வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
டிசம்பர் 31-ம் தேதி அரசியல் அறிவிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தாலும், தலைவரை நேரடியாகத் தனியே சந்தித்தது நேற்றுதான்.
காலை, மாலை இரண்டு வேளைகளிலும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
நிறைய பேசினார். நிறைய பேசச் சொல்லிக் கேட்டார்.
தமிழக மக்கள் மீது அவர் வைத்திருக்கும் பேரன்பும், பெரும் பாசமும் மாசற்றது. அபாரமானது. அசத்தலானது.
அவருடன் இருந்த சுமார் இரண்டு மணி நேரம் என் வாழ்வில் மறக்க இயலாத் தருணம்.
நான் ஒரு பத்திரிகையாளனாக அவரைச் சந்திக்கவில்லை. கோடானு கோடி தலைவர் ரசிகர்களில் ஒருவனாகச் சந்தித்தேன்.
தலைவரை நேரில் சந்தித்ததில்லையே தவிர அவருடன் நிறையப் பேசியிருக்கிறேன். :-)
"அவரைச் சந்தித்து ஒரு புகைப்படம் கூட எடுத்துக் கொண்டதில்லை... நீயெல்லாம் ஒரு ரசிகனா?" என்று சிலர் கிண்டலடித்ததும் உண்டு.
அவரை நேரில் சந்திக்கும் போது அவர் என்னை அடையாளம் கண்டு கொண்டு பெயர் சொல்லிக் கூப்பிட வேண்டுமென்ற ஒரு பேராசைக்குத்தான் இத்தனை காலம் காத்துக்கிடந்தேன் என்பது தான் உண்மை.
அவரின் அன்பு, பண்பு, பாசம் குறித்தெல்லாம் அனைவரும் அறிந்ததே.
உள்நுழைந்தவுடன் கட்டியணைத்து அவர் வரவேற்றுச் சிரித்த போது நான் நானாகவே இல்லை. புகைப்படம் எடுத்துக் கொண்ட போதும் அருகில் இழுத்து இரண்டு தோள்களிலும் கை வைத்துக் கொண்டார்.
"45 வயசுன்னு நம்பவே முடியலையே... ரொம்ப யங்கா இருக்கீங்களே" ன்னு அவர் சொன்ன போது, "தலைவரே... புகைப்படத்தை விட நேரில் நீங்க ரொம்ப ரொம்ப இளமை" என்று மனதாரச் சொன்னேன்.
வீட்டினுள் நுழைந்த உடன் தலைவரின் உதவியாளர் சுப்பையா சார், "மோர், காஃபி எதாவது சாப்பிடுங்க" என்றார் காலையில்.
தலைவரைக் காணப் போகும் உறசாகத்தில் அதை மறுத்து விட்டேன்.
அடுத்த சில நிமிடங்களில் தலைவரைப் பார்த்த உடன், "முதல் தடவையா நம்ம வீட்டுக்கு வந்திருக்கீங்க. காஃபியாவது சாப்பிடுங்க" என்று அன்புக் கட்டளையிட்டார்.
தலைவரிடம் சொல்லி விட்டே ஒரு நிமிடம் ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். என்னை நானே சத்தியமாக கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். பார்த்து ரசித்துச் சிரித்தார்.
சிறு வயது முதல் திரையில் பிரமித்துப் பார்த்து வந்த என் தலைவர் நிஜத்தில் அதை விட பல கோடி மடங்கு சூப்பர்.
பேசிக் கொண்டிருந்த போது நடுவில் வந்த அவர் பேரனிடமும், பிறகு அவர் உதவியாளரிடமும், "இது என் நண்பர் ரமேஷ்" என்றே சொன்னார். இந்த நிமிடம் வரை பூமியில் கால் படாமல் மிதந்துக் கொண்டிருக்கிறேன்.
"இதுக்கு மேலே பேரு, புகழ், பணம் சம்பாதிக்கணுமுன்னு நாம அரசியலுக்கு வரலை. மக்களுக்கு நல்லது செய்யனும்" என்று அழுத்தம் திருத்தமாக ஆத்மார்த்தமாகச் சொன்னார்.
உண்மையிலேயே முன்பை விட அதிகமாக நெஞ்சை நிமிர்த்தி, மிகுந்த கர்வத்துடன் சொல்வேன்..." தலைவரின் ரசிகன் நான்" என்று.
மக்கள் தலைவர் அவர்... மக்களுக்கான தலைவர் .
- மாயவரத்தான் கி ரமேஷ்குமார்
|