ஒரு மனிதனின் அரசியலை விமர்சிக்கலாம் தவறில்லை... ஆனால் உலக வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு மனிதனின் அரசியல் வரவை எதிர்ப்பது இவருக்கு மட்டும் தான்...
எதிர்ப்பவர்கள் யார் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் வியாபாரிகள் மற்றும் அவர்களோடு வணிக தொடர்பில் இருக்கும் ஊடக முதலாளிகள்.
எதிர்ப்பதற்கு சொல்லும் காரணங்கள் விசித்ரமானவைகள்.
சிலருக்கு அவர் தமிழன் இல்லையாம்
சிலருக்கு அவர் வயது காரணமாம்
சிலருக்கு அவர் வண்ணம் காரணமாம்
சிலருக்கு அவர் ரஜினி என்பது மட்டுமே காரணமாம்
இன்று தமிழ் இந்துவில் எழுதி இருப்பவருக்கு உள்ளூரில் எந்த காரணமும் கிடைக்காமல் அமெரிக்க ஸ்டார் பக்ஸ் காப்பி கடைக்கு எல்லாம் சென்று காரணம் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது
மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் கலையில் கை தேர்ந்து இருக்கிறார்.
அரசியல் என்பது சாமான்யனுக்கானது என்பதை இன்று நாட்டில் இருக்கும் அனைத்து கட்சிகளும் மாற்றி எழுதி ஆச்சு. ஆட்சியும் அதிகாரமும் பணம் படைத்தவனுக்கே என்று நிலை நாட்டியாச்சு.
அரசியல் வியாபாரங்களை இலவசங்கள் கொடுத்து செழிக்க வைத்தாயிற்று. கழகங்கள் உட்பட கட்சிகள் அனைத்தும் வியாபாரம் ஒன்றே நோக்கு.. சொத்து ஒன்றே இலக்கு என ஜனநாயகத்தை பணநாயகம் கொண்டு வீழ்த்தியாச்சு.
எல்லோரும் கோமணத்துக்கு வேலை இல்லை என மானம் தொலைத்து அலையும் அரசியல் வீதியில் சாதி மதம் சார்பற்ற மக்கள் நலன் பேணும் ஒரு சாமான்யனுக்கான ஆட்சியை ஆன்மீக அரசியல் மூலம் கொடுக்க முடியும் என சொல்லும் ரஜினியின் அரசியலில் என்ன பேராபத்தை காண்கிறாரோ கட்டுரையாளர் நமக்கு புரியவில்லை
எதிரியை அடையாளம் காட்டாமல் காற்றில் கம்பு சுற்றுகிறாராம் ரஜினி...
பத்திரிகையாளர் சந்திப்பில் தெளிவாக ஏழைகளின் வறுமை.. லஞ்சம்...வேலையில்லா திண்டாட்டம் விவசாயிகளின் கண்ணீர்...போன்றவைகளே தன் எதிரி என பலமாக பதிவு செய்து இருக்கிறார்.
பிரச்சனைகளுக்கு எதிராக கம்பு சுற்ற போவதாக சொல்லும் மனிதரை அதை விடுத்து கட்டுரையாளர் தனி மனிதர்களை தம் எதிரிகளாக கட்டமைத்து தனி மனித விரோதங்களை வளர்க்க சொல்லுவதில் எந்த அர்த்தமும் இருப்பதாக தெரியவில்லை
ஸ்டார் பக்ஸ் இருக்கும் அதே அமெரிக்காவில் பேசப்படும் ஆங்கில மொழியில் ஒரு சொல்லாடல் உண்டு
Actions speak louder than words..அதாவது பேச்சை விட செயல்களின் ஒலி அதிகமானது
மற்ற இயக்கங்களில் மேடை போட்டு ஏற்ற இறக்கமாய் பேச மட்டுமே ஊக்குவிக்கும் நாட்டில் தன் அமைப்பில் இணையும் உள்ளங்களிடம் நாமும் மற்றவர்களைப் போல் நித்தம் ஒரு பேச்சு அதுவும் அந்த பொழுதோடு போச்சு என இல்லாமல் நம் எண்ணத்தையும் உழைப்பையும் செயலில் காட்டுவோம் என எடுத்து இயம்பும் தலைவரின் செயல்பாட்டில் கட்டுரை எழுதியவர் காணும் குறை என்ன என்பது கொஞ்சமும் விளங்கவில்லை
ரஜினி முன் வைப்பது மாற்று அரசியல்.
மனிதனோடு மனிதன் மோதும் ரத்த சரித்திரங்கள் முடியட்டும்
சாமானியனின் மகிழ்ச்சி வெளிப்படும் நல்ல ஆன்மீக அரசியல் மலரட்டும்
ஆயிரம் கட்டுரைகள் அவர் அரசியலை தடுக்க வரலாம்..ஆனால் மக்கள் மன்றத்தில் அவர் முன் வைக்கும் எளிய மக்களுக்கான அரசியல் நிச்சயம் வரலாறு படைக்கும்.
- டிபிகே தேவ்நாத்
|