நேற்றைய தினம் ரஜினி ரசிகர்களுக்கும் மக்கள் மன்ற காவலர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும் நல்லதொரு நேர்மறை எண்ணங்களையும் கடத்தியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆம்! காலையில் பெங்களூரு சிறுவன் தன் இதய மாற்று அறுவை சிகிச்சையின் வலியை தலைவர் படங்கள் பார்த்து போக்கிக் கொள்வதாக வந்த செய்தியை ரசிகர்கள் பெரு மகிழ்ச்சியுடன் பகிர்ந்து மகிழ்ந்தனர்.
அச்சிறுவன் பிறந்த பின் அசைவற்றுக் கிடந்த போதும் தலைவரின் "தில்லானா தில்லானா" பாடல் கேட்டதும் தான் அழுது தன் இயக்கத்தைத் தொடங்கி இருக்கின்றான்.
இது தற்செயல் நிகழ்வாக இருக்கலாம்..
ஆனால் ரஜினி எந்த அளவு மக்களால் நேசிக்கப்படுகிறார் அதிலும் மூன்று தலைமுறைகளைக் கடந்து இப்போது "2K Kids" என்று சொல்லப்படும் நான்காம் தலைமுறையையும் எவ்வாறு ஆக்கிரமித்திருக்கிறார் என ஆய்ந்து பார்த்தால் பிரம்மிப்புதான் பதிலாகக் கிடைக்கும்..
சாலையில் கிடந்த பணத்தைப் போலீஸில் ஒப்படைத்த முகமது யாசின் எனும் சிறுவன் முதல், கையில் தலைவரை வரைந்து அதைப் பெருமையாகக் காட்டும் ஆட்டோ ஓட்டுநர் பெண் வரையில் ரஜினி எனும் மந்திரச்சொல் நிகழ்த்தியிருக்கும் பாய்ச்சல் அலாதியானது.
ஒரு பி.ஹெச்.டி ஆய்வறிக்கை எழுதும் அளவு நுட்பங்கள் நிறைந்தது.
அதன் பின் ஒரு பெட்டி செய்தி அதிகம் பகிரப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஸ்டாலின் அவர்கள் மன்றத்தின் வளர்ச்சி படிநிலையில் எவ்வாறு வந்தார் என்பதை அழகாகச் சொன்ன அந்தத் துணுக்குச் செய்தியில் அவ்ளோ விசயங்கள் பொதிந்து கிடந்தன.
"தம்பிக்கு எந்த ஊரு" பட ரிலீஸில் கத்தியால் குத்தப்பட்டு, மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு என ஆரம்பகாலத்தில் மிகுந்த இழப்புகளைச் சந்தித்திருக்கிறார் ஸ்டாலின்.
இதற்குப் பிரதிபலனான பெரும் போராட்டத்தை முன்னெடுக்க நினைத்த போது ரஜினியே நேரடியாக ஸ்டாலினை சந்தித்து ஆறுதல் கூறி சட்டப்போராட்டத்தில் பதில் சொல்லலாம் எனப் போராட்ட முடிவை கைவிடச் செய்திருக்கிறார்.
அத்துடன் நிற்காமல், குத்திய குற்றவாளிக்கு அரசு வேலை கிடைக்க, இந்த வழக்குத் தடையாக இருந்த போது ஸ்டாலினை அழைத்து வழக்கையும் வாபஸ் பெற செய்திருக்கிறார்.
என்னவொரு மனித நேயம்!
தலைவர் சொல்லே வேத வாக்கு என ஸ்டாலினும் சொன்னதைச் செய்து உழைத்து முன்னேறி இன்று பெரும் தொழிலதிபராக அதே தூத்துக்குடியில் புகழ்பெற்று விளங்குகிறார்.
போராட்டம் குறித்த ரஜினியின் பார்வை 30 ஆண்டுகளுக்கு முன்பும் மாறாத பக்குவத்துடன் இருந்ததை மீம்ஸ் கிரியேட்டர்கள் அறிய வாய்ப்பில்லை.
அபிராமி எனும் பெண் செய்த கொடூர செயல் உங்கள் அனைவருக்கும் மீளக்கொணர வேண்டிய அவசியம் இல்லை.
