சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ராஜா சின்ன ரோஜா படத்தின் பாடல் கேசட்டுகளில் "வருங்கால மன்னர்களே வாருங்கள்" என்கிற ஒரு இனிமையான பாடலை பலமுறை கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லும் அற்புதமான பாடல். ஆனால் படம் வெளியானபோது படத்தில் அந்த பாடல் இடம் பெறவில்லை, அவ்வளவு அழகான பாடலை படத்தில் இருந்து நீக்குவதற்கு எப்படி மனம் வந்தது? ஏன் நீக்கினார்கள்?
பொதுவாக படத்தின் நீளம் கருதி, படத்திற்கு சம்மந்தம் இல்லை என ஒரு பாடல் காட்சியை நீக்குவது ஒரு விதம், ஏற்கனவே இசையமைப்பாளரிடம் கதையை சொல்லி மொத்தமாக பாடல்களை வாங்கிவைத்து படமாக்குவது இன்னொரு விதம். இதில் ராஜா சின்ன ரோஜா படத்திற்காக முன்கூட்டியே மொத்தமாக பாடல்கள் அமைக்கப்பட்டுவிட்டன. அதே சமயம் அந்த படம் போதை பொருளுக்கு எதிராக போதையில் சிக்கி தவிக்கும் இளைஞர்களை அதிலிருந்து வெளியே எடுக்கும் விதமாக, ஒரு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக வெளியாகியிருந்தது. அதனாலயே அந்த படத்தில் தெரிந்தோ தெரியாமலோ ராஜா சின்ன ரோஜாவோடு காட்டு பக்கம் வந்தனாம் என்ற பாடலாகட்டும், பண்பாடு இல்லை என்றால் பாரதம் ஆகட்டும் என்ற பாடலாகட்டும், படத்தில் இடம் பெறாமல் போன வருங்கால மன்னர்களே என்கிற பாடலாகட்டும் இவை அனைத்துமே இளைஞர்களுக்கு அறிவுரை கூறும் விதமான பாடல்கலாகவே எழுதபட்டு இருந்தன. ஏற்கனவே இதே போன்று குழந்தைகளை மையபடுத்தி அறிவுரை பாடலகாலாக இடம் பெற்ற நிலையில் வருங்கால மன்னர்களே பாடலையும் இடம் பெற செய்தால் அந்த படம் பார்க்க வருபவர்களுக்கு ஓவராக அட்வைஸ் செய்வது போல இருக்கும் என்பதால் இந்த பாடல் படத்தில் இடம் பெறாமல் போனதாக படம் வெளியான சமயத்தில் பேசப்பட்டது. இல்லையென்றால் இப்படி ஒரு அழகான பாடலை படத்தில் வைப்பதற்கு அவர்களுக்கு என்ன சங்கடம் இருந்திருக்கபோகிறது.
இப்பாடலின் சில வரிகள் . . .
நண்பர்களை துயரத்திலே கண்டுகொள்ளலாம்
நல்லவரை வறுமையிலே கண்டுகொள்ளலாம்
வஞ்சகரை வார்த்தையிலே கண்டுகொள்ளலாம்
மனைவியரை நோயினிலே கண்டுகொள்ளலாம்
உங்களை உறுதியிலே கண்டுகொள்ளலாம்
என்னை மட்டும் இறுதியிலே கண்டுகொள்ளலாம்
என்னை மட்டும் இறுதியிலே கண்டுகொள்ளலாம்
- காங்கேயன்
|