ரஜினிகாந்த் உடன் இணைந்து கவுதமி, சரண்ராஜ், நிழல்கள் ரவி, வைஷ்ணவி, செந்தில், மலையாள நடிகர் மது, திலீப், வெண்ணிற ஆடை மூர்த்தி, பயில்வான் ரங்கநாதன் முதலியோர் நடித்து இருந்தனர்.
இசை : இளையராஜா
பாடல்கள் : பஞ்சு அருணாச்சலம், கங்கை அமரன்
இயக்கம் : ராஜசேகர்
80களில் வந்த படிக்காதவன் படத்தின் சாயலிலிருக்கும் இன்னொரு ரஜினி படம் தான் தர்மதுரை.
60களின் பீம் சிங் பாணி கதை என்ற விமர்சனம் கூட இந்தப் படம் தாங்கியது.
ஒரு வரியில் சொல்வதானால், நல்லவனாக இருக்கலாம் ஆனால் அளவுக்கு அதிகமான நல்லவனாக இருப்பதால் ஒருவன் வாழ்க்கையில் எதை எல்லாம் இழக்க வேண்டி வரும் என்பதை ரஜினி பாணியில் கொடுக்கும் படம் இது.
அம்மா செண்டிமெண்ட் என்றால் ஓரளவுக்கு பாதுகாப்பான களம் என்று தமிழ் சினிமா நம்பிக் கொண்டிருந்த காலத்தில், தந்தை, அண்ணன் செண்டிமெண்ட்கள் ரஜினி படங்களில் வலுவானப் பேசு பொருட்களாக முன்னெடுக்கப் பட்டன. அதில் தர்மதுரைக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.
80கள் வரை ரஜினி டபுள் ரோல்களில் நடித்து இருந்தாலும், ஒரே ரோலில் வெல்வேறு காலகட்டங்களில் வேறு வேறு குணங்களைப் பிரதிபலித்து நடிக்க ஆரம்பித்தது 90களில் தான், அதற்கு முதல் புள்ளி வைத்த படங்களில் ஒன்று தர்மதுரை.
அதற்கு பின் இந்த 90களின் ரஜினி பார்முலா பின்பற்றி அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா, பேட்ட எனப் பல வெற்றி படங்கள் வந்து விட்டன
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் யதார்த்த மனிதனும், கட்டமைக்கப்படுகிற மனிதன் என்ற இரு எண்ணங்கள் உண்டு.
அநியாயம் கண்டு அமைதியாக போகும் ஒரு மனிதன் உண்டு என்றால் அவனுக்குள் அந்த அநியாயத்தைத் தட்டி கேட்க துடிக்கும் ஒரு மனிதனும் உடன் இருப்பான்.
தர்மதுரையிலும் அப்படி தான் அப்பாவி தர்மன், தம்பிகளுக்காக உயிரையும் கொடுக்க துணியும் பாசக்கார அப்பாவி அண்ணன். அவனே தர்மதுரையாக மாறும் போது வாழ்க்கையிடம் பெரும் விலை கொடுத்து பாடம் படித்த ஒரு முரட்டு முனிவன்.
அந்த முரட்டு மிரட்டும் மனிதனாக தான் ரஜினி திரையில் அறிமுகம் ஆகிறார்.
ஒரு பெரும் அடியாள் படையை தனியாக அடித்துத்துவைக்கும் ரஜினியின் கம்பீரமான அறிமுக காட்சி ரசிகர்களுக்கான பரவச நிமிடங்கள்.
தொடரும் ரஜினி கெத்து காட்சி ரசிகர்களுக்கு கொண்டாட்டத் தீனி.
முதல் பத்து நிமிடங்களுக்கு எந்த வசனமும் இன்றி சூப்பர் ஸ்டார் விஸ்வரூபம் எடுக்கிறார். கதையின் களம் விறு விறு என்று எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.
அங்கிருந்து யார் இந்த தர்மதுரை, அவன் கதை என்ன என்று ராஜாவின் இசை வழியே கதை பின்னோக்கி கிராமத்து பக்கம் திரும்புகிறது.
அப்பாவி தருமன், தம்பிகள் மீது பொழியும் பாசத்தை ஒன்றிரண்டு காட்சிகளில் ஆழமாக பதிய வைத்து விடுகிறார் இயக்குனர்.
தம்பிகளுக்காக கடன் வாங்கி கொடுத்து விட்டு தந்தையிடம் பெல்ட்டால் அடி வாங்கி நிற்கும் காட்சியில் கல் நெஞ்சங்களில் கூட ஈரம் சுரக்க வைக்கும் சூப்பர் ஸ்டாரின் நடிப்பு.
