|
Murattukalai
ரஜினிகாந்த் நடித்த
முக்கிய படங்களில் ஒன்று "முரட்டுக்காளை.'' இதில் அவர்
கதாநாயகனாகவும், ஜெய்சங்கர் வில்லனாகவும் நடித்தனர்.
பட உலக நிலவரம் சரி இல்லாமல் இருந்ததால், ஏவி.எம். நிறுவனம்
சில காலம் படத் தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்தது. 1980-ல்
அவர்கள் மீண்டும் படத்தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்தனர்.
கதாநாயகனாக நடிக்க ரஜினிகாந்தை ஒப்பந்தம் செய்தனர்.
இதற்கான கதை-வசனத்தை பஞ்சு அருணாசலம் எழுதினார். இளையராஜா
இசை அமைக்க, எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார்.
வில்லன் ஜெய்சங்கர்
ஒரு கிராமத்தில், பண்ணையாருக்கும், ஏழை விவசாயிக்கும்
நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை.
கிராமியக் கதையாக இருந்தாலும், பொழுதுபோக்கு அம்சங்களை
நிறைய சேர்த்து படத்தை பிரமாண்டமாகத் தயாரிக்க ஏவி.எம்.
முடிவு செய்தது.
படத்தில் ஒரு புதுமையாக, ஜெய்சங்கரை வில்லனாக நடிக்க வைக்க
தீர்மானிக்கப்பட்டது. அதுவரை ஏராளமான படங்களில் கதாநாயகனாக
நடித்து, தமிழ்ப்பட உலகின் முக்கிய ஹீரோக்களில் ஒருவராக
ஜெய்சங்கர் திகழ்ந்து கொண்டிருந்தார்.
வில்லன் வேடத்தில் நடிக்க அவர் முதலில் தயங்கினார். எனினும்,
அவர் வேடம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், வலுவானதாகவும்
இருந்ததால் நடிக்க சம்மதித்தார்.
காளைச்சண்டை
இதில் விவசாயி காளையனாக ரஜினியும், பண்ணையார் மகனாக
ஜெய்சங்கரும் நடித்தார்கள்.
பண்ணையாரின் முரட்டுக்காளையை காளையன் அடக்குவான். அவனுக்கு
தன் மகளை திருமணம் செய்து கொடுப்பதாக பண்ணையார் அறிவிப்பார்.
ஆனால், காளையன் மறுத்து விடுவான்.
இந்த மோதல் காரணமாக அடுக்கடுக்காக நடைபெறும் சம்பவங்களால்,
படம் விறுவிறுப்பாக அமைந்தது.

படத்தின் உச்சகட்டமாக, ஓடுமë ரெயில் மீது ரஜினிக்கும்,
ஜெய்சங்கருக்கும் நடக்கும் சண்டை மயிர் கூச்செரியும்
விதத்தில் படமாக்கப்பட்டிருந்தது. பட அதிபர் ஏவி.எம்.சரவணன்
உள்பட பலர் கேட்டுக்கொண்டும், ரஜினி `டூப்' போட்டுக்கொள்ள
மறுத்து, சண்டைக் காட்சிகளில் அவரே துணிகரமாக நடித்தார்.
இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரதி நடித்தார். மற்றும்
சுமலதா, ஒய்.ஜி.மகேந்திரன், சுருளிராஜன், அசோகன், தேங்காய்
சீனிவாசன் ஆகியோரும் நடித்தனர்.
கதை, நடிப்பு, இசை அனைத்தும் சிறப்பாக அமைந்தன.
20-12-1980-ல் வெளிவந்த இந்தப்படம், 150 நாட்களுக்கு மேல்
ஓடி சாதனை புரிந்தது.
|