திரைக்கு வந்து 26 வருடங்கள் ஆன ஒரு படத்தைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
1994ஆம் ஆண்டு, தமிழ் புத்தாண்டுக்கு வெளிவந்தப் படம் வீரா.
தயாரிப்பு : பி ஏ ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
இசை : இளையராஜா
இயக்கம் : சுரேஷ் கிருஷ்ணா
ரஜினிகாந்த் அவர்களின் திரைவாழ்க்கையில் காமெடி படங்களுக்கு சிறப்பான இடம் எப்போதும் உண்டு.
தில்லு முல்லுக்குப் பின் வந்த ரஜினி படங்களில் காமெடிக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்த படம் வீரா என்று சொல்லலாம்.
அண்ணாமலை என்று ஒரு வெகு பரபரப்பான படம் கொடுத்த கூட்டணி ரஜினி - சுரேஷ்கிருஷ்ணா, இவர்களிடம் இருந்து தீக்கனலாய் ஒரு படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தென்றலாய் வந்த படம் தான் வீரா.
தமிழ் நாட்டைப் பொறுத்த வரை நட்சித்திர நடிகர்கள், இரண்டு மனைவியர் கதைகளில் நடிப்பது லேசான காரியம் அல்ல. இரண்டு நாயகியரோடு நடிப்பது வேறு இரு நாயகியரும் கதையில் ஒரு சேர மனைவிகளாக கொண்டு நடிப்பது வேறு.
ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழ் கலாச்சாரம் என்று வரிக்கப்பட்ட காலக்கட்டம் அல்லவா.
இதற்கு முன் ரஜினி எங்கேயோ கேட்ட குரல் படத்தில் இரு தாரம் கொண்டவராக நடித்து இருந்தாலும் அது முற்றிலும் வேறு களம்.
வீரா எடுத்துக்கொண்டது கொஞ்சம் கத்தி மேல் நடப்பது போன்ற ஒரு களம் தான். நாடு போற்றும் நாயகனை வைத்து இரு தாரப் படம் எடுக்கும் போது, அதுவும் ஏராளமான தாய்க்குல ரசிகைகளைக் கொண்டிருக்கும் ஒருவரின் பிம்பம் சேதாரம் இன்றி எடுப்பது பெரும் பொறுப்பு.
சுரேஷ் கிருஷ்ணாவை நம்பி இந்தப் படத்தை ரஜினி கொடுத்திருக்கிறார்.
1994 ஆம் ஆண்டு சென்னை எழும்பூரில் இருக்கும் ஆல்பர்ட் திரையரங்கத்தில் இந்தப் படத்தைப் பார்த்தேன்.
கதைக்கு வருவோம், பட்டணத்துக்கு ஆர்மோனிய பெட்டியோடு வந்து சேரும் பாட்டுக்கார நாயகன் அங்கு ஒரு கூட்டுக்காரனை சந்திக்கிறான்.
இருவரும் சேர்ந்து பல முயற்சிகளுக்குப் பின் ஒரு பாட்டு போட்டியில் கலந்து கொள்கிறார்கள். போட்டியில் பரிசாக ஒரு லட்சம் பெறுகிறார்கள்.
போட்டி நடத்தும் நிறுவன முதலாளி வீராவுக்கு மேலும் பாட வாய்ப்புகள் தர முன்வந்தும் வீரா அதை எல்லாம் மறுத்து விட்டு தன் சொந்த ஊருக்கே திரும்ப முடிவு செய்கிறான்.
ஊருக்கு திரும்பும் நிலையில் தான் யார்? தான் எதற்காக பட்டணம் வந்தேன் என்ற கதையை பட்டணத்தில் கிடைத்த தன் புதிய நண்பனிடம் சொல்கிறான்.
முத்து வீரப்பன் ஒரு சின்னக் கிராமத்துவாசி. அந்த ஊரில் எந்த பொறுப்பும் இன்றி நண்பர்களோடு சுற்றி திரிந்து ஆனந்த வாழ்வு வாழ்கிறான். நித்தம் சேட்டை தான்.
