 அந்த சிறுவன் முதன் முதலாக கைகுழந்தையாக இருக்கும் போது அழைத்து சென்ற படம் “நான் மகான் அல்ல “. மதுரை மிட்லண்ட் தியேட்டரில் அழுது ஆர்பாட்டம் செய்ய, அவனுடைய அம்மா தியேட்டர் கதவின் அருகே அமர்ந்து படம் பார்த்தார்கள் . மூன்று வயதில் பார்த்த படம் நல்லவனுக்கு நல்லவன் . அப்படத்தின் உன்னைத்தானே பாடல் அவனுக்கு மிகவும் பிடித்துப்போனது . அப்பாட்டை டேப்ரிக்கார்டரில் திரும்ப திரும்ப போடச்சொல்லி கேட்பான் . பாட்டு முடிந்தவுடன் மீண்டும் ரிவைண்ட் செய்து போட வேண்டும் . இதற்காக அவனுடைய அப்பா ஒரு கேசட் முழுதும் உன்னைத்தானே பாட்டை மட்டும் பதிவு செய்தார் . மாவீரன் படம் வந்த போது “மனுசனுக்குத்தான் வலிக்கும் , மாவீரனுக்கு வலிக்காது’ என்ற வசனத்தை உணர்ச்சிபூர்வமாக பேசிக்கொண்டிருப்பான் . அடிவாங்கிய வலியில் அழும்போது மாவீரனுக்க்கு வலிக்காதேடா என்று சொன்னால் மாவீரனுக்கு வலிக்காது என்று கண்ணில் நீர் தளும்ப அடக்கிக் கொள்வான் .
ரஜினி ரசனை குடும்பத்திற்கு சுவாசம் போல. அத்தகைய குடும்பத்தில் ரஜினி மேலான அதீத அபிமானத்தில் வளர்ந்தான் அவன். நாட்டுக்கொரு நல்லவன் படம் அவனை வருத்தத்தில் ஆழ்த்தியது. பத்து வயது சிறுவன் படத்தை பார்த்து விட்டு ரஜினி குழந்தைகளை காப்பாத்துவாருன்னு நினைச்சேன், ஆனா காப்பாத்தல, ஜீஹி செளலாவை காப்பாத்துவாருன்னு நினைச்சேன் காப்பாத்தல, குஷ்பூவை நீயே சண்டை போடுன்னு சொல்லிட்டாரு. யாரையும் காப்பாத்தலேன்னா எதுக்கு ரஜினி? என்று ஒரு அற்புதமான கேள்வியை கேட்டான் . சினிமாவில் ரஜினியிஸத்தின் சாராம்சம் இந்த கேள்வியில் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை ரஜினி காப்பாற்ற வேண்டும். அவர் வக்கிலாயிருந்தாலென்ன, போலிஸாயிருந்தாலென்ன, தாதாவாயிருந்தாலென்ன - ரஜினி காப்பாற்ற வேண்டும் - பீரியட்.
இச்சிறுவன் வளர வளர ரஜினி மிகப் பெரிய சூப்பர் ஸ்டாரானார். சிறுவன் தீவிர ரஜினி அபிமானியானான் . பாபா படத்தை கூட குறை சொல்ல விரும்பாத ரஜினி அபிமானி. இளைஞனான பின் “சிவாஜி “ படம் வெளியான போது அபிராமியில் படத்தை இவனிடம் சேர்ந்து பார்த்தேன் . ரஜினியை அணுஅணுவாக ரசித்து கைத்தட்டிப்பார்த்த பரவச அனுபவம். இளைஞன் அப்போது ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தான். இன்னும் 5 வருடங்களில் அவன் இயக்கிய படம் அதே அபிராமியில் வெளியாகும் என்று அப்போது அவன் உட்பட யாரும் நினைக்கவில்லை. 10 வருடங்கள் கடந்து அவனே ரஜினி படத்தை இயக்குவான் என்பதை கண்டிப்பாக நினைத்துப்பார்க்கவில்லை. அந்த இளைஞர்தான் கார்த்திக் சுப்பாராஜ்.
பத்து வயதில் திரையில் ரஜினியிசத்தை எளிமையாக வரையறுத்த கார்த்திக் சுப்பாராஜ், ஒரு ரஜினி ரசிகனாக தான் பார்க்க விரும்பிய ரஜினியை திரையில் தெறிக்க விடுவார் என கண்டிப்பாக நம்பலாம். ரஜினியிசம் எதிரிகளை வீழ்த்துவது. ரஜினியிசம் மக்களை காப்பது. ரஜினியிசம் என்பது கரைபுரண்டோடும் மகிழ்ச்சி. இது வரை பார்த்திராத ஆனால் நீங்கள் பார்க்க விரும்பிய, ரசிகர்கள் பார்க்க விரும்பும் ரஜினியை கண்டிப்பாக திரையில் காட்டுவீர்கள் என்று நம்புகிறேன். பட்டையை கிளப்புங்கள் கார்த்திக் சுப்பாராஜ்.
- ராஜ்குமார் முத்துவீரன்
|