காலா திரைப்படம் பார்த்த பலரும் வியந்து வாழ்த்திய பல காட்சிகளுள் முக்கியமானது திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் தான்.
இரண்டரை மணி நேரத்தில் சொல்ல விளைந்த அந்த ஒற்றைக் கருத்தை மிக நேர்த்தியாகப் பார்வையாளர்களுக்குக் கடத்தியதுடன் வண்ணமயமான க்ளைமாக்ஸாகவும் சிலாகிக்கப்படுகிறது.
ஆம் இத்தனை வண்ணமயமான ( வண்ணத்திலும் சரி கருத்திலும் சரி ) க்ளைமாக்ஸ் காட்சி தமிழ்சினிமாவுக்குப் புதுசு என்று தான் சொல்ல வேண்டும்..
படம் வெளிவருவதற்கு முன்பே "கற்றவை பற்றவை" பாடல் தெறி ஹிட்.. வரிகளும் பீட்டும் அருண்ராஜாவின் கணீர் குரலும் பாடலை மிரட்டலாக நம்மிடையே கொண்டு வந்து இருந்தது.
படம் வருவதற்கு முன்பே இப்பாடல் எப்படி எடுக்கப்பட்டிருக்கும்?! எப்போது இடம்பெற்றிருக்கும்?! என்ற ஆர்வம் நிறைய ரசிகர்களுக்கு இருந்தது.
படம் ஆரம்பித்து முடியும் வரை அந்தப் பாடலின் இசைத் துணுக்கைக் கூட இயக்குநர் எந்த இடத்திலும் உபயோகிக்கவில்லை.. பாடலின் சிறு பிட்டைக் கூட முன் காட்சிகளில் வரவிடாமல் துணிந்து க்ளைமாக்ஸுக்கு மட்டுமே ஆன பாடலாக வைத்திருக்கிறார் .
அப்போ எந்த அளவு அப்பாடலுக்கு எதிர்பார்ப்பு இருந்ததோ அதைப் பூர்த்திச் செய்யும் அளவு வலுவாகக் காட்சிப்படுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் நல்ல பாடலை வீணடித்துவிட்டார் ( நெருப்புடா ) என்ற பலிக்கு ஆளாக நேரிடும் எனப்தைப் புரிந்து எல்லார் எதிர்பார்ப்பையும் மீறிய வகையில் மிக மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தி அனைத்து ரசிகர்களுக்கும் இன்ப அதிர்சியை அளித்தார்.
ஹேட்ஸ் ஆப் ரஞ்சித்..
காலா இல்லை.. காலா இல்லவே இல்லை என்பது ஹரியின் தீர்க்கமான நம்பிக்கை..அவரை நேரடியாக வீழ்த்தவே முடியாது என்பதால் குறுக்கு வழியில் வீழ்த்தியிருந்தார்.
ஆனாலும் கூட காலா மீதான பயம் அவருக்கு முழுமையாகப் போகவில்லை.. இது காலாவின் கோட்டை.. ஒரு பிடி மண்ணைக் கூட இங்கிருந்து எடுக்க முடியாது என்ற எச்சரிக்கை ஒலி அவரைத் தயக்கத்துடன் மண்ணை அள்ளச் செய்கிறது.
கூட்டம் அதிர்ச்சியாக வேடிக்கை பார்க்கிறது.. நிசப்த அமைதி.. அதே தயக்கத்துடனேயே அவர் அதை முத்தமும் இடுகிறார்.
எந்தக் கறுப்பு அவருக்கு அருவருப்பாகவும் எந்தக் கறுப்பு அவருக்குப் பிடிக்காததாகவும் இருக்கிறதோ அதே கறுப்பு வர்ணப்பொடியால் காலாவின் பேத்தி அவர் கையிலிருந்த மண்ணைப் பறிக்கிறாள்.
ஒரு நிமிடத்தில் ஆடிப்போகும் ஹரி, காலாவே இல்லை இந்த ஜனங்களுக்கு எங்கிருந்து வந்தது இந்தத் தைரியம் எனத் தயக்கத்துடன் சுற்றி முற்றி பார்க்கும் போது "ஒத்த தல ராவணா" என்ற வரிகள் ஒலிக்கக் காலா கம்பீரமாய் நடந்து வருகிறார்.
வாவ் வாட்டே கூஸ்பம்ப் சீன்.. காலா இறந்த அதிர்ச்சியில் இருக்கும் பார்வையாளர்கள் கண்டிப்பாய் தன்னை அறியாமல் துள்ளிக் குதித்து விசிலடித்துக் கத்தியிருப்பார்கள் இந்தக் காட்சிக்கு.
அதுவரை ஸ்தம்பித்து நின்றிருந்த ஜனம் காலா வந்த பின் வீறு கொண்டு எழுகிறது..
கறுப்பை அள்ளித்தூவி ஹரியை அவர் ஆட்களிடமிருந்து தனிமை படுத்துகிறது கூட்டம்.. ஹரி சுதாரித்துத் திரும்புவதற்குள் காலா அவர் முன்னே வந்து நிற்கிறார்.
கூட்டம் ஆர்ப்பரித்து மகிழ்கிறது.. முதல் அடியை வாங்குகிறார்.. "வெளுத்து வாங்கும் மனுசங்க இங்க ஒன்னு சேர்ந்து நெறிக்கணும் சங்க" என்ற வரியில் அடுத்த வண்ணம் படர்கிறது.. சிவப்பு.
கூட்டம் அத்தனையும் காலாவாய் மாறி காலா முகமூடி அணிந்து காலா எனும் சிந்தாந்தத்துக்கு மறைவே இல்லை என மிரட்ட..
"உன்னை வெளியிடு இருளை பலியிடு" எனப் பாடலின் அடி நாதத்துக்குச் சென்று அடுத்தக் கணம் காலாவின் அடுத்த அடியை வாங்கிச் சரிகிறார் ஹரி.
கூட்டம் காலாவின் முன்னும் பின்னும் ஆடிக்களிக்க "வா உன்னையும் மண்ணையும் வென்று வா தீ ராத ஓர் தேவையைக் கொண்டு வா" எனக் காலாவை, காலாவின் சித்தாந்ததை நமக்குள் கொண்டு வரும் அளவுக்குப் பாடலின் உச்சகட்டத்தை அடைந்து பார்வையாளர்களைப் புல்லரிக்கச் செய்கிறது.
ரஜினியின் அசாத்தியமான பார்வையும் துணிச்சலான வேக நடையும் இணைந்து கொள்ள விவரிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை.
சிம்பிளா சொல்லணும்னா வாட்டே பிக்சரைசேசன்.. செம்ம..அடுத்த வண்ணம் படர்கிறது.. நீலம்
சிறுவர்கள் குதியாட்டத்தில் கோபம் கொப்பளிக்கக் கூட்டம் இன்னும் இன்னும் ஆர்ப்பரிக்கின்றது.. "ஹேய்.. ஹேய்" என்று ஹரியை அச்சுறுத்திய கூட்டத்துக்குப் பயந்து தன் தோள் துண்டால் கலைய முற்படுகிறார்.
பறையிசை முழங்க காலா அவர் முன் நின்று ஒரு கணம் கூட்டத்தை அமைதிப்படுத்தி நிலம் எங்கள் உரிமை என முழங்கி கூட்டத்தைக் கட்டளையிட பின் ஹரி தாதா காலாவால் வதம் செய்யப்படுகிறார்.
அப்படியே கேமரா டாப்பில் போய் மூன்று வண்ணங்களுடன் இன்னும் பல வண்ணங்கள் குழைய ஹரியின் பெருங்குரல் ஒலிக்கக் கற்றவை பற்றவை என ஓங்காரமாய்ப் பாடல் முடிகிறது.
ரஜினி ரசிகர்களுக்குக் காலா ரஜினி மீண்டு வருவதையும் பொதுவான பார்வையாளர்களுக்குக் காலாவின் கருத்தியலுக்கு என்றுமே அழிவில்லை என்பதையும் ஒருசேரக் கடத்த முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர்.
இதில் சிறப்பு என்னவென்றால் இந்தக் கற்றவை பற்றவை எனும் வரி பாடலின் ஒரே ஒரு முறை தான் வருகிறது.
ஆனால் அதுவே பாடலின் மொத்த கருவையும் தாங்கி நின்று நம்மையும் பாடலின் தலைப்பாகவே நினைவு கூறச்செய்கிறது.
இப்போது சொல்லுங்கள்.. தமிழ் சினிமாவின் பெஸ்ட் க்ளைமாக்ஸ் சாங் எது?
- ஜெயசீலன்
கற்றவை பற்றவை வீடியோ பாடல்
பாடல் புகைப்பட ஸ்டில்களின் ஒவ்வொரு கோணத்தையும் அனுபவிக்க ரசிக்க ...
|