புவனா ஒரு கேள்விக்குறி - படம் வந்த ஆண்டு 1977
மகரிஷி எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம்.
பஞ்சு அருணாசலத்தின் தயாரிப்பில் S. P. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த படம். தமிழ் வணிக சினிமாவின் போக்கை எண்பதுகளில் ஒட்டு மொத்தமாய் குத்தகைக்கு எடுத்த ரஜினி -SPM ன் கூட்டணியைத் துவக்கி வைத்த வகையில் புவனா ஒரு கேள்விக்குறி தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய படம்
கேமரா பாபு மற்றும் எடிட்டிங் விட்டல்
சென்னையை மட்டுமே பெரும்பாலும் சுற்றி வந்த தமிழ் படங்களின் மத்தியில் அன்றைய நிலையில் அபூர்வமாக கன்யாகுமரியைக் களமாக கொண்டு எடுக்க பட்ட படம் என்பது ஒரு சிறப்பு
நாகராஜன் - சம்பத் என்ற இரு நண்பர்களின் கதை இது.இருவரும் வாழ்க்கையில் இரு வேறு சிந்தாந்தங்களை கொண்டவர்கள்.
எண்ணங்கள் வேறுபட்டாலும் நட்பில் இணைந்து இருப்பவர்கள்
கதையின் களம் நாகர்கோயில்
நேர்வழியே தன் வழி என செல்லும் நண்பன் சம்பத் ஆக ரஜினி வாழ வாய்ப்பு கொடுக்கும் எவ்வழியும் தன் வழியே என செல்லும் நாகராஜனாக சிவக்குமார்
நேர்மறை பாத்திரங்களில் மட்டுமே வலம் வந்த சிவக்குமாரை மாறுபட்ட பாத்திரத்தில் பார்ப்பது பார்வையாளர்களுக்கு புது அனுபவம் என்றால் வில்லனாக மட்டுமே வந்து விசில்களை அள்ளி கொண்டிருந்த ரஜினி அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத நேர்மறை பாத்திரத்தில் மின்னியது தமிழ் ரசிகனுக்கு ஒரு பேரனுபவம் கொடுத்தது என்றே சொல்லலாம்
சுயநலம் ஊறிய லட்சிய வெறியில் வாழும் தன் நண்பனுக்காக எதையும் செய்யும் தியாக திருவுருவமாக இன்னொரு நண்பன்.
இவர்கள் நட்பின் ஊடே நடக்கும் சிந்தாந்த போராட்டங்கள், அதன் வழியே பயணிக்கும் திரைக்கதை. அந்த திரைக்கதையின் மையப் புள்ளியாக புவனா என்ற பெண் பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு வாழ்க்கை அதில் தன் இஷ்டம் முக்கியம் அடுத்தவன் கஷ்டம் நமக்கு என்ன என்பதாக வாழும் நாகராஜன் புவனா வாழ்க்கையில் விளையாடுகிறான். அந்த பாவத்தின் பழியை சம்பத் ஏற்கிறான்.
காலம் போடும் கோலங்களும் ஆனாலும் இவர்கள் வாழ்வில் நிகழும் சம்பவங்களும் என வெகு ஜோராக SPM பின்னிய திரைக்கதை முழுக்க முழுக்க திரைக்கதை பலத்தாலும் நட்சித்திரங்களின் நடிப்பற்றாலாலும் படம் ஜொலித்தது.
சுமித்ராவுக்கு படத்தின் டைட்டில் ரோல். இரண்டு நாயகர்களுக்கு இணையான உணர்ச்சிகளை அடக்கி வெளிப்படுத்தும் ஒரு அழுத்தமான வேடம். சிறப்பான பங்களிப்பு செய்திருந்தார். அவருக்கு இது ஓர் பெயர் சொல்லும் படம்.
அமைதியும் அன்புமாகவே நடித்து வந்த சிவக்குமாரின் சுயநலம் கலந்த வில்லத்தனம் ரசிகர்களைப் பெரிதாக கவர்ந்ததோ இல்லையோ ரஜினியின் நியாவான் வேடம் தமிழ் ரசிகர்களை பெருமளவில் அவர் உயரத்தை கூட்டியது.
முதலில் ரஜினிக்கு படத்தில் சின்ன வேடம் தான் பேச போனார்களாம். அவரால் கவரப்பட்டு பெரிய வேடம் கொடுத்திருக்கிறார்கள்.
அதிலும் சிவக்குமார் சதா நல்லவன் வேடம் போட்டு சலித்ததால் கேட்டு வாங்கியது வில்லன் வேடம். ரஜினிக்கு அடித்தது யோகம். கிடைத்த வாய்ப்பை ரஜினி கோட்டை விட்டதாக சினிமாவில் ஏது வரலாறு?
