இந்தக் கட்டுரையின் சென்ற பாகங்களைப் படிக்க...
பாகம் 1: http://rajinifans.com/detailview.php?title=1682
பாகம் 2: http://rajinifans.com/detailview.php?title=1690
பாகம் 3: http://www.rajinifans.com/detailview.php?title=1697
2018 ஆகஸ்ட் மாதம் வரலாற்றில் கண்டிப்பாக ஒரு முக்கிய இடம் பிடிக்கும். தமிழக, இந்திய, உலக அளவில் பல முக்கியத் தலைவர்களை இழந்த தருணம் இது.
கலைஞர், வாஜ்பாய், முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜீ மற்றும் முன்னாள் ஐ.நா பொதுச்செயலாளர் கோபி அன்னான் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி நமது கட்டுரைக்குள் நுழைகிறேன்.
ரஜினிக்கு அரசியல் தேவையா? என்ற கேள்வியில் தொடங்கி, அரசியலுக்கு ஏன் ரஜினி தேவை? என்ற விதத்தில் இதுவரை பயணம் செய்தோம்.
ஆனால் ரஜினியின் அரசியல் பிரவேசத்தைப் பற்றி ஆயிரம் மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், பலர் யோசிக்கும் ஒரு பொதுவான விஷயம் உள்ளது.
இந்த வயசுல வந்து ரஜினி என்ன பண்ண போறார் ?
இந்தக் கேள்வியைக் கேட்கும் பொழுது பல ரஜினி ரசிகர்கள் / ஆதரவாளர்களே தடுமாறி போவார்கள். இது ஒரு நியாயமான கேள்வியும் கூட.
இந்தக் கேள்வியை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1. இந்த வயது வரை தனது அரசியல் வருகையைத் தாமதப் படுத்த வேண்டிய அவசியம் என்ன? தோல்வி பயமா? இல்லை வெற்றிடம் வந்தால் தான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற தயக்கமா?
2. ரொம்ப வயதாகி விட்டதே, மிஞ்சி போனால் ஒரு 10 ஆண்டுகள் ஆட்சி செய்வாரா ? அதன் பிறகு கட்சியை, தமிழகத்தை யார் பார்த்துக்கொள்வது ?
அவரை நம்பி வரும் கூட்டத்தை 10 வருடத்திற்குப் பிறகு திக்குத் தெரியாமல் விட்டு விடுவாரே ? பின் எதற்கு ரஜினியை ஆதரிக்க வேண்டும் ?
சத்தியமாக இது இரண்டும் மிக மிக நியாமான கேள்விகளே...
முதல் கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.
M.G.R சிலை திறப்பு விழாவில் பேசும் பொழுது "ஆமாய்யா ! வெற்றிடம் இருக்கு !! தமிழகத்துக்கு ஒரு நல்ல தலைவன் தேவை, அந்த வெற்றிடத்தை நான் நிரப்ப முடியும்னு நம்புறேன் " என்று ரஜினிகாந்தே சொல்லிவிட்டார்.
இதற்குப் பிறகும் வெற்றிடம் குறித்த நமது கருத்துகளைப் பேசுவது வெறும் விதாண்டா வாதம்.
ஆனால் பயத்தின் காரணமாக ரஜினி வராமல் இருந்தார் என்று கூறுவது அபத்தம்.
1991-96 காலக் கட்டத்தில் Terror என்ற சொல்லுக்கு அர்த்தம் கற்பித்த ஜெ. அவர்களுக்கே பயம் என்ற சொல்லுக்கு அர்த்தம் கற்பித்தவர் தான் ரஜினி.
ரஜினி hater / ரஜினி மேல் கடுப்பு இவையெல்லாம் உதறி விட்டு உண்மையை ஏற்கும் மனப் பக்குவம் இருந்தால் நான் மேற்கூறியதை கண்டிப்பாக உணர்வீர்கள்.
சரி, பயம் இல்லை ; பின் எதற்கு இவ்வளவு காலதாமதம் ?
