தலைவரைப் பற்றிய பதிவு ஆனால் இம்முறை ரசிகனாக அல்ல மக்களில் ஒருவனாக!
சூப்பர்ஸ்டார் தலைவர் என அடைமொழியோடு இல்லாமல், தூரத்தில் இருந்து அரசியலை வேடிக்கை பார்க்கும் ஒரு சாதாரண மக்களில் ஒருவனாக எழுத விரும்புகிறேன்.
ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ஆதரிக்கிறீர்களா எனப் பொதுவாக எவரிடம் கேட்டாலும், "அவர் வரட்டும்" பிறகு பார்க்கலாம் என்று தான் பெரும்பாலோரின் பதிலாக உள்ளது.
காரணம் மிகச் சுலபம். பச்சையாகச் சொல்ல வேண்டும் என்றால் அவர் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கை பலருக்கு இல்லை. அப்படி நம்பிக்கை இருந்தாலும் அவர் பாஜகவின் ஆதரவாளரோ! எனச் சந்தேகம் கொள்கின்றனர்.
அவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் நடுநிலை என்ற பெயரில் அவரைப் பாஜக எனும் கட்டமைப்புக்குள் அடைக்க முற்படுகின்றன.
எனவே மக்களுக்கு அந்தச் சந்தேகம் இருப்பது நியாயம் தான்.
இந்த இரண்டு வகையைத் தவிர்த்து மூன்றாவதாக ஒரு சாரார் உள்ளனர். அவர்கள் தான் எப்பொழுதும் தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பவர்கள். அவர்கள் நிலையாக ஒருவருக்கு வாக்களித்ததில்லை.
இவன் வரக் கூடாது, அவன் வரக் கூடாது என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்ததில்லை. எவன் வந்தாலும் நல்லது நடந்தால் போதும் என எண்ணுபவர்கள்.
ஜெயிக்கும் நிலையில் இருக்கும் ஒருவனைக் கீழே தள்ளி விடுவதும் இவர்கள் தான். தோல்வியின் விளிம்பில் இருப்பவனை ஜெயிக்கிற குதிரை எனும் நிலைக்குக் கொண்டு வருவதும் இவர்கள் தான்.
இவர்கள் அரசியல் பேசமாட்டார்கள் ஆனால், கவனிப்பார்கள். பெரும்பாலான நேரங்களில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதே இவர்களது அதிகபட்ச அரசியல் ஆர்வமாக இருக்கும். ஆனால், அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்துபவர்கள்.
இவர்கள் ரஜினி பாஜகவோ காங்கிரஸோ எனக் கவலைகொள்ள மாட்டார்கள். அவருக்குத் திறமையும் தகுதியும் உள்ளதா என மட்டும் தான் பார்ப்பார்கள்.
அதனால் தான் ரஜினியின் அரசியல் பிரவேசத்தைப் பற்றிக் கேட்டால் ஆம் என்றும் சொல்லாமல் இல்லை என்றும் சொல்லாமல், வரும் போது பார்க்கலாமெனச் சொல்கிறார்கள்.
ரஜினியின் அரசியலை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பவர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் வரட்டும் பார்க்கலாமெனக் கூறுபவர்களுக்கு ஆயிரம் எதிர்பார்ப்புகள் இருக்கும் !
மேலே குறிப்பிட்டதைப் போல அவர் வருவாரா மாட்டாரா, பாஜகவிற்கு ஆதரவு தருவாரா போன்ற கேள்விகள் அவர்களுக்குக் கண்டிப்பாக இருக்காது.
ஏன் என்றால் அவர்களுக்கு நன்றாகப் புரியும். இந்த அற்பத்தனமான கேள்விகளுக்கெல்லாம் ஒரே ஒரு பேட்டிமூலம் அனைத்திற்கும் பதில் கூறி தவிடுபொடியாக்க ரஜினியால் முடியும் என்று!
கட்சியைத் துவங்குவது, பாஜகவிற்கு எதிராக அறிக்கைவிடுவதெல்லம் அவர்கள் எதிர்பார்ப்பிலேயே இல்லை.
அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் தேர்தல் நெருங்கும் நேரத்தில் என்ன கொள்கையை முன்வைக்கப்போகிறார், அவரை ஆதரிப்பதால் என்ன மாற்றம் வரலாம், அவர் என்னென்ன திட்டங்கள் வைத்து இருக்கிறார் மற்றும் முக்கியமாகத் தமிழகத்தின் அன்றாடப் பிரச்சைகளுக்கு என்ன தீர்வு முன்மொழியப் போகிறார் என்பது தான்.
