rajinifans.com Admin களில் ஒருவரான நண்பர் கோபி, அதிக வேலைப்பளு காரணமாக ஏற்பட்ட களைப்பில் நேற்று ஞாயிறு அதிகாலை (28-01-2018) காலமானார்.
நண்பர் கோபி தங்கள் குடும்பத் தேவைக்காகச் சிங்கப்பூர் பணிக்கு வந்து பின் அவை நிறைவேறிய பின் இந்தியாவிலேயே பணியை மேற்கொண்டார்.
தற்போது கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான அதிக வேலைப்பளு காரணமாகக் காலமாகியது எங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது.
rajinifans.com தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் புதிய வசதிகளைச் செயல்படுத்துவதில் இவரே உதவியாக இருந்தார்.
இவரை வெறும் ரஜினி ரசிகராக மட்டுமே முன்னிலைப்படுத்த முடியாது.
தமிழின் வளர்ச்சிக்காகத் தன் பங்கை ஆற்றி இருக்கிறார். தமிழ் எழுத்துருவை மேம்படுத்த பல முயற்சிகளில் இவர் ஈடுபட்டது இவரை அறிந்தவர்களுக்குத் தெரியும்.
தமிழ் மீது கொண்ட பற்றால் பல விவாதங்களிலும் கலந்து கொண்டு தமிழின் சிறப்பை எடுத்துரைத்து இருக்கிறார்.
Rajinifans.com ல் கருத்துரை பகுதிகளில் துவக்கத்தில் தமிழில் எழுத வசதிகளை ஏற்படுத்தித் தந்தார். இது போக, பல்வேறு தொழில்நுட்ப வசதிகளைத் தளத்தில் ஏற்படுத்திக்கொடுத்து இருக்கிறார்.
எங்களுக்குத் தளத்தில் ஏதாவது மாற்றம் வேண்டும் என்றால், இவரிடமே கூறுவோம்.
கடந்த ஒரு வருடமாக அதிக வேலைப்பளு காரணமாகப் பங்களிப்பு இல்லாமல் இருந்தார், சமீபத்தில் தான் "இனி அதிக அலுவலக வேலைப்பளு இருக்காது என்றும், வழக்கம் போல எங்களுடன் இணைந்து கொள்வதாக"வும் மகிழ்ச்சியுடன் கூறி இருந்தார்.
கடந்த வாரம் கூட rajinifans.com தள பெயரை ரசிகர்கள் எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்த WhatsApp விவாதத்தில் கலந்து கொண்டு இருந்தார்.
இந்நிலையில் இந்தச் செய்தி எங்களுக்குப் பேரதிர்ச்சியாக இருக்கிறது :-( .
தலைவர் கூறியதையே உங்களுக்கும் கூறுகிறோம்.
குடும்பம் தான் அனைவருக்கும் முக்கியம். அதன் பிறகு தான் மற்றதெல்லாம். நாம் நன்றாக இருந்தால் தான், குடும்பம் நன்றாக இருக்க முடியும். இதற்கு நம்முடைய உடல் நலனை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஓய்வு இல்லாமல் உடல் நலனை கருத்தில் கொள்ளாமல் கடுமையாக வேலை செய்வது நமக்கு அதிக மன உளைச்சலையும் உடல் நிலையைப் பாதிப்பையும் ஏற்படுத்தும்.
எனவே, வேலை முக்கியம் தான் ஆனால், அதுவே வாழ்க்கையில்லை. கோபிக்கு 40 வயது தான் ஆகிறது, 40 எல்லாம் ஒரு வயதா?
கோபி குடும்பத்துக்கு எங்களின் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
கோபி! rajinifans.com தளம் இருக்கும் வரை உங்களின் பங்கும் என்றும் தொடர்ந்து இதில் இருந்து கொண்டே இருக்கும்.
உங்கள் நினைவுகளுடன்
Rajinifans.com அட்மின்கள் மற்றும் ரசிகர்கள்
|