கலைஞர், ஜெ இருவரில் கலைஞர் அடிக்கடி செய்தியாளர்களைச் சந்திப்பார். ஜெவுக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் என்றாலுமே கூட ஜெவின் பத்திரிக்கையாளர் சந்திப்பும் மிகவும் ரசிக்கத்தக்க வகையில் இருக்கும்.
இங்கே ரசிக்கத்தக்க வகையில் என்று நான் குறிப்பிடுவது பத்திரிக்கையாளர்களை எதிர் கொள்ளும் பாங்கு.
அதே போல பத்திரிக்கையாளர்கள் கேட்கும் எந்த மாதிரியான கேள்விக்கும் முகம் காட்டாமல் பதில் அளிக்கும் பாங்கு அனைத்திலும் ரஜினி கையாளும் விதம் சிறப்பாகவும் பொறுமையாகவும் இருக்கும்.
அரசியலை தொடர்ச்சியாகக் கவனிக்கும் யாவருக்கும் நினைவில் இருக்கும் ஒரு சம்பவம்...
ரஜினி அரசியல் வருகையை அறிவிக்கும் முன்பு சென்னை விமான நிலையத்தில் ஒரு பத்திரிக்கையாளர் "போர் எப்போ சார் வரும்?" என மிக மிக எள்ளலாகக் கேட்ட கேள்வி.. அதனையும் அவர் எதிர்கொண்டார்.
இதோ கடந்த மாதம் அமெரிக்கப்பயணத்துக்கு முன்பு கொடுத்த பேட்டியின் கடைசியாக "டே கேர் சார்" என்று ஒரு நிருபர் சொன்ன இதனையும் எதிர்கொண்டார். இடைப்பட்ட 6 மாதங்களில் சிற்சில பத்திரிக்கையாளர் சந்திப்பு மட்டுமே நடந்திருக்கிறது.
எப்படி இந்த மாற்றம் என்று கேட்டால் அதற்கு ஒரே பதில் ரஜினி என்பது மட்டும் தான்.
மாவட்ட, இளைஞரணி செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டங்களை தொடர்ந்து நேற்று (20 மே 2018) மகளிரணி ஆலோசனைக் கூட்டம் என அவர் பாதையில் சரியாகச் சென்று கொண்டிருப்பதை அவ்வப்போது வெளி உலகுக்குத் தெரியப்படுத்தும் விதமாகப் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்த்துவது வரவேற்புக்குரியது.
ரஜினி மக்கள் மன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள் வெளி உலகுக்குத் தெரிய வரும் என்பதோடு அவ்வப்போது நிகழும் அரசியல் குறித்து ரஜினியின் பார்வைகளை மக்களிடம் தெளிவுபடுத்தவும் உதவும்.
இது "ரஜினி கருத்து சொல்லவில்லை" என்ற குற்றச்சாட்டுக்குப் பதிலடியாக அமையும்.
தமிழக அரசியலில் பெண்கள் ஆதரவு பெறுபவர்கள் வெற்றி பெறுவது எளிது. எம்.ஜி.ஆர், ஜெவுக்கு அடுத்து மிக நிச்சயமாக ரஜினி பெண்கள் வாக்குகளை அதிகமாகப் பெறுவார் என இப்போதே பல அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றார்கள்.
ஆனால் அதனை மக்கள் மன்றத்தின் ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதில் மகளிரணியின் பங்கு முக்கியமானது.
நேற்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பு மகளிரணிக்கு நிச்சயம் ஒரு உந்துதலாக இருக்கும்.. அவர்கள் ஆர்வமாக வேலை செய்ய வழிவகுக்கும்.. தனது 78 வயது ரசிகையின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைத்தது இவ்விடத்தில் கவனிக்கத்தக்கது.
அடுத்ததாக ரஜினி பாஜக ஆள் எனச் சொல்லி வருபவர்களுக்கு நேற்றும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். கர்நாடக நிகழ்வுகளை மேற்கொள்காட்டி "ஆளுநர் அழைத்த நிகழ்வை கேலிக்கூத்து" என வர்ணித்தது உண்மையிலேயே பாஜகவினருக்குக் கடுப்பைக் கிளப்பி இருக்கும்.
காவிரி விவகாரத்தில் தன் நிலைப்புத் தன்மையைத் தொடர்ந்து காட்டும் விதமாக "அணையின் கட்டுப்பாடு மேலாண்மை ஆணையம் வசம் இருப்பதே நல்லது" எனச் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
அடுத்து பேட்டியின் மிக முக்கியச் சாராம்சம் வீணாக ரஜினியின் பெயரை வைத்தே அரசியல் நடத்தி வரும், தொடர்சியாக ஊடக வெளிச்சத்தைப் பெற முயலும் ஒருவருக்கு ஒரு கொட்டாக அமையும்.. அவருக்கு எத்தனை கொட்டு வைப்பது என்று தான் தெரியவில்லை.
இது பற்றிய கேள்விக்கு "அனைத்துக் கட்சி கூட்டம்னு சொன்னாங்க நான் கட்சியே இன்னும் ஆரம்பிக்கவில்லையே கண்ணா!" எனத் தன் ட்ரேட் மார்க் புன்னகையைப் பதிலாக்கியது செம்ம மொமண்ட்.
இன்னமுமே கூட ரஜினி முழுமையான அரசியல்வாதியாகப் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தவில்லை என்பது தான் என் கணிப்பு. அவர் கட்சி ஆரம்பித்த பிறகு தரப்போகும் ஒவ்வொரு பத்திரிக்கையாளர் சந்திப்பும் இன்னமும் வேற லெவலாக இருக்கும்.
கடந்த சில மாதங்களில் பத்திரிக்கையாளர் பேட்டி சில முறை தான் நடந்திருக்கும்.. ஒவ்வொன்றும் யூட்யூபில் பல்லாயிரம் பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது.காரணம் ரஜினியின் வீச்சு மட்டும் அல்ல.. அவரின் பதில்களில் இருக்கும் நேர்மையும் தான்.
மக்கள் அவரைக் கவனிக்கிறார்கள்.. அரசியலுக்கு வரட்டும் அவரை மட்டுமே கவனிப்பார்கள்.
ரஜினியை எதிர்கொள்வதற்கே சிலர் ஒரே நாளில் பல பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்த்தப்போகும் வரலாறெல்லாம் நடக்கிறதா இல்லையா என்று பாருங்கள்.
- ஜெயசீலன்
|