1. தலைவர் வருவாரா, மாட்டாரா?
சுருக்கமான பதில் - வருவார்!
அவர் அரசியலிலிருந்து விலகுகிறேன் என்றோ, வரமாட்டேன் என்றோ சொல்லவே இல்லை. தவிர, அவருடைய அறிக்கையை படித்துப் பாருங்கள். அவர் நிச்சயம் வருவேன் என்றே அதில் கூறியிருக்கிறார்.
2. அரசியல் கட்சி எப்போது ?
தலைவரின் இந்த அறிக்கை, முதலில் ரசிகர்களின் மன நிலையைத் தயார்ப்படுத்தும் நடவடிக்கையாகத்தான் பார்க்க வேண்டும். இத்தனை நாட்கள் தலைவர் தான் முதல்வர் என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு, ஆட்சி மாற்றத்திற்கும், அரசியல் மாற்றத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அருமையாக உணர்த்திவிட்டார். தி.மு.க, ஆ.தி.மு.க இல்லாத, ஆனால் அது போன்ற இன்னொரு கழகமாக இருப்பதில் என்ன பிரயோஜனம் உள்ளது என்ற முக்கியமான கேள்வியை நம் முன் வைக்கிறார். வெறும் ஆட்சி மாற்றத்திற்கு கூட்டணி அரசியல் மட்டுமே போதுமானது.
2017 டிசம்பர் 31 அன்று தலைவர் அரசியலுக்கு வருகிறேன் என்று அவர் சொன்னபோது, "சிஸ்டம்" சரியில்லை என்றார். அப்போது, "சிஸ்டம்" என்று எதைக்குறிப்பிடுகிறார் என்று விளங்காமலேயே பலரும் அதை விமர்சனம் செய்தனர். இந்த அறிக்கையின் மூலம், அவர் சொன்னதை செயல்படுத்தக் கூடிய திட்டங்களை அறிவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
அடுத்தது, இத்தகைய அரசியல் புரட்சிக்கு மக்கள் தயாரா என்ற கேள்வியையும் முன் வைக்கிறார். இப்படிப்பட்ட மாற்று அரசியலை யாரும் யோசித்துக் கூட பார்த்திராத நிலையில், இந்தக் கேள்வியை உள்வாங்கிக் கொண்டு, மக்கள் சிந்திக்க வேண்டும். அதற்கு மக்கள் மன்ற காவலர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். தலைவர் சொன்னது போல, மூலை முடுக்கெல்லாம் தலைவரின் இந்த மாற்று அரசியலை எடுத்துச் சென்று, மக்களிடம் சேர்க்க வேண்டும்.
தலைவரின் அறிக்கை வந்த இரு நாட்களிலேயே, பல தரப்பிலிருந்தும் ஆதரவு பெருத்து வருகிறது. மக்களும், face value க்கு மட்டும் வாக்களிக்காமல், நல்ல திறமையானவர்களை, தகுதியானவர்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் மனநிலைக்கு மெதுவாகத் தயாராவார்கள். இந்த எண்ண ஓட்டம் மக்களிடத்தில் வருவதைத்தான் "எழுச்சி வரட்டும், இது ஒரு இயக்கமாக உருவெடுக்கட்டும்" என்று தலைவர் சொன்னார்.
முதலில் மக்கள் மன்ற காவலர்கள், இந்தக் கருத்தில் உள்ள மகத்துவத்தை உணர்ந்து கொள்ளவேண்டும். பிறகு, மக்களிடம் இதனைக் கொண்டு சேர்க்கும் பணியில் முழு வீச்சுடன் செயல்பட வேண்டும். இது கூடிய விரைவில் நடக்கும். அப்போது கட்சி அறிவிப்பு வரும்.
3. கூடிய விரைவில் என்றால், எப்போது?
2021 சட்டமன்றத் தேர்தல் மே மாதம் என்று வைத்துக் கொண்டாலும், குறைந்தபட்சம் 8-9 மாதங்களுக்கு முன்னால் கட்சி தொடங்கினாலே போதுமானது. அரசியல் கட்சிக்கான அனைத்து கட்டமைப்புகளுடனும் தயாராக இருக்கும் ரஜினி மக்கள் மன்றங்கள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும். ஆனால், தயார்படுத்த வேண்டியது, ரசிகர்களின் மனநிலையையும், மக்களின் மனநிலையையும் மட்டுமே. அதற்கான வேலையைத்தான் இப்போது தலைவர் செய்திருக்கிறார்.
