(7 Dec 2019) என்மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது என்று, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது "தர்பார்" திரைப்படம். இயக்கம் முருகதாஸ், இசை அனிருத். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று இரவு நடைபெற்றது.
நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் முருகதாஸ், ஷங்கர், அனிருத், பாடலாசிரியர் விவேக், நிவேதா, பவானி உள்ளிட்ட நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் நிறைவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியபோது, ரமணா படத்தை பார்த்தபோதே முருகதாஸை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. கஜினி திரைப்படம் வெளியானதுமே, முருகதாசும் நானும் இணைந்து படம் பண்ண பேச்சுவார்த்தை நடந்தது. ஆனாலும் சில காரணங்களால் அது தள்ளிப்போய்விட்டது.
எனக்கு வயசாகிவிட்டது என்பதால், இனி டூயட் பாடல்கள் வேண்டாம் என்று முடிவெடுத்தேன். எனவேதான், கபாலி, காலா போன்ற படங்களில் நடிக்கத் தொடங்கினேன்.
ரஜினிகாந்த் என்ற பெயரை ஒரு நல்ல நடிகனுக்கு வைக்கலாம் என்று பாலச்சந்தர் யோசிச்சிட்டு இருந்தப்போ என்ன பாத்து அந்த நம்பிக்கையை வச்சி அந்த பேரை எனக்கு வச்சாரு. அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. அதே மாதிரிதான், என் மேல நீங்க வச்சிருக்குற நம்பிக்கை என்றும் வீண் போகாது.
தர்பார் படத்தின் ஆதித்யா அருணாசலம் கேரக்டர் மிகவும் பவர்ஃபுல்லானது. 160க்கும் மேற்பட்ட படங்களில் நான் நடித்திருந்தாலும், இந்தப் படம் ஸ்டைலாக, த்ரில்லாக இருக்கும். சந்திரமுகி படத்தைக் காட்டிலும், நயன்தாரா இப்போதுதான், கிளாமராகவும் எனர்ஜியாகவும் இருக்கிறார்.
இந்த வருடம் என் பிறந்த நாள் என் வாழ்க்கையில் மிக முக்கியமான பிறந்த நாள். எழுபதாவது வயதில் அடியெடுத்து வைக்கிறேன். அன்று நான், வழக்கம்போல, சென்னையில் இருக்க மாட்டேன். எனது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடாதீர்கள்.
நான் தமிழக அரச நிறைய விமர்சனம் பண்ணி இருக்கேன். ஆனா அதைலாம் மனசுல வச்சிக்காம இந்த அரங்கத்தை கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
இசையமைப்பாளர்களில் இளையராஜாவிற்கு நிகரான இசை ஞானம் படைத்தவர்கள் யாரும் கிடையாது. அந்த திறமை அனிருத்துக்கு இந்த வயதிலேயே இருக்கிறது. இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
|