அதில் பெரும் மன உளைச்சலுடன் தன் இரு குழந்தைகளையும் இழந்த அன்பர் ரஜினி ரசிகர் விஜயை நேற்று நம் அன்புத் தலைவர் அழைத்து ஆறுதல் சொல்லியிருக்கிறார்.
இழப்பின் வலியோடு ஒப்பிடுகையில் ஆறுதல் ஈடுசெய்ய முடியாது தான் என்றாலும் விஜய்க்கு இது கண்டிப்பாக ஒரு பலத்தை அளித்திருக்கும்.
தலைவரின் கரத்தை பிடித்துத் தேம்பி அழும் அந்தக் காட்சி காண்போர் அனைவரையும் உழுக்கிவிடும். இதில் இன்னொரு வருத்தமான விசயம் அவரின் இரு பிள்ளைகளுமே தலைவரின் தீவிர ரசிகர்கள் தான்.
காலத்தின் கொடுமையைச் சற்றேனும் ஆசுவாசப்படுத்த நினைத்த நம் தலைவருக்கு கோடி நன்றிகள்.. அன்பர் விஜய்க்கு தலைவரின் ஆறுதல் ஒரு பலத்தைக் கொடுக்க நம் பிரார்த்தனைகள்.
விஜய் தவிர்த்து நாகர்கோவிலில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புத் தானம் செய்த அஸ்வின் குடும்பத்தையும், காலா இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு திரும்புகையில் விபத்தில் இரு கால்கள் இழந்த தன் ரசிகரையும் நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்திருக்கிறார்.
ரசிகரின் குடும்பத்திற்கு நிதி உதவியும் செய்து பிள்ளைகள் படிப்பையும் ஏற்றுகொண்டுள்ளார்.
அதே போல மேட்டுப்பாளையம் அருகே ஓடாநிலை ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாய் மாற்றிப் பல விருதுகள் பெற்ற அந்த ஊராட்சி மன்ற தலைவரையும் அழைத்துப் பாராட்டி கௌரவித்திருக்கிறார்.
நேற்றைய நாள் முழுதும் தன் ரசிகர்களுக்கு அன்பையும் மனிதநேயத்தையும் செய்திகள் வழியே கடத்தி நேர்மறை எண்ணத்தைப் படர்த்தி இருக்கிறார்.
ரஜினி என்றைக்கும் எதிர்மறை குறித்து எச்சரித்த வண்ணம் இருப்பார் தன் ரசிகர்களுக்கு.. ரசிகர் சந்திப்பு முதலே இதை வலியுறுத்தியும் வந்தார்.
எதிர்மறை செய்திகளைத் தவிருங்கள், நேர்மறையாக இருக்கப்பாருங்கள் எனச் சொல்பவர் தான் ரஜினி.
சோஃபியா எனும் தூத்துக்குடி பெண் நிகழ்வில் மூழ்கியிருந்த அரசியல் தலைவர்கள் ஊடகங்கள் மத்தியில் இவரும் பத்தோடு பதினொன்றாக அது குறித்துப் பேசி ஊடக கவனம் பெற்றிருக்க முடியும்.
ஆனால் அதைச் செய்யாமல் இழந்தவர்களுக்கு ஆறுதல் சொல்லி தன் செயல் யாருக்கேனும் உதவியாக இருக்க வேண்டும் என ஒவ்வொருவருக்கும் புரிய வைத்திருக்கிறார்.
இதையும் கூடச் சிலர் எதிர்த்து தான் பதிவிடுகின்றனர்.
ஆறுதலை அவர்கள் இல்லம் சென்று கொடுக்க வேண்டுமாம்.. ரஜினி எது செய்தாலும் குற்றம் காண்போரிடம் வேறு எந்தப் பதிலை எதிர்பார்க்க முடியும்..
தலைவர் சொல்படியே இந்த எதிர்மறை செய்திகளைத் தவிர்த்துவிடலாம்.. அது தான் அவர்களுக்கான பாடம்..நாம் நம் வேலையில் சரியாக இருப்போம் என்றும் தலைவர் போல.
நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கும்!!
- ஜெயசீலன்
|