தலைவர் அவர்கள், அரசியல் பிரவேசத்திற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே பல முறை கூறி இருந்தாலும், அரசியலுக்கு வருவது உறுதி என்ற கூறிய நாளில் மீண்டும் ஒன்றை அழுத்தம் திருத்தமாகக் கூறி இருந்தார்.
அதாவது, முதலில் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் கவனியுங்கள், பிறகு கட்சியைப் பார்த்துக்கொள்ளலாம்.
மேலும் அதைத் தொடர்ந்து ஏப்ரல் 2018 இல் நடந்த எம்ஜியார் சிலை திறப்பு விழாவில் மாணவர்களுக்கு இடையே உரை ஆற்றிய போது கூட, உங்கள் படிப்பைக் கவனியுங்கள், வாக்களிக்கும் போது அரசியலை தெரிஞ்சிக்கோங்க, ஆனால் மூழ்கிவிடாதீர்கள் என்று தான் அறிவுரை கூறினார்.
உங்களை மறந்து, உங்கள் குடும்பத்தை மறந்து தான் அரசியல் செய்ய வேண்டும் என்றால் அந்த அரசியலே நமக்குத் தேவை இல்லை என்றும் பல முறை தெளிவு படுத்தி உள்ளார்.
ஆனால், தந்தையின் உபதேசங்களைப் போன்ற அவரது அவரது அறிவுரைகள், அவர்களது ரசிகர்களாலேயே மீறப்படுவது அதிர்ச்சி அளிக்கின்றது!
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடன், தான் சார்ந்த சினிமா துறையில் நலிவடைந்தவர்களுக்கும், அதையே நம்பி நாள் கணக்கில் சம்பளம் வாங்கும் தொழிலாளர்களுக்கும் 50 லட்சத்தை முதல் ஆளாகக் கொடுத்தார்.
மேலும், தற்போது 24,000 கிலோ உணவு பொருட்களையும் கொடுத்து அனுப்பி உள்ளார்.
இது போதாது என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் நலிவடைந்தோரை தேடி சென்று, இந்த ஊரடங்கினால் அவர்களுக்குப் பெரும் பாதிப்பே ஏற்படாத வண்ணம் உதவிகளை ரஜினி மக்கள் மன்றம் மூலம் செய்து கொண்டு தான் இருக்கிறார்.
இது அனைவரும் அறிந்த ஒன்று.... இது போலத் தலைவரின் ரசிகனாகச் சினிமாவில் நுழைந்து இன்று பெரும் உயரத்தில் இருக்கும் விஜய் அவர்களும் சுமார் 1.3 கோடியைத் தமிழகத்திலும், இன்ன பிற மாநிலங்களிலும் உள்ள தனது ரசிகர் மன்றங்களுக்கு அளித்து நிவாரணப் பணிகளைத் துவங்கி உள்ளார்.
ஆனால், சமூக வலைத்தளங்களில் விஷமிகள் பரப்பும் எதிர்மறை கருத்துக்களால் இன்றைய இளம் ரசிகர்கள் பலர் முகம் சுழிக்கும் அளவிற்குச் சண்டை போடும் நிலை வந்து விட்டது.
இது எல்லை மீறிப் போய் , ஒரு ரஜினி ரசிகர் தாக்கி, ஒரு விஜய் ரசிகர் நிலை தடுமாறி கீழே விழ, அது அவரது இறப்பில் முடிந்துள்ளது.
எதற்காக இந்தச் சண்டை என்று பார்த்தல், அதிக நிவாரணத் தொகை கொடுத்தது யார் என்று சண்டை போட்டு இருக்கிறார்கள்.
தலைவர் ரசிகராக இருந்து இப்படி ஒரு சண்டை போடலாமா ?
தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டிற்கே எதிராகவும், மேடைக்குமேடை அவச்சொற்களால் தன்னை வசைபாடும் சீமானை பற்றிப் பேசும் போது கூட, அவர் ஒரு போராளி என்று தான் தலைவர் குறிப்பிட்டார்.
யார் மூலமாக மக்கள் பயனடைந்தால் என்ன, மக்களுக்கு நல்லது என ஒன்று நடந்தால் போதும் என்று தான் தலைவர் எண்ணுகிறார்... ஆனால் நமக்குள் எதற்கு இந்த ரசிக சண்டை ?
சண்டை போட்டவர்களுக்கு 22 வயது தான் ஆகிறது !!! 22 வயதில் இப்படி வழக்குகளில் சிக்கினால் அவனின் எதிர்காலம் என்னாவது ?
ரஜினி ரசிகன் என்பது ஒரு அடையாளம். ரஜினி ரசிகர்கள் என்றால் பொது மக்களிடையே இன்று வரை ஒரு நல்லெண்ணம் உள்ளது. குடும்பத்தைக் கவனிப்பார்கள்.
ஊர் பிரச்சனைக்குத் தைரியமாக முன்னின்று வேலை செய்பவர்கள். எவரையும் ஏமாற்ற மாட்டார்கள், நன்றாக உழைப்பவர்கள் என்ற ஒரு எண்ணம் உள்ளது.
நாற்பது வருடங்களாக ரஜினி ரசிகனுக்கென்று கட்டி எழுப்பப்பட்ட அடையாளத்தை ஒரு சிறு நொடி உணர்ச்சியால் தவிடு பொடி ஆகி விடும் என்பதை ரசிகர்கள் உணர வேண்டும்.
முதலில் வார்த்தைக்கு வார்த்தை நான் ரஜினி ரசிகன் எனக் கூறிக்கொள்பவர்கள், இப்படி நீங்கள் செய்வது தலைவருக்குப் பிடிக்குமா என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
இந்த மாதிரி தலைவன் கிடைத்ததற்கு நீங்கள் பெருமை பட வேண்டும் என யாரவது கூறினால், உண்மையில் அது அவருக்குப் பெருமை தராது.
மாறாக, இந்த மாதிரி ரசிகன் கிடைப்பதற்கு ரஜினி கொடுத்து வைத்து இருக்கணும் என மக்கள் கூறினால், அதுவே அவருக்குப் பெருமை சேர்க்கும் என ரசிகர்கள் உணர வேண்டும்.
மிக முக்கியமான ஒன்று. தலைவர் எப்போதும் கூறுவதைப் போலச் சமூக வலைத்தளங்களில் அதிகமாக இருப்பது Negativity எனும் எதிர்மறை எண்ணங்களே.
அவற்றைத் தவிர்ப்பது தலைவருக்கு நல்லதோ இல்லையோ, அவர் அவர் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மிக நல்லது. தேவை இல்லாத விவாதங்களிலோ, விஷயங்களிலோ உங்கள் ஆற்றலை வீணாக்க வேண்டாம்.
நமக்குப் பல கடமைகள் இருக்கிறது. ரசிக சண்டையில் ஈடுபடுவது அந்தக் கடமை இல்லை.
Rajinifans.com சார்பாக, அந்த விஜய் ரசிகருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்.
நல்லதே நினைப்போம் !
நல்லதே பேசுவோம் !!
நல்லதே செய்வோம் !!!
நல்லதே நடக்கும் !!!!
- விக்னேஷ் செல்வராஜ்
|