(27 அக்டோபர் 2017) சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாரான 2.0 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் பிரம்மாண்டமான முறையில் நடை பெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த், ஏ.ஆா்.ரகுமான், சங்கர், அக்ஷய் குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. ஏ.ஆர். ரகுமான் இசையில் பிரமாண்டமாக தயாராகி உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் நள்ளிரவில் கோலாகலமாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பிமாண்டத்தை உறுதி செய்ய ரகுமானும், சங்கரும் ரயில் வடிவிலான வாகனத்திலேயே மேடைக்கு வந்தனா். நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 125 சிம்பொனி கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நேரலையாக நடத்தினார். மேலும் 2.0 படத்திலிருந்து ஒரு பாடலை இந்நிகழ்ச்சியில் நேரலையாக இசையமைத்தாா்.
இதனைத் தொடா்ந்து 2.0 வின் இரண்டு பாடல்கள் முதல்கட்டமாக வெளியடப்பட்டுள்ளது. பாடல் வெளியான வெகுசில மணித்துளிகளிலேயே பாடல்கள் இணையத்தில் வைரலாகத் தொடங்கின.
2.0 படத்தின் இசை வெளியீடு புர்ஜ் அல் அராப் ஹோட்டலில் நடந்தது. முதன் முறையாக இந்த இடத்தில் நிகழ்ச்சியை நடத்த துபாய் அரசாங்கம் உத்தரவு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. துபாயில் முதல் முறையாக பேனர்கள், டிஜிட்டல் விளம்பரங்கள் செய்யப்படும் முதல் படம் 2.0 என்பது குறிப்பிடத்தக்கது.
2.0 இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராணா, ஆர்.ஜே. பாலாஜி , பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முழுப் பேச்சு
துபாயில் உலகே வியக்கும் அளவுக்கு பிரமாண்டமாக நடந்த 2.ஓ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசுகையில், “ஷங்கர் மேல இருக்கற நம்பிக்கைதான் இந்தப் படத்துல என்னை நடிக்க வச்சது. ஷங்கர் சொன்னார் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன், வெயில்ல நின்னேன்னு.
ஒரு வாய்ப்பு கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அந்த வாய்ப்புக் கிடைக்கும்போது அதைச் சரியா பயன்படுத்திக்கலேன்னா நம்மளை விட முட்டாள் யாருமில்லை. ஒருத்தர் பேரும் புகழோடும் இருக்காங்கன்னா அது அவங்க திறமையாலயோ, கடின உழைப்பாலயோ மட்டும் கிடையாது. அவருக்குக் கிடைச்ச வாய்ப்பை அவர் சரியா பயன்படுத்திக்கிட்டார். அதனாலதான் அவர் பெரிய இடத்தில் இருக்கார்.
வாய்ப்புகள் சில பேருக்கு தானா வரும். அது ஆண்டவனுடைய அருள். அப்படி வரலேன்னு சொன்னா நாமளே அந்த வாய்ப்புகளைத் தேடி உண்டாக்கிக்கணும்.
அந்த வாய்ப்பு மத்தவங்க வயித்துல அடிக்காம, மத்தவங்க வாய்ப்பைப் பறிக்காம, நாணயமா, நேர்மையா வாய்ப்பை சம்பாரிச்சு உழைச்சா என்னிக்குமே நல்லாருப்போம்.
2.ஓ படம் வந்து… நான் எப்படி சொல்றதுன்னு தெரியல… இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த ஷங்கர், சுபாஷ்கரன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் ஒவ்வொருத்தரும் வாய்ப்பை நன்கு பயன்படுத்தியிருக்காங்க. அதாவது ஷங்கருடையை இந்த கற்பனையை திரையில கொண்டு வர்றதுக்கு சுபாஷ்கரன் பெரிய வாய்ப்பை அமைச்சிக் கொடுத்திருக்கார்.
