அண்ணாசாலையில் தலைமை அஞ்சல் அலுவலகத்திற்கு எதிரே சிவாஜி கணேசன் குடும்பத்திற்கு சொந்தமான திரையரங்கம் ஒன்று இருந்தது. வெகு சமீபக் காலம் வரை சென்னை சினிமா ரசிகர்களின் ரசனைக்குரிய இடமாக அது இருந்தது. ரஜினி ரசிகர்களுக்கு இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல் பாசம் சேர்ந்த இடம் அது., காரணம் ஒரு படம், அந்த படத்தின் பெயர் மன்னன்.
நாம் இப்போது பார்க்கப் போகும் படம் மன்னன் தான்.
1992ஆம் வருடம் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த படம் மன்னன்
இயக்கம் - பி. வாசு
இசை - இளையராஜா
தயாரிப்பு - பிரபு, சிவாஜி புரொடக்ஷன்ஸ்
சென்னையின் ஒரு பிரபல தொழில் நிறுவனத்தின் முதலாளி தான் படத்தின் நாயகி பாத்திரம், அழகும் திறமையும் இணைந்த ஒரு ஆணவம் பிடித்த பெண் சாந்தி தேவி.
எதிலும் எப்போதும் முதன்மையான இடத்தில் இருக்க வேண்டும் என்று ஒரு மனோபாவம் கொண்டவள்.
நம்பர் ஒன் இடத்தை அடைவதற்கும் அதில் நிலைத்து நிற்பதற்கும் கடுமையாய் உழைப்பவள்.
கதாநாயகியின் பாத்திரம் அழுத்தமான ஒரு தொலைக்காட்சி பேட்டி காட்சியின் மூலம் பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் இயக்குனர்.
அதை தொடர்ந்து வில்லன் அறிமுகப் படலமும் நடந்து முடிகிறது, வில்லனையும் மூக்குடைத்து அனுப்புகிறாள் நாயகி.
"யப்பா, இந்த அம்மாவை கட்டிக்கிட்டு எவன் அவஸ்தைப் படபோறானோ " என்று நமக்குள் ஒரு சின்ன பொறி தட்ட ஆரம்பிக்கும் போதே ரஜினியின் ராஜகம்பீர அறிமுகக் காட்சி வந்து விடுகிறது.
80களில் ரஜினி அறிமுகக் காட்சிகள் ரசிகர்களுக்கு குதூகலம் கொடுத்தது என்றால், 90களின் சூப்பர் ஸ்டார் அறிமுகக் காட்சிகள் ரசிகனுக்கு ஒரு பரவச நிலையை அடையும் இடத்துக்குக் கொண்டு சென்றன என்று சொல்லலாம்.
படத்தில் ரஜினியின் பெயர் கிருஷ்ணன்.
சூப்பர் ஸ்டாரின் அறிமுக காட்சி ஏர்போர்ட்டில் வைக்கப்பட்டிருக்கிறது, டைம் கேட்கும் பெண்கள், வாட்ச் இல்லாதவனிம் கேட்டு விட்டோமே என்று யோசிப்பதற்குள், இதோ என கண்ணாடியை ஸ்டைலா இறக்கி விட்டு ஒரு சுற்று சுற்றி தன் முதுகில் இருக்கும் பையையே ஒரு கடிகாரமா காட்டுவார் ரஜினி. சாதாரண ஹீரோ கையில் வாட்ச் கட்டுவான், சூப்பர் ஸ்டாரோ ஒரு wall கிளாக்கையே தன் பின்னால் கட்டுவார்.
சூப்பர் ஸ்டார் என்றாலே வித்தியாசம் தான் என்று சத்தமாய் சொல்லும் ஒரு அறிமுக காட்சி அது.
அதே காட்சியில் நாயகியை சந்திக்கும் ரஜினி, ஒரு கெத்தான மோதலோடு தன் ஆட்டத்தை ஆரம்பிக்கிறார்.
