரிக்கப்பட்டது.
பஞ்சாயத்து தலைவர் டெல்லி கணேஷ் - கமலா காமேஷ் ஆகியோருக்கு
அம்பிகா, ராதா இருவரும் மகள்கள். பொன்னி (அம்பிகா)
படித்தவள். நாகரீகத்தை விரும்புகிறவள். வீட்டு வேலை எதுவும்
தெரியாது. அந்த ஊர் பெரியவருக்கு (வி.எஸ்.ராகவன்)
செல்லப்பிள்ளை. காமாட்சி (ராதா) குடும்பப் பொறுப்புகளை
உணர்ந்தவள்.
இவர்களுக்கு முறை மாப்பிள்ளை ரஜினிகாந்த்.
விருப்பம் இல்லாமலேயே ரஜினியை மணக்கிறார், அம்பிகா. ரஜினி
அன்புடன் நெருங்கி வரும்போது, "போய் குளித்து விட்டு
வாருங்கள். ஒரே வியர்வை நாற்றம்'' என்பார்.
இந்நிலையில் அம்பிகா கர்ப்பமாவார். அதைக் கலைக்க
முயற்சிப்பார். தாயாரும், ரஜினியும் தடுத்து விடுவார்கள்.
குழந்தைக்கு தாய்ப்பால் கூட கொடுக்க மாட்டார்.
சலனம்
இந்நிலையில், அம்பிகா மீது அன்பு செலுத்திய பெரியவரின்
மகனும், அவர் மனைவியும் மனப் பொருத்தம் இல்லாமல் பிரிந்து
விடுகிறார்கள்.
"உன் வாழ்க்கையும் வெற்றி பெறவில்லை. என் வாழ்க்கையும்
வெற்றி பெறவில்லை. நீ என்னுடன் சென்னைக்கு வந்துவிட்டால்,
இரு வரும் சேர்ந்து வாழலாம்'' என்று அம்பிகாவிடம்
பெரியவரின் மகன் கூறுகிறார். ஒரு நிமிடத்தில் ஏற்படும்
சலனத்தால், அவருடன் சென்னைக்கு செல்கிறார், அம்பிகா.
அங்கு சென்றதுமே அவர் மனம் மாறுகிறது. தன் தவறை உணருகிறார்.
மயக்கம் அடைந்து விழுகிறார். பிறகு, தீக்குளிக்க
முயலுகிறார். சிறு காயத்துடன் தப்புகிறார்.
இதற்கிடையே `ஓடிப்போன' அம்பிகாவை, கிராமத்தை விட்டு
பஞ்சாயத்து தள்ளி வைக்கிறது. ரஜினியின் துயரத்தைப் போக்க,
ராதாவை அவருக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள்.
அம்பிகாவின் குழந்தையை (மீனா) தன் குழந்தை போல ராதா
வளர்க்கிறார்.
இந்த தகவல், அம்பிகாவை அழைத்துச்சென்ற பெரியவர் மகனுக்குத்
தெரிகிறது. அதை அம்பிகாவிடம் கூறுகிறார். `கிராமத்துக்கு
வெளியே எனக்கு நìலம் இருக்கிறது. அதை உனக்கு எழுதித்
தருகிறேன். அங்கே வீடு கட்டிக்கொண்டு நீ வசிக்கலாம்'' என்று
கூறி அனுப்பி வைக்கிறார்.
துறவு வாழ்க்கை
மனதில்
சலனம் அடைந்தாலும், உடலில் களங்கப்படாத அம்பிகா, தன்
கிராமத்துக்கு வெளியே ஒரு குடிசை போட்டுக்கொண்டு
தன்னந்தனியே துறவி போல் வாழ்கிறார்.
இப்படியே 13 வருடம் ஓடுகிறது. தன் மகள் பருவப்பெண்ணாய்
நடமாடுவதை தூரத்திலிருந்தே பார்த்து கண்ணீர் விடுகிறார்,
அம்பிகா.
நாளடைவில், உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாக இருக்கிறார்.
தாய்ப்பாசத்தால், அவரை பார்க்க வருகிறார், கமலா காமேஷ். "அம்மா!
