(18 Nov 2019) நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் வகையில், கமல்-60 என்ற நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், தமிழகம் முழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை ஏற்படுத்த கமல் சார்பில் 1 கோடி ரூபாயை கமலும் ரஜினியும் இணைந்து வழங்கினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, சினிமாவில் கடுமையாக உழைத்து முன்னேறியவர் கமல் என புகழாரம் சூட்டினார்.
களத்தூர் கண்ணம்மாவில் அவரைப் பார்த்து ஏற்பட்ட பிரமிப்பு இன்றும் மாறவில்லை என்று மேலும் தெரிவித்தார். நடிகர், இயக்குநர், பாடகர் என பல பரிமாணம் எடுத்தவர் என்றும், 10 வேடங்களில் நடித்ததால் அவர் உலகநாயகன் எனவும் ரஜினி குறிப்பிட்டார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியைக் குறிப்பிட்டு பேசிய ரஜினிகாந்த், முதல்வர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி, 2 ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். பழனிசாமி ஆட்சி, 4 அல்லது 5 மாதங்களில் கவிழ்ந்து விடும் என 99 சதவீத மக்கள் கூறினார்கள். ஆனால் அற்புதம் நடந்தது. அனைத்து தடைகளையும் மீறி ஆட்சி தொடர்கிறது. அதுமாதிரியான அதிசயம், நேற்று நடந்தது; இன்று நடக்கிறது; நாளையும் நடக்கும் என்றார்.
கமலுடன் 43 ஆண்டுகளாகக் காப்பாற்றிய நட்பை எஞ்சிய காலங்களிலும் காப்பாற்றுவோம் என்ற ரஜினி, கொள்கைகள், சித்தாந்தங்களில் மாற்றம் இருந்தாலும் இருவருக்கும் உள்ள நட்பு மாறாது. நட்பு எப்போதும் போல் தொடரும். எங்கள் பெயரை வைத்து ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது என்றார். இந்நிகழ்ச்சியில் நடிகர்- நடிகைகள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி தொடர்பான #Kamal60 ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரண்டானது குறிப்பிடத்தக்கது.
|