அவர்கள் முக்கியமாக உற்று நோக்கிய ஒரு வார்த்தை "சிஸ்டம் சரி இல்லை".
பலர் நினைத்தார்கள் அப்படி என்ன சிஸ்டம் கேட்டு விட்டது ? இந்தச் சிஸ்டத்தில் தானே தாழ்த்தப்பட்டோருக்கும் கல்வி கிடைத்தது ? இந்தச் சிஸ்டத்தில் தானே சமத்துவம் சமூகநீதி எல்லாம் ஓர் அளவேனும் அடைந்தோம் ?
ஆனால் ரஜினி குறிப்பிட்டது இந்தச் சிஸ்டமே இல்லை என்பதைத் தன் செயல்மூலம் நிரூபித்து வருகிறார் !!!
தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடிய போது தேர்தல் பரப்புரைகளுக்கு நடுவே 'குடம் இங்கே தண்ணீர் எங்கே?' எனப் போராட தூண்டுவது சிஸ்டமா , இல்லை தங்களால் இயன்ற வரை குடிநீர் வழங்கி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்துவது சரியான சிஸ்டமா ?
எதிர்க்கட்சி தலைவரின் தொகுதியில் அரசுப் பள்ளி சீரமைக்கப் படவேண்டிய சூழலில் இருப்பது சரியான சிஸ்டமா, இல்லை அரசியல் கட்சியே தொடங்காமல் அரசுபள்ளிகளைப் பள்ளிகளைச் சீரமைத்து தருவது சிஸ்டமா ?
டெங்கு காய்ச்சல் பரவும் இச்சமயத்தில் இடைத்தேர்தல் மீதே கண்ணும் கருத்துமாய் இருப்பது சிஸ்டமா ? இல்லை எந்தப் பாகுபாடுமின்றி வீடு வீடாகச் சென்று கொசு மருந்து அடித்து, நிலவேம்பு குடிநீர் வழங்கித் தீர்வை நோக்கி நகர்வது சிஸ்டமா ?
கஜா புயல் வந்த நேரத்தில் சூட்டோடு சூடாக இந்த அரசு ஏதும் செய்யவில்லையென மீம்ஸ் போட்டு மக்களைப் போராட்டம் செய்ய வேண்டும் எனத் தூண்டி விடுவது சிஸ்டமா இல்லை தாமதமானது என்றாலும், முறையான அனுமதி பெற்று தரமான கட்டிடத்தை ரஜினி தன்னுடைய சொந்த பணத்தில் கட்டிக்கொடுத்து தீர்வைத் தேடி தந்தது சிஸ்டமா ?
இதோ ஒருவர் சொந்த காசைப் போட்டு உதவி செய்கிறார், சிலர் அபத்தமான கேள்விகளைக் கேட்கிறார்கள். வெறும் 10 பேருக்குத் தான் வீடா, வெறும் இரண்டு லட்சம் தானா, இதில் உள்நோக்கம் இருக்குமா எனப் பிதற்றுகிறார்கள்.
ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு தான் உள்ளனர். வெறுமனே விவாதங்களில் அமர்ந்து உள்நோக்கத்தைப் பற்றிப் பேசும் நீங்கள் என்ன செய்தீர்கள்? என்பதையும் அவர்கள் அறிவார்கள்.
சுருக்கமாக ரஜினி இதுவரை தொட்ட அனைத்து விஷயத்தையும் நினைவு கூறுங்கள். தண்ணீர், கல்வி, அடிப்படை வசதிகள். ஒவ்வொன்றும் ஒரு மனிதனின் அன்றாட வாழ்வியலோடு தொடர்புடையவை.
ரஜினி இன்று வரை சொன்னதைச் செய்கிறார். பலரும் கஜா புயல் இழப்புகளையே மறந்த நிலையிலும் தொடர்ச்சியாக அதில் ஈடுபட்டு கொடுத்த வாக்கின் படி வீடு கட்டிக்கொடுத்து வாக்கைக் காப்பாற்றி இருக்கிறார்.
அப்பேதைய பரபரப்புக்கு பேசிவிட்டு மக்களை மறக்கும் சராசரி நபரல்ல ரஜினி!
ரஜினியே கூறியது போல - காலம் பேசாது ; ஆனால் காலம் தான் பதில் சொல்லும்.
- விக்னேஷ் செல்வராஜ்
|