நண்பனின் காதல் மனதில்
ஏற்படுத்தி வைத்த சபலம் விபரீதமாகி மோகம் மூச்சை முட்ட
வெறித்தனம் விஸ்வரூபமெடுக்க ஒரு சமானியன் அடுக்கடுக்காய்
செய்யும் தவறுகளையே வரிசையாக காட்சிகளாக்கி, மாறிய உறவு
சமன்பாடுகளை ஏற்றுக்கொள்ளாத மனக் கிலேசத்தை மையமாக்கிய
சைக்காலஜிகல் ட்ரீட்மெண்ட் தமிழ் சினிமாவுக்கு புதுசு.
அதுவும் தமிழ் சினிமாவின் கெமிஸ்ட்ரியை மாற்றியமைத்து,
வில்லனை மையப்படுத்திய மூன்று முடிச்சு, பாலசந்தரின்
பரீட்சார்த்த முயற்சியில் வந்த ஒரு யதார்த்த சினிமா.
கலைந்த தலையும் கருப்பு
நிறமுமாக ஒரு பையனுக்கும், கூரான மூக்குடன் பெரிய
கண்களுடன் ஒரு புதுமுக பெண்ணிற்கும்தான் வெயிட்டான ரோல்
என்று டைரக்டர்
சொன்னதும் புரொட்யூசர் நிச்சயம் ஒரு மராத்தானுக்கு முயற்சி
பண்ணியிருந்திருப்பார். இடைவேளை வரைக்கும் கமல்ஹாசன்
ஒருவர்தான் மக்களுக்கு தெரிந்த முகம். இருந்தும் படம்
ஜெயித்து தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்ததற்கு
காரணம் கே.பி-ரஜினி-ஸ்ரீதேவி கூட்டணி.
தன்னுடைய மனைவியாக
வரவேண்டியவள் அம்மாவாக வந்தால் என்ன ஆகும் என்கிற
விபரீத கற்பனை கே.பியின் வழக்கமான டச். மூன்று முடிச்சில்
புதுசாக கே.பி சொல்லியிருப்பது எந்தவொரு மனிதனையும்
குற்றவுணர்ச்சி தப்ப விடுவதில்லை என்பதுதான். மனசாட்சியே
வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து துரத்திக்கொண்டு வந்து
நெருஞ்சிமுள்ளாய் நெஞ்சில் குத்துவதை வெற்றிகரமாக
காட்சிப்படுத்தியிருப்பார். ஹே இரைச்சலுடன் அருவியின்
பின்னணியில் கமலும் ஸ்ரீதேவியும் மவுத் ஆர்ஹான் வாசித்து
நெருங்கி வரும் ரொமாண்டிக் ஸீன் படத்தின் இளமை துள்ளல்.
அமைதியாக, அழகாக வந்து
ரஜினிக்கு நல்ல நண்பனாய் ஸ்ரீதேவியுடன் டீஸெண்டாய் ஒரு
டூயட் பாடி பரிதாபமாய் செத்துப்போகும் சின்ன பாத்திரத்தில்
கமல். கமலின் சாவுக்கு காரணம் தவறி விழுந்ததா அல்லது
துடுப்பு போடுவதை நிறுத்திய ரஜினியா என்று பட்டிமன்றம்
நடத்தினாலும் பதில் கிடைக்காத விஷயம். அந்த குழப்பம்தான்
ரஜினி காரெக்ட¨ரை தூக்கி நிறுத்த காரணமாகிறது. ரஜினியின்
பாத்திரம் வலியப் போய் மற்றவர்களுக்கு கெடுதல் செய்யாது.
ஆனால், வாய்ப்புகள் வரும்போது சரியாக பயன்படுத்திக் கொள்ள
தவறிவிடாது.
முதல் படத்திலேயே படு
மெச்சூரான ரோலில் ஸ்ரீதேவி. கமல் வாங்கி தந்த புடவையை
தீக்குச்சிக்கு தின்னக் கொடுத்துவிட்டு அதே டிஸைன் புடவையை
கொடுத்து கட்டிக்க சொல்லும் ரஜினியை அருவெறுப்பாக
பார்க்கும் ஸ்ரீதேவியின் முக பாவங்கள், ரஜினியை
பார்க்கும்போதெல்லாம் சிரிப்பை தொலைத்துவிட்டு இறுக்கமாகும்
முகம் என ஸ்ரீதேவி என நிறையவே ஆச்சரியப்படுத்தியிருப்பார்.
குடும்ப சூழ்நிலையின் காரணமாக அப்பா வயதிலிருப்பவரின்
மனைவியாகும்போது கூடவே முதிர்ச்சியும் ஒட்டிக்கொள்கிறது.