4. ரசிகர்களை ஏமாற்றி விட்டாரே ரஜினி?
ஏமாற்றம் தான். தலைவரிடமிருந்து அரசியல் அறிவிப்பு வந்தவுடன், தலைவரை அரியணையில் ஏற்றி அழகு பார்க்க நினைத்த ரசிகர்களுக்கு தலைவரின் இந்த அறிவிப்பு பேரிடியாகத்தான் இருந்தது. ஆட்சியில் அமர்த்தி அழகு பார்ப்பதைப் பற்றி தலைவர் பேசியத்தைக் கேட்ட போது தான், அதிலிருக்கும் உண்மை நமக்கு "சுரீர்" என்று உரைத்தது. "என்ன அழகு பாக்குறது? வேலை பாக்கணும்" என்று தலைவர் சொல்லியது எவ்வளவு உண்மை? பாபா படத்தில் முதல்வர் பதவி குறித்து தலைவர் பேசும் வசனம் தான் நினைவிற்கு வந்தது. நாம் ஏன் இத்தனை நாட்கள் இதைப்பற்றி யோசிக்கக் கூட இல்லை? 50 வயதுக்குட்பட்ட, ஓரளவு படித்த, அவர்கள் வாழும் பகுதியில் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஒருவர் தமிழக முதல்வர் ஆனால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இது எந்த காலத்திலும் நடக்க வாய்ப்பே இல்லை என்று நம் ஆழ்மனதிற்கு தெரிந்ததால் தான், இப்படிப்பட்ட யோசனைகளோ, கருத்துக்களோ, விவாதங்களோ வெளிவரவேயில்லை.
பல முறை, அரசியலுக்கு நல்ல படித்தவர்கள் வரவேண்டும் என்று பலர் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால், அப்படிப்பட்ட ஒருவர், முதல்வர் ஆக வேண்டும் என்று யாரும் யோசித்திருக்கிறீர்களா?
1996-லேயே அந்த பதவி அவரைத் தேடி வந்தபோதும், வேண்டாம் என்று உதறித்தள்ளிய தலைவருக்கு, இப்போது கூட அவர் நினைத்திருந்தால், தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்திக் கொண்டு, இந்தத் தேர்தலை சந்தித்திருக்கலாம். முதல்வர் ஆகியிருக்கக்கூடிய அனைத்து சாத்தியக்கூறுகளும் இருந்ததும், அதனையெல்லாம் பொருட்படுத்தாமல், மேற்சொன்னபடி ஒரு தகுதியானவரை முதல்வராக்கவேண்டும் என்று அவர் யோசித்திருக்கிறார். இது எத்தகைய தன்னலமற்ற மகத்துவமான சிந்தனை!
எப்போதுமே, ரஜினி ரசிகர்களுக்கென்று சமூகத்தில் ஒரு நற்பெயர், தனித்துவம் உண்டு. மற்றவர்களையும் நம்மையும் வேறுபடுத்திக் காட்டுவதில் முதன்மையானது ஒழுக்கம். தலைவர் நம்மிடம் பெரிதாக எதிர்பார்ப்பதும் அதைத்தான். மற்றவர்களைப் போலவே, நாமும் நம் தலைவர் முதலைமைச்சர் ஆக மாட்டார் என்பதில் ஏமாற்றமடைந்து, சோர்வடைவதில் அர்த்தமில்லை. அவர் கூறிய அனைத்து திட்டங்களுக்கும் அடிப்படை, தமிழகத்தின் அரசியல் தளத்தை மாற்ற வேண்டும், மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற நல்ல நோக்கம் தான். தலைவர் முதல்வர் ஆவது மட்டும் தான் நம் கனவா? தலைவர் முதல்வர் ஆவதின் மூலம் நாம் என்ன எதிர்பார்க்கிறோம்? மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதைத்தானே? அவர் இப்போது, முதல்வரை விட சக்திவாய்ந்த கட்சித்தலைவர் பொறுப்பை ஏற்று, அதனை செயல் படுத்துவேன் என்கிறார். அதனால் என்ன? நல்ல விஷயம் தானே? முதல்வர் ஆகிவிட்டால், யாரும் கேள்வி கேட்க முடியாது என்கிற எண்ணம் யாருக்கும் வராது. தலைவரின் கட்சியிலிருந்து ஒருவர் முதல்வர் ஆனால், அவர் சரியாக செயல்படவில்லை என்றால், அவரை திருத்தவும், தூக்கி எறியவும் கூடிய சர்வ வல்லமை பெற்ற கட்சித்தலைவர் நம் தலைவர் தானே!
