ரஜினியும், கமலும் மிகச் சிறந்த நண்பர்களாக இருக்கும்போது, கமலைப் பற்றி விமர்சிக்க வேண்டாம் என்று நிறைய நண்பர்கள் என்னிடம் கூறுகிறார்கள். அவரை நாம் விமர்சனம் செய்வதற்குக் காரணம் என்ன?
முன் குறிப்பு : கமல் அவர்களின் நடிப்பின் மீதும், அவரது கலைத்துறையின் ஆர்வம் மீதும் எங்களுக்கு மிகப் பெரிய மரியாதை உண்டு.
எனக்கு 2000ஆம் ஆண்டுக்குப் பின்தான் சற்று விவரம் புரியும் என்பதால், அதன் பின் நிகழ்ந்த நிகழ்வுகளைத் தொகுக்கிறேன்.
2002 ஆம் ஆண்டுப் பாபா படம் வெளியாகிறது. ரஜினிக்கு பாமகவால் மிகப் பெரிய தொந்தரவு வருகிறது. ஒரு திரையரங்கில் பாபா படத்தின் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள்.
நடிகர் சங்கம் உள்ளிட்ட எவரும் ரஜினிக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவில்லை. ரஜினி தனி ஆளாக நின்று பிரச்சனையை எதிர்கொள்கிறார் ஆனால், இது தொடர்பாகக் கமலிடம் இருந்து ஒரு ஆதரவு குரல் வரவில்லை.
இதே நிலைமைதான் குசேலன், லிங்கா போன்ற படங்களின் போதும். இதுவரை ரஜினி கஷ்டத்தில் இருந்தபோது, கமல் பொதுவெளியில் உடனடியாக அவருக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியதாக என் நினைவில் இல்லை.
ஆளவந்தான் தோல்வி அடைந்த போது, கலைப்புலி எஸ்.தாணு "ஆளவந்தான் தன்னை அழிக்க வந்தான்" என்று கூறுகிறார். உடனே ரஜினி, அவரை அழைத்துக் கண்டிக்கிறார்.
"அவர் எவ்வளோ பெரிய நடிகர், அவரைப்பற்றி நீங்கள் இப்படிப் பேசலாமா?" என்று தன்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்கிறார்.
விஸ்வரூபம் படம் வெளியானபோது கமலுக்கு ஏற்பட்ட பிரச்னையைப் பார்த்து, அவரது வீட்டிற்குச் சென்று ஆதரவுத் தெரிவித்தார். கமலுக்கு ஆதரவாக, முஸ்லீம் அமைப்புகளிடம் படம் வெளியாக உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்தார்.
2002 ஆம் ஆண்டு ரஜினி காவிரி பிரச்சனையில் உண்ணாவிரதம் இருந்த போது, அங்கே செய்தியாளர்களிடம் பேசிய கமல், இது ஒரு அரசியல் மேடை என்று கூறி, அந்த உண்ணாவிரதத்தை அவமதிக்கிறார்.
ஏப்ரல் 14,2005 ஆம் ஆண்டு, சந்திரமுகியும், மும்பை எக்ஸ்பிரஸ் படமும் ஒரே நாளில் வெளியாகிறது. அப்பொழுது செய்தியாளர்கள் கமலிடம் கேள்வி கேட்கிறார்கள்.
"மும்பை எக்ஸ்பிரஸ் படம் சந்திரமுகியுடன் வெளியாகுமா?" என்று. அதற்கு கமல், "மும்பை எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 14,2005 ரிலீஸ் ஆக வேண்டாம் என்று நினைப்பவர்கள், கடவுளிடம் வேண்டி கொள்ளட்டும்" என்று கூறுகிறார்.
என்னவோ, ரஜினியும், ரஜினி ரசிகர்களும் இவர் படம் வெளிவந்தால் சந்திரமுகி படம் தோல்வி அடையும் என்று நினைப்பது போல!! ஆனால் நடந்தது என்ன?
மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் கமல் நடித்ததை, அவரே மறந்து இருப்பார். அப்பொழுது, என் நண்பன் ஒருவன் கமல் படம் அனைத்தும் 10 வருடம் கழித்துப் பார்த்தால் நன்றாக இருக்கும்.
இந்தப் படம் 10 வருடம் கழித்து அனைவரும் கொண்டாடுவார்கள் பார் !! என்று கூறினான். இன்றோடு படம் வெளிவந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன.
மும்பை எக்ஸ்பிரஸ் படம் பற்றி யாரும் நினைவில் வைத்துள்ளதாகக் கூடத் தெரியவில்லை. இன்னும் எத்தனை வருஷத்திற்குத் தான் இதே பொய்யை சொல்லப்போகிறார்கள் என்று தெரியவில்லை!!!
ஆஸ்கர் நாயகன் என்று பெயர் சுட்டிக் கொண்ட இவர், ரஹ்மான் ஆஸ்கர் வாங்கி வந்த பொழுது, "ரஹ்மான், அடுத்தவர் படைத்த விருந்தில் உணவு உண்டுவிட்டு வந்து இருக்கிறார்" என்று கூறி அதிர்ச்சி அளித்தார்.
"சிவாஜி படம் பார்த்தீர்களா?" என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "நான் தற்பொழுது ஆங்கிலப் படங்கள் மட்டும்தான் பார்க்கிறேன்" என்று கமல் கூறினார். ஆனால், தசாவதாரம் படத்தின் முதல் காட்சிக்கு ரஜினி சென்று பார்த்து கமலைப் பாராட்டி விட்டு வருகிறார்.
கமலிடம் எந்திரன் வெற்றி பற்றிப் பத்திரிகையாளர்கள் கேட்ட போது படம் ஓடியது விளம்பரத்தால் என்றார். இவர் மன்மதன் அம்பு படத்துக்குச் செய்த விளம்பரம் பலருக்கு நினைவு இருக்கும்.
விளம்பரத்தால் படம் ஓடும் என்றால், மன்மதன் அம்பு ஏன் ஓடவில்லை?
“Robot” is successful not because of the content, but due to the marketing strategy and of course, Rajini is a saleable star. Huge-budget films are good as long as they have solid content - Kamal
கமல் தசாவதாரத்தில் கூறிப்பிடும் "கியாஸ் தியரி" (உலகத்தில் எந்த ஒரு செயலும் ஒன்றோடு ஒன்று சார்ந்திருக்கும்) அவருடைய வாழ்க்கையில் எப்படி ஒத்துப் போகிறது பார்ப்போம்.
சிவாஜி 60 கோடியில் தயாராகிறது என்றவுடன் தசாவதாரத்தை 70 கோடியில் எடுத்தார்.
எந்திரன் 150 கோடியில் தயாராகிறது என்றவுடன் மர்மயோகியை தொடங்கினார். அது என்ன ஆனது என்று மர்மமாகவே உள்ளது .
எந்திரன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்ததால், மன்மதன் அம்பு இசை வெளியீட்டு விழாவை சிங்கப்பூரில் நடத்தினார்.
அது நடந்ததா?? என்பது கூடப் பலருக்கு நினைவு இருக்காது.
சமீபத்தில் முரசொலி நாளேடு விழாவில், நான் தற்காப்பை விடத் தன்மானத்தைப் பெரிதாக நினைத்ததால், மேடையேறியதாக ரஜினியை மிகவும் கேவலப்படுத்தினார்.
கமலின் பேச்சுக்கு கை தட்டிக்கொண்டு இருந்த ரஜினி, கமலின் அநாகரீக பேச்சைக் கேட்டவுடன் அதிர்ச்சியாகி அப்படியே அமைதியானதை ஊடகங்கள் காணொளியாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின.
இவர் ஜெயா டிவியில், பட்டிமன்றம் நடத்தி தன்மானம் காத்தது நம் அனைவருக்கும் தெரியும்.
இப்பொழுது அவர் அரசியல் கட்சி தொடங்கியவுடன், அனைத்து இடங்களிலும், ரஜினியின் கொள்கை காவி போலப் பேசி வருகிறார் .
