இரு வாரங்களுக்கு முன் வந்த ஒரு ஜூனியர் விகடன் இதழில் தான் இந்த வதந்திக்கான முதற்புள்ளி வைக்கப்பட்டது..
அதாவது ரஜினி அதிமுகவின் தலைமை பதவிக்குப் பாஜாகவால் முன்னிறுத்தப்படுவதாகவும் பின் பாஜகவோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க இருப்பதாகவும் ஆருடம் கூறியது அந்தப் பத்திரிகை..
ரஜினி சிஸ்டம் சரி இல்லை என்று சொல்லிய பின்பு அந்தக் குறிப்பிட்ட குழும இதழ்களில் வரும் ரஜினி குறித்த எல்லாக் கட்டுரைகளும் இப்படித்தான் இருக்கின்றன.
குறிப்பாக ரஜினி பாஜாகவால் இயக்கப்படுகிறார் என்பதை வெகுஜன மத்தியில் திணிக்கும் விதமாகக் கிடைக்கும் எல்லாச் செய்திகளிலும் இடம்பெற்றிருக்கும் ஒரு கருத்து தான் இது.
இப்போது அடுத்த அஸ்திரமாக ரஜினி அதிமுகவில் சேர்வார் என்று ஆருடம் சொல்ல ஆரம்பித்திருக்கிறது.
அதை எல்லா ஊடகங்களும் பிடித்துக் கொண்டு அதையே பேசு பொருளாக்கி கொஞ்ச நாட்கள் குளிர்காயலாமா என முயற்சி செய்கின்றன.
தலைவரே, பல சந்தர்ப்பங்களில் என் பின்னால் பாஜாக இல்லை என உறுதிப்படுத்திய பின்பும் அவ்வாறே செய்திகளை வெளியிடுவது என்ன மாதிரியான ஊடக அறம் எனத் தெரியவில்லை..
கார்த்திக் சுப்புராஜ் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியிருக்கும் ரஜினி தன் மக்கள் மன்ற பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
பல மாவட்ட நிர்வாகங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றது... பூத் கமிட்டி அமைக்கும் படலங்கள் ஏறத்தாழ 85% அளவுக்கு நிறைவடைந்துவிட்டன.
எங்கே தீவிர அரசியலில் இறங்கிவிடுவாரோ என்ற சிலரின் அச்சங்கள் இப்போ புது வடிவம் பெற்றிருக்கின்றன..அதாவது பாஜக பாஜக எனச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
ரஜினி ஒரே ஒரு முறை அதற்குப் பதில் சொல்லிவிட்டு அவரின் வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார். அதனால் ரஜினி அதிமுகவில் சேர்வார் என்று சொல்ல ஆரம்பித்து இருக்கின்றனர்.
அதிமுகவின் வரலாறு, ரஜினியின் செயல்பாடுகளை அறிந்து வைத்திருக்கும் யாருமே இப்படி ஒரு வதந்தியை பரப்பக்கூட யோசிப்பார்கள்.
காரணம் 1996 ல் அவர் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் எழுந்த போதே தன் ரசிகர்களிடம் "கண்ணா நான் வந்தா தனிக்கட்சி தான்.. எந்தக் கட்சியிலும் சேரமாட்டேன்" எனச் சொல்லி விட்டார்.
இதோ கடந்த டிசம்பர் 31 ல் அரசியலை அறிவிக்கும் போதும் நான் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதியிலும் நிற்பேன் என்று தான் அறிவித்தார்.
ஆக, ரஜினியை பொறுத்த வரை அன்றைக்குச் சொன்னது தான் இன்றைக்கும்.. இன்றைக்குச் சொல்வது தான் என்றைக்கும்..
பிறகேன் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் வதந்திகள் பரப்பப்படுகின்றன என்ற கேள்விகள் எழலாம்.
காரணம் அவரின் தொடர் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டுவிட முடியாதா என்ற எதிரிகளின் ஏக்கம் தான் இத்தகைய வதந்திகள் உருவாகக் காரணம்.
கேட்டால் எம்.ஜி.ஆர் , ஜெ வை புகழ்ந்து பேசுகிறார் என ரஜினியின் உரையிலிருந்து மேற்கொள் காட்டுகின்றனர்.. உண்மையில் பாஜக , அதிமுக மீது பல விமர்சனங்களையும் வைத்திருக்கிறார்.
குறிப்பாகக் காவிரி மேலாண்மை வாரியம், ஹெச் ராஜாவின் பெரியார் சிலை குறித்த கருத்து, எஸ்வி சேகரின் கருத்து, கர்நாடகாவில் பாஜகவை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்தது குறித்த கருத்து எனப் பல இடங்களில் பதிலடி கொடுக்கவும் தவறவில்லை.
ஆனால் இவையெல்லாம் விவாதப்பொருள் ஆகாமல் பார்த்துக் கொள்ளப்பட்டன. ஏனென்றால் ரஜினி பாஜகவின் முகம் எனக் கருத்தை நீர்த்துப் போகாமல் பார்க்க வேண்டிய அஜண்டா ஊடகங்களுக்கு இருக்கிறது.
சரி! அவர் எம்.ஜி.ஆர் ,ஜெ வை மட்டும் தானா புகழ்ந்தார்? கலைஞரையும் தான் புகழ்கிறார்.. எனவே திமுகவின் தலைமை பதவிக்கு ரஜினி குறி வைத்திருக்கிறார் என எடுத்துக் கொள்ளலாமா..?
ரஜினி தீவிர அரசியலில் ஈடுபடும் வரை இவ்வாறான வதந்திகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.. அப்போ அதுக்குப் பிறகு..? வேற ஒரு புது உருட்டா உருட்டுவாங்க.
ஆக மொத்தம் கடைசி வரை ரஜினியை நேர்மையான வகையில் எதிர்கொள்ளவே முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை...
- ஜெயசீலன்
|