சினிமாவிலதான் சம்பாதிக்கணுங்கற நிலையோ, ஆசையோ சுபாஷ்கரனுக்குக் கிடையாது. அவருக்கு நிறைய தொழில்கள் உள்ளன. ஏராளமா சம்பாதிச்சிருக்கார். இந்தியாவுக்கு ஒரு நல்ல பிரமாண்டமான படம் கொடுக்கணும், இதுவரை யாரும் செய்திடாத அளவுக்கு இந்திய மண்ணுக்கு ஒரு படம் தரவேண்டும் என்ற ஆசையோட, எண்ணத்தோட அவர் வந்தது, அவருக்கு இந்த மாதிரி ஒரு டைரக்டர் கிடைச்சது ஒரு வாய்ப்புதான்.
எல்லாமே வாய்ப்புகள்தான். ஏ ஆர் ரஹ்மான், ரசூல் பூக்குட்டி.. இப்படி ஒவ்வொருத்தரும் இந்தப் படத்துக்கு அமைஞ்சது தெய்வ சங்கல்பம்தான்.
இந்தியாவில இனிமே இதுமாதிரி ஒரு படம் வருமா என்பது எனக்குத் தெரியாது. ஆனா ஷங்கரால நிச்சயமா முடியும் அது.
இந்தப் படத்தை நாமளே ஹாலிவுட்டுக்கு மீறின படம் என்று சொல்லிக்கிட்டிருந்தா, நம்மளைப் பத்தி நாமளே ஊதிப் பெருதாக்குற மாதிரி இருக்கும். ஆனா படம் பார்த்த பிறகு நீங்களே உணர்வீங்க.
இந்தப் படத்தில் நம்பர் ஒன் ஹாலிவுட் டெக்னீஷியன்ஸ் வேலை பாத்திருக்காங்க. அவங்க பணத்துக்காக மட்டும் இந்தப் படத்துல வேல செய்யல. ஏற்கெனவே படங்கள்ல ரொம்ப பிஸியா இருந்தவங்க. ஆனா ஷங்கரோட ஸ்க்ரிப்ட் கேட்டு பிடிச்சுப்போய் தேதிகளை அட்ஜஸ்ட் பண்ணிக் கொடுத்திருக்காங்கன்னு சொன்னா, இந்த சப்ஜெக்ட் எப்படி இருக்கும்னு யோசிச்சிப் பாத்துக்கங்க.
இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்கு மீண்டும் நன்றி தெரிவிச்சிக்கிறேன்,” என்றார்.
அவர் தனது பேச்சில் துபாய் அரசருக்கு நன்றி தெரிவித்தார். தன் பேச்சில், “நான் துபாய்க்கு வந்தது இதுதான் முதல் முறை. நிறையமுறை, வேறு நாடுகளுக்குச் செல்லும்போது வழியில் இங்கே இறங்கி ஏர்போர்ட்டில் தங்கி இருக்கேன்.
ஏர்போர்ட்டுக்கு வெளியே துபாய்க்கு வருவது இதுதான் முதல் முறை. இந்த துபாய் தெற்காசியாவில் ஒரு அமெரிக்கா. எத்தனையோ பேருக்கு வேலை கொடுத்திருக்காங்க. எத்தனையோ இந்தியர்கள் இங்கே வேலை பார்க்கிறாங்க. அவங்களுக்கு வேலை கொடுத்த துபாய் அரசருக்கு ஒரு இந்தியனா நன்றி தெரிவிச்சிக்கிறேன்,” என்றார்.
எனக்கும் இஸ்லாமுக்கும் ஏதோ ஒரு வகை பந்தம் தொடர்கிறது. எழுபதுகளில் நான் கண்டக்டராக இருக்கும் போது எனக்கு பல உதவிகளை செய்தவர்கள் என் இஸ்லாமிய நண்பர்கள்தான்.
