இரு தினங்களுக்கு முன் சமூக வலை தளத்தில் கிட்டத்தட்ட 2.5 லட்சம் ட்வீட்களால் கவனம் பெற்ற வாசகம் தான் இந்த "அன்றே_சொன்ன_ரஜினி" டேக்.
ஏன்? திடீரென்று இந்த ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகிறது என நேசனல் மீடியாக்களே குழம்பிவிட்டன.
ஆனால் விசயம் தெரிந்த தமிழக மீடியாக்கள் வழக்கம் போல மௌனம் காத்தன..
முன்பு ஒரு முறை காலாவதியான காலா, நான் தான் பா ரஜினி என்ற இரு டேக்களும் 50கே சொச்சம் ட்வீட்களுடன் ட்ரெண்டிங்கிள் வந்த போது முந்தி அடிந்து கொண்டு செய்தி வெளியிட்ட புதிய தலைமுறை எனும் நடுநிலை ஊடகம் இப்போது அன்றே சொன்ன ரஜினி 2 லட்சம் ட்வீட்களைக் கடந்த பின்பும் சாவகாசமாகச் செய்தி வெளியிட்டது..
ரஜினி குறித்த செய்திகளில் எது ஊடக கவனம் பெற வேண்டும் என்பதற்கான சின்ன உதாரணம் தான் இது..
ரஜினி தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களோடு நேரம் செலவிட்ட பின்பு கடைசியாகக் கிளம்பும் முன்பு அளித்த பேட்டியில் போராட்டம் குறித்துப் பேசுகிறார்.
போராட்டத்தை எந்த இடத்திலும் கொச்சைப் படுத்தவில்லை.. புனித போராட்டம் என வர்ணித்தே பேட்டியை தொடங்குகிறார்..ஆனால் போராட்டம் எப்படி வன்முறை ஆனது என நெற்றிப்பொட்டில் அடித்தார் போலப் பேசினார்.
அவர் பேசிய பேச்சை யாரும் ரசிக்கவில்லை.. அதை அவர் ஏதோ போகிற போக்கில் சொல்லிவிட்டதாக அனைவரும் கருதினர்.
ஆனால் அவருக்கு உறுதியான தகவல் கிடைத்ததால் மட்டும் தான் இத்தனை சென்சிடிவான விசயத்தில் அவரால் வெளிப்படையாகப் பேச முடிந்திருக்கிறது.... இதை எப்படியாவது ட்விஸ்ட் செய்ய வேண்டும் எனப் பலர் முயன்றனர்.
அதில் ஓரளவு வெற்றியும் கண்டனர்.. ரஜினி ஒட்டுமொத்தமாகப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திவிட்டார் என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஊடகங்கள் சர்ச்சை ஆக்கின.
பொதுமக்கள் மத்தியில் ரஜினி எதிர்ப்பு அலையை வலுவாக உருவாக்க இந்த விசயத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.
அதோடாவது விட்டார்களா..? இல்லை.. அவரின் இந்தப் பேட்டி காலா திரைப்படத் தோல்வியில் முடிய வேண்டும் எனப் பலர் பிரயத்தனப்பட்டார்கள்.
காலா வெளியீடு வரை இந்தப் பேசுபொருளை மடை மாற்றாமல் அப்படியே தொடர்ந்தும் வந்தனர்.
ரஜினி இப்படிப் பேசிவிட்டார் காலாவை புறக்கணியுங்கள், காலாவை திரையரங்கில் பார்க்காமல் தமிழ் ராக்கர்ஸில் பாருங்கள் என எத்தனை எத்தனை எதிர்ப்பு பிரச்சாரங்கள்..?
ஆனால் நடந்தது என்ன? காலா இன்றளவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமா வரலாற்றில் நான்கு (எந்திரன், லிங்கா, கபாலி, காலா) 150+ கோடி வசூல் கொடுத்த ஒரே நடிகர் எனும் சாதனையைக் காலா மூலம் தன் வசப்படுத்தியிருக்கிறார் ரஜினி .
படத்திற்கு விமர்சன ரீதியிலும் வரத்தக ரீதியிலும் அபாரமான வரவேற்பு இருக்கிறது. ஆகப் போலி போராளிகளின் இணைய எதிர்ப்புப் பிரச்சாரம் எத்தனை பெரிய தோல்வி அடைந்திருக்கிறது என்பதை நாம் கண்கூடாக உணர்ந்த இடம் தான் காலாவின் வெற்றி..
இணையத்தில் எதிர்ப்பு வளரும், அதற்காக எனக்குத் தெரிந்த உண்மையைக் கூடப் பேச மாட்டேன் என்பது தான் இது வரையிலான தலைவர்களின் செயல்பாடுகள்.
அதாவது பெரும்பான்மையானவர்கள் ஏற்கும் கருத்தை வழிமொழிந்துவிட்டு Safer side ல் நின்று ஆடும் ஆட்டம்.. கமல், ஸ்டாலின் என அத்தனை பேரும் தூத்துக்குடி சம்பவத்தில் கையிலெடுத்த உத்தி இது தான்.
