தமிழ் சினிமா இருதுருவங்கள் என்கிற பாதையையே இதுவரை கடைபிடித்துவருகிறது. தியாகராஜ பாகவதர் - பி.யூ. சின்னப்பா, எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித் என ஒவ்வொரு காலகட்டத்திலும் தானாகவே ஒரு இருதுருவப் பிரிவு உருவாகிவிடுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. இந்த நிலையில் நடிப்புக்கு ஒருவர், கமர்ஷியல் ஆக் ஷனுக்கு ஒருவர் என்று ரசிகர்கள் மட்டுமல்ல, விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களும் கூட அவர்களைத் தரம் பிரித்துக் கொண்டார்கள். இந்த வகையில், சிவாஜி என்றால் நடிப்பு, எம்.ஜி.ஆர். என்றால் ஆக் ஷன் அதே பாணியில்தான், கமல் என்றால் நடிப்பு, ரஜினி என்றால் கமர்ஷியல் என்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி விட்டனர்.
ஆரம்ப காலகட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் முழுமையான திறமையை வெளிகாட்டும் விதமாக பல திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்தன. 'முள்ளும் மலரும்' திரைப்படத்தைத் தொடர்ந்து அவரது பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி அவர் நடித்தத் திரைப்படம்தான் 'ஆறிலிருந்து அறுபதுவரை'. இந்த திரைப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி தன் தம்பி தங்கைகளின் நல்வாழ்வுக்காக, தனியொரு ஆளாக, குடும்பத்தையே தாங்கும் குடும்பத்தலைவனாக மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இத்திரைப்படம் 175 நாள் ஓடி, வெள்ளிவிழா கொண்டாடியது. அதுமட்டுமல்லாமல் பெண்ரசிகைகளை அதிகமாக அவர்பால் கவரச்செய்தது. இந்த திரைப்படத்தை தயாரித்த பஞ்சு அருணாசலம், இப்படத்தை தயாரிக்க நினைத்ததிலிருந்தே, இந்த காதாபாத்திரத்தை சூப்பர் ஸ்டார் அவர்கள்தான் ஏற்று நடிக்கவேண்டும் என்று முடிவுசெய்திருந்தார். ஆனால், இந்த கதாபாத்திரம் ரஜினிக்கு ஒத்துவராது என்று பலர் எதிர்த்தனர். சூப்பர் ஸ்டாருக்குக் கூட இது குறித்து சந்தேகம் இருந்துவந்தது. பஞ்சு அருணாசலம்தான் இது ரஜினிக்கு ஒத்துவரும், அவர் நடித்தால்தான் இந்த கதாபாத்திரம் நிலைக்கும் என்கிற உறுதியோடு இருந்தார். இயக்குனர் எஸ். பி. முத்துராமனும், பஞ்சு அருணாசலமும் இணைந்து, சூப்பர் ஸ்டார் ரஜினியை, 'சந்தானம்' எனும் ஒரு அற்புதமான குடும்பத்தலைவனாக மாற்றினார்கள்.
இந்த திரைப்படத்திற்கு முன்பு, திரைவிமர்சனங்களும், தனிநபர் விமர்சனங்களும் அவரைக் குறைக் கூறிவந்த அந்த சூழலில், குமுதம் பத்திரிக்கை இந்தத் திரைப்படம் குறித்துக் கூறும்போது, " சூப்பர் ஸ்டார் இத்திரைப்படத்தில் மிக நிதானமாகவும், ஆழமாகவும் ஊன்றி நடித்திருக்கிறார். பழைய சிவாஜியை பார்ப்பதுபோல் ஒரு திருப்தி ஏற்படுகிறது, இது ஒரு முத்தான டைரக்ஷன் என்று கொண்டாடியது ". இந்தப்படத்தின் மூலம் ரஜினி விஸ்வரூபம் எடுத்தார். அவரைக் குறைக்கூறியவர்கள் காணாமல் போனார்கள்.
இச்சமயத்தில், படங்களைக் குறித்த விவாதமொன்று சிவாஜியின், ஏ.வி.எம். மேக்கப் அறையில் நடந்தது. சிவாஜிதான் இந்த விவாதத்தை ஆரம்பித்தார். "ஆறிலிருந்து ஆறுபதுவரை படம் எப்படி போகிறது?" என்று அருகிலிருந்தவரிடம் கேட்டார். அதற்கு அவர் "ஏதோ இருக்குங்க, உங்கள மாதிரி வரணும்னு ட்ரை பண்ணியிருக்கார். அவ்வளவுதான்." என்று உதடு பிதுக்கினார். இந்த பதிலால் நடிகர் திலகம் அவர்கள் மகிழ்ச்சியடைவார் என்று எதிர்ப்பார்த்தார். ஆனால் நடந்ததோ வேறு, "அரைஞ்சிடுவேன், ராஸ்கல்! அற்புதமா நடிச்சிருக்கான் தம்பி! அதக்கண்டு நானே அசந்து போனேன். என் டைப்புல நடிச்சிருக்கானாமில்ல, என் டைப்புல, ஒருவருடைய பாதிப்பு இன்னொருத்தருடைய நடிப்புல வரலாம். ஆனா அதில ஒரு தனித்துவம் இல்லைனா, அத்தனை ஜனங்களும் பாராட்டமாட்டாங்க. சும்மாவா அந்தப்படம் நூறு நாள் ஓடுது " என கர்ஜித்தார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். அதுமட்டுமல்லாமல், இந்தப்படத்தில் சூப்பர் ஸ்டார் அவர்களின் நடிப்பை அங்குலம் அங்குலமாக அலசித்தள்ளிவிட்டார். இது ரஜினியை விமர்சனம் செய்தவர்களை தலைகுனிய வைத்தது. சூப்பர் ஸ்டாரின் உண்மையான நடிப்புத்திறமை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது எல்லோருக்கும் எடுத்துக்காட்டும் விதமாக அமைந்தது.
|