சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 12) நிருபர்களை சந்தித்த ரஜினி, அரசியலுக்கு வருவது குறித்து 3 திட்டங்களை அறிவித்தார். அதன்படி கட்சிகளில் தேர்தலுக்கு பின்னர் தேவையில்லாத பதவிகள் நீக்கம், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும் மற்றும் கட்சிக்கு ஒரு தலைமை மற்றும் ஆட்சிக்கு ஒரு தலைமை ஆகிய திட்டங்களை அறிவித்தார்.
2017 ம் ஆண்டு டிச.,31 அன்று அரசியலுக்கு வருவது உறுதி என தனது ரசிகர்கள் மத்தியில் நடிகர் ரஜினி அறிவித்தார். இதன் பின்னர், தனது கட்சி துவங்குவது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இன்றும் ஆலோசனை நடந்தது. இதனை தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் பத்திரிகையாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கிளம்பிய ரஜினியை, அவரது கார் மீது மலர் தூவி ரசிகர்கள் வழியனுப்பி வைத்தனர்.
சந்திப்பு ஏன்
பத்திரிகையாளர் கூட்டத்தில் ரஜினி கூறியதாவது:
எனது அழைப்பை ஏற்று இங்கு வந்துள்ள ஊடக நண்பர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த சந்திப்பு எதற்கு என உங்களுக்கு தெரியும். சில நாட்களுக்கு முன்னர் மாவட்ட செயலாளர் சந்தித்து பின்னர் உங்களிடம் பேசும்போது, அனைத்து விஷயத்திலும் திருப்தி, தனிப்பட்ட முறையில் ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை என கூறினேன். இது குறித்து உள்ளே என்ன நடந்தது என வெளியே பல விஷயங்கள் கூறப்பட்டன. இது மா.செ.,க்கள் மூலம் வரவில்லை. அவர்களை நான் பாராட்டுகிறேன். இதற்கு எல்லாம் நான் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த சந்திப்பு. அதே நேரத்தில் வருங்கால அரசியல் எப்படி இருக்கும் என்பது குறித்தும், அரசியலுக்கு நான் வர வேண்டும் என ஆசைப்படும் மக்கள், ரசிகர்களுக்கு முன்னோட்டம். முன்னரே சொல்லியிருந்தால் ஒரு தெளிவு வரும். அந்த அதிர்வு என்ன என்பது பற்றி எனக்கும் தெளிவு வரும் என்பதால், இந்த சந்திப்பு
கூறியது கிடையாது
1996 முதல் அரசியலில் எனது பெயர் தொடர்பு உள்ளது. நான் அரசியலுக்கு வருவேன் என சொன்னது 2017 டிச.,31 தான். அதற்கு முன்னர் அரசியலுக்கு வருவேன் என கூறியது கிடையாது. நான் அரசியலுக்கு வருவது, ஆண்டவன் கைகளில் தான் உள்ளது என கூறினேன்.நான் அரசியலுக்கு வருவதாக எனது தலையில் எழுதியிருந்தால், எந்த மாதிரி திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக தீவிர அரசியலை கவனிக்க ஆரம்பித்தேன்.
அரசியல் மாற்றம்
அரசியலை கவனித்த போது, 2016 ல் ஜெயலலிதா காலமானார். 2017 அரசியல் ஸ்திரத்தன்மை போய் ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற சூழ்நிலை ஏற்பட்ட போது அரசியலுக்கு வருவேன் என சொன்னேன். அப்போது, '' இங்கு சிஸ்டம்(அமைப்பு) கெட்டு போனது. அதனை சரி செய்ய வேண்டும்'' என்று சொன்னேன். மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும். ஒரு நல்லலாட்சியை கொடுக்க வேண்டும் என்றால், வெறும் ஆட்சி மாற்றம் மட்டும் போதாது. இங்கு அரசியல் நடத்தப்படும் முறையிலும் மாற்றம் வர வேண்டும். அப்போது தான் ஒர நேர்மையான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி,மதச்சார்பற்ற ஆட்சியை தர முடியும். அரசியல் மாற்றம் இல்லாத ஆட்சி மாற்றம் என்பது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் அதிலேயே சர்க்கரை பொங்கல் செய்வது போன்றது. ஆக இந்த அரசியல் மாற்றத்திற்காக நான் மூன்று முக்கிய திட்டங்களை வைத்திருக்கிறேன்.
அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்கள வைத்துள்ளேன்.
முதலாவதாக,
இரண்டு பெருங்கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.,வை பார்த்தால், 50 ஆயிரத்திற்கும் மேல் கட்சி பதவிகள் உள்ளன. அதனை தேர்தல் நேரத்தில் தேவை. ஓட்டு வரும். தேர்தல் நேரத்தில் உழைப்பார்கள். தேர்தல் முடிந்த பிறகு அது தேவையில்லை. அந்த பதவிகள் தேவையில்லை. அந்த பதவியில் இருப்பவர்கள், வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், நாங்கள் ஆளுங்கட்சி ஆட்கள் என சொல்லி வெளிப்படையாக மிரட்டுவார்கள். ஒப்பந்தம் முதல் அனைத்திலும் ஊழல் நடக்கும் தவறு நடக்கும் மக்களிடம் பணம் போகாது. ஆட்சிக்கும் கெட்டது, மக்களுக்கு ரெம்ப கெட்டது. கட்சிக்கு கெட்டது. பலர் இதனை தொழிலாக வைத்துள்ளனர். தேர்தல் நேரத்தில் என்ன பதவியோ அதனை வைத்து கொள்ள வேண்டும். முடிந்த பின்னர், அத்யாவசிய பதவிகள் மட்டும் வைக்க வேண்டும்.
இரண்டாவதாக
இந்தியாவில் சட்டசபைகளிலும், பார்லிமென்டிகளிலும் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் பெரும்பான்மை உறுப்பினர்கள் உள்ளனர். அந்த வயதுக்கு கீழ் உள்ளவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒரு இளைஞன் அரசியலில் பிரகாசிக்க வேண்டும் என்றால், அவர் ஒரு எம்.பி., மகனாகவோ, எம்.எல்.ஏ., மகனாகவோ, பணக்காரனாகவோ, செல்வாக்குள்ளவராகவோ இருக்க வேண்டும் என்கிற நிலை மாற வேண்டும். நல்லவர்கள், படித்தவர்கள், இளைஞர்கள் அரசியல் ஒரு சாக்கடை என்று ஒதுங்கி விடாமல், அரசியலில் ஈடுபட முன்வர வேண்டும். குறிப்பாக இளைஞர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கட்சியில் 50 வயதுக்கு கீழே உள்ளவர்கள், ஒரளவு படித்தவர்கள், நேர்மையான தொழில் செய்பவர்கள், அவர்கள் வாழும் பகுதியில், கண்ணியமானவர் எனப்பெயரெடுத்தவர்களை தேர்வு செய்து 60 முதல் 65 சதவீதம் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து, மீதியுள்ள 35 50 சதவீதத்தில், வேறு கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காத நல்லவர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., இவர்கள் விருப்பப்பட்டு நமது இயக்கத்தில் சேர விரும்பினால், அவர்களுக்கு வாய்ப்பளித்து, இவர்கள் அனைவரையும் சட்டசபைக்கு அனுப்பி அதிகார சூத்திரத்தை கையில் எடுத்து கொள்ளும்படி செய்யே வண்டும். அதற்கு, நான் பாலமாக இருக்க வேண்டும். இந்த நோக்கத்தை அடைவதற்கு , கடந்த 45 ஆண்டுகளாக நான் திரையுலகில் ஈட்டிய புகழ், தமிழ் மக்கள் என் மீது செலுத்தி வரும் பேரன்பு, அவர்களுக்கு என் மேல் இருக்கும் நம்பிக்கை அனைத்தும் உதவுமென நம்புகிறேன். இது எனது இரண்டாவது திட்டம்.
மூன்றாவதாக,
தேசிய கட்சிகள் தவிர, எல்லா மாநில கட்சிகளிலும், ஆட்சிக்கும் அவர் தான் தலைவர். கட்சிக்கும் அவர் தான் தலைவர்.
