தற்போது பல ரசிகர்களுக்குத் தலைவர் எப்போது அரசியலுக்கு வருவார்? முறையாக எப்போது அறிவிப்பார்? என்ற எதிர்பார்ப்பு அதிதீவிரமாக உள்ளது. இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.
இரு முக்கியக் காரணங்கள்
ஒன்று, பலரும் ஏதாவது ஒரு பிரச்னையை வைத்துக்கொண்டு தலைவரை கருத்து கூறவில்லை, எதையும் செய்யவில்லை என்று கூறுவது.
தமிழகத்தில் பிரச்னைக்குப் பஞ்சமே இல்லை எனவே, தினமும் சம்பந்தமே இல்லாமல் ரஜினியை திட்ட பலருக்கு பழகி விட்டது.
எந்தப் பிரச்சனை என்றாலும் ரஜினியின் கருத்துத் தேவைப்படுகிறது. கூறினால் ஏன் இப்படிக் கூறினார்? கூறவில்லை என்றால் ஏன் கூறவில்லை? ஆகப் பிரச்சனை என்ன என்பது புரிகிறது.
இரண்டாவது காரணம்.
கமல் அவர்கள் என்ன காரணத்தாலோ திடீர் என்று கடந்த சில மாதங்களாகத் தீவிரமாக அரசியல் குறித்த கருத்துகளை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.
இதன் பின்னணி என்ன என்பது அவர் மட்டுமே அறிந்த ஒன்று.
அதனால், கமல் ட்விட்டரில் கருத்து கூறுவதால், ரஜினி ஏன் கூறவில்லை என்ற எண்ணம் தானாகவே பலருக்கு ஏற்படுகிறது.
சும்மாவே ரஜினியை திட்ட சமயம் பார்ப்பவர்கள் இதை விடுவார்களா? கமலுக்கு இருக்கும் பொறுப்பு ரஜினிக்கு இல்லை என்று விமர்சித்து வருகிறார்கள்.
அதோடு கமல் அரசியலுக்கு விரைவில் வந்து விடுவது போலத் தோற்றம் இருப்பதால், இயல்பாகவே ரஜினி ரசிகர்களுக்கு "கமலே வந்து விடுவார் போல நம்ம தலைவர் அமைதியாகவே இருக்கிறாரே!" என்ற எண்ணமும் பொறுமையின்மையும் ஏற்படுகிறது.
இதனால் "என்னடா! தலைவர் ஒன்றுமே சொல்லாமல் இருக்கிறார்" என்ற சலிப்பு ஏற்படுகிறது.
இது சாதாரணமாக அனைவருக்கும் ஏற்படும் எண்ணம், இதைத் தவறு என்று கூற முடியாது.
ஏனென்றால், ரஜினி ரசிகர்கள் அனைவருமே தலைவரின் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அமைதி காக்கும் பக்குவமான ரசிகர்கள் என்று கருத முடியாது.
ரஜினி ரசிகர்கள் என்றாலே ஆக்ரோஷம் அதிரடி என்பதாகத்தான் இருக்கிறது.
எனவே, இவ்வாறு உள்ளவர்கள் பொறுமையை இழப்பது நடைமுறை எதார்த்தம்!
நாளைக்கு ரஜினி அரசியலுக்கு வந்தாலும், பக்குவமான ரசிகர்களை விட அதி தீவிரமாகக் களத்தில் செயலாற்றப்போவது இவர்களே!
எனவே, இவர்களின் கோபத்தை, வருத்தத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இருப்பினும் இது குறித்துச் சில கருத்துகளைக் கூற விரும்புகிறேன்.
இவை உணர்ச்சிவசப்படும், பொறுமை இழக்கும் ரசிகர்களுக்குச் சில புரிதலை கொடுக்கலாம் என்று நம்புகிறேன்.
கட்சி ஆரம்பிப்பது என்பது எளிதான ஒன்றல்ல
நாம் அனைவரும் நினைப்பது போலக் கட்சி ஆரம்பித்து நடத்துவது அவ்வளவு எளிதல்ல. மிக மிகச் செலவு பிடிக்கும் விசயம்.
வெளியே இருந்து நாம் ஆயிரம் கேள்விகள் கேட்கலாம் சம்பந்தப்பட்ட ரஜினி மட்டுமே அதன் பிரச்சனைகளை உணர்ந்தவர்.
உதாரணத்துக்குத் தற்போது அனைவரும் எதிர்பார்ப்பது போல உடனே ஆரம்பித்து விட்டால், அதற்கு ஆகும் செலவு கொஞ்ச நஞ்சமல்ல.
எதோ லட்சத்தில் செலவு முடிந்து விடும் என்று கணக்கு போட்டு இருந்தால், தயவு செய்து உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.
தலைவர் ஊழல், லஞ்சம் இல்லை என்ற நிலையைக் கொண்டு வர விரும்புகிறார். இதைச் செய்ய வேண்டும் என்றால், நமக்கான நெருக்கடியை நாமே ஏற்படுத்தக்கூடாது.
பிறகு வழக்கமான அரசியல் கட்சிகள் போலக் கட்சியை நடத்த நாமும் முறைகேடான செயல்களைச் செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்படும்.