கலைஞர் மற்றும் ஜெ. என்ன குறையே சொல்ல முடியாத ஆட்சியையா கொடுத்தார்கள்! அவர்களை எதிர்த்துக் களம் கண்டு ஜெயிக்கவேண்டியது தானே ?
1996 இல் அந்தப் பொன்னான வாய்ப்பை உதறிய பிறகும், தமிழக அரசியல் என்னவோ ரஜினியை சுற்றியே தான் இருந்து வந்தது.
சிக்கலான நேரங்களில் சிறப்பாகச் செயல்படும் போது அரசை பாராட்டவும், தவறு செய்யும் போது அதைச் சுட்டிக்காட்டவும் அவர் என்றுமே தவறியதில்லை. (அது யாருடைய ஆட்சியாக இருந்தாலும் சரி).
ரஜினியை ஏதாவது குறை கூற வேண்டும் என்ற எண்ணத்தை விடுத்து, நடுநிலைப் பார்வையோடு 1996 முதல் 2017 வரை அவரது அரசியல் சார்ந்த செயல்பாடுகளைக் கவனித்துப் பார்த்தால் , அவர் பயத்தின் காரணமாக ஒதுங்கவில்லை என்று புரியும்.
சரி, அப்போதெல்லாம் வராத ரஜினி, கலைஞர் மற்றும் ஜெ மறைந்த பின்னர்த் தான் வர வேண்டுமா ?
2016 ஆம் ஆண்டு, ஜெ மற்றும் கலைஞர் ஒரு சேர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலம்...
அதற்கு முன்பு அசாதாரணச் சூழ்நிலை என்ற ஒரு நிலையை நாம் உணர்ந்தது இல்லை. ஆட்சியில் 1000 குறைகளைச் சொன்னாலும் நாம் என்றும் ஒரு பாதுகாப்பாகவே இருந்ததாகவே உணர்ந்து இருந்தோம்.
ஜெ இறப்பிற்குப் பின்பு தமிழகம் ஒரு மாபெரும் போராட்டத்தை எதிர்கொண்டது. ஆம், ஜல்லிக்கட்டுப் போராட்டம்.
அந்தப் புனித போராட்டத்தின் நோக்கத்தையோ, அதில் மாணவர்கள் Genuine ஆக நடந்து கொண்ட விதத்தையோ நான் விவரிக்கப் போவதில்லை.
ஆனால், அந்தப் போராட்டமே தமிழகத்தில் அதுவரை பதில் அளிக்கப்படாத பல கேள்விகளுக்குப் பதிலையும், பல புதுக் கேள்விகளையும் முன் வைத்தது
அமைதிப் புரட்சியாக மாறி இருக்க வேண்டிய போராட்டம் கலவரமாக மாறியது. காரணம், வழிநடத்த சரியான தலைமை இல்லை.
மெரினாவில் எவன் எதைக் கூறினாலும் அதை நம்பிக்கொண்டு கோஷம் போட்ட இளைஞர்களுக்குக் கடைசியில் கிடைத்தது பிரம்படியே !!
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், ஜெ மற்றும் கலைஞர் உயிரோடு இருந்த போதும் தமிழ்நாட்டில் பல போராட்டங்கள் நடந்தன.
அவை அரசிற்கு எதிரான மக்கள் போராட்டமாகவும், மத்திய அரசிற்கு எதிரான மாநில அரசின் போராட்டமாகவும் இருந்தன.
ஆனால் இவை அனைத்தும் தீர்வை நோக்கி பயணிப்பவையாகவே இருந்தன.
ஆனால் இப்போது, எதற்காகப் போராடுகிறோம் என்றே தெரியாமல் போராட்டம் நடக்கிறது.
குறிப்பிட்ட அளவு கவனம் ஈர்க்கும் அனைத்து போராட்டங்களிலும், கோரிக்கைகைக்கான நோக்கத்தை விட்டு வேறு எங்கோ செல்கிறது.