ஆனால் ரஜினி மட்டும் தான் எதிர்ப்புகள் வரும் என்பது தெரிந்தும் உண்மையின் பக்கம் நின்று ஆடினார்.. எத்தனை எதிர்ப்புகள் வரட்டும்..நான் நான் இப்படித்தான் என நிற்கும் ஒரே தலைவராக ரஜினி இருக்கிறார்.
தன் படம் வெளிவருகிறது, அரசியலுக்கு வந்த ஆரம்பக் கட்டம் என இத்தனை சுய நலன்கள் இருந்தும் அவற்றை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் தனக்குத் தெரிந்த உண்மையை உலகிற்கு உரக்கசொன்ன தைரியம் ரஜினிக்கு மட்டுமே சாத்தியம் என உலகம் இன்னொரு முறை உணர்ந்து கொண்டது.
ஆனால் என்ன கொஞ்ச நாட்கள் கழித்து உணர்ந்து கொண்டது இம்முறை..
ஆம் ரஜினி சொல்லி சரியாக ஒரு மாதம் கழித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் தங்கள் குறைகளைப் பகிரவந்த போராட்டத்தை முன்னெடுத்த மீனவ மக்கள் தாங்கள் எப்படியெல்லாம் மூளைச்சலவை செய்யப்பட்டோம், மூளைச்சலவை செய்தது யார், 144 முக்கியத்துவம் தெரியாத எங்களிடம் அதை மீறலாம் என ஆசை வார்த்தைகள் கூறியது யார் எனப் புட்டு புட்டு வைத்தனர்.
ஒட்டுமொத்த இணைய உலகமும் ஆடித்தான் போனது.. ரஜினி ரசிகர்களைக் கேட்கவும் வேண்டுமா..? தூத்துக்குடி விசிட்டுக்கு பின்பு இணையத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிய நிலையில் இருந்த ரசிகர்களுக்கு இந்தச் செய்தி ஒரு உற்சாக டானிக்காக அமைந்து விட்டது.
"அன்றே சொன்ன ரஜினி" என ட்வீட் மழை பொழிந்து இணைய உலகை ஸ்தம்மிக்கச் செய்துவிட்டனர் குறுகிய காலத்திலேயே.
பொய்கள் புயல் போல் வீசும் ஆனால் உண்மை மெதுவாய் பேசும் என்ற ரஜினி படப் பாடல் போலவே உண்மை மெதுவாய் பேசியது.. அதை உரக்க உலகுக்குப் பதிவு செய்ய வேண்டிய ஊடகம் வழக்கம் போலக் கடந்து மௌனித்தனர்.
ரஜினி பேட்டியை ஒருவாரம் விவாதத்தலைப்பாக வைத்து பேசியவை அந்த மக்கள் கருத்தை வெறும் செய்தியாக மட்டும் கடந்துவிட்டனர்.. இருக்கட்டும்...!
அன்றே சொன்ன ரஜினி எனும் சொற்பதம் இது தான் முதலா என்றால் இல்லை..இல்லவே இல்லை.
எப்போதுமே அன்றே சொன்ன ரஜினி எனும் சொற்பதம் பொருந்தும்.. எம்.ஜி.ஆர் விழாவில் ரஜினி அவர் குறித்துப் பேசிய பேச்சுகள் அன்றைக்கே அவர் கைப்படத் துக்ளக்கில் எழுதியவை தான்.
ஆனால் ஊடக வாய்கள் இன்று ரஜினி ஓட்டுக்காக எம்.ஜி.ஆரை துணைக்கு அழைக்கிறார் என்று பதிவு செய்தன.
காவல் துறை தாக்கப்படுவதைக் கண்டித்த போது ரஜினி அதிகாரத்தின் குரலாக இருக்கிறார் எனப் பதிவு செய்த ஊடகங்கள் இதோ இன்றைக்குக் காவல் துறையினர் மீதான தாக்குதல்கள் அதிகமாகிவிட்டன எனப் பதிவு செய்கின்றன.
ஆங்கிலத்தின் அவசியம் குறித்து ரஜினி பேசியதை எள்ளி நகையாடிய ஊடகங்கள் இன்று தமிழக மாணவர்களுக்கு லண்டன் பேராசிரியர்கள் வந்து ஆங்கிலம் நடத்துவார்கள் என்ற செய்தியை தலைப்புச் செய்தியாகப் பதிவு செய்கின்றன.
இதுபோல ஒவ்வொரு விசயத்திலும் அன்றே சொன்ன ரஜினி என ட்ரெண்டிங் செய்ய முடியும்.
தமிழகத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் ரஜினியிடம் பதில்கள் இருக்கின்றன.. வெறும் பதில்கள் மட்டும் அல்ல தீர்வுகளும் திட்டங்களும் செயல்களாகவே இருக்கின்றன.
அவரை ஒரு முறை அந்த நாற்காலியில் அமர வைத்துவிட்டால் இன்று ரஜினி ரசிகர்கள் மட்டும் சொல்லும் அன்றே சொன்ன ரஜினி எனும் சொற்பதம் ஒவ்வொரு தமிழக மக்களாலும் சொல்லப்படும் சொற்பதமாக மாறும்.
தமிழகத்தின் ஏறறத்திற்குக் காலம் தந்திருக்கும் கடைசிக் கருணை ரஜினிகாந்த் என்றால் அதில் மிகை ஏதும் இல்லை..!
- ஜெயசீலன்
|