தன் நடை உடை உடல்மொழி எல்லாவற்றிலும் ரஜினி ஒரு உற்சாகத்தை இயல்பாக இணைத்து கொள்கிறார்.
தன் தாயின் உடல் நிலை பாதிக்கப் பட்டதால் மும்பையில் இருந்து அவசரமாக சொந்த ஊர் திரும்பும் நாயகன் தாய்க்காக தன் வேலையையும் துறக்கிறான்.
இங்கேயே ஒரு வேலை தேட வேண்டிய சூழல்நிலை ஏற்படுகிறது.
எந்த பெண்ணோடு ஏர்போர்ட்டில் மோதினானோ கிருஷ்ணன், அதே பெண்ணின் நிறுவனத்தில் வேலைக் கேட்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் சிக்கி கொள்கிறான்.
நேர்முக தேர்வுக்கு செல்லும் வழியில் ஒரு பெரியவரை சில ரவுடிகள் தாக்க வருகிறார்கள். நம் சூப்பர் ஸ்டார் பார்முலா படி அந்த ரவுடிகளிடம் இருந்து அந்தப் பெரியவரைக் காப்பாற்றுகிறார்.
பொதுவாக குழந்தைகளுக்கு சண்டைக் காட்சிகள் என்றாலே கொஞ்சம் அலர்ஜி தான், ரத்தம் தெறிக்க இருக்குமே என்று பெரியவர்களும் அப்படி படங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல சங்கடப்டுவார்கள். 90களின் பெரும்பான்மையான ரஜினி படங்கள் அதற்கு விதிவிலக்கு.
சண்டையில் கூட சிரிப்பு தான் அதிகம் இருக்கும், தன்னுடன் சண்டைப் போடும் அடியாட்களோடு கூட ஏதாவது பேசி சிரித்தப் படி தான் ரஜினி பதில் சண்டை போடுவார், சண்டைக் காட்சிகளின் இடை இடையே சில ரஜினி பிராண்ட் சேட்டைகளையும் செய்து ரசிகர்களைக் குழந்தைகளாகவும் குழந்தைகளைத் தன் ரசிகர்களாவும் மாற்றும் வித்தை தெரிந்தவர் சூப்பர் ஸ்டார்.
மன்னன் படத்தின் முதல் சண்டை அந்த வகையை சேர்ந்தது தான்.
காப்பாற்ற பட்ட பெரியவர் தான் கிருஷ்ணன் மோதிய சாந்தி தேவி இண்டஸ்ட்ரிஸ் முதலாளியின் தந்தை.
அவரை கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்த்தப் பின் அங்கு நடக்கும் காட்சி ரஜினி - விசு கூட்டணியில் உருவான ஆக சிறந்த ஒரு நகைச்சுவை காட்சி, இப்போதும் ரசித்து மகிழலாம்.
அங்கு கிருஷ்ணனின் வாழ்க்கைய திசை மாற ஆரம்பிக்கிறது என்று சொல்லலாம்.
பெரியவர் கிருஷ்ணனிடம் பேச்சு கொடுத்து அவன் வேலை தேடி செல்லும் இடம் அறிந்து, அங்கு அவனுக்கு வேலை கிடைக்க சிபாரிசு செய்வதாக சொல்லுகிறார். தன்னுடைய விசிட்டிங் கார்ட் கொடுத்து அனுப்புகிறார்.
கிருஷ்ணன் மிகுந்த நம்பிக்கையோடு அந்த கார்டு எடுத்துக்கொண்டு அலுவலகம் போகிறான்.
அங்கு அவன் சற்றும் எதிர்பாரா வண்ணம் அவன் ஏர்போர்ட்டில் சந்தித்த அதே பெண்ணை சந்திக்கிறான்.
இறுக்கமான அந்த காட்சியை எல்லாம் ரஜினி ஒருத்தரால் மட்டுமே ஒரு இணையற்ற நகைச்சுவை காட்சியாக மாற்ற முடியும்.
சாந்தி தேவியாக அன்றைய காலகட்டத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்று வளைய வந்த விஜயசாந்தி நடித்திருந்தார். ஆந்திர தேசத்தில் அவர் படங்களுக்கு என்று தனி வியாபாரம் இருந்த காலம் அது. தமிழில் அவர் நடித்த டப்பிங் படங்கள் சக்கப் போடு போட்ட நேரம், நேரடி தமிழ் படத்தில் விஜயசாந்தி நடிப்பது பரபரப்பாக பேசப்பட்டது தனி விஷயம்.
நேர்காணல் காட்சிகளில் எல்லாம் விஜயசாந்தியின் மிடுக்கான நடிப்பை ரஜினியின் இடக்கான நடிப்பு லாவகமாய் தாண்டி செல்லும்.
முதல் நேர்காணலுக்கு கண்டக்டர் பை, லெதர் ஜாக்கெட், பேண்ட் என்று ஒரு தினுஸாகவும் அடுத்த நேர்காணலுக்கு வேட்டி சட்டை, நெற்றியில் பட்டை, கழுத்தில் உத்திராட்ச்சை கொட்டை என்று வேறொரு தினுஸாகவும் வந்து ரஜினி சிரிப்பு அலைகளை ஆர்ப்பரிக்க விடுவார்.
வேட்டி சட்டையில் குஷ்பூ உடன் பேருந்தில் பயணம் செய்யும் காட்சி ரஜினியின் நகைச்சுவை திறமைக்கு சிறந்ததொரு சான்று.
குஷ்பூவிடம் வாய்க்கு வந்த வரலாற்றை அப்படி ஒரு நேர் முகம் வைத்துக் கொண்டு சொல்லுவாரே பார்க்கலாம். செம்ம சிரிப்பு வரவழைக்கும் காட்சி அது
படத்துக்கு வருவோம்,
தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு கிருஷ்ணனுக்கு வேறு வழி இன்றி வேலைக் கொடுக்கிறாள் சாந்தி தேவி.
தொழிற்சாலையில் சேரும் கிருஷ்ணன் படிப்படியாக தொழிலாளர்கள் மத்தியில் செல்வாக்கு பெறுகிறான்.
வேலையும் கிடைக்கிறது அத்தோடு கிருஷ்ணனுக்கு காதலும் கிடைக்கிறது. சாந்திதேவியின் காரியதரிசி மீனாவைக் கண்டதும் பிடித்து போய் காதலில் கொள்கிறான்.
வேலையில் அடிக்கடி சாந்தி தேவிக்கும் கிருஷ்ணனுக்கும் சின்ன சின்ன மோதல் நடக்கிறது. சாந்தி தேவி கிருஷ்ணன் மீது பகையை வளர்த்து கொள்கிறாள்.
ஒருமுறை தன்னைக் காப்பாற்ற வந்த கிருஷ்ணனை, தன்னைத் தொட்டு விட்டான் என்று அரைகுறை புரிதலோடு எல்லாரும் பார்க்க அவனை அடித்து விடுகிறாள்.
தெலுங்கு படங்களில் விஜயசாந்தி கையால் ஆண்கள் அடி வாங்குவது வெகு சாதாரணம்.
இது தமிழ் படம், அதுவும் ரஜினி படம், சூப்பர் ஸ்டார் மீது கை வைப்பது என்றால் சும்மாவா !
லேடி சூப்பர் ஸ்டாருக்கு நம் சூப்பர் ஸ்டார் வட்டியோடு திருப்பிக் கொடுக்கிறார். படம் வந்த காலகட்டத்தில் இந்த காட்சி வெகுஜனங்களால் மிகவும் ரசிக்கப் பட்ட காட்சி இது.
இன்றைய காலத்து பெண்கள் இந்தக் காட்சியை எப்படி ரசிப்பார்கள் என்று என்னால் கணிக்க முடியவில்லை.
தன்மான சூடு படும் சாந்தி தேவி கிருஷ்ணனைப் பழி வாங்க வேறு வழி நாடுகிறாள்.
கிருஷ்ணனின் தாயைச் சந்தித்து தான் கிருஷ்ணனை உயிருக்கும் மேலாக நேசிப்பதாக நாடகம் ஆடுகிறாள். அதை நம்பும் கிருஷ்ணனின் தாய் அவளுக்கு தன் மகன் தான் மணாளன் என்று வாக்கு கொடுக்கிறார்.
கிருஷ்ணன் மீனா காதல் தோல்வியில் முடிகிறது. தாய் சொல்லைத் தட்டியறியாத கிருஷ்ணன் சாந்தி தேவி கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு கணவன் ஆகிறான்.
கணவன் மனைவி என வீட்டில் ஒரு புது ஆட்டம் துவங்குகிறது.
ஒரு சந்தர்ப்பத்தில் சாந்தி தேவி நிறுத்தும் வேட்பாளரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு வென்று தொழிற்சங்க தலைவன் ஆகிறான் கிருஷ்ணன்.
வேலையிலும் இருவருக்கும் மோதல் சூடு பிடிக்கிறது.
திரைக்கதை களை கட்டுகிறது.
கிருஷ்ணன் சாந்தி தேவியின் மோதல் முடிவு என்ன ஆகிறது?
வெல்வது யார்?
இது போன்ற கேள்விகளுக்கு குணம் மணம் மிகுந்த சூப்பர் ஸ்டார் மசாலா தெளித்து ரசிகர்கள் விரும்பும் ஒரு முடிவை கிளைமாக்ஸில் வைத்து பாராட்டு பெறுகிறார் இயக்குநர் பி. வாசு
மன்னன் படத்திற்கு இசை இளையராஜா.
படத்தில் மொத்தம் 6 பாடல்கள்
பட்டியலில் முதலிடம் பெறும் பாடல் "அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே "என்பதில் மாற்று கருத்தே இருக்க முடியாது, கே.ஜே. யேசுதாஸ் அவர்களின் தேன் சொட்டும் குரலில் சிந்தையைக் கட்டிப் போடும் பாட்டு அது.
காட்சியமைப்பில் ரஜினியின் கனிவு பொழியும் நடிப்பில் அந்த பாட்டு அமரத்துவம் அடைந்தது என்றே நினைக்கிறேன்.
ராஜாதி ராஜா உன் தந்திரங்கள், ரஜினி -குஷ்பூ ஆட்டத்தில் துள்ளலிலும் ஸ்டைலிலும் இன்று வரை கொடி கட்டி பறக்கும் ஒரு பாட்டு. எஸ்பிபி சுவர்ணலதா பாடிய ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் டூயட் இது
கும்தலக்கடி கும்தலக்கடி வழக்கமான ரஜினி பாட்டு, குதூகலத்திற்கு குறை வைக்காத பாட்டு.
சண்டி ராணியே மற்றும் மன்னர் மன்னனே திரைப்படத்தையும் தாண்டி லேசான அரசியல் நெடி வீசிய பாடல்கள்.
அடிக்குது குளிரு ரஜினி ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு பாட்டு, காரணம் திரையில் ரஜினிக்கு எத்தனையோ பாடகர்கள் பாடியிருக்கிறார்கள், ஆனால் முதல் முறையாக சூப்பர் ஸ்டார்க்காக ரஜினிகாந்த் பாடகர் அவதாரம் எடுத்தது இந்தப் பாடலில் தான். ரஜினி திரையில் பாட முயற்சி செய்த ஒரே படமும் இது தான்.
விஜயசாந்தி, நெற்றி கண் என்ற படத்தில் ஒரு ரஜினிக்கு மகளாகவும் இன்னொரு ரஜினிக்கு தங்கையாகவும் வருவார். அந்த விஜயசாந்திக்கும் மன்னன் சாந்திதேவிக்கும் துளி கூட சம்பந்தம் கிடையாது. ரஜினிக்கு எதிரில் பிரேமில் நின்று ஜொலிக்க கொஞ்சம் கெத்து வேணும், இவரிடம் அது நிறையவே இருக்கு.
ரஜினியை கணவனாக அடக்கவும், வேலையில் ஜெயிக்கவும் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கும் பெண் வேடத்தில் சும்மா தூள் கிளப்பி இருக்கிறார்.
முதலிரவு காட்சியில் கணவனைக் கொதிக்க விட்டு பெண்மையின் திமிர் காட்டும் இடத்தில் தனி முத்திரைப்
பதிக்கிறார்.
படம் முழுக்க நாயகன் மீதான ஒரு அலட்சியம் காட்டிய படியே வளைய வரும் ஆணவ அழகு அட்டகாசம்.
நீலாம்பரிக்கு எல்லாம் பெரியம்மா இந்த சாந்தி தேவி என்று சொல்லலாம்.
குஷ்பூவுக்கு க்யூட் நாயகி வேஷம், ரஜினியைப் பார்க்கிறார், பழகுகிறார், அப்புறம் பைக்கில் போகிறார் ( அதை சொல்லியே ஆகணும், என்ன ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் அது, ரஜினி ஸ்டைல் ஆக அதில் குஷ்பூவை உட்கார வைத்து கிளம்புவது தானே ஊட்டியில் எடுக்கப்பட்ட ராஜாதி ராஜாதி உன் தந்திரங்கள் பாட்டுக்கு லீட் காட்சி ), காதல் கொள்கிறார், பின் காதலில் தோற்று நலம் விரும்பியாக நல்ல பெண்ணாக இருந்து விடுகிறார்.
விசு, அவர் தான் சாந்தி தேவியின் தந்தை, பாசம் இருந்தாலும் நியாயத்தை பேசும் தகப்பன் வேடம், ரஜினிக்கும் இவருக்கும் ஆரம்பிக்கும் காட்சி காமெடி மகிழ்ச்சி என்றால் பின் பாதியில் அது கொஞ்சம் முதிர்ச்சி அடைகிறது.
விசுவின் பாத்திரம் கதையில் ஆங்காங்கே திருப்பங்களுக்கு பயன்படுகிறது.
மனோரமா, பாசமிகு பணித்தாய், வழக்கம் போல் கொஞ்சம் காமெடி இன்னும் கொஞ்சம் நெகிழ்ச்சி என்று தன் நடிப்பில் கலக்கி விட்டு போகிறார்.
வில்லன்கள் என்று சொன்னால், சாந்தி தேவியிடம் வேலைப் பார்க்கும் உதய்பிரகாஷ், மற்றும் போட்டி நிறுவன முதலாளிகள், அவ்வப்போது ரஜினியிடம் அடி வாங்குகிறார்கள், கிளைமேக்ஸில் மொத்தமாக வாங்கிக் கொண்டு போகிறார்கள்.
இந்த கதைக்கு வில்லன் ஒரு ஊறுகாய் போல தான், மற்ற படி முழுக்க முழுக்க இது ரஜினி - விஜயசாந்தி 20-20 போட்டி தான்
மன்னன் படத்தை சொன்னால் ரஜினி எந்த அளவுக்கு நினைவில் நிற்கிறாரோ அதே அளவுக்கு நிற்பவர் கவுண்டமணி. இன்று வரை மன்னன் கவுண்டர் காமெடி காட்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிகள் ஏராளம்.
ரஜினி ஒரு காமெடி கடலாகப் படத்தை கொண்டு போய் கொண்டிருக்கும் நேரத்தில் கவுண்டமணியின் வரவு படத்தில் ஒரு சிரிப்பு சுனாமியையே கொண்டு வருகிறது.
