ராஜீவ் காந்தி இறந்த சமயம்.
தமிழகத்தில் இரண்டு ஆளுமைகள் மறைந்த போது ஏற்பட்ட வெற்றிடத்தை விட அதிகமான வலி. ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் ஒரு வெற்றிடம். அப்போது நரசிம்ம ராவ் பிரதமர் பதவி ஏற்றார்.
வலுவான ஆளுமை இல்லாத இந்தியாவை ஆட்டிப்படைத்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்த அனைவரது முகத்திலும் கரியை பூசினார். கூட்டணி ஆட்சி என்ற போதும் எதிலும் Compromise செய்யாதவராக இருந்தார்.
அந்நிய முதலீடு இந்தியாவில் அனுமதித்தால் மீண்டும் அந்நியர்களுக்கு அடிமை ஆகிவிடுவோம் என்ற எதிர்கட்சி / கூட்டணி கட்சிகள் எதிர்ப்பையும் மீறித் தைரியமாக அமல்படுத்தி நமது இன்றைய வாழ்க்கைக்கு வித்திட்டவர்.
உத்திரப் பிரதேசமும் தமிழகமும் ஒரு காலத்தில் காங்கிரசின் கோட்டையாக இருந்த மாநிலங்கள், ஆனால் இவ்விரண்டு மாநிலங்களும் காங்கிரஸின் கை விட்டு நழுவி விட்டது.
எப்படியாவது தமிழகத்தில் மீண்டும் கால் பதித்து விட வேண்டும் என்ற முடிவோடு காங்கிரஸ் வேலை செய்து கொண்டு இருந்தது. இங்கு ஒரு தலைமைக்கான முகம் அவர்களுக்குத் தேவைப்பட்டது.
அப்போது தான் இங்கே ஒரு நடிகர் தமிழகத்தில் 'பாட்ஷா' என்ற ஒரு இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து இருந்தார். ரசிகர்கள் அவரது பக்தர்களாக மாறி இருந்தனர்.
அதே சமயம் அவருக்கும் அப்போதைய தமிழக முதல்வருக்கும் பனிப்போர் போன்ற ஒரு சூழல் இருந்தது.
'தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது' என்று கூறுகிறார். அப்போது அவர் அரசியலுக்கு வரப் போகிறாரோ என்ற எண்ணம் அனைவருக்கும் வந்தது.
தன்னுடைய அரசியல் லாபத்திற்காகத் தன்னைத் திமுகவுடன் இணைத்துக்கொண்டு திமுகவிற்கு உதவுவாரென அனைவரும் எண்ணிய போது தன்னை ஒரு தேசியவாதியாக முன்னிருத்துகிறார்.
தேசியம் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி, நாடு, இந்தியா, இந்தியர் என்ற வார்தைகளைச் சேர்த்து ரஜினிக்குக் காங்கிரஸ் சாயம் பூசி , காங்கிரஸ்சின் தமிழக முகமாக ரஜினியை முன்னிறுத்தி மீண்டும் இங்கே நுழையலாமெனக் கணக்கு போட்டது காங்கிரஸ்.
அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ்...... கடுமையான நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்ற நரசிம்ம ராவ்.... ரஜினியை அழைத்துப் பேசுகிறார்.
காங்கிரசில் இணையுமாறும், அவ்வாறு இணைந்தால் ரஜினி தான் தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர் என்றும் நேரடி வாய்புகள் அவர் முன் வைக்கப்பட்டன ஆனால், அவர் மசியவில்லை.
இப்போது ஏதோ வருமான வரித்துறை ரைடு வந்தால் படத்தின் வசூல் அதிகம், அதனால் ரைடு வருகிறார்கள் என வாட்ஸ் ஆப் போராளிகள் பொங்குகிறார்கள் ஆனால், அப்போது பாட்ஷா அடைந்து இருந்த வெற்றிக்கு ஆயிரம் ரைடுகள் விட்டு இருக்கலாம்.
ஆனால் அவர்களால் தொட முடியவில்லை. காரணம் அவரது நேர்மை. வருமான வரிச் சோதனை என அவர் மீது கை வைத்தால் அவர்களுக்கு ஒரு ஆதாரமும் கிடைக்கபோவதில்லை. காரணம் அவர் எவ்வளவு நேர்மையானவர் என்பது அரசாங்கம் அறிந்த ஒன்று.
மாறாகக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் ரைடு விட்டு இருந்தால் தமிழகமே கொந்தளித்தும் இருக்கும். காரணம் அவருக்கு மக்களிடையே இருந்த செல்வாக்கு.
பிரதமரிடம் இருந்தே நேரடி அழுத்தம். எப்படியாவது மீண்டும் தமிழகத்தில் வென்று விட வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியும் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறது. ஆனால் அதற்கு அவர் மசியவில்லை.