ஆனால் கமல் மிகவும் நல்லவர், அவர் நிச்சயம் மக்களுக்கு நல்லது செய்வார் என்று ரஜினி அனைத்து இடங்களிலும் கூறி வருகிறார்.
2.0 இசை விழா நடத்தினால், உடனே பக்கத்தில் இருக்கும் எண்ணூருக்கு சென்று ஆய்வு செய்வார். ஊடகங்கள் கவனத்தை திசை திருப்ப முயற்சிப்பார்.
ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று கூறினால், அவசர அவரசமாக ஒரு கட்சியை ஆரம்பிப்பார். 2 வருடம் முன்பு வரை நான் அரசியலுக்கே வரமாட்டேன்!! என்று கூறியவர் இவர்.
இன்னும் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், இனிவரும் நாட்களில் இதனை நீங்கள் கண்கூடாகப் பார்க்கலாம்.
இப்படி ரஜினி ஏதாவது ஒரு செயல் செய்தால், அதனை மறக்க / திசை திருப்ப செய்ய ஒரு அறிவிப்புக் கமலிடம் இருந்து நிச்சயம் வரும்!! ஆனால் பாவம், கமலின் அறிவிப்பை மக்கள் மறந்து விடுவார்கள்.
இது நாள் வரை, ரஜினி கமலைப்பற்றிப் பேச வாய்ப்புக் கிடைக்கும்போது எல்லாம், அவரைப் பற்றிப் புகழ்ந்துதான் பேசி இருக்கிறார்.
கமல் கர்நாடகா போனதை அனைவரும் விமர்சித்த போது கூட, அவருக்காகப் பரிந்து பேசி மற்றவர்களிடம் திட்டு வாங்கியவர் ரஜினி.
ஆனால் கமல், ரஜினியைப் பற்றிப் பேச வாய்ப்புக் கிடைக்கும்போது எல்லாம், ஏதாவது ஒரு விதத்தில் விமர்சனம் செய்து, மட்டப்படுத்தி ரசிகர்களைக் காயப்படுத்துவார்.
நேற்று (13 ஆகஸ்ட் 2018) கூட ரஜினி பற்றிய ஒருவரின் பொய் ட்வீட்டை லைக் செய்து இருந்தார், பின்னர் இது குறித்து விமர்சனங்கள் எழுந்தவுடன் அன் லைக் செய்து விட்டார்.
கமல், ரஜினி நட்பு இன்றுவரை நிலைத்து இருப்பதற்குக் காரணம், ரஜினியின் நடவடிக்கைதான்.
மேலே கூறிய ஏதாவது ஒரு நிகழ்வில், ரஜினி மற்றவர்களைப் போல நடந்து கொண்டு இருந்தால், இந்நேரம் நட்பு காணாமல் போய் இருக்கும்.
கமல் ஆரம்பக் காலத்தில் பெரிய நடிகராக நடித்துக் கொண்டு இருந்த போது அவருடன் தன்னை நடிக்க வைத்ததை ரஜினி இன்னும் மறக்கவில்லை .
அதுதான் கமல் மீது ரஜினி கொண்டிருக்கும் மிகப் பெரிய மதிப்புக்கு முக்கியக் காரணம்.
கண்டிப்பாக, இந்த மாதிரி ஒரு கட்டுரை தன்னுடைய ரசிகர் எழுதி இருக்கிறார் என்று ரஜினிக்குத் தெரிந்தால், என்னை மன்றத்தில் இருந்து நீக்குவார் அல்லது ரசிகர்கள் மீது வருத்தப்படுவார்.
அந்த மனசுதான் ரஜினி!! நாம் அவரை நேசிப்பதற்கு முக்கியக் காரணமே அது தானே??
ஆனால் அவர் போல் எல்லாம் பெருந்தன்மையாக ரசிகர்களாகிய எங்களால் நடந்து கொள்ள முடியவில்லை.
அதுவே, கமலை ரஜினி ரசிகர்கள் வெறுப்பதற்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்து விடுகிறது,
இப்படிக்கு,
அ .அருள்செல்வன்
|