பின்னர் மற்றவர்களுக்கும் தலைவர் நினைக்கும் அரசியலுக்கும் என்ன பெரிய வித்யாசம்?
கட்சி ஆரம்பிப்பது என்பது காய்கறிக்கடை ஆரம்பிப்பது போல அல்ல. இதற்கு என்று முன் களப்பணிகள் ஏராளம். இதைத் தான் தலைவர் செய்து கொண்டு இருக்கிறார்.
தற்போது அவர் ஒன்றும் வெட்டியாக இல்லை, இது குறித்துப் பலருடன் ஆலோசித்து வருகிறார், பிரச்சனைகளுக்குத் தீர்வு என்ன என்பதை விவாதித்து வருகிறார்.
தலைவர் வரும் போது அவரின் கொள்கைகள், பிரச்சனைகளுக்குத் தீர்வு, திட்டங்கள் போன்றவற்றைக் கூறும் போது தற்போது அவரை விமர்சிப்பவர்கள் அமைதியாகி விடுவார்கள்.
கருத்துக்கூறினால் போதுமா? பிரச்சனை தீர்ந்து விடுமா?!
தற்போது சமூகத்தளங்களில் இருக்கும் எண்ணம் என்ன தெரியுமா?
ஒருவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், பல தவறுகளைச் செய்து இருந்தாலும் தற்போதைய பிரச்னைக்கு மக்கள் எதிர்பார்க்கும் கருத்தை கூறி விட்டால் அவர் நல்லவர் . அவ்வளவு தான்.
இதுவரை செய்த தவறுகள் மறக்கப்படும்.
அரசியல்வாதிகளுக்கு இது போலக் கருத்து கூறுவது தான் வேலையே அவர்கள் கூறிக்கொண்டு இருப்பார்கள். கூறவில்லை என்றால், ஊடகங்கள் கண்டு கொள்ளாது.
இதையே ரஜினியும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?
கமல் கருத்துக் கூறிக்கொண்டு இருக்கிறார், மறுக்கவில்லை ஆனால், அதனால் என்ன நடந்து விட்டது?!
பிரச்சனைகள் தீர்ந்து விட்டதா? தீர்வு கிடைத்து விட்டதா? மக்களை மேலும் உணர்ச்சிவசப்பட வைக்க மட்டுமே முடியும் வேறு எதுவும் நடக்காது.
அதோடு ஒவ்வொருவரையும் திருப்தி செய்யக் கருத்துக் கூற ஆரம்பித்தால், புலி வாலைப் பிடித்த கதையாகி விடும்.
அனைத்துக்கும் கருத்து கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள், கூறியே ஆக வேண்டும். இது தேவையற்ற நெருக்கடி.
கமல் தற்போது அனைத்துக்கும் கருத்து கூறி வருகிறார்.
பின்னர் ஏதாவது காரணங்களால் அமைதியாக இருந்தால், இது வரை இவரைப் பாராட்டியவர்களே ஏன் கருத்து கூறவில்லை என்று கடுமையாக விமர்சனம் செய்வார்கள்.
கமல் தற்போது போலவே களத்தில் இறங்காமல் ட்விட்டரில் மட்டுமே தொடர்ந்து கருத்து கூறுவாரேயானால் இது போல விமர்சனங்களை இனி எதிர்கொள்வார்.
வழக்கமான உணர்ச்சி அரசியலையா விரும்புகிறீர்கள்?
அனிதா பிரச்சனையில் தலைவர் கூறியது இரங்கல். ஒரு இரங்கலை எப்படி அணுக வேண்டுமோ அவ்வாறு அணுகி இருக்கிறார். அதில் உணர்ச்சி தூண்டுதலை செய்யாமல் மிக நாகரீகமாகத் தனது இரங்கலை கூறி இருக்கிறார்.
இப்பிரச்சனையை வைத்து உணர்ச்சிவசப்பட்டுக் கருத்து கூற தலைவருக்கு எவ்வளவு நேரம் ஆகி விடப்போகிறது? இதைத் தான் அனைவரும் விரும்புகிறீர்களா?
இதைத் தான் விரும்புகிறீர்கள் என்றால், நமக்கு ஏன் தலைவர் அரசியலுக்கு வர வேண்டும்?!
அதற்குத் தற்போது இருக்கும் மக்களின் உணர்ச்சியைத் தூண்டும் அரசியல்வாதிகளே போதுமே! புதிதாக இன்னொருவர் எதற்கு?
ட்விட்டரிலேயே பிரச்னையைத் தீர்க்க முடியும், அனைத்துக்கும் தீர்வு கொடுக்க முடியும் என்றால் தலைவர் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்? அவருடைய ட்விட்டர் கணக்கு போதுமே!
தலைவருக்கு அறிவுரை கூறாதீர்கள்
நம் அனைவரை விடப் பிரச்னையை எப்படி அணுகுவது என்று தலைவருக்குத் தெரியும். எனவே, நம்மை அறிவாளியாக நினைத்துக்கொண்டு, நாம் அவருக்கு அறிவுரை கூறுவதை முதலில் நிறுத்த வேண்டும்.