இப்போது அழுத்தம் வேறு விதமாக வருகிறது. தமிழக மக்களின் நலனுக்காக எந்த ஜெயலலிதாவை எதிர்க்கின்றீர்களோ, அதே ஜெயலலிதாவோடு கூட்டணி சேரப்போகிறோம் என்ற மிரட்டல். கூட்டணி சேரக் கூடாது என்றால் நீங்கள் காங்கிரஸ்சில் இணைய வேண்டும் என்ற அழுத்தம் !!!
ஆனால் அவர் அங்கே தன்னை ஒரு ராஜதந்திரியாக நிரூபிக்கிறார். எந்தக் காங்கிரஸ் கட்சி தன்னைப் பகடைக்காயாக உபயோகிக்க நினைத்தோ, அதே காங்கிரஸ் கட்சியைத் தமிழகத்தில் இரண்டாக உடைக்கிறார்.
நீங்கள் அதிமுகவுடன் செல்லுங்கள், உடைந்த உங்கள் கட்சியை நான் திமுகவிற்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறி அதைச் செய்தும் காட்டி, திமுகவை ஆட்சிக்கட்டிலிலும் அமரசெய்தார்.
ரஜினி கூறி தான் இங்கே காங்கிரஸ் உடைந்ததா என்ற சந்தேகம் இருந்தால்...... ஏன் கட்சியின் தலைவர் பதவி ரஜினிக்கு தான் சொந்தம், அவர் அதில் எப்போது வேண்டுமானாலும் அமரலாமென மூப்பனார் அவர்கள் தந்த பேட்டியைப் பார்க்கவும்.
அப்போது காங்கிரஸ் தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கத் துடித்ததா என்று கேள்வி எழுப்புபவர்கள், ரஜினியை சேர்த்து இருந்தால் காமராஜர் ஆட்சியை மீண்டும் அமைத்து இருப்போம் எனக் குமரி ஆனந்தன் அவர்கள் கூறியதையும் தேடி படிக்கவும்.
அப்போது ரஜினி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தார். தன்னை வாழ வாய்த்த தெய்வங்களான தமிழக மக்களுக்கு நல்லது செய்யும் விதமாக ஜெயலிதாவின் அப்போதைய ஆட்சியை எதிர்த்து அவரை வீழ்த்தியும் காட்டினார்.
தன்னைக் காங்கிரஸ்காரன் என்ற வட்டத்துக்குள் அடைக்க நினைத்த தேசிய கட்சி, அதுவும் நாட்டையே ஆட்சி செய்து கொண்டு இருந்த கட்சியை மாநிலத்தில் இரண்டு துண்டாக உடைத்து, தன்னை அடக்க நினைத்தால் இது தான் உங்கள் நிலையென அவர்களையும் உணர செய்தார்.
இப்போதும் ரஜினி முன்னால் இதே நிலை தான் இருக்கிறது. இப்போது காங்கிரசின் இடத்தில பாஜக இருக்கிறது.
அப்போது ஊடகங்களும் காங்கிரஸ் ரஜினியை மிரட்டுகிறது, அவர் அரசியலுக்கு வருவதற்கான வேலையைக் காங்கிரஸ் திரை மறைவில் இருந்து செய்கிறது என்றே எழுதின.
காங்கிரஸ் புற வாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கிறதா? எனக் கேள்விகுறியோடு கட்டுரைகள் வந்தன. இப்போதும் காங்கிரஸ் என்ற பெயரை மாற்றிவிட்டு பாஜவின் பெயரை மட்டுமே நிரப்பி அதே கதையை எழுதுகின்றன.
ஆனால் ரஜினி..... இன்றும் அதே ரஜினி தான். அப்போது இருந்த வேகம் இப்போது இல்லை ஆனால் அதைவிடப் பல மடங்கு விவேகம் இருக்கிறது.
அப்போது தமிழக மக்களுக்கு நல்லது நடப்பதில் தன்னுடைய பங்கு இருந்தால் மட்டும் போதும் என்ற மனநிலையில் இருந்தார்.ஆனால், இப்போது ஆளுமை இல்லாத தமிழகத்திற்குத் தன் மூலம் நல்லது நடக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு இறங்குகிறார்.
அப்போது எப்படித் தன் முன் இருந்த பொய், பித்தலாட்டம், புரட்டு போலி செய்திகள் என அனைத்தையும் உடைத்து தவிடு பொடியாக்கி, தான் கொண்ட எண்ணத்தை செயல்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தி வெற்றியும் பெற்றாரோ, அதே போல மீண்டும் அதே சரித்திரத்தை நிகழ்த்திக்காட்டுவார்.
எப்படி இவ்வளவு எதிர்ப்பையும் மீறி ரஜினி சரித்திரம் படைப்பார்??? ரஜினியால் முடியுமா??!!
நிச்சயம் முடியும்.... ஏனென்றால்...... அவர் ரஜினி !!!
-விக்னேஷ் செல்வராஜ்.
|