கடந்த வருடங்களில் தந்தி எடுத்த இரு கணிப்புகளிலும் ரஜினி 23%, 17% என ஆதரவை பெற்றிருந்தார்.
இத்தனைக்கும் அப்போது அவர் எந்த அரசியல் கருத்துகளும் சொல்லவும் இல்லை, அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவிக்கவும் இல்லை.
ஆனால் இப்போது அனைத்து விசயங்கள் குறித்தும் பேசுகிறார். அரசியலுக்கு வருவேன் என அறிவித்து ரஜினி மக்கள் மன்றம் மூலம் பல வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால், இப்போது ரஜினியின் ஆதரவு வெறும் 5% ஆகக் குறைந்திருக்கிறது.
யாரை திருப்திப் படுத்த இந்தக் கருத்துக்கணிப்பு பாண்டே சாரே!
சரி அதைக் கூட விட்டு விடுவோம்.. கருத்துக் கணிப்புகளை நம்பி அரசியலில் இறங்குவதும் அரசியல் நிகழ்வை ஒத்திப்போடுவதும் ரஜினியின் அகராதியில் இல்லாதவை.
இதற்கான சின்ன உதாரணம் 96 ம் ஆண்டுக் குமுதம் கருத்துக்கணிப்பில் இப்போது கட்சி ஆரம்பித்தால் ரஜினியே முதல்வர் என்ற முடிவு வந்தும் அப்போது அது குறித்தெல்லாம் அலட்டிக் கொள்ளாதவர் தான் ரஜினி.
இதோ இன்றைக்கு ரஜினிக்கு 5% தான் வாக்கு வங்கி இருக்கிறது எனக்காட்டுவதால் அவர் அரசியல் அரங்கில் நுழையாமல் போய்விடுவார் என நினைப்பவர்களைப் பார்த்து பரிதாபப்படத்தான் முடிகிறது.
கருத்துக் கணிப்பில் ஆதரவு நிலை வந்தால் துள்ளுவதும், எதிர் நிலை வந்தால் பம்முவதும் ரஜினியிடமும் இல்லை, அவர் ரசிகர்களிடமும் இல்லை என்பதை நான் இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
தந்தி கருத்துக் கணிப்பின் உண்மை முகங்களைப் பல ரஜினி ரசிகர்கள் அறிந்தே வைத்துள்ளனர். கடந்த ஆர்.கே நகர் கணிப்பு, சட்டசபை கணிப்பு எல்லாம் நாங்கள் அறிவோம்.
உங்கள் நேரங்களை அவர்களுக்குப் பதிலளிப்பதில் காட்ட வேண்டாம் என நம் காவலர்களுக்கு அன்பு வேண்டுகோளை வைக்கின்றேன்.
ரஜினியை தனிமைப்படுத்த வேண்டும்.. ரஜினியை மக்களிடம் அந்நியப்படுத்த வேண்டும் என்பது ஊடகங்களின் எழுதப்படாத விதியாக யாரோ ஒருவரால் கொடுக்கப்பட்ட பின்பு, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ரஜினியை மட்டம் தட்டுவதைச் செவ்வனே செய்கின்றனர் நம் "நடுநிலை" ஊடகங்கள்..
இப்போது அவரின் அமைதி அவர்களுக்கு ஒரு உற்சாக டானிக். எனவே, கொஞ்சம் வலுவாக அடிக்கின்றனர் அவ்வளவு தான் வித்யாசம்.
தலைவர் படப்பிடிப்பு முடிந்து வந்து மாநாட்டு தேதியை சொல்லி மாநாடு நடைபெறப்போகும் அந்த நாளில் இந்த ஒட்டுமொத்த ஊடகங்களும் "உள்ளேன் ஐயா" சொல்லத்தான் போகின்றன.
மாநாட்டு மேடையில் அவரின் கொள்கை திட்டங்களை அறிவிக்கும் போது எல்லோருக்கும் ஒரு நிமிடம் அல்ல, பல நிமிடங்கள் தலை எல்லாம் சுற்றத்தான் போகின்றன.
இந்தக் கருத்துத் திணிப்புகளையெல்லாம் கண்டு கொள்ளாமல் கடப்பதே நலம்.. தலைவர் இருக்கிறார்..
#மகிழ்ச்சி
- ஜெயசீலன்
இதையும் கொஞ்சம் பாருங்கள்...
|