சென்னை: ''உளவுத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் தோல்வி தான், டில்லியில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு காரணம்,'' என, நடிகர் ரஜினி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை போயஸ்கார்டனில் உள்ள, தன் இல்லத்திற்கு வெளியே, அவர் பேட்டி அளித்தார். கடந்த முறை ரஜினி அளித்த பேட்டி, ஊடகங்கள் அனைத்திலும் வெளியான உடன், 'எப்போதாவது கதவை திறந்து பேட்டி கொடுத்து, படப்பிடிப்பு போவோருக்கு எல்லாம், தலைப்பு செய்தி போடுகின்றனர்' என, தி.மு.க.,தலைவர் ஸ்டாலின் குமுறி இருந்தார்.
நேற்று ரஜினி, மீண்டும் கதவை திறந்து, பேட்டி அளித்தார். அதில், 'டில்லி வன்முறைக்கு உள்துறை அமைச்சத்தின் தோல்வி தான் காரணம்' என, பா.ஜ.,வை சாடினார்.பல உண்மைகளை, 'பிட்டுப் பிட்டு' வைத்த, அவர் பேட்டி: 'தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால், முஸ்லிம்கள் யாராவது பாதிக்கப்பட்டால், முதல் ஆளாக நிற்பேன்' என்று நான் கூறினேன். அந்த நிலைநாட்டில் உறுதியாக இருக்கிறேன்.
டெல்லி கலவரம் உளவுத்துறை தோல்வி: ரஜினி காட்டம்
டில்லியில் நடக்கும் போராட்டங்கள், மத்திய உளவுத் துறையின் தோல்வியை காட்டுகிறது. இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். அமெரிக்க அதிபர் டிரம்ப் போன்ற தலைவர்கள் வந்திருந்த நேரத்தில், உளவுத்துறையினர் ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும். இவ்விஷயத்தில் உளவுத் துறை சரியாக வேலை செய்யவில்லை. போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்கி இருக்க வேண்டும். இனியாவது ஜாக்கிரதையாக இருப்பர் என,எதிர்பார்க்கிறேன்.
உளவுத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் தோல்வி தான், வன்முறைக்கு காரணம். சில கட்சிகள், சில மதங்களை வைத்து போராட்டங்களை துாண்டுகின்றனர். இது சரியான போக்கு கிடையாது. மத்திய அரசு இதை ஒடுக்கவில்லை என்றால், வரும்காலத்தில் பிரச்னை ஆகிவிடும். இந்த பிரச்னையில், ஊடகங்கள் நியாயத்தின் பக்கம் நிற்கவேண்டும் என்று, கை வணங்கி கேட்டு கொள்கிறேன்.
தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை, பார்லிமென்டில் நிறைவேற்றி, ஜனாதிபதி ஒப்புதல் பெற்று, உச்சநீதிமன்றம் சென்று சட்டமாக்கி விட்டனர். எனவே, அதை திரும்ப பெற மாட்டார்கள். இனி எந்த போராட்டம் நடத்தினாலும், பிரயோஜனப்படாது.இதை சொல்வதற்காக, நான் பா.ஜ.,வின் ஆள்; என் பின்னால் பா.ஜ.,வினர் இருக்கின்றனர் என்று கூறுவர்.
சில மூத்த பத்திரிகையாளர்கள், இப்படி சொல்வது வேதனை அளிக்கிறது. என்ன உண்மையோ, அதைத்தான் நான் சொல்கிறேன். இந்த பிரச்னையை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பது, என் அன்பான வேண்டுகோள்.தேசிய குடியுரிமை பதிவேடு குறித்து, அவர்கள் தெளிவாக கூறிவிட்டனர்; அதில் குழப்பமில்லை. அதை இன்னும் செயல்படுத்தவில்லை.
மத்திய, மாநில அரசுகள், போராட்டங்களை சரியாக கையாள வேண்டும். போராட்டத்தை நான் எதிர்க்கவில்லை. அமைதி வழியில் போராட்டம் செய்யலாம். அதில், வன்முறைக்கு இடம் கொடுக்கக் கூடாது.இவ்வாறு, நடிகர் ரஜினி கூறினார்.
|