"நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி, "இந்த வசனத்தை மறக்க முடியுமா? தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் பஞ்ச் டயலாக் இது. "நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விடமாட்டான், கெட்டவங்களுக்கு ஆண்டவன் நெறைய கொடுப்பான் ஆனா கைவிட்டுருவான்" சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன இந்த தத்துவத்துக்கு தமிழ்நாடே சிலிர்த்தது. சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் அத்தனை பேரும் காலத்துக்கும் கேட்டு மகிழ , பாட்ஷாவில் தான் எத்தனை எத்தனை வசன திணிப்புகள். அத்தனையும் மறைந்த எழுத்து சித்தர் பாலகுமாரின் கைவண்ணத்தில் உருவானவைதான். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் பாலகுமாருக்குமான நட்பு ஆத்மார்த்தமானது. பாலுமகேந்திரா இயக்கத்தில் உன் கண்ணில் நீர் வழிந்தால் படத்தில் ரஜினி நடித்து கொண்டு இருந்தபோது, அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார் எழுத்தாளர் பாலகுமாரன். அப்போது தொடங்கிய நட்பு, பாலகுமாரன் மறையும் வரை எந்த மாற்றமும் இல்லமால் தொடர்ந்தது. பாலகுமாரனின் மறைவுக்கு ரஜினி நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதில் இருந்தே இதை புரிந்து கொள்ளமுடியும்.
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பாட்ஷாபடத்தின் கதை விவாதம் நடந்து கொண்டு இருந்தபோது, நடந்த நிகழ்வு ஒன்றை பாலகுமாரன் குறிப்பிட்டுள்ள விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அவர் என்ன கூறியுள்ளார் தெரியுமா ? " சினிமாவை பற்றி எனக்கும் பேச விருப்பம் உண்டு. சினிமாவில் அற்புதமான மனிதர்களை நான் சந்தித்து இருக்கிறேன், வியந்து இருக்கிறேன். அவர்களின் அன்பில் , அரவணைப்பில், நட்பில் திளைத்து இருக்கிறேன். குறிப்பாக நண்பர் நடிகர் ரஜினிகாந்த் அவர்களோடு எனக்கு நல்ல பழக்கம் உண்டு. அவர் கம்பீரத்தை பல்வேறு சமயங்களில் நான் கவனித்து அதிசியபட்டுருக்கிறேன். பாட்ஷா படத்தின் கதை விவாதம் நடந்து கொண்டு இருந்தது.
ரஜினிகாந்த் அவர்களின் அலுவலக மாடியில் ஒரு பெரிய ஹாலில் அமர்ந்து இருந்தோம். அந்த ஹாலில் இரண்டு ஒற்றை சோபாக்களும், மூன்று பேர் அமரக்கூடிய ஒரு நீண்ட சோபாவும் இருந்தன. ஒற்றை சோபாக்களில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவும், ரஜினிகாந்த் அவர்களும் அமர்ந்திருக்க, மூன்று பேர் அமரகூடிய சோபாவின் நுனியில் நான் அமர்ந்து பேசி கொண்டு இருப்பேன். அந்த மூன்றாவது சோபாவில் வேறு யாரேனும் வருவார்கள், உக்காருவர்கள், நகர்ந்து போவார்கள. மூன்று பேருமே விவாதத்தில் ஈடுபட்டு இருந்ததால் இதுதான் உக்காரும் விதமாக இருந்தது. விவாதத்தினிடையே சூடு ஏற ஏற, நான் உக்காந்து பேச முடியாமல் என் வழக்கப்படி எழுந்து நின்று வேட்டியை மடித்து கட்டி ,கைகளை ஆட்டியபடி அந்த காட்சியை விவரித்து வசனத்தோடு என்னுடைய வெளிப்பாட்டை சொல்லி கொண்டுருக்க, ரஜினிகாந்த் அவர்கள் உற்று கேட்டு கொண்டு இருந்தார்.
நான் நடப்பதை பார்த்து எழுந்து நின்று தள்ளி போய் மூன்று பேர் அமர கூடிய அந்த நீண்ட சோபாவின் பின்பக்கம் நின்று என்னையே பார்த்து கொண்டுருந்தார். நான் ஒரு பேச்சு சுவாரஸ்யத்தில் மெய்மறந்து அவருடைய நாற்காலியில் அமர்ந்து அவரிடம் பேசும்போது, மூன்று பேர்அமரகூடிய அந்த நீண்ட சோபாவில் அவர் அமர்ந்து கொண்டார். என்னிடத்தில் சுரேஷ் கிருஷ்ணா ஏதோ சொல்ல முற்படுவது தெரிந்த போது குறிக்கிட வேண்டாமென்று கையமர்த்திவிட , தொடர்ந்து நான் வேகமாக ரஜினிகாந்திடம் பேசி கொண்டுருந்தேன். சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் எழுந்து அருகே வந்து காதோரம், "அவருடைய நாற்காலியில் அமர்ந்து பேசுகுறீர்கள் தயவு செய்து எழுந்திருங்கள்" என்று மெல்ல சொன்னார். நான் திடுக்கிட்டு என் தவறை உணர்ந்தேன். நான் எழுந்திருக்க முற்ப்படும்போது , சுரேஷ் கிருஷ்ணா பேசியதையும், நான் எதிரொலிப்பதையும் அறிந்து ரஜினிகாந்த் அவர்கள் என் தோளை அழுத்தி பற்றி உக்காரவைத்து , உக்காருங்கள் இது ஒன்றும் சிம்மாசனம் அல்ல வெறும் சோபாசனம் தான் யார் வேண்டுமானாலும் உக்காரலாம் என்று பலத்த குரலில் சொல்லி தொடர்ந்து என்னை பேசுமாறு கட்டளையிட்டார்.
ஆனால் நான் உக்காந்து இருப்பது அவருடைய நாற்காலி என்று தெரிந்து பிறகு தொடர்ந்து என்னால் பேசமுடியவில்லை. நான் எழுந்து நின்று என்னுடைய இடத்திற்கு வந்துவிட்டேன். அன்றைய விவாதம் முடியும் வரையில் ரஜினிகாந்த் அந்த ஒற்றை சோபாவில் உக்காரவில்லை. வீடு திரும்பும்போது ரஜினிகாந்த் அது ஒன்றும் சிம்மாசனம் அல்ல என்று சொன்னதும், தோளில் அழுத்தி அமர்த்தியதும், தொடர்ந்து பேச கட்டளையிட்ட கம்பீரமும், பண்பும், எளிமையும், பெருந்தன்மையும் நியாபகர்த்திக்கு வந்தன. நாற்காலி என்பது ஒரு கௌரவமான விஷயம்தான் , ஆனால் அப்டியெல்லாம் ஒன்றும் இல்லை இது நாற்காலிதான் என்று சாதரணமாக சொன்ன அந்த மனிதரை இன்றளவும் என் மனம் நேசிக்கிறது " என்று கூறியுள்ளார் பாலகுமாரன். நாற்காலி என்பது ஒரு பொருள் தானே தவிர , அதை ஒரு கெளரவமாகவோ, பதவியின் அடையாளமாகவோ சூப்பர் ஸ்டார் ரஜினி நினைத்தது இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்தான்.
|