இரு மகன்கள் நடத்தை சரியில்லை, மூத்த மகனுக்கோ பாசமே வலை என்று ஆனதே என்று தவிக்கும் அற்புதமான தந்தை வேடம் ஏற்று இருப்பார் மலையாள நடிகர் மது. அந்த வேடத்தில் பொருந்தியும் போய் இருப்பார்.
மறுபடியும் மறுபடியும் தம்பிகளிடம் தர்மன் ஏமாறும் போதெல்லாம், பார்க்கும் நமக்கு தோன்றுவது எல்லாம் ஒன்று தான், அடேய் ராமதுரை, ராஜதுரை, பார்த்துடா, அளவா ஏமாத்துங்கடா, அண்ணனுக்கு மட்டும் கோபம் வந்துச்சு நீங்க மொத்தமாக காலிடா. ரஜினியை ஏமாத்திட்டு சும்மா போயிட முடியுமா என்ன?
இயக்குனர் இந்த சூட்சமத்தை நன்றாகவே பயன்படுத்தி கொள்கிறார்.
ஒரு கட்டத்தில் தன் சொத்து, குடும்பம், மனைவி மக்கள் எல்லாவற்றையும் தன் பாசத்துக்கு விலையாக கொடுக்கிறார் தர்மதுரை, தந்தை சொன்னது போல் நடு தெருவுக்கும் வந்து சேர்கிறார்.
பட்டு வந்த ஞானம் கொடுக்கும் புதிய வீரியத்தில் ஒரு புதிய தவக்கோலம் பூண்கிறார் தர்மதுரை.
காலம் தான் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறதே, மீண்டும் தம்பிகளை அண்ணன் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.
தம்பியின் மகளின் காதல் பஞ்சாயத்து தர்மதுரை வசம் வந்து நிற்கிறது.
பாசம் கடந்த நிலையில் ஞானம் மட்டும் விஞ்சி நிற்கும் நிலையில் தர்மதுரை எடுக்கும் முடிவு தான் கிளைமேக்ஸ்.
கவுதமி இரண்டு மூன்று பாடல்களில் ரஜினியோடு ஆடி பாடுகிறார், காதல் புரிகிறார், பின்னர் அமைதியான நடிப்பில் பின் பாதியில் மதிப்பெண்களை அள்ளுகிறார்.
செந்திலுக்கு இதில் பெரிய வேடம் இல்லை, ரஜினிக்கு மாமனார் வேடம், ஒத்துக் கொண்டு நடித்து இருக்கிறார்.
சரண்ராஜ், நிழல்கள் ரவி தம்பிகள் கூட்டணியில் ரவியே ராஜ்ஜியம் செய்கிறார், அமுக்கமான வில்லத்தனம் செய்து முந்துகிறார்.
வைஷ்ணவிக்கு சொல்லும் படியான வேடம், ரஜினியின் தம்பி மனைவியாக அடக்கம் அதே சமயம் அத்தானுக்காக பேச வேண்டிய இடத்தில் பொங்கி தீர்க்கும் பெண் என்று பெயர் எடுத்து இருக்கிறார்.
படத்தில் உணர்வு பூர்வமான காட்சிகள் நிறைய வருகின்றன. நடிகர்களும் அழுத்தமான நடிப்பை வழங்கி உள்ளனர்.
அப்படி இருக்க ரஜினி படமாச்சே, நகைச்சுவை இல்லாமலா, முதல் பாதியில் இதற்காகவே பயில்வான் ரங்கநாதன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளார். ரஜினிக்கும் பயில்வானுக்குமான காமெடி வேதியல் அவ்வளவு அருமையாக வந்துள்ளது. ரஜினி பட காமெடி வரிசையில் இது ஒரு கிளாசிக் என்று சொல்லலாம்.
இது அக்மார்க் ரஜினி படம், பெயரில் இருந்து படம் முழுக்க தூக்கி சுமக்கிறார் ரஜினி.
மாமன் பெண்ணிடம் காட்டும் வெகுளித்தனமான காதல் ஆகட்டும்,
தம்பிகளிடம் காட்டும் மிதமிஞ்சிய அன்பாகட்டும், தந்தையிடம் கெஞ்சி நிற்கும் அப்பாவித்தனமான சுபாவம் ஆகட்டும், ரஜினி ஒரு ஒப்பற்ற குணச்சித்திர நடிகர்.
