சென்னை ஐகோர்ட்டில், சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா 2015-ம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ‘திரைப்பட இயக்குனரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரிராஜா என்னிடம் ரூ.65 லட்சம் கடன் வாங்கினார். இந்த தொகையை தான் திருப்பித் தரவில்லை என்றால், தன்னுடைய சம்பந்தி நடிகர் ரஜினிகாந்த் தருவார் என்று கஸ்தூரிராஜா உத்தரவாதம் அளித்தார். ஆனால், கடனை அவர் திருப்பித்தரவில்லை. ரஜினிகாந்த் பெயரை தவறாக பயன்படுத்தி கஸ்தூரிராஜா கடன் பெற்றதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி ரஜினிகாந்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
மேலும், கஸ்தூரிராஜா மீது ரஜினிகாந்த் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இருவரும் கூட்டுசேர்ந்து என்னை ஏமாற்றியதாக அறிவிக்கவேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கிற்கு ரஜினிகாந்த் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், மனுதாரர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் அவர் மறுத்து இருந்தார். தன்னிடம் பணம் பறிக்கும் எண்ணத்துடனும், தனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துவதற்காகவும் இந்த வழக்கை போத்ரா தொடர்ந்துள்ளதாகவும் ரஜினிகாந்த் குற்றம்சுமத்தினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார் நேற்று தீர்ப்பை பிறப்பித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
இந்த வழக்கு சட்டத்தை தவறாக பயன்படுத்தி தொடரப்பட்டுள்ளது. பெயரை தவறாக பயன்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாருக்கும் உத்தரவிட ஐகோர்ட்டுக்கு அதிகாரம் கிடையாது. யாருடைய பெயர் பயன்படுத்தப்பட்டதோ, அவர் தான் நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யவேண்டும். நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது.
இந்த வழக்கு ஆவணங்கள் அனைத்தையும் படித்து பார்த்ததில், சமுதாயத்தில் பிரபலமானவரை, அதாவது ரஜினிகாந்தை வலையில் சிக்கவைக்கும் விதமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. மேலும், மலிவான விளம்பரத்துக்காக பிரபலமானவர் மீது சட்டத்தை தவறாக பயன்படுத்தி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுபோன்ற வழக்கை ஆரம்பகட்டத்திலேயே தூக்கிஎறிய வேண்டும். உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளதால் வழக்கை தள்ளுபடி செய்கிறேன். இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரர் முகுல்சந்த் போத்ராவுக்கு ரூ.25 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதிக்கிறேன். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
|