அப்போது அவன் வாழ்க்கையில் இரண்டு சம்பவங்கள் நடக்கின்றன.
முதல் சம்பவம் பார்ப்போம்.
கார்த்திகை தீபம் அன்று அவன் ஊருக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கும் சாஸ்திரிகள் ஒருத்தர் வருகிறார். அவருடன் அவர் அழகிய மகள் தெய்வயானையும் வருகிறாள்.
அவளைக் கணடதும் முத்து காதலில் விழுகிறான். எப்படியாவது அவளைத் தன் உரிமையாக்கிக் கொள்ள விரும்புகிறான்.
அதன் பொருட்டு பாடும் திறமை கொண்ட முத்து, சாஸ்திரிகளிடம் இசை பயிலும் சாக்கில் அவர்கள் வீட்டுக்குள் நுழைய திட்டம் போட்டு அதில் சில பல தில்லுமுல்லுகள் செய்து வெற்றியும் அடைகிறான்.
சாஸ்திரியிடம் சங்கீதம் கற்கிறான், ஆனால் தன் தேவியிடம் நெருங்க வழி இன்றி தவிக்கிறான்.
அவளை அடைய சேட்டை கலந்த ஒரு திட்டம் போடுகிறான், அதை தெய்வயானை கேட்டு விடுகிறாள், முத்து மீது அவள் கொண்டிருந்த நம்பிக்கை உடைந்துப் போகிறது.
முத்துவுக்கும் தெய்வயானைக்கும் நடக்கும் அந்த உரையாடல் விளையாட்டுத் தனமாக இருக்கும் முத்துவை யதார்த்த வாழ்க்கைக்கு இழுத்து வருகிறது.
தேவிக்கு வாக்கு கொடுக்கிறான், சங்கீதம் மட்டும் தீவிரமாக படிக்கிறான். அவளைத் திரும்பியும் பார்க்காமல் இருக்கிறான். வைராக்கியமாக படித்து சாஸ்திரிகளிடமும் பாராட்டு பெறுகிறான்.
விடை பெறும் நேரத்தில் தேவயானி
யிடம் தன் காதலை அழுத்தமாக சொல்லுகிறான், தான் முன்பு காதல் சொல்ல வந்த முறையில் குறை இருந்தாலும் தன் காதலில் எந்த பழுதும் இல்லை, தனக்கு திருமணம் என்று ஒன்று நடந்தால் அது அவளோடு தான் என்று சொல்லி செல்கிறான். தேவியின் மனமும் முத்துவிடம் காதலில் சாய்கிறது.
இப்போது சம்பவம் இரண்டைப் பார்ப்போம்
அந்த ஊர் பண்ணையாரிடம் முத்துவின் தாயார் கடன் வாங்கி இருக்கிறார்.பண்ணையார் மகனுக்கும் முத்துவுக்கும் தேவி விஷயத்தில் ஒரு மோதலும் இருக்கிறது.
பண்ணையார் முத்துவின் தாயை கடனைத் திருப்பிக் கேட்டு கன்னத்தில் அடித்து விடுகிறார்.
தாயின் மீது பாசம் கொண்ட முத்து வெகுண்டு எழுகிறான். அவன் தாய் அவனைத் தடுத்து அவன் ஆவேசத்தை தடுத்து, உன் கோபத்தை பண்ணையார் கடன் அடைப்பதில் காட்டுமாறு சொல்கிறாள். முத்துவும் புரிந்துக் கொள்கிறான், பட்டணம் வருகிறான்.
பட்டணத்தில் நடந்ததை தான் ஆரம்பத்தில் பார்த்தோமே. பட்டணம் வந்து முத்து வீரப்பன் வீரா ஆகிறான்
பாட்டு போட்டியில் கலந்து கொள்ள பல வழிகளில் முயற்சி செய்யும் போது ஒரு ரவுடியின் பகை, ஒரு போலீஸ்காரின் அன்பு, பாட்டு கேசட் நிறுவனர் மகளின் ஆசைப் பார்வை எல்லாமே வீராவுக்கு கிடைக்கிறது.
அது அப்படியே இருக்கட்டும்.
மீண்டும் ஊருக்கு வரும் வீரா பண்ணையாரின் கணக்கைத் தீர்க்கிறான். அடுத்து தன் காதலி தேவியைத் தேடி ஓடுகிறான். அங்கு அவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்து நிற்கிறது.
வீரா ஒரு சூப்பர் ஸ்டார் நகைச்சுவை சித்திரம், இது படத்தின் அறிமுக காட்சியிலே நமக்கு அழகாக பதிய வைக்கப்படுகிறது.
டைட்டில் ஓடும் காட்சியில் பாடல்களின் பின்னணி மட்டும் ஒலிக்க ஒரு பேருந்தில் ரஜினி கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகம் ஆகிறார். பேருந்து விட்டு இறங்கும் ரஜினியின் முகம் திரையை ஆக்ரமிக்கும் போது இசை நின்று விடுகிறது. அங்கும் இங்கும் பார்க்கும் ரஜினி பின் சரியா திரையைப் பார்த்து அட இங்கே இருக்கீங்களா என்ற தோரணையில் ஒரு சல்யூட் வைப்பார், அது ரசிகர்களுக்காக சூப்பர் ஸ்டார் வைக்கும் முத்திரை சல்யூட்.
சுரேஷ் கிருஷ்ணா ரஜினி அறிமுகக் காட்சிகளில் தனி முத்திரைகள் பதித்த இயக்குனர் என்பதில் ஐயமில்லை
கதைக்கு மீண்டும் வருவோம்
தன் காதலி தேவியை இழக்கும் வீரா, தாயின் வற்புறுத்தலால் மீண்டும் சென்னை வந்து பாட்டு வாய்ப்புகளை ஏற்று கொள்கிறார்.
பாட்டு கேசட் நிறுவன முதலாளியின் மகள் ரூபாவை திருமணமும் செய்து கொள்கிறார். இதற்கு பிறகு சந்தர்ப்ப வசமாய் தேவியும் வீராவின் வாழ்க்கையில் திரும்பி வருகிறார்.
இது ஒரு உணர்ச்சி பூர்வமான கதைக்கான களமாக இருந்தாலும் இயக்குனர் வெகு சாமர்த்தியமாக படத்தை நகைச்சுவை பாதையில் ஜோராக நகர்த்துகின்றனர்.
முத்து வீரப்பன் கதை என்ன ஆகிறது?
இரு மனைவிகளையும் அவன் எப்படி சமாளித்தான் என்பது எல்லாம் படத்தின் இரண்டாம் பாதியில் இயக்குனர் சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார்.
வீரா படத்தில் ரஜினியின் நண்பர் வேடத்தில் செந்தில். மிகவும் கனமான பாத்திரம், ரஜினியோடு படம் முழுக்க வருகிறார், ரஜினியோடு சேர்ந்து சிரிக்க வைக்கிறார்.
அது என்ன முத்து வீரப்பன், முன்னாடியும் கட் பின்னாடியும் கட், நடுவில் இருக்கும் வீரா போதும், அது தான் சூப்பர் ஹிட் என்று இவர் பேசும் வசனம் விசில் அடிக்க வைக்கிறது.
கடவுள் படங்களை வைத்து இவர் கொடுக்கும் ஐடியா சொதப்பும் இடமும், பெருமாள் கோயில் காட்சியும் தொடர் சிரிப்பைக் கொட்டும் காட்சிகள்
கிராமத்தில் ரஜினிக்கு நண்பர்களாக கொஞ்ச நேரம் வருகிறார்கள் ஒய் ஜி மகேந்திரன், விவேக், இவர்கள் கூட்டணியில் ரஜினி செய்யும் How is it? முத்திரை வசனக் காட்சிகள் வெகு பிரபலம்.
ரஜினி தாய் வேடத்தில் நடிகை வடிவுக்கரசி. பாந்தமான நடிப்பில் நிற்கிறார்.
வினுசக்ரவர்த்தி கிராமத்து பண்ணையாராக வந்து முறுக்கு மீசையில் மிரட்டுகிறார்.கிட்டத்தட்ட அண்ணாமலை கெட்டப்பிலே வருகிறார்.