காதலியாக இருந்தவரை
அம்மாவாக பார்த்த அதிர்ச்சியில் ரஜினி உறைந்து நிற்கும்போது
'என்னடா கண்ணா...அப்படி பார்க்குறே.. நான் உன் அம்மா
மாதிரிடா'ன்னு வசனம் பேசும்போது காட்டும் லாவகம் தனி ரகம்.
ஆனால், மிரட்டலுக்கு பயந்தோ அல்லது மிரட்டியவனை
முக்குடைப்பதற்காக அம்மாவாக மாறுவது என யதார்த்ததை மீறிய
கற்பனை, கதையோடு ஒட்டவில்லை. அப்பாவாக வந்து ரஜினியை
திருத்தும் அந்த பிரபல நடிகரின் பெயர் தெரியவில்லை
என்றாலும் வயதுக்கு வந்த மகனிடம் தான் கல்யாணம்
செய்துகொண்ட விஷயத்தை சொல்லும்போது காட்டும் தவிப்பில்
பளிச்சிடுகிறார். நாகேஷை ஞாபகப்படுத்தும் ரஜினியின் தாத்தா
கேரக்டரும் கலகலப்புக்கு உத்தரவாதம்.
தவறு மேல் தவறு
செய்துவிட்டு குற்றவுணர்ச்சியை மறைக்க முடியாமல் தவிக்கும்
நெகடிவ் பாத்திரம் ரஜினிக்கு. படத்தில் வசனத்தை விட
ரஜினியின் கைகளுக்குதான் அதிக வேலை. பயத்தையும்
அதிர்ச்சியையும் வெளிக்காட்டாமலிருக்க சிகரெட்டை தூக்கிப்
போட்டு பிடித்த ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் காட்சியும்,
டேபிளின் மீது வைக்கப்பட்டிருக்கும் துப்பாக்கியை எடுப்பதா,
வேண்டாமா என்கிற மனப்போராட்டத்தை டைட் குளோஸப்பில்
வெளிப்படுத்தும் காட்சியிலும் ரஜினியின் உள்ளிருக்கும்
நல்ல நடிகர் எட்டி பார்ப்பார்.
கமலின் இழப்பை நினைத்து
டேபிளில் தலைவைத்து குலுங்கி அழும் காட்சி, படகிலிருந்து
தவறி விழுந்த அப்பாவை காப்பாற்ற முடியாமல் தவிக்கும்
நேரத்திலும் கொஞ்சம் பரிதாபத்தை வரவழைத்திருப்பார். ஆரம்ப
காட்சிகளில் அமைதியாக வந்துவிட்டு, தனது குரூர
வில்லத்தனத்தை காட்டி கிளைமாக்ஸில் பரிதாபமாய்
திருந்திவிட்டதாக அழும் காட்சிகளில் சடார், சடாரென்று
மாறும் முகபாவங்கள்தான் தமிழ் சினிமா ஆடியன்ஸீக்கும்
வில்லனுக்கும் இருந்த இடைவெளியை குறைக்க ஆரம்பித்த
விஷயங்கள்.
கமலின் முதுகை நோட்டீஸ்
போர்டாக்கி ரஜினியும் ஸ்ரீதேவியும் மோதிக்கொள்வதும்
ஸ்ரீதேவியின் மீதிருக்கும் கோபத்தில் வேலைக்காரியிடம்
தவறாக நடந்துகொள்வது அக்மார்க் வில்லத்தனம் என்றால்
ஸ்ரீதேவி தன்னைவிட்டு எங்கும் போய்விட முடியாது என்கிற
அதீத தன்னம்பிக்கையுடன் அநாயசமாக ரஜினியிடமிருந்து வரும்
சிரிப்பு வழக்கமான பி.எஸ் வீரப்பா ஸ்டைல்.
பாத்ரூமில் குளிக்கும்
ஒய். விஜயாவின் கோர முகத்தை பார்த்துவிட்டு அதிர்ந்து போய்
ஓடும் காட்சி படத்துக்கு தேவையில்லை என்றாலும் கே.பியின்
அழுத்தமான டச் மனதை தொடுகிறது. வசந்த கால நதியினிலே, ஆடி
வெள்ளி என எம்.எஸ்.வி-கண்ணதாசன் கூட்டணிக்கு இன்னொரு பெயர்
சொல்லும் படம். காதலனை இழந்துவிட்டு கலங்கி நிற்கும்
பெண்ணிற்கு ஆறுதல் சொல்ல மாயவனை துணைக்கு அழைக்கிறார்.
மன வினைகள் யாருடனோ
மாயவனின் விதி வகைகள்
விதிவகைகள் முடிவு செய்யும்
வசந்த கால நீரலைகள்...
வாழ்க்கையின் தாத்பரியத்தை நாலே வரிக்குள் மடித்து
அடக்கிவிட்ட கண்ணதாசன் நிஜமாகவே கிரேட்தான்!
- ஜெ. ரஜினி ராம்கி