தமிழக அரசியலில் இப்போது ட்ரெண்ட் அடிக்கும் டாபிக் மதச்சார்பின்மை.
உண்மையில் மதச்சார்பற்றவராக இருப்பவர்கள் எல்லாம் அமைதியாக இருக்கும் நேரத்தில், குறை குடம் தான் ஓவராகச் சத்தம் போடும் என்பது போலப் போலி மதச்சார்பின்மை கட்டமைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள தலைவர்களில் ரஜினி தான் உச்சபட்ச மதச் சார்பின்மையைக் கடைபிடிப்பவர்.
ரஜினி முத்து , ரஜினி அந்தோணி, ரஜினி பாட்ஷா என மதத்திற்கு அப்பாற்பட்டு அவரைப் பின்பற்றும் ரசிகர்களே அதற்குச் சாட்சி. ஆனால் அவரைப் பாஜக / ஹிந்து மதம் என்ற சிறு வட்டத்துக்குள் அடைக்கப்பார்க்கின்றனர் பலர்.
சரி இருக்கட்டும். தகுந்த நேரம் வரும் போது அவரே அதைக் கலைப்பார்.
விஷயத்திற்கு வருவோம்.
குடியுரிமை சட்ட திருத்தத்தால் ஏதாவது ஒரு இஸ்லாமியருக்கு அநீதி இழைக்கப்பட்டாலும் நானே வீதியில் இறங்கி போராடுவேன் என அவர் கூறியது , கிட்ட தட்ட அனைத்துச் சிறுபான்மை மக்களிடையே அவர் மீது இருந்த காவி சாயத்தைத் துடைப்பதாகவே இருந்தது.
ஆனால் வண்ணாரப்பேட்டை சம்பவத்தை முழுக்க முழுக்க ரஜினிக்கு எதிராகத் திட்டமிட்டு திரும்புவதைச் சில விஷ சக்திகள் வேலையாகச் செய்துகொண்டு இருக்கின்றன.
அதற்கு ஏற்றார் போல #வீதிக்குவாங்கரஜினி என ட்ரெண்ட் செய்கிறார்கள்.
அதெப்படி முழுக்க முழுக்க ரஜினிக்கு எதிராக எனச் சொல்லிவிட முடியும்?
தாராளமாகச் சொல்லலாம்...
ரஜினி என்றுமே வன்முறையை ஆதரிப்பவர் அல்ல. 2002 காவேரி போராட்டம் முதல் இப்போது வரை அமைதி வழி போராட்டத்தைத் தான் என்றும் ஆதரித்துள்ளார்.
ஸ்டெர்லைட் போராட்டத்தைப் புனித போராட்டம் எனக் கூறிய அவர், அது கலவரமாக மாறிய போது கூடப் பொதுமக்களைப் பழினிக்காமல் சமூக விரோதிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள் என அறிவுறுத்தினார்.
ஆனால் இப்போது மக்களிடம் ஓட்டு வாங்கி ஜெயித்த கட்சிகள், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்கும் போது வெளிநடப்பு செய்துவிட்டு, இப்போது மக்களைப் போராட சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
அதே கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பி ஒருவர், போலிசாரால் தாக்கப்பட்டு ஒருவர் உயிருக்கு போராடுவது போல ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு, வீதிக்கு வாங்க ரஜினி எனப் பதிவிடுகிறார்.
முதலில் பதிவிட்டதே ஒரு தவறான புகைப்படம். உங்களுக்குத் தானே மக்கள் வாக்களித்தார்கள் !!! நீங்கள் தானே பாராளுமன்றத்தில் போராடி இருக்க வேண்டும்?? அங்கே வெளிநடப்புச் செய்து விட்டு ரஜினியை போராட அழைப்பது என்ன நியாயம் ?
அப்போது உங்கள் எண்ணம் CAA விற்கு எதிரானது இல்லை (CAA தான் உங்கள் பிரச்சனை என்றால் மக்களவையில் வெளிநடப்பு செய்து இருக்க மாட்டீர்கள்) .
உங்கள் எண்ணம் மக்கள் போராட்டமும் இல்லை. (மக்கள் மீது அக்கறை இருந்தால் தவறான புகைப்படம் பதிவிட்டு உணர்ச்சியைத் தூண்ட முயற்சி செய்து இருக்க மாட்டீர்கள்)
உங்கள் பிரச்சனை முழுக்க முழுக்க ரஜினி தான்.