அஜய் ரத்னம் பண்ணையார் மகனாக வருகிறார். ரஜினியோடு நாயகிக்காக மோதுகிறாr. அடி வாங்கி விட்டு நகர்கிறார்.
நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் ரஜினிக்கு பாட்டு வாத்தியார் வேடம் ஏற்று வருகிறார்.கொஞ்சம் தளபதியில் வரும் இவரது வேடத்தை நினைவு படுத்துகிறது.
படம் நகரத்துக்கு வரும் போது அங்கு நாம் இன்னொரு நட்சத்திரப் பட்டாளத்தை சந்திக்கிறோம்.
இசைத் தட்டு நிறுவன முதலாளியாக நடிகர் ஜனகராஜ், நாயகியின் தந்தை மற்றும் ரஜினிக்கு மாமனார் வேடம். சிரிக்க வைக்கிறார். குறிப்பாக துணிக்கடை காட்சியும் ரஜினி விருந்துக்கு வரும் காட்சியும் இவர் சிக்ஸர் அடிக்கும் இடங்கள்.
லிவிங்ஸ்டன் படத்தில் இருக்கிறார், இவருக்கு நிறுவன மேலாளர் வேடம், அளவான வில்லத்தனம் செய்து விட்டு போகிறார். கதையை முடித்து வைக்க ஒரு பாத்திரம் இவருடையது.
மகேஷ் ஆனந்த் என்று ஒரு அறிமுக வில்லனும் படத்தில் உண்டு. ரஜினியோடு இவருக்கு இரண்டு அதிரடி சண்டைக்காட்சிகள் உண்டு. ரஜினியும் இவரும் டூப் போடாமல் சண்டைப் போட்டு இருப்பார்கள்.
படத்தில் இரண்டு நாயகிகள் தமிழ் மற்றும் தெலுங்கு தேசங்களை அன்றைய தேதியில் ஆண்டு வந்த இரண்டு நட்சத்திரங்கள் தான் அவர்கள்.
ஒன்று மீனா, இன்னொன்று ரோஜா.
மீனா அமைதியான அழகு, ரோஜா கொஞ்சம் ஆரவாரமான அழகு, இரண்டையும் ஆளும் ஆண்மையின் உயரம் ரஜினி.
படத்தில் இசை பெரும் பங்கு வகிக்கிறது.
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஆட - வெகு காலம் வரை தமிழ்நாட்டு இன்னிசை மேடைகளை அலங்கரித்த பாடல்களில் ஒன்று
மலைக்கோயில் வாசலிலே சூப்பர் ஸ்டார் படப் பாடல்களில் மிகுந்த அழகுணர்ச்சியோடு எடுக்கப்பட்ட பாடல்களில் ஒன்று என்று சொல்லலாம்
இன்று வரை ரஜினி ரசிகர்கள் கொண்டாடும் பாடல்களில் இதுவும் ஒன்று.
ரஜினியின் சேட்டையைக் காட்டவே படத்தில் இரண்டு பாடல்கள் உண்டு.
அடி பந்தலில் தொங்குகிற காய்க்கு எல்லாம்..
அடி ஆத்துல என் அன்னக்கிளி...
இந்த இரண்டு பாடல்களிலும் ரஜினியின் துள்ளல் எள்ளல் எல்லாம் கரை புரண்டு ஓடும்.
முந்தி முந்தி.. பாட்டு கொஞ்சமே என்றாலும் நிறைவாக வந்து போகும்
வாடி வெத்தலப் பாக்கு பாட்டு நகரத்து குத்து, ரோஜாவின் கவர்ச்சி விருந்து.
மாடத்திலே கன்னி மாடத்தில் ரஜினியின் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாத ஒரு பாட்டு. மீனாவின் கொஞ்சல் அழகு கெஞ்ச வைக்கும் பாட்டு அது.
வீரா படத்தில் ஒளிப்பதிவாளர் பற்றி பேசாமல் இருக்க முடியாது. முதல் காட்சி மலைக்கோவில் பாட்டில் வரும் முத்து என்று விளக்குகளால் பெயர் எழுதப் பட்ட இடம் திரையில் நம் கண்களை நிறைத்து விடும். அதில் ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குனர் பணி நம்மை கைத்தட்ட வைக்கும்.