40+ வருடங்களில் அவர் எதிர்கொள்ளாத பிரச்சனைகள், விமர்சனங்கள் இல்லை. இதையெல்லாம் தாண்டித்தான் மக்கள் மனங்களில் வீற்று இருக்கிறார்.
எனவே, ஒரு பிரச்னையை எப்படி கையாளவேண்டும் என்று அவருக்கு நன்கு தெரியும். அதனால் தான் இன்னும் அவர் காலங்களை கடந்து சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்.
குசேலன் பிரச்சனையின் போது அவர் எதிர் கொண்ட விமர்சனங்களில் நம்மில் ஒருவர் இருந்து இருந்தால், நம் நிலை என்னவென்று தெரியுமா?
ஒன்று அத்துறையை விட்டே கிளம்பி இருப்போம் அல்லது மன உளைச்சலில் மனப் பிறழ்வு ஆகி இருப்போம்.
இது மாதிரி 1000 பிரச்சனைகளைக் கடந்து வந்தவர் அதனால் தான் இவ்வளவு பேர் தலைவரை விமர்சித்தும், பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டும் இன்னும் மக்கள் மனதில் தொடர்ச்சியாக இடம் பெற்று இருக்கிறார்.
கடந்த வருடங்களில் எத்தனையோ பிரச்சனைகளைத் தாண்டி வந்து இருக்கிறார். இன்னும் உச்சத்தில் தானே இருக்கிறார் காரணம் அவர் பிரச்சனைகளை நாகரீகமாக எதிர்கொண்ட விதம்.
மக்களின் கோபத்துக்கு காரணம் என்ன?
தற்போது மக்களுக்கு இருக்கும் கோபத்துக்குக் காரணம், "ரஜினி வருகிறேன் என்று போக்குக் காட்டிக்கொண்டே இருக்கிறாரே!" என்பது தான். இது இயல்பான, நியாயமான கோபம்.
தலைவர் வந்து தனது கொள்கைகளை, திட்டங்களை அறிவித்தால், தற்போது எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் பலரும் புரிந்து கொள்வார்கள், ஆதரவை தெரிவிப்பார்கள்.
எனவே, இது குறித்துக் கவலை வேண்டாம்.
வெற்று அறிக்கை, உணர்ச்சிவசப்படும்படியான கருத்து கூறல் போன்றவை பிரச்னைக்குத் தீர்வாகாது என்பதைத் தலைவர் தெளிவாக உணர்ந்து இருக்கிறார்.
எனவே, அதை வெளிப்படுத்தும் போது இத்தனை நாள் அமைதியாக இருந்ததற்கான காரணத்தைப் புரிந்து கொள்வீர்கள்.
அதன் பிறகு ரஜினியை, ரசிகர்களைக் கிண்டலடித்தவர்கள் வாய் மூடி இருப்பார்கள்.
சரியான நேரத்தில் தலைவர் வருவார்! நல்லதே நடக்கும்.
ரஜினி ரசிகர்களால் ஏற்படும் பிரச்சனைகள்
தலைவர் அரசியலுக்கு வர ஏற்படும் தாமதத்தால், மற்றவர்கள் விமர்சனத்தையே தாங்க முடியாதவர்கள், தலைவர் அரசியலுக்கு வந்த பிறகு ரசிகர்களாலே ஏற்படும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வார்கள்?
தலைவர் அரசியலுக்கு வந்த பிறகு ரசிகர்கள் பலர் தங்கள் சுயநலத்துக்காகத் தலைவருக்கு எதிராகப் பேசுவதும், எதிராக நடந்து கொள்வதும், பதவிக்காக கட்சி மாறுவதும் நடக்கத்தான் போகிறது.
எதிர்பார்த்த பதவி / பொறுப்பு கிடைக்காதவர்கள் வேறு கட்சிக்குச் சென்று தலைவரைப் பற்றி மோசமாக கருத்துக்கூறுவதும் நடக்கத்தான் போகிறது.
அதற்கெல்லாம் என்ன கூறுவீர்கள்?
இதைத்தான் "பணம் சம்பாதிக்கணும் என்று நினைப்பவர்கள் தற்போதே விலகி விடுங்கள்" என்று ரசிகர்கள் சந்திப்பில் தலைவர் கூறினார்.
நாம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கிறது. எனவே, தற்போது நடப்பதெல்லாம் ஒன்றுமே இல்லை.
இதற்கே பொறுமையிழந்தால் எப்படி?!
நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்
நமக்கு நேர்மறையான எண்ணங்கள் வேண்டும். முடியாது, நடக்காது என்ற எண்ணங்களை விட்டொழியுங்கள். நேர்மறை எண்ணங்களே நம்மை மேம்படுத்தும்.
இதோடு தலைவர் கூறிய செவிட்டுத் தவளையாக இருங்கள். எதுவுமே பிரச்சனையாகத் தோன்றாது. இவற்றைப் பின்பற்றினால் அனைத்தும் நலமே!
மகிழ்ச்சி!
கிரி
www.giriblog.com
|