நான் நடிக்க ஆரம்பித்த புதிதில் எனக்கு தங்க இடம் தந்த நண்பரின் வீட்டுக்குச் சொந்தக்காரர்தான்.
நான் இப்போது இருக்கும் போயஸ் கார்டன் வீட்டை எனக்கு விற்றவரும் ஒரு இஸ்லாமியர்தான்.
ராகவேந்திரா மண்டபத்தின் இடத்தை எனக்கு விற்றவரும் ஒரு இஸ்லாமியர்தான். அது தானா அமைஞ்சது.
அனைத்துக்கும் மேல என் குரு ராகவேந்திரா சுவாமி கோயில் அமைய மந்த்ராலயாவில் இடம் கொடுத்தவரும் ஒரு நவாப் தான்.
அதுக்கும் மேல நான் நடித்த படங்களிலேயே ஒரு படத்தின் பெயரை சொன்னால் அதிரும் என்றால் அது பாட்ஷா படம்தான். அதுவும் ஒரு இஸ்லாமியர் பெயர்தான்.
இப்படி பல வகையில் இஸ்லாம் என் வாழ்க்கையில் தொடர்ந்து வந்துகொண்டுள்ளது,” என்று ரஜினிகாந்த் மேடையில் பேசினார்.
டைரக்டர் ஷங்கர்
டைரக்டர் ஷங்கர் பேசுகையில், “இந்தப் படம் ‘எந்திரன்’ படத்தின் தொடர்ச்சி அல்ல. இது வேறொரு கதைக் களம். உலகளாவிய ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறேன்.
நமக்கு பரிச்சயமான டாக்டர் வசீகரன், சிட்டி, 2.0 போன்றவர்கள் எல்லாம் இக்கதையில் வருவார்கள். இப்படி எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே ‘2.0’. அக்கற்பனை என்னை எங்கெல்லாம் இழுத்துக் கொண்டு போனதோ அங்கெல்லாம் பயணித்திருக்கிறேன். அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.
மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது கூட, டெல்லியில் 47 டிகிரி வெயிலில், 12 கிலோ எடையுள்ள உடையை போட்டுக் கொண்டு நடித்துக் கொடுத்த ரஜினி சாருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். பேட்மேன், சூப்பர்மேன் மாதிரியான உடை அது. இந்திய சினிமாவில் அந்த மாதிரி உடைகள் வந்ததில்லை.
அதே போன்று திருக்கழுக்குன்றத்தில் பெரிய பள்ளம் தோண்டி, அனிமேட்ரானிக்ஸ் காட்சிகளுக்காக 4 மணி நேரம் மண்ணிற்குள் இருந்தபடி நடிக்க வேண்டும். அதையும் பிரமாதமாக செய்துக் கொடுத்தார்.
இவ்வளவு வருடங்கள் நடித்த பிறகும் கூட, இப்போதும் என்ன காட்சிகள் எடுத்தாலும், அக்காட்சியில் இதுவரை செய்யாத மாதிரி நடிக்க வேண்டும் என்று மெனக்கிடுவது ரஜினி சாரிடம் பாராட்டுக்குரிய விஷயம்.
சூப்பர் ஸ்டாரை அவ்வளவு எளிதில் நெருங்கிவிட முடியுமா… படம் பண்ணலாம் என்று பேசிப் பேசி 11 வருடங்கள் கழித்துதான் அது சாத்தியமானது. இப்போது அவருடன் 3 படம் செய்து விட்டேன்.
ஒருமுறை கதை விவாதத்திற்காக கூர்க்கில் இருக்கும் போது, ஒரு குடும்பத்தினர் வந்தார்கள். “நீங்கள் 10 வருடம் முன்பு பிறந்திருக்கக் கூடாதா” என்றார்கள். “ஏன்?” என்றவுடன் “இன்னொரு 3 படம் ரஜினி சாரோடு செய்திருப்பீர்களே,” என்றார்கள்
|