எப்போ தான் டா விடியும் !!!
இதைப் படிக்கிற எல்லாருக்கும் இருக்குற அதே பிரச்சனை தான் !!!!!!
ரெண்டு மூணு நாளா சரியான தூக்கம் இல்ல !! மனசு ஒரு இடத்துல நிலையா இல்ல !!! "மைண்ட்" ல ஒரே நேரத்துல பல எண்ணங்கள் வந்து போகுது. மனசு ரொம்ப அலைபாயுது.....
பொதுவா இந்த மாதிரி ஆகுற போது, நமக்குப் பிடிச்ச பாட்டு கேட்டா, அதுலயே நாம மெய் மறந்து கொஞ்சம் மனசு ரிலாக்ஸ் ஆகும். நான் எப்பவுமே தலைவர் பாட்டுக் கேப்பேன் !!!
ஆனா, கடந்த ரெண்டு மூணு நாளா பாட்டு கேக்கும் போது எப்பவுமே லேசாகுற மனசு இன்னும் வெறி ஆகிடுது !!! ஒரு எடத்துல ஒக்கார முடியாம மண்டைய பிச்சிக்கலாம் போல ஆயிடுது !!! எப்போடா இந்தக் கொடுமையான காலகட்டம் முடிஞ்சி தொலையும் ன்னு கடுப்பா இருக்கு.
எல்லாத்துக்கும் காரணம் ஒரு ஆளு தான். என்ன மாதிரி லட்சக்கணக்கான இளைஞர்களின் இரண்டு நாள் தூக்கத்தைக் கெடுத்துட்டு இருக்காரு !!!
ஹ்ம்ம்ம், அவரே தான். இந்தத் தர்பார் திரைபடம் தான்.
இன்னும் சில மணி நேரங்கள் தான் இருக்கிறது.... விடிஞ்சா போதும்ன்னு இருக்குது.... நாளைக்கு என்ன எல்லாம் அலப்பறை செய்யப் போறேனோ.
ஷர்டை Tuck in பண்ணிட்டு, full கை shirt போட்டுட்டு, பக்காவான professional ஆகவே என்னைப் பார்த்துப் பழகிய என்னோட அலுவலக நண்பர்கள், கருப்பு சட்டைல ரஜினியோட படம் போட்டு, ரஜினி ரசிகன்டா ன்னு வாசகம் வெச்ச சட்டைல பார்த்தா வாயப் பொளக்க போறாங்க.
பார்ட்டில கூட அலுங்காம குலுங்காம டான்ஸ் ஆடுற ஆளு, எவனையோ முகம் தெரியாத ஒருத்தன கட்டி பிடிச்சு சும்மா குத்து குத்துன்னு குத்தாட்டம் போடுறத பார்த்தா என்ன நினைப்பார்களோ !!!
ஆனா அதைப் பத்தி எல்லாம் நமக்கு என்ன கவலை !!!
ஒரு 3 மணி நேரம்.........., கொண்டாட்டங்களையும் சேர்த்து ஒரு 5 மணி நேரம்........, வாழ்க்கையில இருக்குற டென்ஷன், கவலை, கோவம், பொறாமை, கடன் தொல்லை, மேனேஜரின் திட்டு, அலுவலகத்தில் கழுத்தை நெறிக்கும் deadline, அடுத்த மாத பட்ஜெட் என எதையும் யோசிக்காமல் வெறும் சிரிப்பு, விசில், கூச்சல், டான்ஸ் என என்ஜாய் பண்ணுவதில் என்ன தவறு !!!!
எப்பவும், இந்த மாறிச் சந்தோஷம் இருக்கணும்னு தான் நாயா பேய்யா கஷ்டப்பட்டு உழைக்கிறோம். என் தலைவனைப் பார்த்த அந்த நொடி அது எனக்குக் கிடைக்கும் போது நான் ஏன் மறுக்கணும் !!!
நாளைச் சூரியன் வருவதற்குள் அந்த மந்திர வார்த்தைகளைப் பார்த்து விட வேண்டும் என ஏக்கம்.
இரவெல்லாம் தூங்காமல், வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும் உணர்வோடு இரவைக் கழித்து, சீக்கிரம் எழுந்து கோவிலுக்குப் போவது போலக் குளித்து, தியேட்டருக்கு வெகுதொலைவில் வண்டியைவிட இடம் கிடைக்குமா எனத் தேடி அலைந்து, தியேட்டருக்குள் நுழையும் போது.....
அங்கே ஒரு பெரும் கூட்டம் நிற்கும். அங்கு ஒரு 10 பேருக்கு மேல் யாருக்கும் உங்களைத் தெரியாது.... ஆனால் எல்லாரும் உங்களைப் புன்முறுவலோடு அணுகுவார்கள். அனைவருக்கும் ஒரே நோக்கம் தான். அனைவரிடம் இருந்தும் ஒரே விதமான Vibration ..... அனைவரிடம் இருந்தும் தலைவா! தலைவா!! எனும் கோஷம்.
அனைத்தையும் ஆண்டு அனுபவித்து விட்டுத் தியேட்டரில் சென்று உட்கார்ந்தால், ஆட்டோகாரன் பாடல் போடுவார்கள். ஒரு அரை மணி நேரத்துக்குத் தலைவர் பாட்டு மட்டும் தான் !!!
உணர்ச்சி பிழம்பான நிலையில் இருக்கும் போது திரை விலகும். தியேட்டர் விளம்பரங்கள் முடிந்த உடன் screen off ஆகும். ஒரே கூச்சலாக இருக்கும் சமயத்தில் அந்தச் சத்தம் கேட்கும்... ஹே ஹே ஹே என.... அந்த நீல நிற புள்ளி புள்ளி எழுத்துகளில் S-U-P-E-R S-T-A-R என வர ஆரம்பிக்கும் அந்த நொடி.........
போதும்.... அனைத்தும் போதும்.... அங்கேயே டிக்கெட் எடுத்த பைசா வசூல் !!!
சும்மா இருந்த எங்களைச் சொறிஞ்சி விடுற மாதிரி, காலையில் எழுந்தவுடனே கண்ணுல திமிரு பாட்டு ப்ரோமோஷன்......!!!!
உண்மையிலேயே எப்போடா விடியும் என இருக்கிறது..... இதை எழுதும் போது கூட ஒரு கோர்வையாக எழுத முடியாத அளவிற்கு மனசு படபடக்கிறது என்னுடைய தலைவனைக் காண !!!
அனைவருக்கும் தர்பார் பொங்கல் வாழ்த்துக்கள் !!!
- விக்னேஷ் செல்வராஜ்
|