5. இத்தனை ஆண்டுகளாக மன்றத்தில் உழைத்த ரசிகர்களுக்கு பதவியே வழங்கப்படாதா?
முதலில், பதவிக்காகவும், அரசியலை பணம் சம்பாதிக்கும் தொழிலாகவும் கருதுபவர்கள் தன் அருகில் கூட வரவேண்டாம் என்று தலைவர் முன்பே சொல்லியிருந்தார். வெறும் பணத்திற்காகவும், பதவிக்காகவும் மட்டுமே மன்றத்தில் இருந்தவர்கள், தாராளமாக விலகட்டும். தலைவரின் உயரிய எண்ணத்தைப் புரிந்து கொண்டு, அவருடன் போருக்கு செல்லத்தயாராக இருப்பவர்கள் மட்டும் அவர் பின் வரட்டும்.
அப்படிப்பட்டவர்களில் , 60-65% நம் மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் பதவிக்கு வருவார்கள். மீதமுள்ள 30-35%, பிற கட்சியிலிருக்கும் நல்லவர்களுக்கும், அனுபவஸ்தர்களுக்கும், பல்துறை வல்லுனர்களும் ஒதுக்கப்படும். நல்ல, படித்த, திறமையானவர்கள், தங்கள் தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.
மக்கள் மன்றத்தில் இளைஞர்களே இல்லை என்று கூவிக்கொண்டிருப்பவர்கள் வேறொரு உலகத்தில் வாழ்கிறார்கள். அவர்களை நாம் கண்டுகொள்ளத் தேவையில்லை. அப்படியே மன்றத்தில் பல ஆண்டுகளாக இருந்து, 60 வயதைக் கடந்தவர்கள், தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை அழைத்து வரலாமே? நன்றாகப் படித்து, நல்ல வேலையில் இருக்கும் தன் சொந்தங்களை மக்கள் பணியில் ஈடுபடுத்தலாமே...! தலைவர் சொன்ன தற்காலிக பதவிகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே என்பது, அதிகார துஷ்பிரயோகம் செய்ய முற்படுபவர்களுக்கு அந்த வாய்ப்பையே தராது. இது 100% அர்த்தமுள்ள திட்டம். கட்சியின் கொள்கை இதுவாக இருக்க, தலைவர் தன்னையே முதல்வர் வேட்ப்பாளராக முன்னிறுத்திக் கொண்டால், அது கட்சியின் கொள்கைக்கு முற்றிலும் முரணானதல்லவா? கொள்கை ஒன்று, நடப்பது ஒன்று என்றால், மற்ற கட்சிகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?
தலைவரே முதல்வர் பதவியை வேண்டாம் என்கிறார். காவலர்களாகிய நமக்கு எதற்கு பதவி ஆசை? பதவி என்பது ஒரு கூடுதல் பொறுப்பு. அவ்வளவே!
6. ரஜினி முதல்வர் இல்லையென்றால் ஜெயிக்க முடியுமா?
