தலைவர் ரசிகர்கள் அனைவருக்கும் ஆறாத வடு, லிங்கா வெளியீட்டுச் சமயத்தில் நடந்த பிரச்சனைகளும், வெளியான பிறகு நடந்த பிரச்சனைகளும்.
லிங்கா படத்தின் கதை தன்னுடைய கதை என்று ஒருவர் அறிவிக்க, ஊடகங்கள் அனைத்தும், லிங்கா ஒரு திருட்டு கதை என்று தினமும் செய்திகளில் அறிவித்து வந்தன. இது உண்மையா? இவ்வாறு எழுதுவது பத்திரிகை தர்மமா என்று எதுவுமே பரிசீலிக்கப்படவில்லை.
இறுதியில் நீதிமன்றம், படம் நாளை வெளியாகிறது என்றால் இன்று 10 கோடி இருப்பு தொகையைக் கட்டி படத்தை வெளியிடலாம் என்று உத்தரவு பிறப்பித்தது.
10 கோடி என்பது எவ்வளவு பெரிய தொகை! அவ்வளவு பெரிய தொகையை நீதிமன்றமும் கால அவகாசம் கொடுக்காமல் உடனே கட்ட வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தது.
தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கடும் சிரமத்துக்கு இடையில் தலைவர் படத்தை அவரது பிறந்த நாளில் வெளியிட்டு விட வேண்டும் என்று கடும் முயற்சி செய்து, அங்கே இங்கே புரட்டிப் பணத்தைக் கட்டி படம் வெளியானது.
லிங்கா படம் ஈரோஸ் க்கு முதலில் வந்து பின்னர் வேந்தர் மூவீஸ் போன்று பல கைகளுக்கு மாறியது. இதில் அனுபவம் இல்லாத விநியோகஸ்தர் சிங்காரவேலனும் ஒருவர்.
லிங்கா படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை, குறிப்பாக இறுதிக்காட்சி பலரால் ரசிக்கப்படவில்லை. இறுதிக்காட்சி தான் படத்துக்கே வில்லனாக மாறியது. இதனால், துவக்கத்தில் வந்த விமர்சனங்கள் சாதகமாக இல்லை.
பின்னர்க் குடும்பங்கள் சென்று பார்க்கும் போது படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இதனால் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
சிங்காரவேலன்
இந்த நிலையில் எதோ ஒரு உள்நோக்கத்தில் விநியோகஸ்தர் சிங்காரவேலன், படம் தோல்வி, எனக்கு நட்டம் என்று தினமும் பத்திரிகைகளில் பேட்டி கொடுக்க ஆரம்பித்தார்.
'ரஜினிக்கு மார்க்கெட்டே இல்லை' என்று வாய்க் கூசாமல் கூறி, ரசிகர்களின் ஒட்டுமொத்த கோபத்தைச் சம்பாதித்தார்.
தலைவருக்கு எதிரான செய்தி என்றால் பத்திரிகைகள் விடுவார்களா?! இதுபற்றித் தினமும் செய்திகளில் போட்டுப் படத்தைக் காலி செய்தார்கள்.
சிங்காரவேலன் பிரச்னை செய்யவில்லையென்றால் என்றால், இப்படம் இன்னும் கூடுதல் நாட்கள் ஓடி, கூடுதலாக வசூலித்து இருக்கும்.
மூளை உள்ள ஒரு விநியோகஸ்தர் என்றால் என்ன செய்ய வேண்டும்?!
ஒருவேளை உண்மையிலயே படம் சரியாக ஓடவில்லை என்றால், படம் அதன் இறுதி ஓட்டம் வரை ஓடி முடிந்து, படத்தைத் திரையரங்குகளில் இருந்து எடுத்த பிறகு, தயாரிப்பாளரைச் சந்தித்து எனக்கு இது போல நட்டம் ஆகி விட்டது. எனக்கு ஏதாவது செய்து கொடுங்கள் என்று கேட்கலாம்.
நியாயமாக இதைக் கேட்கக் கூட இவர்களுக்கு உரிமையில்லை காரணம், இவர்கள் தான் விலை வைத்து வாங்குகிறார்கள். இதில் கூடுதல் இலாபம் வந்தால், தயாரிப்பாளருக்குக் கொடுக்கப்போவதில்லை ஆனால், நட்டம் என்றால் மட்டும் வருவார்கள்.
சரி அப்படியே கேட்க வேண்டும் என்றாலும், படம் ஓடிக்கொண்டு இருக்கும் போதே படம் நன்றாக இல்லை, ஓடவில்லை என்று தினமும் பேட்டி கொடுத்தால், படம் பார்க்கலாம் என்று நினைப்பவர்கள் கூட வர யோசிப்பார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லை.
தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஊடகங்களை சந்தித்து "படத்தைத் தினம் தினம் கொன்றார் சார்" என்று சிங்காரவேலன் தினம் நட்டம் என்று பேட்டி கொடுத்ததை அழுதுகொண்டே கூறியது எதிரியையும் கலங்க வைக்கும்.