கட்சி தலைமையையும், ஆட்சி தலைமையையும் தனித்தனியாக பிரிப்பது எனது மூன்றாவது திட்டம். அதாவது, கட்சியை நடத்தும் தலைவர் வேறு. ஆட்சியை நடத்தும் தலைவர் வேறு. இந்த இரண்டையும் ஒன்றாகவே இணைத்து பா்ரத்து பழகிவிட்ட தமிழக அரசியலில் ஒரு மாற்று அரசியலை கொண்டு வர வேண்டியது அவசியம் என்று நான் கருதுகிறேன். கட்சிக்கும், ஆட்சிக்கும் ஒரே நபரின் தலைமை எனும் பட்சத்தில், தேர்தலில் ஜெயித்து ஆட்சி அதிகாரத்திற்கு வருபவரின் ஐந்து வருட ஆட்சியில் என்ன தப்பு நடந்தாலும், மக்களோ கட்சி பிரமுகர்களோ ஆட்சியாளர்களை தட்டி கேட்க முடியாது. அவரை பதவியில் இருந்து கீழே இறக்கவும் முடியாது. இதையும் மீறி கட்சியில் இருப்பவர்கள் தட்டிக் கேட்டால், அவர்களை பதவியில் இருந்து, இறக்கி விடுவார்கள். அல்லது தூரமாக தள்ளி வைத்து விடுவார்கள். இந்நிலைமாற கட்சி தலைமை மிகவும் வலிமையாக இருந்தால் தான் ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்யும் போது, தட்டிக் கேட்க முடியும். தப்பு செய்தவர்களை தூக்கி எறியவும் முடியும். மேலும் மக்களுக்கு கட்சி கொடுத்த வாக்குறுிகளை ஆட்சியாளர்கள் சரிவர செயல்படுத்தும்படி பார்த்து கொள்ளும், கட்சி சார்ந்த விழாக்கள், கல்யாணம், காதணி போன்ற விழாக்களிலும் ஆட்சியாளர்கள் கலந்து கொள்ள வேண்டியதில்லை. ஆட்சி நிர்வாகத்தில் அவர்களின் முழுக்கவனமும் இருப்பதற்கு இது உதவும். ஆட்சி நடைபெற மக்கள் வளர்ச்சிப்பணியில் அனுபவம் வாய்ந்த பல்வேறு துறைகளை சேர்ந்த வல்லுனர்களை தேர்ந்தெடுத்து ஒரு ஆலோசனை குழுவை உருவாக்கி அவர்கள் பரிந்துரைக்கும் ஆலோசனைகளை அரசின் மூலம் செயல்படுத்தப்படுவதை கட்சி தலைமை உறுதி செய்யும். இதுவே எனது மூன்றாவது திட்டம்.
ரஜினி ஆட்சிக்கு தலைவரா? கட்சிக்கு தலைவரா என்ற கேள்வி எழும். நான் கட்சிக்கு மட்டுமே தலைவர்.முதல்வர் ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கு என்றைக்குமே இருந்தது இல்லை. முதல்வராக என்னை நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் இதுபற்றி 1996 லேயே தெரியும். ஆக நான் வலிமையான கட்சி தலைமை பொறுப்பை வகிப்பேன். எனது கட்சியில் இருந்துதேர்ந்தெடுக்கப்படும் நேர்மையும், திறமையும் ஒருங்கே அமையப்பெற்ற தன்னம்பிக்கையுள்ள படித்த சுயமரியாதையுள்ள ஒரு இளைஞரை( அவர் பெண்ணாக கூட இருக்கலாம்) முதல்வர் பதவியில் அமர்த்துவேன். அவர் தலையாட்டும் பொம்மையாக இருக்க மாட்டார். ஆட்சி நிர்வாகத்தில் கட்சி தலையிடாது. அதேசமயம் தப்பு செய்தால் சுட்டிக்காட்டுஏவாம். கட்சிக்காரர்கள் ஆட்சியாளர்களை தொந்தரவோ, அதிகாரமோ செய்யாமல் பாரத்து கொள்வோம். இது தான் அரசியல் மாற்றத்திற்கான எனது முக்கியமான திட்டங்கள். இது தான் நான் விரும்பும் அரசியல். உண்மையான ஜனநாயகம். என்னுடைய கனவு. இதற்காக தான் நான் அரசியலுக்கு வருகிறேனே தவிர, பெயருக்காகவோ, புகழுக்காகவோ, பணத்துக்காகவோ, பதவிக்காகவோ கிடையாது. ஊழலற்ற வளமான தமிழகத்தை உருவாக்க விருமபும் தமிழக மக்கள், எனது நோக்கத்தை சரியாக புரிந்து கொண்டு, இத்தகைய அரசியல் மாற்றத்திற்கும், ஆட்சி மாற்றத்திற்கும் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
|