விசு இயக்கத்தில் வெளிவந்த திருமதி ஒரு வெகுமதி, சூப்பர் டூப்பர் ஹிட். படத்தின் வெற்றிவிழாவில் பேசியவர்கள் கதையை குறிப்பிட்டு புகழும்போது, ‘அதுவொன்றும் பிரமாதமான விஷயமல்ல, ஏற்கனவே பல முறை நாடகமாக நான் எழுதியதுதான். பின்னாளில் சூப்பர் ஸ்டாரை வைத்து படமாகவும் எடுத்து, அதுவும் சுமாராக ஓடியிருக்கிறது. இந்தமுறை கிடைத்த பெரிய வெற்றிக்கு காரணம், படத்தில் வரும் அக்கா & அக்கா கணவர் பாத்திரப்படைப்புதான்’ என்றார். விசு, வெறும் வசனகர்த்தா மட்டுமல்ல, கதை, திரைக்கதைகளை செப்பனிடுவதிலும் கெட்டிக்காரர்.
விசு குறிப்பிட்டிருந்த படம், 1978ல் வெளியான சதுரங்கம். ரஜினியும் ஸ்ரீகாந்தும் சகோதரர்களாக நடித்திருந்த படம். படத்தின் முற்பாதியில் அப்பாவியாகவும், முதல்முறையாக நகைச்சுவை கலந்த பாத்திரத்திலும் ரஜினி நடித்திருந்தார். நாடக திரைக்கதையாசிரியராக மட்டுமே அறியப்பட்டுவந்த விசுவுக்கு கிடைத்த முதல் திருப்புமுனை என்று தில்லுமுல்லுவை குறிப்பிடலாம். தில்லுமுல்லு படத்தில் ஹீரோ ரஜினி என்றால் விசுவின் வசனத்தையும் தேங்காய் சீனிவாசன் நடிப்பையும் இரண்டாவது ஹீரோவாக சொல்லவேண்டும். இந்தி மூலத்தின் படக்காட்சிகளை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு அதற்கேற்றபடி தமிழில் நகைச்சுவை வசனம் எழுதி, சேர்த்தபடம். தில்லுமுல்லுதான் தன்னுடைய திரையுலக பயணத்தின் உச்சத்தை தொடங்கி வைத்தது என்பதை விசு வெளிப்படையாக சொல்லி வந்திருக்கிறார்.
தில்லுமுல்லு தந்த நம்பிக்கையால் நெற்றிக்கண் படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு விசுவுக்கு கிடைத்தது. கவிதாலாய நிறுவனத்தின் முதல் படம் அது. சக்கரவர்த்தியாக ரஜினி நடித்து பேசிய வசனங்கள், இருபதாண்டுகளை கடந்தும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை. 'பீடி, குடி, லேடி அதாண்டா உன் டாடி', 'நான் ஒன்னும் அந்த ஈஸ்வரன் இல்லடா, கோடீஸ்வரன்', நீ யுவராஜான்னா நான் சக்கரவர்த்தி டா'.நெற்றிக்கண், கவிதாலாய நிறுவனத்திற்கு மட்டுமல்ல விசுவுக்கு இன்னொரு திருப்புமுனை அமைந்தது.
தில்லுமுல்லு, நெற்றிக்கண் வெற்றிகளுக்குப் பின்னர் விசுவுக்கு படம் இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது. விசுவின் இயக்கத்தில் வந்த குடும்பம் ஒரு கதம்பம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். 100 நாட்கள் ஓடியது. முரட்டுக்காளை என்னும் மிகப்பெரிய வெற்றிப்படத்திற்கு பின்னர் குறைந்த பட்ஜெட்டில் ஏவிஎம் தயாரிப்பில் வெளியான படம் அது. படத்தில் விசுவின் இளைய மகனாக வரும் ஒரு பாத்திரத்தை ரஜினி ரசிகராக காட்டியிருப்பார். பொறுப்பில்லாமல், ஊர் சுற்றும் ரசிகனாக அந்தப் பாத்திரத்தை வடிவமைத்தது பற்றி பின்னாளில் விசு பேசும்போது, ‘ரஜினி என்பதால் அதை அனுமதித்தார். வேறொரு நடிகராக இருந்திருந்தால் படமே வெளிவந்திருக்காது’ என்றார்.
