ஏப்ரல் 29-2011: ராணா படப்பூஜைக்கு நான் உட்பட சில ரசிகர்கள் AVM க்கு சென்றிருந்தோம்.! தலைவர் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுடன் நெற்றி நிறைய திருநீறுடன் சும்மா ஜம்முனு வந்து இறங்கினார்.
நாங்கள் எல்லோரும் தலைவா! தலைவா! தலைவா! தலைவா! என்று சந்தோஷ பரவசத்தில் அவரை பார்த்து வணங்கி கை அசைத்தோம்! தலைவரும் பதிலுக்கு கை அசைத்தவுடன் சந்தோஷம் பீறிட்டது! பின்பு தலைவர் “ராணாவாக” கெட்டப் மாற்றிக்கொண்டு வந்தார்!
ஆச்சர்யம் கலந்த சந்தோஷம்! தலைவர் சற்று டல்லாக இருந்ததை காண முடிந்தது. பூஜை முடிந்த உடன் தலைவர் கிளம்பிவிட்டார்.
அன்று மாலையே அதிர்ச்சியான செய்தி வந்தது. தலைவர் அவர்கள் வயிற்றுக்கோளாறு (Food Poison) காரணமாக "இசபெல்லா" மருத்துவமனையில் அனுமதி!
தமிழகம் முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு, குஜராத் முதல்வர் மோடி, தமிழக முதல்வர் கலைஞர், பத்திரிக்கையாளர் சோ, மற்றும் இதர தலைவர்கள் அன்று மாலையே தலைவரை மருத்துவமனையில் சந்தித்தனர். தலைவர் அவர்கள் அன்று மாலையே வீடு திரும்பினார்!
மே மாதம் இரண்டாம்/மூன்றாம் வாரங்கள் :
தலைவர் வீடு திரும்பிய மூன்றாவது நாள் மீண்டும் இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதைகள் கட்ட ரசிகர்களுக்கு கலக்கம் ஏற்ப்பட்டது!.
முதல்நாள் அனுமதிக்கப்பட்டபோதே மருத்துவர்கள் தலைவருக்கு முழுவதுமாக சரி ