நேற்றைக்குக் கலையுலகம் சார்பாகக் கலைஞருக்கு நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சி முக்கியமானது.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின், நம் அன்புத் தலைவர் ரஜினிகாந்த் இருவரும் ஒன்றாக இருந்து கலைஞருக்கு புகழஞ்சலி செலுத்தும் வாய்ப்புக் கிடைத்தது.
தொடக்கத்தில் அதிகம் அளவளாவாவிட்டாலும் தலைவர் பேசியதன் பின்பு ஸ்டாலினுக்கு மிக்க ஆறுதலாக இருந்திருக்கும் என்பதை அவரின் உடைந்த முகமே காட்டியது.
உணர்வு பொங்க தமிழகத்தின் எதிர்கால அரசியலுக்கான முதல் விதை நேற்றைய நிகழ்வில் தூவப்பட்டது என்றால் மிகையில்லை.
இன்றல்ல நேற்றல்ல என்றைக்கும் தன் மனதில் படுவதை வெளிப்படையாகப் பேசும் குணம் கொண்டவர் நம் அன்பு தலைவர் என்பது நேற்று மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியிருக்கும்.
ரஜினி ரசிகர்கள் அனைவருமே பெருமையுடன் தங்கள் தலைவரின் உரையைச் சிலாகித்ததைச் சமூக வலைதளத்தில் காணமுடிந்தது.
கலைஞர் இல்லாத தமிழகத்தை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை என்று தன் உரையை ஆரம்பித்தார். கலைஞர் மறைவின் பொழுதே "என்னுடைய கலைஞர்" என்று புகழாரம் சூட்டியிருந்தார்.
மிக மிக நெருக்கமான ஒரு ஆளுமையை ரஜினி இழந்திருக்கிறார் என்பதைக் கலைஞர் மீதான அவரின் இந்தப் பிரம்மிப்பு அழகாகக் காட்டுகிறது.
அதிலும் இரவில் கோபாலபுரம் இல்லம் சென்று தன்னால் பார்க்க முடியாமல் போன சூழலை நினைவு கூர்ந்தது செம்ம.
பின் காலை ராஜாஜி ஹாலில் அஞ்சலி செலுத்தும் போது இருந்த கூட்டத்தைப் பற்றி ஏமாற்றம் தெரிவித்தார்.. இது ஒரு முக்கியமான அவதானிப்பு.
தமிழக அரசியலில் கூட்டம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை அவர் கவனித்தே வருகிறார்..
காலையில் சிலர் இட்ட இடுகைகளிலும் கூடக் கலைஞருக்கு ஜெ அளவு கூட்டம் வரவில்லை எனப் பதிவு செய்ததை இதோடு நாம் பொருத்திப்பார்க்க வேண்டும்.
பிற்பகலில் வரலாறு காணாத அளவுக்கு மெரினா சாலைகளே மனித தலைகளாகக் காட்சி அளித்ததும் குறிப்பிடத்தக்கது.
அதன் பின்பே ரஜினியும் ஆசுவாசம் அடைந்திருப்பார்.
இன்னொரு முக்கியமான விசயம் கடந்த 50 ஆண்டு கால அரசியல், கலைஞரை சுற்றியே இருந்தது என ரஜினி வெளிப்படையாகப் பேசிய கருத்து.
பலர் அந்தக் கிரெடிட்டை கலைஞருக்கு கொடுக்க யோசிக்கும் பொழுது எம்.ஜி.ஆர், ஜெ போன்ற ஆளுமைகள் இருந்தாலும் கலைஞரே அரசியலின் மையப்புள்ளி என்பதை நேரடியாக ரஜினி உடைத்துப் பேசிய பாங்கு அலாதியானது.
ஒன்று, என்னுடன் நட்பு கொள்.. இல்லையானால் என்னை எதிர் கொள். கடந்த 50 ஆண்டின் அரசியலை இந்த இரு வரியில் அடக்கி தனக்கும் அரசியல் தெரியும் என்பதை மிக நேர்த்தியாகப் பதிவு செய்தார்.
சிலருக்கு மட்டுமே இவ்வாறான வாக்கியப் பிரயோகம் கை கொடுக்கும். சமகாலத்தில் ரஜினி அதில் முக்கியமானவர் என்றே நான் கருதுகிறேன்.
உதாரணங்கள் பல இருந்தாலும் சமீபத்தில் அவரின் ஆன்மிக அரசியல் எனும் பதம், தொண்டர்களைக் காவலர்கள் என அழைத்த நேர்த்தி ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
அசாதாரணச் சூழ்நிலை, போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்பவையும் குறிப்பிடத்தக்கவை.
தனக்கும் கலைஞருக்குமான உறவுகளை வெளிப்படுத்த இன்னும் பல மேடைகள் காத்திருக்கின்றன என ஸ்டாலினுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அடுத்த நொடி...
"தளபதி அவர்கள் கவலைப்பட வேண்டாம்.. கலைஞரின் உடன்பிறப்புகள் உங்களோடு இருப்பார்கள்" என ஆறுதலும் சொன்னார்.
அடுத்து தான் உரையின் முக்கியமான கட்டத்துக்குள் நுழைகிறார்.
அதிமுக அரசு கலைஞரின் மரணத்தில் அரசியல் செய்ய விழைந்ததை யாவரும் அறிவர்.. அதிலும் மெரினா இல்லை என்ற மறுப்பு ரஜினிக்குக் கோபம் ஏற்படுத்தியிருக்கும் என்பதும் இயல்பு.
சட்டப்போராட்டத்தில் ஸ்டாலின் வென்றதை சிலாகித்ததோடு மேல்முறையீடு சென்றிருந்தால் தாமே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் என உணர்ச்சியைக் காட்டினார்.
இதற்குத் தான் ஒட்டுமொத்த ஆன்லைன் புரட்சியாளர்களும் இப்போது பொங்கல் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
போராடினால் நாடு சுடுகாடாகிவிடும் என்று சொன்னவரே இன்று போராட்டத்தில் குதிப்பேன் என்று சொல்கிறாரே என நக்கல் அடிக்கின்றனர்.
குறைந்தபட்ச பகுத்தறிவும் கொஞ்சம் டேட்டா அறிவும் இருப்பவர்கள் யூ டியூப் சென்று அன்றைக்கு ரஜினி பேசியதை திரும்ப ஒரு முறை போட்டு பார்த்தல் நலம்.
எதற்கெடுத்தாலும் போராட்டம் என்பதற்கும் சட்டப்போராட்டத்தில் வென்ற பின்பும் அநியாய மேல்முறையீட்டுக்கு எதிரான போராட்டத்திற்கும் பள்ளி மாணவனுக்குத் தெரிந்திருக்கும் வித்யாசம் கூட இந்த ஆன்லைன் போராளிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை.... இல்லை தெரியாதது போல நடிக்கின்றனர்.
அதாவது ரஜினி போராட்டத்துக்கு எதிரானவர் என்ற கருத்தை மக்களிடம் திணிக்க முயல்கின்றனர்.
1983 இலங்கை போராட்டம், 1991 காவிரி போராட்டம், 2002 காவிரி போராட்டம் என ரஜினியே தலைமை தாங்கி நிகழ்த்திய போராட்ட வரலாறுகள் இங்கே நிறைய இருக்கின்றன.
இது தவிர்த்து நடிகர் சங்கம் நடத்திய எத்தனையோ போராட்டங்களிலும் கலந்து கொண்டிருக்கிறார்.
கடைசியாக நடந்த காவிரி போராட்டம் வரை.. எதற்குப் போராட வேண்டும் என்ற பிரக்ஞை அறிவார்ந்த சமூகத்துக்குத் தெரியும்.
நீங்கள் உங்களிடம் இருக்கும் ரஜினி துவேசத்தைக் காட்டுவதற்கு இந்த அறிவுரையை அள்ளித் தெளிக்க வேண்டாம் போராளிகளே!
கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெ ஆகியோர் இருந்த போது மற்ற மாநிலங்களைவிடத் தமிழகத்தில் அரசியல் மாண்பு குறைவுதான்.
தமிழகத்தில் ஜாதி மாறி கூடத் திருமணம் செய்துவிடலாம் ஆனால் ஒரு திமுக மா.செ அதிமுக மா.செ குடும்பத்தோடு திருமணத் தொடர்புகள் வைக்க முடியாத அளவுக்குத் தான் இங்கே நிலமை.
அது எல்லாமும் அந்தத் தலைவர்கள் காலத்தோடு முடிந்துவிட்டது.. இனி அரசியல் மாண்பு செழிக்க வேண்டும் என்பது எல்லாரையும் போல ரஜினிக்குமான அவா.
எனவே தான் கலைஞர் அடக்க நிகழ்வில் முதல்வர் கலந்து கொள்ளாதை கண்டித்தார்.. கலைஞர் படத்தை அதிமுக ஆண்டு விழாவில் வைக்க வேண்டும் என்றதும் அதன் வெளிப்பாடு தான்.
நீங்கள் எதிர்கட்சி தான் எதிரி இல்லை என்று தெரிவித்ததோடு, முதல்வர் எடப்பாடியின் அரசியல் சார்பை நீங்கள் ஒன்றும் எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ இல்லை என்ற தன் கோபத்தையும் வெளிப்படுத்தினார்.
எடப்பாடி மக்கள் தலைவர் இல்லை என்பதை இதற்கு முன் இவ்வளவு வெளிப்படையாகத் தெரிவித்த தலைவர்கள் யாரேனும் உளரா..?
மொத்தத்தில் மிக மிக அற்புதமான அரசியல் ஆழமிக்க உணர்வுபூர்வமான பேச்சு நேற்றைய சூப்பர் ஸ்டாரின் பேச்சு.
ஸ்டாலினின் உணர்வுக்குவியல்கள் ரஜினி பேச்சின் வீரியத்தைப் பார்வையாளர்களுக்கு அப்படியே கடத்தியிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.
இதில் என்ன வேடிக்கை என்றால் ரஜினி ஹேட்டர்ஸ்கள், ரஜினி திமுக டாவ் எனக் கிளம்பியிருக்கின்றனர்.
இந்த உரைக்கு இதுவரை ரஜினி மீது சாஃப்ட் கார்னர் கொண்டிருந்த சில பாஜகவினர் ஆங்காங்கே தங்கள் ஆதங்கத்தை / கோபத்தை வெளிப்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இனிமேல் தான் சுவாரஸ்யங்களே இருக்கின்றன.
முதலில் ரஜினி பாஜக டாவ், அப்புறம் ரஜினி அதிமுக டாவ், இன்று ரஜினி திமுக டாவ் என எங்கும் ரஜினி எதிலும் ரஜினியாகத் தமிழக அரசியல் களம் மாறிவருகிறது என்பது மட்டும் உண்மை.
ரஜினி ரஜினியாகவே இருக்கிறார், மற்றவர்கள் தான் அவர்கள் வசதிக்கேற்ப மாற்றிக் கூறி அதில் தோல்வியும் அடைந்து வருகிறார்கள்.
- ஜெயசீலன்
|