தாராவி தாதாவான காலா, தாராவி நிலத்தைக் கைப்பற்ற நினைக்கும் ஹரி தாதா. இவர்கள் இருவருக்கிடையேயான மோதலே “காலா”.
படம் துவங்கி 25 – 30 நிமிடங்கள் எனக்குத் திருப்தியில்லை, உண்மையில் படம் பார்க்கும் உணர்வே இல்லாமல் ஒரு ஆவணப்படம் போல இருந்தது.
கதாப்பாத்திரங்கள் அறிமுகம், தாராவி சூழ்நிலை போன்றவற்றை விவரிக்க வேண்டிய கட்டாயம் ரஞ்சித்துக்கு. எனவே, இவையே பெரும்பகுதி ஆக்கிரமித்து விட்டன.
எனக்கு “என்னடா இது! படம் ஒரு மாதிரி போகுதே“ன்னு திக்குனு இருந்துச்சு.
படம் (கதை) எப்போது துவங்குகிறது என்றால், ரஜினியின் முன்னாள் காதலி ஜரீனாவை உணவு விடுதியில் பார்க்கும் போது தான். அப்போது இருந்து படம் செமையா இருக்கு.
ஜரீனா (முன்) காதல் காட்சிகள் ரொம்ப அழகு. இருவரும் ஒரு இடைவெளியில் அதே சமயம் காதலும் இருந்து என்று ஒரு அழகான நினைவை மீட்டெடுக்கும் காட்சி.
ரஜினி மனைவியாக வரும் ஈஸ்வரி ராவ் துவக்கத்தில் கொஞ்சம் மிகை நடிப்பு போல இருந்தாலும், பின்னர் சரியாகக் கொண்டு சென்று விட்டார்கள்.
ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் அம்மா, மனைவியை நினைவு படுத்தும் கதாபாத்திரம். அவர் அடிக்கும் கமெண்ட்ஸ் ஒவ்வொன்றும் ரசிக்கும்படி இருந்தது.
அதுவும் ரஜினியிடம் “எங்களுக்கும் காதல் இருக்கு” என்று கூற, பின்னர் ரஜினி மெதுவாக ஈஸ்வரி ராவிடம் கேட்கும் கேள்வி செம ரகளை .
இயல்பான நகைச்சுவை காட்சிகள் படத்துக்கு பலம்.
சமுத்திரக்கனி நக்கல்கள் ரசிக்கும் படி உள்ளது, குறிப்பா ரஜினி 60 ம் திருமண நிகழ்வில். அவரைப் படம் முழுக்கப் போதையிலேயே இருக்கும்படி காட்டியிருக்க வேண்டாம் .
ரஜினி கபாலியில் விட்டதை இதில் திருப்தி செய்து விட்டார். ரசிகர்கள் எதிர்பார்க்கும் சண்டைக்காட்சிகள், நக்கல், இறங்கி அடிக்கும் விதம், மாஸ், நடுத்தரக் குடும்பம் என்று சராசரி ரசிகனை திருப்தி படுத்தும் காட்சிகள் நிறைய.
அதே சமயம் ரஞ்சித் படங்களுக்கே உண்டான ஓரளவு நம்பகத்தன்மையுடன் கமர்சியலாகவும் உள்ளது.
காவல்நிலைய காட்சியில் ரஜினி கூறும் “குமாரு… யாரு இவரு” என்று கேட்கும் காட்சிகளுக்குத் திரையரங்கில் பலத்த சிரிப்பலை. இந்தக் காட்சி பலரை கவரும், இதை வைத்து மீம் வரும்.
நானா படேகர்
தலைவர் ரசிகர்கள் கோபித்துக்கொள்ள வேண்டாம். நானா படேகர் அறிமுகக் காட்சியில், பேசாமலே தலைவரை நடிப்பில் ஓரங்கட்டி விட்டார். யம்மாடி! செம்ம.
இதற்குச் சந்தோஷ் நாராயணன் பின்னணி பேருதவி புரிந்து இருக்கிறது. இக்காட்சியினை ரொம்ப ரசித்தேன். இதற்கு ரஜினி பதிலடி தருவது… கலக்கல்.
படத்துக்கு ஒரு கெத்து தருவது சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
பாட்ஷா, படையப்பாக்கு பிறகு எனக்குச் சவால் கொடுக்கும் வில்லன் கதாபாத்திரம் என்று ரஜினி கூறி இருந்தார். அது மிகச்சரி. நானா அதிகம் பேசாமலே மிரட்டி இருக்கிறார்.
குறிப்பா “6 அடி” குறித்து ரஜினியிடம் நக்கலாகப் பேசுவது எல்லாம் அசத்தல் ரகம்.
ரஜினி குடும்பத்தில் வருபவர்கள் சிலருக்கு அவ்வளவாக வேலையில்லை, இருவரை தவிர்த்து. பெரிய குடும்பமாகக் காட்ட நினைத்து இருக்கலாம் ஆனால், அதற்கான தேவை இருப்பது போலத் தெரியவில்லை.
போராட்டத்தில் கூட்டத்தில் புகுந்து குழப்பத்தை விளைவிப்பவர்கள் பற்றிக் காட்சிகள் வருகிறது. தற்காலச் சூழ்நிலைக்குப் படம் பொருந்துகிறது, படம் முன்பே எடுக்கப்பட்டு இருந்தாலும்.
காலா படத்தில் வரும் நாய் “மணி” க்கு அவ்வளவு பில்டப் கொடுத்தார்கள். அது இரண்டு காட்சியில் கூட இல்லை. நாய் என்றால் எனக்கு பிடிக்கும் என்பதால் ரொம்ப எதிர்பார்த்து இருந்தேன். சப்புன்னு ஆகி விட்டது. யோவ்! ஏன்யா இப்படி.
படத்தில் எது செட்டிங்ஸ் என்பதே தெரியவில்லை, சிறப்பான உருவாக்கம். சில காட்சிகள் வெட்டப்பட்டு இருக்கின்றன, அதனால் அவை என்ன ஆனது என்ற குழப்பம் உள்ளது.
ரஞ்சித் கபாலியில் ஏகப்பட்ட காட்சிகளைத் திணித்து இருந்தார், இதிலும் சில காட்சிகள் உள்ளது ஆனால், கபாலி போலப் பட்டவர்த்தனமாக எனக்குத் தெரியவில்லை.
தன்னுடைய எண்ணங்களை ரஜினியை வைத்து கமர்சியலாகக் கூறி அசத்தி விட்டார். நிலம் ஒவ்வொருவருக்கும் முக்கியம் என்பதைக் காட்டியிருக்கிறார்கள்.
“கற்றவை பற்றவை” என்பதன் அர்த்தம் இறுதியில் புரியும்.
படம் பார்ப்பவர்களுக்கு ரஞ்சித் சொல்ல வரும் கருத்துப் பாதிப்பை ஏற்படுத்துமா? என்பது தெரியவில்லை ஆனால், யோசிக்க வைக்கும்.
ஆக மொத்தத்தில் சில குறைகள் இருந்தாலும், படம் கலக்கலாக உள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அனைவரும் பார்க்க பரிந்துரைக்கிறேன்.
கொசுறு
என்னுடைய பல வருட ஆசையான தலைப்பில் “சரவெடி” என்ற வார்த்தையைப் பயன்படுத்த வாய்ப்புக்கொடுத்த ரஜினி படம்.
- கிரி
|