இந்தப் பிரச்சனையில் சம்மந்தமே இல்லாமல் ரஜினியை இழுத்து விட்டு, அவர் இது போன்ற தூண்டி விடும் வேலைக்கு ஆதரவாகச் செயல்படமாட்டார் எனத் தெரிந்து, அவரைச் சிறுபான்மையினருக்கு எதிரானவர் எனப் பதியவைக்க வேண்டும் என்பதே உங்கள் எண்ணம்.
ரஜினி தான் தெளிவாகச் சொன்னாரே !!! இந்திய முஸ்லிம்களுக்கு CAA வினால் ஆபத்து இல்லை என்று !!!
அதில் மாற்றுக்கருத்து இருந்தால் கருத்தியல் ரீதியாக மோத வேண்டுமே தவிரத் தூண்டிவிடும் செயலில் இறங்க கூடாது.
இப்போதும் சொல்கிறேன்.... இந்திய முஸ்லிம்களுக்கு ஒன்று என்றால் குரல் கொடுக்கும் முதல் ஆளாக ரஜினி தான் இருப்பர். CAA போராட்டம் நடந்த அதே பிப்ரவரி 14 ஆம் தேதி தான் 22 வருடங்களுக்கு முன்னர் கோயம்பத்தூரில் குண்டு வெடிப்பு நிகழ்தது.
அப்போது இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சாரமே மேலோங்கி இருந்தது. ஆனால் இஸ்லாமிய நண்பர்கள் அதைச் செய்து இருக்க மாட்டார்கள் என முதல் குரலாக வீதிக்கு வந்தது ரஜினியின் குரல் தான்.
அன்றைய ஆளும் கட்சியே ரஜினியின் குரலுக்குப் பின்னர்த் தான் தன்னுடைய குரலை பதிவு செய்தது என்பது வரலாறு.
CAA வால் இந்திய முஸ்லிம்களுக்குப் பாதிப்பு இல்லை என்பது ரஜினியின் கருத்து. அவ்வாறு பாதிப்பு ஏற்பட்டால், தன்னுடைய எண்ணத்துக்கு மாறாக நடந்தால் தானே களம் இறங்குவதாகச் சொல்கிறார்.
ஆனால் இவர்கள் கேட்பது என்ன? பாராளுமன்றத்தில் போராடாமல் மக்களைத் தெருவில் இறங்கி போராட சொல்லும் கட்சிகளின் பேச்சை கேட்டு போராடும் மக்களுக்காக ரஜினி எப்படி வீதிக்கு வர முடியும்?
அப்போது போராடவே கூடாது என்பது தான் ரஜினியின் நோக்கமா?
ஆம். மக்கள் போராடவே கூடாது என்பது தான் ரஜினியின் நோக்கம். விரிவாகச் சொல்லவேண்டும் என்றால், மக்களைப் போராடும் நிலைக்கு எந்த ஒரு அரசும், அரசியல் கட்சியும் கொண்டு போகக் கூடாது என்பதே அவர் நோக்கம்.
மக்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும் ஐயா. அவர்கள் ஏன் தங்கள் வேலையை விட்டுவிட்டுத் தெருவில் இறங்க வேண்டும்?
அரசியல் கட்சிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு மக்களைப் பற்றிச் சிந்திப்பது தானே முழு நேர வேலை? அவர்கள் தானே போராட வேண்டும்?
40 எம்பிக்களைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பி இருக்கிறோமே .... இந்திய அளவில் தமிழகத்திற்கு ஒரு பிரச்சனை என்றல் அவர்கள் தானே வீதிக்கு வர வேண்டும்? ரஜினி ஏன் வர வேண்டும்?
அவர்கள் சொகுசாகக் கையெழுத்து இயக்கம் எனச் சுலபமான போராட்ட முறையை எடுத்துக்கொள்வார்கள், மக்கள் தங்கள் வேலையை விட்டு விட்டு வீதிக்கு வந்து அரசுக்கு எதிராகக் கோஷங்களைப் போட வேண்டுமா?
மீண்டும் சொல்கிறேன். ரஜினி தேவை இல்லாத விஷயத்திற்கு வீதிக்கு வர மாட்டார். ஆனால் விரைவில் வருவார். போராட்டத்திற்காக அல்ல. அணைத்துப் பிரச்சனைகளுக்கு மக்களை வீதிக்கு அழைக்கும் உங்களை ஒரேயடியாக வீதியில் நிறுத்துவதற்காக வருவார்.
அன்று..... 70 ஆண்டுக் கட்சிகளுக்கு அந்த 70 வயது மனிதரால் சாவு மணி அடிக்கப்படும்.
- விக்னேஷ் செல்வராஜ் .
|