கதையின் பிற்பகுதியில் தாடி வைத்து முரட்டு தோற்றத்தில் வசனங்களே இன்றி கண் அசைவு, பார்வை, நடை உடை, பாவனை என்று அதகளம் செய்யும் இடங்களில் எல்லாம் ரஜினி தான் ஒரு ஈடு இணையற்ற சூப்பர் ஸ்டார் என்று எழுந்து நிற்கிறார்.
இளையராஜா பாடல்களில் மட்டுமின்றி, பின்னணி இசையில் ஒரு முழு கச்சேரியே செய்கிறார். அந்த அறிமுக கோரஸ் வாய்ஸ் இன்று வரை தர்மதுரைக்கான ஒரு signature ட்யூன் என்று சொல்லலாம்.
மாசிமாசம் பாடல் இன்று வரை தமிழ் சினிமாவின் சிருங்காரப் பாடல்கள் பட்டியலில் ஒரு முக்கிய இடம் பிடித்துள்ளது என்பதில் ஐயமில்லை.
படத்தில் வரும் பல பாடல்கள் இளையராஜா - ரஜினி கூட்டணியின் வெற்றி மகுடத்தின் இன்னொரு வைரக்கல் என்று சொன்னால் மிகையாகாது
ரஜினி சினிமாக்களின் ஆக சிறந்த தத்துவப் பாடல்களின் பட்டியல் ஒன்று போட்டால் அதில் "அண்ணன் என்ன தம்பி? " என்ன "மற்றும் ஆண் என்ன பெண் என்ன? " பாடல்களுக்கு ஒரு முக்கிய இடம் நிச்சயம் உண்டு.
யேசுதாஸும், எஸ்பிபியும் ஆளுக்கொரு பாடலில் தங்கள் குரல் ஆவர்த்தனம் செய்து இருப்பார்கள்.
அண்ணன் என்ன தம்பி என்ன? பாட்டில் கெத்தாகவும் ஆண் என்ன பெண் என்ன? பாட்டில் அப்பாவியாகவும் ரஜினியின் நடிப்பு வெவ்வேறு தளங்களில் பயணிக்கும், இது பின்னாட்களில் ரஜினியின் ஒரு முத்திரை நடிப்பாகவே மாறி போனது.
தம்பிகள் செய்யும் கொலைக்காக சிறை செல்லும் வரை போகிறது தர்மனின் நிலை, அப்போதும் அவனுக்கு தம்பிகளின் நல்வாழ்க்கையே முக்கியமாகப் படுகிறது. கொலைப்பழியை தியாகியாக ஏற்று கொள்கிறான் தர்மன்.
சிறை செல்லும் தர்மன் தந்தையை இழக்கிறான், வீட்டையும் சொத்துக்களையும் இழக்கிறான்.தான் பெற்ற பிள்ளையையும் பறிகொடுத்து விட்டு தன் மனைவியை ஒரு வேலைக்காரியாகப் பார்க்கும் பரிதாப நிலைக்கு செல்கிறான்.
அந்த நிலையில் தான் தர்மனுக்கு வாழ்க்கைப் புரிகிறது. துரோகம் சுடுகிறது.
தம்பிகளைத் தேடி சென்று அடித்து துவைக்கிறான், தன் தம்பி மனைவி தன்னிடம் தாலி வரம் கேட்டு நிற்க மனமிரங்கி அவர்களை உயிரோடு விட்டு விட்டு செல்கிறான்.
அந்தக் காட்சியில் ரஜினியின் நடிப்பு அளவாகவும் அழுத்தமாகவும் இருக்கும், அதுவே அந்தக் காட்சிக்கு ஒரு காலம் தாண்டி நிற்கும் அழகைக் கொடுத்து இருக்கும்.
படத்தில் ரஜினியின் கெட்டப் தனி குறிப்புக்கு உரியது, அந்த கருப்பு தோல் ஜாக்கெட் மற்றும் வெண்மை கலந்த கறுந்தாடி ரசிகர்களின் மனங்களை வென்ற ஒரு கெட்டப்.
சந்தைக்கு வந்த கிளி பாட்டில் வரும் பச்சை நிற உடையில் வரும் ரஜினி பல ஆண்டுகளாக பொங்கல் வாழ்த்து அட்டைகளை அலங்கரித்து வந்தன.
பட்டணத்துக்கு வரும் ரஜினியின் தொப்பி கண்ணாடி பூப்போட்ட சட்டை மற்றும் மஞ்சள் வண்ண பேகி பாண்ட், அதை எல்லாம் சூப்பர் ஸ்டார் மட்டுமே போட்டு கெத்து குறையாமல் திரையை அலங்கரிக்க முடியும்
படத்தில் ரஜினியின் தம்பிகளாக வரும் சரண்ராஜ் நிழல்கள் ரவி ஒரு செட் வில்லன்கள் என்றால் இன்னொரு செட் வில்லன்களும் படத்தில் உண்டு.
