ஒரு வருடத்துக்குப் பிறகு சென்னை கோடம்பாக்கத்தில் தன் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், கட்சி பற்றிய அறிவிப்பு இதுவரை வெளியிடவில்லை. இருந்தும் இந்த இரண்டு வருடத்தில் ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றியது, உறுப்பினர்கள் சேர்க்கை, ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், மாவட்ட நிர்வாகிகள் நியமனம் அவர்களிடம் ஆலோசனை போன்ற தொடர் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். இது மட்டுமல்லாமல் அவ்வப்போது தமிழகம் மற்றும் இந்தியாவில் நடக்கும் பல்வேறு பிரச்னைகள் அரசியல் நிகழ்வுகள் தொடர்பாகப் பேசி வருகிறார்.
இந்நிலையில் இன்று கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தன் மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை ஒரு வருடத்துக்குப் பிறகு நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் ரஜினிகாந்த். இந்தக் கூட்டத்தில் சுமார் 37 மாவட்டங்களைச் சேர்ந்த செயலாளர்கள் கலந்துகொண்டனர். ஒன்றரை மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு போயஸ் கார்டனில் உள்ள தன் வீட்டு வாயிலில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், ``ஓராண்டுக்குப் பிறகு மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்தேன். அவர்கள் நிறைய கேள்வி கேட்டனர். அவை அனைத்துக்கும் நான் பதில் கொடுத்தேன். நாங்கள் நிறைய விஷயங்களைப் பரிமாறிக்கொண்டோம். அவர்களுக்கு எல்லாம் ரொம்ப திருப்தி. ஆனால், எனக்கு ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை, அதில் ஏமாற்றம்தான் உள்ளது. அதை நான் இப்போது சொல்ல விரும்பவில்லை நேரம் வரும்போது சொல்கிறேன்.
கடந்த வாரங்களில் நடந்த முஸ்லிம் கட்சிகளுடனான சந்திப்பு இனிமையாக இருந்தது. சகோதரத்துவம், அன்பு, அமைதி போன்றவை நாட்டில் நிலவவேண்டும் என்பதையே அவர்கள் முக்கியமாக அறிவுறுத்தினார்கள். அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நீங்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கூறினார்கள். நான் நிச்சயம் உறுதுணையாக இருப்பேன். சி.ஏ.ஏ., என்.ஆர்.சி போன்றவை தொடர்பாகக் குருமார்களுடன் ஆலோசனை நடத்தி, அரசியல்வாதிகள் இல்லை... மத குருமார்களுடன் ஆலோசனை செய்து அமித் ஷா, மோடியிடம் இதைப் பற்றி நீங்கள் பேசினால் சிறப்பாக இருக்கும் எனக் கூறினார்கள். அதற்கான முயற்சியை நான் மேற்கொள்வேன் எனத் தெரிவித்துள்ளேன்.
தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை நான் நிரப்புவதா அல்லது கமல் நிரப்புவாரா என்பதை நேரம்தான் முடிவு செய்யும். எங்கள் செயலாளர்கள் கூட்டத்தில் பேசியதை வெளியில் சொல்ல முடியாது. எனக்குத் தனிப்பட்ட முறையில் ஏமாற்றம் உள்ளது. அதைப் பிறகு அறிவிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கூட்டத்தில் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களிடம் “மாற்றுக்கட்சியிலிருந்து நிறைய பேர் இங்கு வருவார்கள் அவர்களிடம் ஒத்துழைப்பு கொடுத்துச் செல்ல வேண்டும்’' என ரஜினி முக்கியமாக அறிவுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
|