கவுண்டமணி - ரஜினி கூட்டணியின் சிரிப்பு வெடிகளைப் பற்றி குறிப்பிட்டு சொல்ல மன்னனில் மூன்று காட்சிகள் இருக்கின்றன
1.ரஜினியை கவுண்டமணிக்கு குஷ்பூ அறிமுகம் செய்து வைக்கும் காட்சியில்
2.வேலையைக் கட் அடித்து விட்டு தியேட்டரில் படம் பார்க்க செல்லும் காட்சி,
3. உண்ணாவிரதக் காட்சி
ரஜினி - கவுண்டர் கூட்டணி அட்டகாசம் செய்திருப்பார்கள், குறிப்பாக கவுண்டர் வெளுத்து வாங்கி இருப்பார்.
கட்டுரையின் ஆரம்பத்துக்கு போவோம், மன்னனின் மிக சிறந்த காட்சியாக இன்று வரை பேசப்பட்டு வரும் காட்சியான சினிமா படத்துக்கு டிக்கெட் எடுக்கும் காட்சி படமாக்கப் பட்டது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்துக்கு சொந்தமான சாந்தி தியேட்டரில் தான். மன்னன் படமும் இதே திரையாங்கில் வெளியாகி வெற்றி பெற்றது.
பின்னாளில் இதே சாந்தி தியேட்டரில் தான் ரஜினிகாந்த் நடிப்பில், வாசு இயக்க, சிவாஜி பிரொடக்ஷன்ஸ் தயாரித்த சந்திரமுகி திரைப்படம் வெளியாகி மூன்று வருடங்கள் ஓடியது.
சாந்தி தியேட்டர் சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமின்றி சிவாஜி ராவ் ரசிகர்களுக்கும் செண்டிமெண்டாக மிகவும் பிடித்த தியேட்டர் ஆகிப் போனது, இப்போது அந்த திரையரங்கம் இல்லை.
ரஜினி, வழக்கமான நாயகன் என்றால் கதையில் தன் பங்கை செய்து விட்டு போயிட்டே இருக்கலாம்.
சூப்பர் ஸ்டார் அப்படி எல்லாம் போயிட முடியுமா?
கெத்து குறையாத அறிமுகக் காட்சி முதல் கடைசி காட்சி வரை படத்தைத் தூக்கி சுமக்கணும்.
ரஜினி ரசிகர்கள் என்ற பெருங்கூட்டத்தின் ரசனைக்கு கொஞ்சமும் குறைவின்றி தீனிப் போட வேண்டும். அத்தோடு தன்னை நம்பி திரையரங்கம் வரும் அனைவருக்கும் பொழுது போக வைத்து உற்சாகமாய் வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும், பெரும் பொறுப்பு ஆச்சே.
அதை ரஜினி செய்கிறார்,
படம் பார்க்கும் அம்மாக்கள், இப்படி ஒரு பிள்ளை வேணும் என்று ஏங்க வைக்கிறார்.
காதல் உடைந்தாலும் கண்ணியம் காக்கிறார்.
கட்டியப் பின் ஒரே தாரம் தான், அவளுக்கு நான் ஆதாரம் எனக்கு அவள் ஆதாரம் என்று குடும்பப் பாடம் எடுக்கிறார்.
தமிழ் நாட்டுமக்களுக்கு தேன் தடவி பொழுது போக்காய் கொஞ்சம் பாடமும் எடுக்கிறார்.
அது தானே சூப்பர் ஸ்டார் படம்.
பி.வாசு குடும்பம் சார்ந்த பொழுது போக்கு படங்கள் எடுப்பதில் மன்னன் இவர்.
ரஜினிக்கு ஒரு ராசியான இயக்குனர், இவர்கள் கூட்டணியில் வந்த எனக்கு மிகவும் பிடித்த படம் மன்னன் தான்.
இயக்குனர் வாசுவும் தயாரிப்பாளர் பிரபுவும் ஆளுக்கு ஒரு காட்சியில் சூப்பர் ஸ்டாரோடு தலையைக் காட்டுகிறார்கள்.
மன்னன் - தரமான சூப்பர் ஸ்டார் முத்திரையிட்ட பொழுது போக்கு சித்திரம் 😊
ஓவியம் : அறிவரசன்
- தேவ்
|