ஒரு பாதுகாப்பற்ற தன்மையை நாம் உணர்கிறோம். "மத்திய அரசு நம்மை நசுக்குகிறது, ஆளும் அரசு அடி பணிந்து விட்டது, பொறுத்தது போதும் வீதிக்கு வா தமிழா" என்று உணர்ச்சி பொங்க பேசிப்பேசி நாம் ஒரு பதற்றமான நிலையிலேயே இருக்கிறோம்.
நம்மைக் காக்க யாரவது வருவாரா என்று ஏங்குகிறோம்.
ஆகவே ரஜினி தான் நம்மை ரட்சிக்க வந்த இரட்சகர் என்று ரஜினி புராணம் பாட போவதில்லை.
அப்படியானால் யார் தான் நம்மைக் காப்பாற்ற போகிறார்கள் என்று நீங்கள் கேட்டால், நான் மேற்கூறியதை போல ஒரு பலமான வெற்றிடம் உருவாகியதன் காரணமாகவே தமிழகம் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.
மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரு நல்ல தலைவன் நம்மை வழிநடத்தினால் போராட்டம் இன்றி நம்மால் வெற்றி பெற இயலும் என்று நீங்கள் உணர்ந்ததாக அர்த்தம்.
இதில் இருந்தே உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டும், 1000 குறைகள் இருந்தாலும், மக்களுக்குத் தேவையான போராட்டத்தையும் அதே சமயம் ஒரு பாதுகாப்பான உணர்வையும் இதுநாள் வரை தமிழக ஆட்சியாளர்கள் கொடுத்துக்கொண்டு இருந்தன.
இப்போதுள்ள ஆட்சியாளர்களும் அதைக் கொடுக்க முற்பட்டாலும், அவர்கள் மக்களால் மானசீகமாகத் தேர்ந்தெடுக்கப்படாததால், அவர்களின் தலைமைக்குக் கட்டுப்பட மறுக்கின்றனர்.
இங்கே நான் அ.தி.மு.க விற்கு ஆதரவு அளிப்பதாகத் தோன்றினால், முதல் பாகத்தில் கட்சி, ஆட்சி ஆட்சியாளர்களிடையே உள்ள வித்யாசத்தைக் கூறி இருக்கிறேன், தயவு கூர்ந்து படியுங்கள்.
இதற்கு முன்பு இப்படித் தலைமை இல்லாத நிலையே தமிழகத்திற்கு வந்ததில்லையா ?
வந்திருக்கும். M.G.R அவர்கள் இறந்தவுடன் ஒரு வேளை கலைஞரும் மறைந்திருந்தால், ஜெ எனும் ஆளுமை வெளிவரும் முன்னரே தமிழகம் தலைகீழாகி இருக்கும்.
நல்ல வேளை அதன் பின்னரும் இரு பெரும் ஆளுமைகளை 2016 வரை தமிழகம் தக்க வைத்திருந்தது.
சரி, தலைமை தேவை. அதற்கு ரஜினி தான் வர வேண்டுமா ?
எவராக வேண்டுமானாலும் இருக்கட்டும் !!!
சீமான், TTV, அன்புமணி சசிகலா, திருமா, ராமசாமி, முனுசாமி என்று யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆனால் அவர் மக்கள் முன்பு தேர்தலை சந்தித்து, மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவனாக இருக்க வேண்டும்.
Comparitively ரஜினி மீது ஏன் இத்தனை எதிர்பார்ப்பு உள்ளது என்பதைப் புரிய வைக்கவே முந்தைய கட்டுரைகளை எழுதினேன்.
மீண்டும் சொல்கிறேன். ரஜினியால் மட்டுமே முடியும் என்று சொல்லவில்லை. ரஜினியால் முடியும்.
சரி, இருக்கும் 1000 வாய்ப்புகளில் ஆகச்சிறந்த வாய்ப்பாக ரஜினியே இருந்துவிட்டு போகட்டும். மேலே கூறியதைப்போல ஒரு 10 ஆண்டுகள் அரசியலில் / ஆட்சியில் இருப்பாரா?
அதன் பிறகு இவரின் கட்சியின் நிலை என்னவாகும். இவரதுகொள்கை, கோட்பாடுகள், அரசியல் வலிமை அனைத்தும் அப்படியே நின்று விடுமே ??