நான் ஒரு நிமிட சலனத்தால் வீட்டை விட்டு வெளியேறினாலும்,
உடலில் களங்கப்படாதவள்'' என்று கூறி, நடந்ததையெல்லாம்
கூறுகிறார்.
"நீ என் மகள்! நீ களங்கப்பட்டிருக்க மாட்டாய் என்று
எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருந்தது'' என்பார்,
கமலா காமேஷ்.
"அம்மா! சாவதற்கு முன் அவரை (ரஜினி) ஒரு முறை நான் பார்க்க
வேண்டும். மன்னிப்பு கேட்கவேண்டும்!'' என்று தாயிடம்
கூறுகிறார், அம்பிகா.
கடைசி ஆசை
அம்பிகா களங்கமற்றவர் என்பதை அறியும் ரஜினி, அவரை பார்க்கச்
செல்வார். கணவரை பார்த்துக் கதறுவார், அம்பிகா.
"என் மனதில் நீண்ட காலமாக ஒரு சுமை இருந்தது. நீ
களங்கப்படவில்லை என்று அறிந்ததும், அந்த சுமை இறங்கி
விட்டது. ஒரு சின்ன சபலம் கூட, ஒரு பெண்ணின் வாழ்க்கையை
வீணாக்கி விடும் என்பதற்கு உன் வாழ்க்கை ஓர்
எடுத்துக்காட்டு'' என்பார், ரஜினி.
"நான் அதிக நாளைக்கு உயிர் வாழமாட்டேன். நான் இறந்தால்,
எனக்கு செய்ய வேண்டிய சடங்குகளை நீங்கள் செய்ய வேண்டும்.
என்னை அனாதைப் பிணமாக விட்டு விடாதீர்கள். இதுதான் என்
கடைசி ஆசை'' என்று கண்ணீருடன் யாசிப்பார், அம்பிகா.
"உன் கடைசி விருப்பத்தை நிறைவேற்றுவேன்'' என்று கூறிவிட்டு
நடப்பார், ரஜினி.
அடுத்த நிமிடமே, ரஜினி விட்டுச்சென்ற செருப்பருகே சுருண்டு
விழுந்து உயிர் துறப்பார், அம்பிகா.
இதுபற்றி தகவல் தெரிந்ததும், ஊர் பஞ்சாயத்து கூடும். (பஞ்சாயத்து
தலைவர் அம்பிகாவின் அப்பாதான்)
அம்பிகா ஏற்கனவே கிராமத்தை விட்டு விலக்கி வைக்கப்பட்டவர்
என்பதால், அவர் உடலை அனாதைப்பிணமாக கருதி தகனம் செய்வது
என்று முடிவு செய்யப்படும். தகனச் செலவுகளுக்காக
வெட்டியானுக்கு 36 ரூபாய் 50 பைசாவை பஞ்சாயத்து வழங்கும்.
இதை அறியும் ரஜினி, அம்பிகாவின் உடலை தான் தகனம்
செய்யப்போவதாக அறிவிப்பார்.
"பஞ்சாயத்தின் கட்டளையை மீறினால், நீங்களும் ஊரை விட்டு
வெளியேற வேண்டியதுதான்'' என்று பஞ்சாயத்து தலைவர் கூறுவார்.
அதையும் மீறி, அம்பிகாவின் உடலை தன் இரு கைகளாலும்
தூக்கிச்சென்று தகனம் செய்து விட்டு, ஊரை விட்டு
வெளியேறுவார், ரஜினி.
ராதாவும், மகளும் அவருடன் செல்வார்கள்.
அம்பிகா நடிப்பு
இப்படத்தில் ரஜினிகாந்த் மட்டுமின்றி, அம்பிகாவும்
மிகச்சிறப்பாக நடித்திருந்தார். ராதா, கமலா காமேஷ், டெல்லி
கணேஷ் ஆகியோரும் பாத்திரத்தை உணர்ந்து நடித்தனர்.
படத்தில் தனியாக காமெடி எதுவும் கிடையாது. 14-8-1982 அன்று
இப்படம் வெளிவந்தது. முதலில் சில நாட்கள் கூட்டம் குறைவாக
இருந்தது. பிறகு கூட்டம் அதிகரித்தது. பெண்களை இப்படம்
அதிகமாகக் கவர்ந்தது. எனவே நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.
|