ரஜினி அரசியல் வேகம் அடைகிறது என்பதன் வெளிப்பாடு தான் இந்த நிர்வாக விதிகள் அடங்கிய 36 பக்க புத்தக வெளியீடு.
எந்த ஒரு அமைப்பிற்கும் சங்கத்திற்கும் அடிப்படை, "விதிகள்" தான். சிலர் கட்சி தொடங்கிய பின்பும் இவ்வாறான நிர்வாக விதிகளை வெளியிடுவார்களா?! என்பது ஐயமே.
6 மாதத்துக்குள் கொள்கைகள் தயாராகும் என்று சொல்லி அமைதியாக இருப்பவர்கள் மத்தியில் எதையும் சொல்லாமலேயே தன் ஆன்மிக அரசியலுக்கான அடுத்தடுத்த முன்னோட்டங்களைப் படிப்படியாக வெளியிடுகிறார் ரஜினிகாந்த்.
நிர்வாக விதிகள் அனைத்தும் சமூக வலைதளத்தில் வெகுவாகச் சிலாகிக்கப்படுகின்றன.
அதிலும் சாதி மதப் பின்புலம் கொண்டவர்களுக்கு மன்றத்தில் இடமில்லை, 35 க்கு வயதுக்கும் மேல் இளைஞரணியில் இடமில்லை, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி என்பதெல்லாம் மிகப்பெரிய சிக்சர்கள்.
இவை அல்லாமலும் பல முக்கிய விதிகள் இருக்கின்றன.
இளைஞரணி, மகளிரணி, மீனவரணி,விவசாய அணிக்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவமும் அதற்கு வழங்கப்பட்டிருக்கும் முன்னுரையும் சாமானியர்களையும் கவரக்கூடியது.
அதில் ரஜினியின் எதிர்காலத் திட்டங்களுக்கான அடிநாதம் அமைந்திருக்கிறது. சார்பு அணிகளின் முக்கியத்துவம் நன்கு விளக்கப்பட்டிருக்கிறது.
மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை என அனைத்து மட்டத்திலும் செயலாளர்களின் எதேச்சதிகாரத்தை ஒழித்து முழு ஜனநாயக முறை கொண்டு வரப்பட்டிருப்பது மற்றுமொரு மணிமகுடம்.
கழகங்களில் இந்த ஜனநாயக வழிமுறைகளைக் காண முடியாது. மா.செ எடுப்பதே இறுதி முடிவு.
இங்கும் அதே தான் இறுதி முடிவு ஆனால், செயற்குழுவில் ஒரு மாதத்துக்குள் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பது மா.செக்களின் எதேச்சதிகாரப்போக்குக்கு வைக்கப்பட்டிருக்கும் செக்.
எடுக்கும் முடிவை செயற்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும் என்பது மிக மிக முக்கியமான ஜனநாயக விதி.
இது அப்படியே அனைத்துமட்ட செயற்குழுவுக்கும் பொருந்தும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது.
அதே போல இணையத் தளங்கள் பெருகி சமூக வலைதள ஆதிக்க முதன்மை பருவத்தில் நின்று கொண்டிருக்கிறோம்..
அதனை புறக்கணிக்காமல் அதற்கும் சில பக்கங்களுக்கு முழுமையாக நிர்வாக விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.
தகவல் தொழில்நுட்ப அணிக்கான அதிகார செயல்பாடுகளை நிர்வாக விதிகளோடு சேர்த்த முதல் அரசியல் இயக்கம் ரஜினி மக்கள் மன்றமாகத் தான் இருக்கக்கூடும்.
அரசியல் கட்சிகள் தொடர்ந்து கடைபிடிக்கும் விரும்பத்தகாத நிகழ்வு கார்களில் கொடியை பறக்கவிட்டபடி சுற்றும் நிகழ்வு..அதற்கும் ரஜினி மக்கள் மன்றத்தில் இடமில்லை.
முக்கியக் கூட்டம்,மாநாடு,பிரச்சாரம் தவிர்த்து கொடிக்கு ஒரு பிக் நோ... அதுவும் துணிக்கொடி மட்டுமே அனுமதி.
கூட்டங்கள் முடிந்ததும் இடத்தினைச் சுத்தம் செய்து கொடுப்பது வரை நிர்வாக விதிகளில் இடம் பெற்றிருக்கிறது என்றால் தமிழகம் நோக்கிய கனவில் ரஜினி எத்தகைய உறுதியில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது..
தலைமைக் கழக நிர்வாக விதிகள், உள் கழகத் தேர்தல் விதிகள் முழுமை பெற்றால் இந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாக விதிகள் அப்படியே ஒரு அரசியல் கட்சிகாகக் கட்சிதமாகப் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
நிர்வாக விதிகளுக்கே இவ்வளவு மெனக்கெடல்கள் இருக்கும்போது கொள்கை கோட்பாடுகளுக்கு எவ்வளவு மெனக்கெடல்களும் திட்டமிடலும் இருக்கும் என்பதை நம்மால் ஊகிக்க முடியும்.
கொடி அறிமுகம், கொள்கை அறிமுகம், கட்சி அறிவிப்பு மாநாடு, கொள்கை விளக்க பொதுக்கூட்டம், தலைவரின் சுற்றுப்பயணம், தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் என அடுத்த 8 மாதங்களை ரஜினியே தமிழக அரசியலில் ஆக்கிரமிக்க இருக்கிறார் என்பதன் சமிக்ஞை தான் இப்புத்தக வெளியீடு.
வரும் தேர்தல் ரஜினி வேண்டுமா வேண்டாமா என்பதாகத்தான் அமையும் எனப் பல்வேறு அரசியல் வல்லுநர்கள் கணிப்பதை போலவே அமையும் போலிருக்கிறது.
மொத்தத்தில் இப்படிப்பட்ட ஒரு திட்டமிடலுடன் கூடிய தலைவரைத் தான் தமிழகம் எதிர்பார்த்தது.
இதோ நம் கண்முன்னே அது நனவாகிக்கொண்டிருக்கிறது... வருக வருக எங்கள் மக்கள் தலைவரே.. 🤘🤘
எழுதியவர் : ஜெயசீலன் / திருத்தம் உதவி : கிரி
|