இக்காலத்தில் நேர்மையாக இருப்பது, பேசுவது, தன்னுடைய கருத்தில் உறுதியாக இருப்பது என்பது நடைமுறைக்கு ஒத்து வராதது என்பது பொதுவான கருத்து.
தலைவரின் கருத்துகள் நேர்மையானதாக இருந்தாலும், உணர்ச்சிகரமாக இருக்கும் மக்களிடையே இது போலப் பேசுவது சரியா? அதை மக்கள் புரிந்து கொள்வார்களா?
ஏன் தலைவர் இப்படிப் பேச வேண்டும் என்று பெரும்பான்மையான ரசிகர்கள் நினைக்கிறார்கள், நான் உட்பட.
புனிதப் போராட்டம்
ஊடகங்களும் தலைவர் கூறும் கருத்தை திசை திருப்பும் போது, விரக்தியாகி விடுகிறது. உண்மை செய்தியை மறைத்து சர்ச்சையை மக்களிடையே கொண்டு செல்கிறார்கள்.
உதாரணத்துக்குத் தூத்துக்குடி மக்கள் போராட்டத்தை "புனிதப் போராட்டம்" என்றார், "மக்களுக்கும் வன்முறைக்கும் சம்பந்தமில்லை" என்றார்.
ஆனால் இவற்றை மறைத்துப் "போராட்டத்தை ரஜினி எதிர்க்கிறார், சமூகவிரோதி என்று கூறுகிறார்" என்று மக்கள் மனதில் பதியவைத்தார்கள்.
இவற்றைக் காணும் போது எந்த ரசிகருக்கும் பயம், கவலை இருக்கும்.
தலைவர் பேசுவதைத் திரிக்கிறார்களே! அவர் சொன்னது ஒன்று ஆனால் அதை வேறு மாதிரி மக்களிடையே கொண்டு செல்கிறார்களே! என்று.
பயம், கவலை அவசியமற்றது
நியாயமான பயம், கவலை ஆனால், இவை அவசியமற்றது என்பது நிரூபணம் ஆகி வருகிறது.
தூத்துக்குடி மக்களே, "எங்களைத் தவறாக வழி நடத்தியது, மூளைச் சலவை செய்தது, உணர்ச்சியைத் தூண்டியது மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு" என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்கள்.
சேலம் 8 வழிச்சாலை கருத்தையும் திரித்துக்கூறினார்கள் ஆனால், அது தூத்துக்குடி சம்பவம் போல ஆகவில்லை காரணம், தலைவரின் உண்மை எண்ணத்தை மக்கள் உணர்ந்து விட்டார்கள்.
அதோடு ரசிகர்களும் (காவலர்களும்) தலைவர் கூறியதை பரவலாக மக்களிடையே கொண்டு சென்றார்கள்.
கருத்தில் உண்மை & நேர்மை
தற்போது என்ன மாதிரியான எண்ணம் மக்களிடையே பரவலாக எழுந்து வருகிறது தெரியுமா?!
"ரஜினி அவரோட கருத்தில் உண்மையாக இருக்கிறார். யாரையும் திருப்திப்படுத்த கருத்தை தெரிவிப்பதில்லை.
மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர் கருத்தை தெரிவிக்கிறார். அவர் கட்சியைப் பார்த்து, நபரை பார்த்து கருத்து சொல்வதில்லை.
செயலை பார்த்து தான் கருத்து சொல்கிறார்" என்று உணர ஆரம்பித்து விட்டார்கள்.
குறை கூறும் அரசியல் வேண்டாம்
ரஜினி ஏற்கனவே "மற்றவர்களை குறை கூறும் அரசியலை நான் முன்னெடுக்கப்போவதில்லை" என்று தெளிவாகக் கூறிவிட்டார்.
கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை பாராட்டியதும் இந்த வகையில் தான். தலைவர் பாராட்டும் முன்பே பலர் அமைச்சரின் நடவடிக்கைகளைப் பாராட்டி பேசி கொண்டு தான் இருந்தனர்.
எனவே, தலைவர் கூறியதும் நாம் நினைத்ததைத் தான் கூறி இருக்கிறார் என்று பலர் நினைத்து இருக்கிறார்கள்.
உண்மை பேச்சே என்றும் நிலைக்கும்
மற்ற அரசியல் கட்சி தலைவர்கள், எப்படிச் சொன்னால் மக்கள் வரவேற்பார்கள் என்பதை அறிந்து அச்செயல் தவறாக இருந்தாலும், எதிர்காலத்தில் மக்களுக்குப் பிரச்னையைத் தரும் என்றாலும் தற்போது மக்களிடையே நல்ல பெயர் எடுக்கப் பொய்யாகப் பேசுகிறார்கள்.
ஆனால், இவையெல்லாம் தற்காலிகம் தான் என்பதை அவர்கள் உணரவில்லை. இவர்களின் உண்மை முகம் பின்னர் தெரியவரும், மக்களிடையே மதிப்பை இழக்க வைக்கும்.
