 கடந்த பல வருடங்களாகவே சூப்பர் ஸ்டார் ரஜினியின் பட டைட்டில்களை, அவரது பன்ச் வசனங்களை, அவரது பாடல் வரிகளை கூட பலரும் தங்கள் படத்திற்கு டைட்டிலாக வைத்துக்கொள்கிறார்கள். இதே போல சூப்பர் ஸ்டார் ரஜினி ஏதோ ஒரு சூழ்நிலையில் இப்படி இன்னொரு முன்னணி ஹீரோவின் பட டைட்டிலையோ அல்லது பாடல் வரிகளையோ தனது படத்திற்கு டைட்டிலாக வைத்தது உண்டா?
எம் ஜி ஆர் சிவாஜி படங்களின் டைட்டிலை தனது படத்திற்கு ஒரு போதும் பயன்படுத்தியது இல்லை, காரணம் மற்றவர்களின் புகழில் தான் குளிர்காய கூடாது என்பதுதான் அப்போதும் இப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கொள்கையாக இருந்து வருகிறது. அதே சமயம் சினிமாவில் வளர்ந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்த ஆரம்ப நிலையில் எம் ஜி ஆர், சிவாஜி ஆகியோரின் பாடல் வரிகளை டைட்டிலாக கொண்ட படங்களில் நடித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவை கூட ஒன்றிரண்டு படங்கள் தான். அதுவும் தயாரிப்பாளர் அல்லது இயக்குனர் ஆகியோரே முடிவெடுத்ததால் அப்படி டைட்டில்கள் வைக்கப்பட்டன. புரட்சி தலைவர் எம் ஜி ஆர் நடித்த இன்று போல் என்றும் வாழ்க என்கிற படத்தில் இடம் பெற்ற "அன்புக்கு நான அடிமை" என்கிற பாடல் வரி சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்திற்கு டைட்டில் ஆனது. அந்த படத்தை தேவர் பிலிம்ஸ் தயாரித்ததால் எம் ஜி ஆர் மீது கொண்ட பற்று காரணமாக அதை டைட்டிலாக வைத்தார்கள். தவிர அந்த கதைக்கு அந்த டைட்டில் பொருந்தி போனதும் ஒரு காரணம். அதே போல சிவாஜி கணேசன் நடித்த வியட்நாம் வீடு படத்தில் இருந்து "உன் கண்ணில் நீர் வடிந்தால்" என்கிற பாடல் வரி, பாலு மகேந்திரா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இன்னொரு படத்திற்கு டைட்டிலாக மாறியிருக்கிறது. இன்னொரு பக்கம் சிவாஜி கணேசன், சிவகுமார் இனைந்து நடித்த உயர்ந்த மனிதன் படத்தில் இடம்பெற்ற "என் கேள்விக்கு என்ன பதில்" என்று சிவகுமார் பாடும் பாடல் வரிகளும், P மாதவன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படம் ஒன்றுக்கு டைட்டிலாக வைக்கப்பட்டது. ஆனால் பின்னர் வந்த நாட்களில் வேறு எவையும் சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தின் டைட்டிலை ஆக்கிரமிப்பு செய்யவில்லை.
|