இன்னொரு காட்சி மீனாவை ரஜினி மீண்டும் அந்த அரங்கத்தில் சந்திக்கும் காட்சி, ஒவ்வொரு விளக்காக ரஜினி போட்டு பின் மெல்லிய வெளிச்சத்தில் மீனா தெரியும் காட்சியும் ஒளிப்பதிவுக்கு சபாஷ் போட வைக்கும் இடம்.
வீரா படம் கண்ணுக்கு குளுமையான ராஜமுந்திரியில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த கிராமத்து ஆற்றோர காட்சிகள் அவ்வளவு அழகு.
வீரா படத்தில் ரோஜா, ரஜினியின் முகத்தைக் கோலமாக வரையும் காட்சி படத்தின் கலைக் குழுவுக்கு சலாம் போட வைக்கும் ஒரு இடம். இது இப்படத்தின் ஒரு சிறப்பம்சம் என்றும் சொல்லலாம்.
ரஜினி - மீனா காதல் ஒரு ரசனையான கவிதை.ரஜினியின் குறும்பும் மீனாவின் எழிலும் போட்டி போட்டு ரசிகர்களை மகிழ வைக்கிறது. ரஜினி -மீனா ஜோடிப் பொருத்தம் ரசிக்க வைக்கிறது.
ரஜினி - ரோஜா காதல் ஒரு தலையாக ஆரம்பித்து பின்னர் திருமணத்தில் சேர்க்கிறது. அதில் ஒரு சின்ன பொறுப்பு சார்ந்த ரஜினி தெரிகிறார். ரோஜா ஏக்கம் கொண்ட காதலியாகவும் அன்பான மனைவியாகவும் வருகிறார்.
ரஜினியைப் பொறுத்த வரை பல்வேறு வண்ணம் பொருந்திய ஒரு பாத்திரம். கிராமத்து இளைஞனாக கொண்டாட்டம் காட்டுகிறார் என்றால் நகரத்துக்கு வந்த பிறகு பொறுப்பு கூட்டுகிறார்.
நகைச்சுவை காட்சிகளில் ரஜினியின் டைமிங் அருமையாக வேலை செய்து இருக்கிறது.
பெருமாள் கோயில் திருமண காட்சியில் அய்யரிடம் மந்திரம் சொல்லும் காட்சி, விருந்துக்கு சென்று அங்கே நடக்கும் சிரிப்பு கலவரம் ஆகட்டும் ரஜினி தான் காமெடியிலும் சூப்பர் ஸ்டார் என்று நிருபித்திருக்கிறார்.
வீரா, மோகன் பாபு நடித்த அல்லூரி முகடு என்ற தெலுங்குப் படத்தின் மறு ஆக்கம்.
தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்த இந்தப் படம் ரஜினிக்காக பல மாறுதல்கள் கண்டது.
சுரேஷ் கிருஷ்ணாவின் ஒரு சிறந்த படமிது என்பது என் கருத்து.
கொஞ்சம் தவறினால் சூப்பர் ஸ்டார் பிம்பத்திற்கு பெரிய வேட்டு வைக்கக் கூடிய கதையை மிகவும் சிரத்தை எடுத்து ரஜினி ரசிகர்களுக்கும் தமிழ் குடும்பங்களும் கொண்டாடி மகிழும் வண்ணம் ஒரு நல்ல நகைச்சுவை படமாக கொடுத்து இருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.
அண்ணாமலை, பாட்சா கொண்டாப்படும் அளவுக்கு வீரா கவனிக்கப்படுவதில்லை என்பது என் தனிப்பட்ட எண்ணம்.
மூன்று மணி நேரம் ரசிகர்களை ஒரு இடத்தில் கட்டிப்போட்டு சிரிக்க வைப்பது எல்லாம் தனிக்கலை, அது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கைவந்த கலை என்று 90களில் அடித்து சொன்னப் படம் வீரா.
- தேவ்
ஓவியம் : அறிவரசன்
|