படம் முழுக்க முழுக்க ரஜினியின் அட்டகாசம் ஆவர்த்தனம் தான்.
ஆரம்ப காட்சிகளில் அப்பாவி காதலனாய் அன்பில் காதலிக்காக காத்து நின்று கனிவதாகட்டும்
காதலியை இழந்து சிறகு ஒடிந்து நிற்கும் கையறு நிலையாகட்டும்
தன் உயிர் காக்கும் நண்பனின் தவறுகளுக்கு தார்மீக துணையாக நின்றாலும் உள்ளே மனம் வெதும்புவது ஆகட்டும்
அண்ணே நாகராஜ் அண்ணே என்று கரம் கூப்பி சிவகுமாரிடம் தத்துவம் பேசுவதாகட்டும்
சுமித்ராவிடம் ஏக்கம் மிகுந்த குரலில் தன் தாபங்களை வெளியிட்டு தவிப்பின்னை உணர்த்தும் இடமாகட்டும்
ரஜினி தன் நீண்ட சினிமா கச்சேரிக்கான அருமையான முன்னுரை எழுதிய படங்களில் இது மிகவும் முக்கியமான படம்.
சினிமா ஒரு Visual medium என்ற கருத்து வலுவாக ஒலிக்க துவங்கிய காலத்தில் வசனங்களில் பெரும் கூர்மையோடு வந்த படம்
உதாரணத்திற்கு..
அண்ணே நாகராஜ் அண்ணே நீங்க கடப்பாரையை முழுங்கிட்டு அது ஜீரணிக்கசுக்கு கசாயம் சாப்பிடுவீங்க... அது ஜீரணம் ஆகாது... வயித்தைக் கிழிச்சிடும்
படத்தில் ரஜினியின் தாடி குறித்த ஒரு சுவாரஸ்யமான வசனம் :
வசதி இல்லாதவன் வச்சா பரதேசி
காரணத்தோடு வச்சா சந்நியாசி
காரணமே இல்லமா வச்சா ஹிப்பி
நீங்க எப்படி?
அதுக்கு ரஜினி சிரிச்சுகிட்டே சொல்லும் பதில்
"நான் சோம்பேறிப்பா"
இன்னொரு குறிப்பிட தகுந்த வசனம்
மேகம் பூவோட வாசம் பெண்ணோட மனம்..இது எந்த பக்கம் போகும்ன்னு யாருக்கு தெரியும்?
வசனம் எழுதியது தூயவன்
படத்திற்கு இசை இளையராஜா.
விழியிலே... பாடல் காதலுக்கு என்றால்
ராஜா என்பார் மந்திரி என்பார்... வாழ்க்கையின் தத்துவத்திற்கு இன்றளவும் நிலைத்து நிற்கும் பாடல்கள்.
ராஜா ரஜினி கூட்டணியின் வெற்றி கீதங்களில் பாடல் வரிகளின் வீரியத்திற்காகவே கொண்டாடப்படும் பாடல்களில் இரண்டாம் பாடலுக்கு நீங்கா இடம் உண்டு.
புவனா ஒரு கேள்விக்குறி ரஜினியின் நடிப்புக்காக பேச பட்ட அளவுக்கு அதில் அவர் பன்ச் மற்றும் ஸ்டைல் பேச படவில்லை என்பது ஆச்சரியம்.
அந்த கை விரல்களை அப்படி இப்படி சொடுக்கி வசனம் பேசும் ஸ்டைல்...ரஜினி ஸ்டைல் வரலாற்றின் ஆரம்ப புள்ளி
படத்தில் அவர் அடிக்கடி உச்சரிக்கும் அண்ணே நாகராஜ் அண்ணே வசனம் பின்னாளில் கொடி கட்டி பறந்த ரஜினியிஸத்தின் துவக்கம்..
நாவல்கள் படமாகி அவை பெரும் வெற்றியைக் குவித்தது 80கலில் தமிழ் சினிமா அடைந்த வரம்.
பொழுதுபோக்கு என்றாலும் கருத்தாழமிக்க கதைகளும் வந்தது 80களின் பெருமை
புவனா ஒரு கேள்விக்குறி ரஜினியின் திரைப் பயணத்திற்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவுக்கும் ஒரு ஆச்சர்யக்குறி என்பதில் நிச்சயம் சந்தகமில்லை.
ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ஆர்வலர்களும் தவறாமல் பார்க்க வேண்டிய படம் இது.
- தேவ்
|