தடம் மாறிப் போன தம்பிகளின் வாழ்க்கையைக் கடைசியாகவும் ஒருமுறை அந்த இரண்டாம் செட் வில்லன்களிடம் இருந்து காப்பாற்றும் ரஜினி, அவர்களுக்கு மன்னிப்பை உடனே வழங்காமல் முடித்து வைக்கும் கிளைமேக்ஸ் கைத்தட்டல் ரகம்.
கிட்டத் தட்ட வயதான ரஜினிக்கு டயலாக்கே கிடையாது. தன் உடல் மொழியால் மட்டுமே திரையை ஆள்வார், தேர்ந்த நடிகரால் மட்டுமே சாத்தியப் படுத்த கூடிய விஷயம் அது.
ரஜினியால் மட்டுமே முடிந்த சில திரை மந்திர கணங்கள் கீழே கொடுத்து இருக்கிறேன்.
கிராமத்தில் வேலைக்காரனோடு பேசும் போது ரஜினி சொல்லும் விஷயம் " "ஆண்டவனை நம்பாதவனுக்கு மனசில் நிம்மதி இருக்காது, வேலைக்காரனை நம்புவனுக்கு கையில் காசு இருக்காது "
ஆண் என்ன பெண் என்ன பாட்டுக்கு முன்னால் கோமாளி வேடத்தில் கண் கலங்கி நிற்கும் ரஜினி, தன் பேண்ட் அவிழ்க்கப்பட்டது கூட தெரியாமல், அது புரிந்ததும் அந்த ஒரு கணம் வெட்கம் அவமானம் எனக் கலங்கும் வினாடி ரஜினி என்னும் மகா கலைஞரின் மந்திரம் நம்மைக் கட்டுண்டு கிடக்கவைக்கும்.
சிறையில் தன்னைப் பார்க்க வந்திருக்கும் மனைவியும் குழந்தையும் சந்திக்கும் காட்சியில் குழந்தையை மீண்டும் பாய்ந்து வந்து கொஞ்சும் ரஜினி நெஞ்சில் துண்டு போட்டு இடம் பிடிக்கிறார்.
தன் மீது பாயும் குண்டைத் தானே வெளியே எடுப்பது எல்லாம் ரஜினி மேஜிக் காட்சிகள்.
தர்மதுரை தேவா என்னும் கன்னட படத்தின் ரீமேக், அதில் விஷ்ணுவர்தன் நடித்து இருப்பார். தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு மோகன்பாபு நடித்து இருந்தார்
தர்மதுரை இந்தியில் எடுக்கப்பட்டது தியாகி என்ற பெயரில் ரஜினியே நடித்து 1992ஆம் வெளிவந்தது. தமிழில் இருந்த அளவுக்கு இந்தியில் இல்லை என்பது பலரது கருத்து.
தர்மதுரை முதலில் காலம் மாறிப் போச்சு என்ற பெயரில் தான் பூஜை போடப்பட்டது, பின்னர் கைவிடப்பட்டு தர்மதுரை என்று வேறு கதையில் வெளியானது.
இயக்குனர் ராஜசேகர் ரஜினியின் விருப்பப்படி 1991 பொங்கலுக்கு இந்தப் படம் வெளிவரும் படி கடுமையாக உழைத்து அதை நிறைவேற்றியும் கொடுத்தார்.
தர்மதுரை 100வது நாள் அன்று இயக்குநர் ராஜசேகர் துரதிருஷ்ட்டவசமாக மரணமடைந்தார் என்பது ஒரு சோகம்.
கிட்டத்தட்ட கடும் சோகம் நிறைந்த இந்தக் கதையை ரஜினி என்ற சூப்பர் ஸ்டார் தன் திறமையானப் பங்களிப்பு மூலம் ஒரு சிறந்த பொழுது போக்கு சித்திரமாக்கி நமக்கு வழங்கி இருக்கிறார் என்பது காலத்தால் மறுக்க முடியாத உண்மை.
பெரும்பாலும் கோபக்கார இளைஞனாய் 80களில் வலம் வந்த ரஜினி மெல்ல ஒரு குடும்பத் தலைவனாய் திரையில் ஜொலிக்க ஆரம்பித்தார், அதற்கு தர்மதுரை முதல் படி.
- தேவ்
(ஸ்கெட்ச் கிரெடிட் : அறிவரசன்)
|