 கபாலி படத்தைத் தொடர்ந்து ரஜினி - பா.இரஞ்சித் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் காலா. ரஜினியுடன், ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வரும் ஜூன் 7-ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தை நடிகர் தனுஷ் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான பாடல்களை நடிகர் தனுஷ் இன்று காலை சமூகவலைதளத்தில் வெளியிட்டார்.
இந்தநிலையில், காலா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனம் பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காலா படக்குழுவினரோடு, திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். அதேபோல், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்காக ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திரண்டனர்.

விருந்தினர்கள் அனைவரும் வந்தபிறகு கடைசியாக மைதானத்துக்கு வந்த ரஜினி, ஒளிப்பதிவாளர் முரளியின் மகனுடன் சிறிதுநேரம் அளவளாவிட்டுச் சென்றார். நிகழ்ச்சியை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கினார். காலாவின் நிறம் கறுப்பு என்பதைக் குறிப்பால் உணர்த்தும் விதமாக இயக்குநர் இரஞ்சித் உள்பட பெரும்பாலானோர் அந்த நிறத்திலேயே உடையணிந்திருந்தனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக தாராவி செட் அமைக்கப்பட்ட விதம் குறித்த வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது. அதன்பின்னர், படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு நடன இயக்குநர் சாண்டி, தனது குழுவினரோடு நடனமாடினார். அதன்பின்னர், காலா படத்தின் ஒளிப்பதிவாளர் முரளி, கலை இயக்குநர் ராமலிங்கம், பாடலாசிரியர்கள் கபிலன், உமாதேவி, அருண்ராஜா காமராஜ் ஆகியோர் மேடையேறினர். அவர்களிடம் படத்தில் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து திவ்யதர்ஷினி கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய பாடலாசிரியர் உமாதேவி, `கல்வியோ, சினிமாவோ, அரசியலோ எதுவும் விளிம்புநிலை மக்களுக்குச் சென்று சேர வேண்டும்’’என்றார். படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தனது குழுவினருடன் லைவ் பெர்ஃபார்ம் பண்ணினார்.
அதன்பின்னர் மேடையேறிய பா.இரஞ்சித், படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துப் பேசினார். மேலும், அவர் பேசுகையில், ‘‘எனக்கு கிடைத்த ஸ்பேசில் நான் சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்ல வேண்டும் என விரும்பினேன். அதற்கான வாய்ப்பை ரஜினி சார் திரும்பவும் கொடுத்ததுக்கு நன்றி. மக்களுக்கான பிரச்னைகளை, மக்களைப் பற்றி நினைக்கிற, யோசிக்கிற, அவர்களுக்காக செய்ய வேண்டும் என நினைக்கிற ஒருவரை வைத்துக் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அதை கமர்ஷியலாக கொடுத்துள்ளேன். இந்த படத்தில் ரஜினியின் பவரைப் பார்க்கலாம். இந்த படத்தில் சமூக நீதி பற்றி பேசியிருக்கிறோம். மனித மாண்பை மீட்டெடுக்கும் படமாக இருக்கும். இந்தியாவில் 60 சதவீதம் பேர் நிலம் இல்லாமல் இருக்கிறார்கள். இந்த அரசியலை காலாவில் நீங்கள் பார்க்கலாம்.’’ என்றார், ரஞ்சித்.

இறுதியாக மேடையேறிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ``இது இசை வெளியீட்டு விழாபோல் இல்லை. படத்தின் வெற்றி விழா போல் இருக்கிறது’’ என்று கூறி வழக்கமான நக்கல், நையாண்டியுடன் பேச்சைத் தொடர்ந்தார். சிவாஜி பட வெற்றி விழா குறித்து பேசிய ரஜினி, அந்த விழாவில் கலைஞர் பேசிய விஷயங்களை மறக்க முடியாது. 75 ஆண்டுகளாக ஒலித்த அந்தக் குரலைக் கேட்க தமிழக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த மக்களில் நானும் ஒருவன். விரைவில் அந்தக் குரல் ஒலிக்க வேண்டும் என ஆண்டவனை நான் வேண்டிக் கொள்கிறேன்’’ என்றார். சிவாஜி வெற்றி விழா தொடங்கி, காலா படத்தின் ஷூட்டிங் முடிந்தது வரை விரிவாகவே ரஜினி பேசினார். இயக்குநர் இரஞ்சித், தயாரிப்பாளர் தனுஷ், ஒளிப்பதிவாளர் முரளி எனப் படக்குழுவினரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர் பாராட்டினார். மேலும் அவர் பேசுகையில், கோச்சடையான் படத்தின் மூலம் புத்திசாலிகளுடன் மட்டுமே பழக வேண்டும், ஆலோசனைகள் கேட்க வேண்டும். அதி புத்திசாலிகளுடன் பழகக் கூடாது என்பதை கற்றுக்கொண்டேன். லிங்கா படத்திலிருந்து நல்லவனாக இருக்க வேண்டும், ரொம்ப நல்லவனாக இருக்கக் கூடாது என்ற பாடத்தை கற்றுக்கொண்டேன்’ என்றார். அதேபோல், இமயமலைக்குப் போவதே கங்கையைப் பார்க்கத்தான். சில இடங்களில் மௌனமாகவும், சில இடங்களில் ரெளத்ரமாகவும் கங்கை நடமாடிக்கொண்டும் போகும். நதிகள் இணைப்பு என்பதே என் நீண்டநாள் கனவு. குறைந்தபட்சம் தென்னிந்திய நதிகளையாவது இணைக்க வேண்டும். அது நடந்த மறு கணமே நான், இறந்தால் கூட கவலை இல்லை’’ என்றார். காலா படத்தில் அரசியல் இருக்கும், ஆனால் அது அரசியல் படம் இல்லை என்று குறிப்பிட்ட ரஜினி, இதுவரை தனக்கு அமைந்த வில்லன் கேரக்டர்களில் எனக்குச் சவால் அளித்த கதாபாத்திரங்கள், பாட்ஷாவின் ஆண்டனி மற்றும் படையப்பாவின் நீலாம்பரி கேரக்டர்கள். அந்த கேரக்டர்கள் வரிசையில் காலாவில் நானா படேகரின் கதாபாத்திரம் நிச்சயம் இடம்பெறும் என்று குறிப்பிட்டார். அரசியல் வருகை குறித்து ரஜினி பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்றதுடன், விரைவில் தமிழக மக்களுக்கு நல்ல காலம் பிறக்கும்’ என ரஜினி பேசினார்.










|