ஒரு படத்தை எடுப்பது எவ்வளவு கஷ்டம், அதை விட வெளியிடுவது எவ்வளவு கஷ்டம். பல இன்னல்களைத் தாண்டி வெளியிட்ட படத்தை விநியோகஸ்தரே கொலை செய்தால், ஒரு தயாரிப்பாளருக்கு எப்படி இருக்கும்?!
தலைவர் ஒருவருக்காகத் தயாரிப்பாளர் வெங்கடேஷ் அனைத்தையும் தாங்கிக்கொண்டார்.
சிங்காரவேலன் தலைவரை என்னென்ன பேசி விட்டார்...!! பொதுவெளி என்பதால், மரியாதையாக எழுத வேண்டிய நிலை. இல்லையென்றால், என்னுடைய கோபத்துக்கு இவரை நான் எழுதும் முறையே வேறாக இருந்து இருக்கும்.
லிங்கா சமயத்தில் இவர் செய்த அட்டூழியங்கள் இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது, என்னால் மறக்க முடியவில்லை.
லிங்கா நட்ட ஈடு பெற்றுத் தருகிறேன் என்று ஒரு பிரபல விநியோகஸ்தரும் ஆட்டையைப் போட்டதாகக் கேள்வி. இவர் தான் தற்போது தலைவருக்கு எதிராக அவ்வப்போது பேட்டி கொடுத்து வருகிறார்.
தலைவருக்கு எதிராகக் கூடியவர்கள் தற்போது ஏராளம்.
தற்போது நீதிமன்றத்தில் தன்னுடைய கதை என்று வழக்கு போட்டவர், அதைத் திரும்பப் பெற்றதால், வழக்கில் லிங்கா படத்தின் கதை உண்மையானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
தற்போது நீதிமன்றம் இதை முடித்து வைத்தாலும், அந்தச் சமயத்தில் லிங்கா குழுவினருக்கு இவர் ஏற்படுத்திய மன உளைச்சலுக்கு என்ன பதில்? அதை யார் திரும்பப் பெறுவார்கள்? அதற்கான பதில் என்ன? என்ன தண்டனை?
தலைவருடைய தோல்விப்படங்களே பலரின் மிகப்பெரிய வெற்றி படங்களின் வசூலுக்குச் சமம். லிங்கா தோல்விப்படமாகக் கருதப்பட்டாலும், அதனுடைய வசூல் 140 கோடி என்று அனைவரும் கூறி வந்தார்கள்.
திருட்டு கதை என்று ஊடகங்கள் வெளியிட்டதை அவர்கள் முன்னரே இது திருட்டு கதையில்லை என்று காட்ட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், இயக்குநர் ரவிக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து இதைக் கூறினார்கள்.
தலைவரின் அனுமதி பெற்றே கூறினோம் என்றார்கள்.
அன்று தலைப்புச் செய்தியாகப் பொய் செய்தியை வெளியிட்டவர்கள், இன்று அது திருட்டு கதையில்லை என்பதைச் செய்திகளில் கூறாமல் இருட்டடிப்புச் செய்து விட்டார்கள். இது தான் ஊடக தர்மம்.
140 கோடி அல்ல 180 கோடி
ரவிக்குமார், வெங்கடேஷ் இருவரும் லிங்கா படத்தின் வசூல் 140 கோடி அல்ல, 180 கோடி என்ற உண்மையை அனைவர் முன்பும் அறிவித்தார்கள். தலைவர் படங்களுக்கு மட்டுமே உண்மையான வசூல் தொகை, அதிகாரப்பூர்வத்தொகை கூறப்படுகிறது.
மற்றவர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள்? என்னென்ன நடக்கிறது? என்பதை நீங்கள் அறிவீர்கள்.
தலைவருக்காகப் பல பிரச்சனைகளை எதிர்கொண்ட வெங்கடேஷ் அவர்களின் நல்ல எண்ணமோ என்னவோ, அவர் அடுத்த ஆண்டே (2015) தயாரித்த சல்மான்கான் நடித்த 'Bajrangi Bhaijaan' மிகப்பெரிய வெற்றி பெற்று பல நூறு கோடிகளை இலாபமாகக் கொடுத்தது.
தலைவரை 'மார்க்கெட் இழந்த நடிகர்' என்று கூறிய சிங்காரவேலன் இன்று இருக்கும் இடம் தெரியவில்லை.
தலைவர் எதற்கும் கலங்காமல் இன்றும் 'தர்பார்' என்ற மாபெரும் வெற்றியின் மூலம் தான் பேசாமல் தன் படங்கள் மூலம் அனைவருக்கும் பதிலடி கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.
நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனால், கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறையக் கொடுப்பான் ஆனால், கை விட்டுடுவான்.
நல்லவங்க வாழ்வாங்க.. என்ன கொஞ்சம் காலம் எடுக்கும்.
உண்மை ஒரு நாள் வெல்லும் உலகம் உன் பேர் சொல்லும்.
எல்லாமே தலைவருக்குப் பொருத்தமா இருக்குல்ல... அது தான் தலைவர் :-) .
தற்போது 'உண்மை ஒரு நாள் வெல்லும்' பாடலைக் கேட்டுப்பாருங்க.. இக்கட்டுரையின் வலி தெரியும், ரசிகர்களின் வலி புரியும்.
-கிரி
|