ஏன் முடியாது? ரஜினியை முதல்வராக்க வேண்டி வாக்களிக்கத் தயாராக இருக்கும் மக்கள், எந்த அடிப்படையில் அவருக்கு வாக்களிப்பார்கள் ? அவர் புகழ் பெற்ற நடிகர் என்பதாலா? அவர் நல்லவர் என்பதாலா? அவர் மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கையிலா? நிச்சயமாக அவர் புகழ் பெற்ற நடிகர் என்பதால் இல்லை. அப்படி இருக்கவும் கூடாது. மற்ற இரண்டு காரணங்களின் அடிப்படையில் இருக்குமானால், இப்போதும் அதில் எந்த மாற்றமும் இல்லை. அவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு செய்ய வேண்டியதை, வேறொருவர் மூலமாக செய்ய வைக்கிறார். இத்தகைய மாற்றத்திற்கு, தலைவர் சம்பாதித்து வைத்திருக்கும் மக்களின் அன்பும், ஆதரவும், நம்பிக்கையும் உதவினால் மட்டும் போதும் என்று அவர் விரும்புகிறார். மற்றவர்களைப் போல, தன்னையே முதன்மை படுத்திக்கொள்ளாமல், நாட்டு நலனை மட்டும் முன்னிறுத்துகிறார்.
எப்படியும் 234 தொகுதிகளிலும் நம் ஆட்கள் தேர்தலை சந்திக்கும் போது, தலைவரை முன்னிறுத்தியே தேர்தலை சந்திப்பார்கள். ஒரே மாற்றம், தலைவர் முதல்வர் வேட்ப்பாளர் இல்லை என்பதே. அதனால் என்ன? அவர் தான் முதல்வருக்கே முதல்வராக இருக்கப்போகிறாரே! அதற்காக, முதல்வர் நாற்காலியில் நாம் ஒரு தலையாட்டும் பொம்மையை அமர்த்தப் போவதில்லை... அவர் தவறு செய்யும் போது மட்டும் தலைவர் தலையிடுவார். இதனை மிகத்தெளிவாக சொல்லிவிட்டார்.
புரட்சிகளுக்குப் பெயர் போன தமிழக மண்ணில், இத்தகைய அரசியல் புரட்சி துவங்கட்டும். இத்தகைய மாற்றங்கள், தமிழகத்திற்கு புதிதல்ல... காங்கிரசும், தி.மு.க வும் சர்வ வல்லமை பெற்றிருந்த காலத்தில், ஆட்சிக்கு வந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 2013-ல் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் என்கிற பெரிய தேசியக்கட்சிகளை வீழ்த்தி ஆட்சி அமைத்தவர் அர்விந்த் கெஜ்ரிவால். வேறு வழி இல்லாமல் இரு கழகங்களுக்கு ஓட்டுப்போடுபவர்களும், யாருக்குமே ஓட்டுப்போட விருப்பமில்லாதவர்களும், மாற்றத்தை விரும்பும் அனைவரும் இந்த உண்மையான மாற்றத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.
மொத்தத்தில், வெறும் தலைவனாக மட்டும் இல்லாமல், தலைவர்களை உருவாக்கும் மாபெரும் தலைவனாக ரஜினி உருவெடுக்கிறார். இந்த விஷயத்தை, ரசிகர்களாகிய நாம் 100% உணர்வுப்பூர்வமாக அணுகாமல், அறிவுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அணுகவேண்டும். தலைவர் எப்போதுமே நம்முடைய நலனில் நம்மைவிட அக்கறை கொண்டவர். கட்சியெல்லாம் ஆரம்பித்துவிட்டு இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருந்தால், பல ரசிகர்கள் இப்போதை விட, மிகுந்த ஏமாற்றமடைந்திருப்பார்கள். அதற்காகத்தான் நம்மைத் தயார் படுத்துகிறார்.
அரசியல் என்றால் சாக்கடை, அது படித்தவர்களுக்கான இடம் இல்லை என்கிற பிம்பத்தை உடடைத்தெறிய தலைவர் களம் காண்கிறார். அவருக்குத் தோள் கொடுத்து, அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. ஒரு நல்ல மாற்றத்திற்குத் தயாராகப் போகிறீர்களா, அல்லது இதெல்லாம் நடக்கிற காரியமா என்று கடந்து செல்லப்போகிறீர்களா?
இப்போது இல்லையென்றால், எப்போதும் இல்லை...!
கௌரி ஷங்கர்
துணை செயலாளர்
ரஜினி மக்கள் மன்றம், சிங்கப்பூர்
|