அன்புத் தலைவர் ரஜினிகாந்த் கலைஞருக்கு வெளியிட்ட இரங்கல் குறிப்பில் இடம்பெற்ற வாசகங்கள் தான் இந்த "என்னுடைய கலைஞர்" வாசகம்.
தனக்கும் கலைஞருக்குமான உறவை இத்தனை அழகாக வெளிப்படுத்திட யாரால் முடியும்..?! கலைஞருக்கும் ரஜினிக்குமான உறவு அத்தனை ஆழமானது அழகானது சுவாரஸ்யங்கள் நிறைந்தது..
1975 ஆம் ஆண்டு ரஜினியின் முதல் படமான அபூர்வ ராகங்கள் வெற்றிவிழாவில் தான் ரஜினி கலைஞரை முதல் முறையாகச் சந்தித்திருப்பார்.. அன்று அவர் கையால் வெற்றிக் கேடயத்தைப் பெரும் அதிர்ஷ்டம் அவருக்குக் கிடைத்திருக்கவில்லை.
ஆனால் அடுத்தப் பத்து ஆண்டுகள் கழித்துக் கலைஞர் விழாவில் ரஜினி இல்லாத நிகழ்வுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
2007 சிவாஜி படத்தின் வெற்றிவிழாவில் சூரியனுக்குப் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் இருப்பது தான் சிறப்பு எனக் கலைஞரே விரும்பும் அளவு இருவருக்குமான அன்பு பரிணாம வளர்ச்சி அடைந்தது.
ரஜினி உச்ச நட்சத்திரமாக உயரும் காலத்தில் கலைஞர் முதல்வராக இல்லை.. அதனால் சந்திப்புகள் நிகழ பெரும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை..
1987 எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் கலைஞர் முதல்வரான பின்பு இருவருக்குமான சந்திப்புகள் உரையாடல்கள் நடக்க ஆரம்பித்து முதலில் "ரஜினி" என்று அழைத்துப் பின் "தம்பி" என்று அழைத்துப் பின் "நண்பர்" என அழைக்கும் அளவுக்கு நெருங்கி நட்பு பாராட்டினர் இருவரும்.
ராஜாதி ராஜா வெற்றிவிழா தொடங்கிச் சிவாஜி வெற்றி விழா வரை இருவரும் பங்கு கொண்ட வெற்றி விழாக்கள் மட்டுமே ஏராளம்.
அதே போலக் கலைஞருக்கு நடக்கும் முக்கிய விழாக்களில் எல்லாம் ரஜினி தன் அருகிலேயே இருக்க வேண்டும் என ஆசைப்பட்டவர் கலைஞர்.
விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இருவரும் அளவளாவும் காட்சிகளைச் சானல்கள் க்ளோஸ் அப் போட்டு அரங்கம் அதிர்ந்த காட்சிகள் எல்லாம் இன்னும் நம் கண்களை விட்டு அகலவில்லை..
ரஜினி கலைஞரின் நட்பு உச்சம் தொட்டது 1996 சட்டசபை தேர்தல் காலக் கட்டத்தில் தான்.
தான் அரசியலுக்கு வர வேண்டும் என எல்லோரும் அழைத்த போது பெரியவர் கலைஞர் இருக்கும் போது நான் அரசியலுக்கு வருவது சரியாக இருக்காது என்ற அவரின் உள்ளுணர்வை நாம் புரிந்து கொள்ள இயலும்.
சமீபத்தில் கூடக் கலைஞர், தம்பி ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என மேடையிலேயே கோரிக்கை வைத்த நிகழ்வெல்லாம் ஆச்சர்ய அதிசயம்.
இதோ கடந்த டிசம்பரில் தன் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பின்பு ரஜினி சந்தித்து ஆசி பெற்ற முதல் தலைவர் கலைஞர் தான்..
எம்.ஜி.ஆர் ஆலோசனையில் தான் கட்டிய ராகவேந்திரா மண்டபத்தைக் கலைஞர் கையால் திறக்கச்செய்தார் ரஜினி.
அன்றைக்கு எல்லோரும் கன்னடன், மராட்டியன் என்று பேசிய போது அது குறித்த தன் ஆதங்கத்தை ரஜினி முதல் முறையாக மேடையில் பகிர்ந்து கொண்டார்.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக இறுதி உரை ஆற்றிய கலைஞர் ரஜினி இந்த மண்ணின் மைந்தர் என்று புகழாரம் சூட்டி அழகு பார்த்தார்.
96 சட்டசபை தேர்தலில் திமுகத் த.மா.க கூட்டணியை உருவாக்கி ஆதரவளித்துப் பேசி பின்பு அமெரிக்கா கிளம்பும் முன்பு விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் "நான் திரும்பி வரும் போது கலைஞர் கோட்டையில் முதல்வராக இருப்பார், நேரே கோட்டைக்குச் சென்று சந்திப்பேன்" எனச்சொல்லிச் சென்றார்.
அதுபோலவே திரும்பி வந்த போது கலைஞரை கோட்டையில் சந்தித்தார்.
கலைஞர் அவரைக் கோட்டை முழுவதும் தானே அழைத்துச் சென்று சுற்றிக்காண்பித்தார். இப்படி ரஜினி கலைஞர் நட்பினை நாம் நினைவு கூறஏராளமான நிகழ்வுகள் இருக்கின்றன.
ரஜினி ஆசைப்பட்டது போலவே கலைஞர் இருக்கும் வரை தன் கட்சியை அறிவிக்காமல் நன்றி பாராட்டியது தற்செயல் நிகழ்வா இல்லை காலத்தின் விளையாட்டா என நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
"அவர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் ஒரு கருப்பு நாள்" என இரங்கல் குறிப்பு அறிவித்ததோடு பின்னிரவில் அத்தனை கூட்டத்திற்கு மத்தியிலும் கோபாலபுரம் இல்லம் சென்று அஞ்சலி செலுத்தினார்.
காலை ராஜாஜி ஹாலில் குடும்பத்தோடு வந்து தன் இறுதி மரியாதையைச் செலுத்தியதோடு அண்ணா அருகில் தான் கலைஞர் இருக்க வேண்டும்..அதனால் மெரினாவில் அடக்கம் செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கையும் முதல் நபராக விடுத்தார்.
கலைஞருக்கு தலைவர் ரசிகர்கள் சார்பிலும் நம் தளத்தில் சார்பிலும் இதய அஞ்சலிகள்.
ஓய்வெடுங்கள் உதயசூரியனே... !
- ஜெயசீலன்
|