பலர் கூறுவதைப் போலத் தனுஷ் கையில் கட்சி சென்று விடுமா ? இவரை நம்பி வாக்களித்த / பின்தொடர்ந்த பெரும் கூட்டத்தை 10 வருடம் கழித்துத் திக்குத்தெரியாமல் விட்டு விட வாய்ப்பு இருக்கிறதே.
இந்தக் காரணங்களினால் ரஜினியை ஆதரிக்கத் தயக்கம் ஏற்பட்டால், நீங்கள் உண்மையில் அரசியலை சரிவரக் கவனிக்கவில்லை என்று அர்த்தம்.
1967 சட்டமன்ற தேர்தல், தமிழக வரலாற்றையே அடுத்த 50 வருடத்திற்குப் புரட்டி போட்ட தேர்தல்.
அதற்கு முன்னர்க் காங்கிரஸில் இருந்த சில நல்ல கொள்கைகள், தமிழக மக்கள் விரும்பிய சில மாற்றத்தை முன்வைக்கும் கொள்கைகள், சில முற்போக்கான கொள்கைகள் என ஒரு புதிய Theory ஒன்று உருவாக்கப்பட்டு "திராவிடக் கொள்கைகளாக" வந்தது.
ஆனால் ஆட்சியைப் பிடித்த அண்ணா அவர்கள் நான் கூறியதைப் போல 10 வருடங்கள் ஆட்சி புரியவில்லை. அவர் உயிரோடு இருந்ததோ வெறும் ஒன்றரை வருடங்கள் தான்.
ஆனால் அவர் வகுத்த கொள்கை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை அவர் பின்னால் வந்தவர்கள் அனைவரும் உணர்ந்து, நாம் அண்ணாவின் வழியில் செல்லாமல் போனால் நம்மை மக்கள் நிராகரித்து விடுவார்கள் என்று எண்ணியே அதன் பின் வந்தவர்கள் ஆட்சி செய்தனர்.
அண்ணா உருவாக்கிய தி.மு.க வை எதிர்த்துக் கட்சி தொடங்கிய M.G.R அவர்களும் தனது கட்சியின் பெயரிலேயே அண்ணாவையும், தனது கொள்கை "அண்ணாயிசம்" என்றும் கூறினார்.
அதாவது அண்ணாவின் கொள்கையைக் கலைஞர் பின்பற்றவில்லை, அதனால் நான் அண்ணாவின் கொள்கையைப் போற்றிப் பாதுகாக்க கட்சி துவங்கியுள்ளேன் என்பது போலக் கூறினார்.
இவை அனைத்தும் ரஜினிக்கும் பொருந்தும். ஒரு வேளை அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் ஆகி விட்டால்....
அவர் முன் வைத்த கொள்கை, கோட்பாடுகள், சீரமைப்புகள் அனைத்தையும் மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்ற செய்தியை ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் கொண்டு சேர்த்து விட்டால்.....
அந்த 10 ஆண்டுகள் மட்டுமல்ல, அடுத்தப் பல ஆண்டுகளுக்கு இந்த "ஆன்மீக அரசியல்" வழியில் பயணிக்க மக்கள் தயாராகி விடுவார்கள்.
"ஆன்மீக அரசியல்" என்று சொன்ன பின்பு தான் சென்ற பதிவில் பல கேள்விகளோடு முடித்திருந்தது நினைவுக்கு வருகிறது.
அந்த அத்தனை கேள்வியையும் உள்ளடக்குமாறு ஒரு கேள்வியை வைக்கிறேன்.
"திராவிட அரசியலை தான் மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டதாகக் கூறி உள்ளேனே, பிறகு ஏன் ஆன்மீக அரசியலுக்குத் தேவை? பலர் கூறுவதைப்போல இது மதம் சார்ந்த அரசியலாக இருக்குமா ? "
பேசித் தெளிவோம் !!!
- விக்னேஷ் செல்வராஜ்
|