இயக்குநர் விசுக்கு நல்லதொரு அடையாளத்தை தந்தது மணல் கயிறு. கே. பாக்கியராஜ், டி. ராஜேந்தின் போல் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்தையும் கவனித்துக்கொள்ளும் இன்னொரு அஷ்டவதானியாக விசு உருவெடுத்திருந்த நேரம். ஆனாலும், ரஜினியின் படங்களில் வசனகர்த்தாவாக தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக செய்தார். கவிதாலாயாவின் புதுக்கவிதை, ஏவிஎம்மின் நல்லவனுக்கு நல்லவன் & மிஸ்டர் பாரத் படங்களையெல்லாம் ரஜினிக்காகவே ஒப்புக்கொண்டதாக பின்னாளில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
தேசிய விருது பெற்ற சம்சாரம் அது மின்சாரத்திற்கு பின்னர் அதே பாணியில் ஏறக்குறைய 15 படங்களை இயக்கியிருக்கிறார். அத்தனையும் ஓஹோவென்று ஓடவிட்டாலும் ஓரளவு லாபகரமானதாகவே அமைந்திருக்கின்றன. இன்று ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்த பட்ஜெட் படங்கள் வெளியாவதற்கு சம்சாரம் அது மின்சாரம் படம்தான் ஆரம்பமாக இருந்தது. 50க்கும் மேற்பட்ட படங்களில் விசு, துணை பாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக மன்னன்,உழைப்பாளி, அருணாச்சலம் உள்ளிட்ட படங்களில் அவரது பாத்திரங்கள் பெரிதும் பேசப்பட்டவை.
90களில் விசுவின் அரட்டை அரங்கம், உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் அனைத்திலும் பிரபலமான ஒரே நிகழ்ச்சி. சன் டிவியில் பத்தாண்டுகள் தொடர்ந்து நடத்தி விட்டு, அதே நிகழ்ச்சியை ஜெயா டிவியில் நடத்தியபோதும் வரவேற்பில் குறைவு இருந்ததில்லை. 94/95 காலகட்டங்களில் “நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா” என்பது குறித்து மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் ஒரே மேடையில் அமரவைத்து, அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் பதிவு செய்தவர் விசு. இன்றைய டிவி விவாதங்களுக்கு முன்னோடியாக அரட்டை அரங்கம் இருந்தது என்று சொன்னால் மிகையில்லை.
ஒருமுறை சூப்பர் ஸ்டார், அரசியலுக்கு வரவேண்டும், வரத்தேவையில்லை என்று விவாதம் அரட்டை அரங்கத்தில் முற்றிய நிலையில், மைக்கை பிடித்த விசு, ‘சூப்பர் ஸ்டார் ரஜினியை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். என்னுடைய நெருங்கிய நண்பர். கஷ்டப்பட்டு, சினிமாவில் முன்னுக்கு வந்தவர். அவருக்குக் கிடைத்த சூப்பர் ஸ்டார் பட்டம், திடீரென்று கிடைத்ததில்லை. அதற்குப் பின்னால் இரவு, பகல் பாராத கடின உழைப்பு இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். என்னைப் போல் எதையும் வெளிப்படையாக பேசுபவர், ரஜினி. அவருடைய குணத்திற்கு அரசியல் சரியாக வராது. அவரால் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியாது. அதே நேரத்தில் நெடுஞ்சாலையில் ஒரு விபத்து நடப்பதாக வைத்துக்கொள்வோம். அடிபட்டு கிடப்பவர்கள், யாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா என்று எதிர்பார்க்கும் நேரத்தில், எங்கிருந்தோ பைக்கில் வரும் சூப்பர் ஸ்டார், கண்டு கொள்ளாமல் கடந்து போனால் சரியாக இருக்காது. அங்கிருப்பவர்களை காப்பாற்றி, மருத்துவனைக்கு அனுப்பினால்தான் அவர் சூப்பர் ஸ்டார், இல்லாவிட்டால் வெறும் ஸ்டார்தான்’ என்றார். பாபா படத்தின் கிளைமாக்ஸ் காட்சி, நினைவுக்கு வருகிறதா? விசுவுக்கு அஞ்சலி, அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
- ஜெ. ராம்கி
|