ரஜினியும் மற்றவர்களைப்போல "என்ன பேசினால் மக்கள் வரவேற்பார்கள்" என்று அறிந்து பேச முடியாதா?! இது என்ன அவ்வளவு பெரிய விஷயமா?!
தூத்துக்குடியிலும், சேலம் பிரச்சனையிலும் மற்றவர்களைப் போல பேசிவிட்டுப் போக எவ்வளவு நேரம் ஆகிவிடப்போகிறது?
இதிலேயே தெரியவில்லையா? ரஜினி என்பவர் யார் என்று.
ஆனால், மக்கள் தன்னைத் தற்போது தவறாக நினைத்தாலும் பின்னர் புரிந்து கொள்வார்கள் என்று மக்களுக்கு நல்லது நடக்கும் என்று கருதுவதையே எதிர்ப்பு வந்தாலும் ரஜினி கூறுகிறார், அதில் உறுதியாகவும் இருக்கிறார்.
இது போல கூறவும் நெஞ்சுரம் வேண்டும், அது ரஜினிக்கு நிரம்ப உள்ளது.
இன்று ஒரு கருத்து, சில நாட்கள் கழித்து அதற்கு நேரெதிராக கூறுவது என்ற வேலையே ரஜினியிடம் இல்லை. பொய் கூறுபவர்கள் தான் மாற்றி கூற வேண்டும், உண்மை பேசுபவர்கள் என்றும் மாறத்தேவையில்லை.
சிறந்த தலைவர் என்பவர் யார்?
சிறந்த தலைவர் என்பவர் மக்கள் நினைப்பதை செயல்படுத்துவர் அல்ல, மக்களுக்கு எது நல்லது என்பதை அறிந்து அதை செயல்படுத்துபவர்.
ரஜினி எதிர்காலத் தேவைகளைக் கணக்கில் கொண்டு பேசுகிறார் மற்றவர்கள் நடப்பு பிரச்சனையை மனதில் வைத்து மக்களை தூண்டி விடுகிறார்கள்.
பொய், உணர்ச்சித்தூண்டல் நீண்ட நாட்கள் நிலைக்காது, என்றும் உண்மைக்கே மதிப்பு.
பொய்கள் புயல் போல் வீசும் உண்மை மெதுவாய் பேசும்.
ரஜினி வழக்கமான அரசியல் செய்பவரல்ல
தன் கருத்தில் நிலையாக இருக்கும் போது "ரஜினி சரியாகத் தான் கூறுகிறார்" என்ற எண்ணம் மக்களிடையே பரவலாகப் பதிந்து விடும்.
இது தான் தற்போது நடந்து கொண்டுள்ளது.
சுருக்கமாக ரஜினி என்பவர் வழக்கமான அரசியல்வாதி இல்லை, அவர் தனித்தன்மையானவர், அவரைக் குறைத்து எடை போடாதீர்கள் என்பதைப் பலரும் உணர்ந்து வருகிறார்கள்.
மிரட்டப்போகும் ரஜினி
தலைவர் இன்னும் சில மாதங்களில் கட்சியை ஆரம்பிக்கப் போகிறார். அந்தச் சமயத்தில் மற்றவர்களால் ரஜினியை எதிர்கொள்ளவே முடியாது.
தற்போது நடந்து கொண்டு இருப்பது முன்னோட்டம் (Trailer) தான்.
அடிப்படை கட்டமைப்பை முழுவதும் முடித்த பிறகு நடக்கப்போவதை நாம் காண கொண்டாட்டமாக இருக்கும். காத்திருங்கள்.
சின்னதாக ஒரு கணக்குப் போட்டுப் பாருங்கள்.
கட்சியை ஆரம்பிக்காமலே தலைவர் மீதுள்ள நம்பிக்கையில் இவ்வளவு பெரிய கட்டமைப்பை மக்களின் ஆதரவோடு உருவாக்க முடிகிறதென்றால், கட்சி ஆரம்பித்தால்?!
இதெல்லாம் எளிதான செயலல்ல, பலர் ரஜினி மக்கள் மன்றத்தின் பலம் தெரியாமல் பேசிக்கொண்டு, கிண்டலடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
விளையாட்டாக நினைத்தவர்கள், குறைவாக மதிப்பிட்டவர்கள் அனைவரும் வாயடைத்து நிற்கப் போகிறார்கள்.
கொள்கைகள், திட்டங்களை அறிவிக்கும் போது எதிராளிகள் அனைவரும் விக்கித்து நிற்கப்போகிறார்கள். இதில் சந்தேகமே இல்லை, 100% உறுதி.
"ரஜினியை எப்படிச் சமாளிப்பது?" என்று புரியாமல் திணறப்போகிறார்கள்.
ரஜினி என்ற சூறாவளி விரைவில் சுழன்றடித்து மிரட்டப் போகிறது தயாராக இருந்து கொள்ளுங்கள்.
இது கதையல்ல நிஜம்.
நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும்!
-கிரி
|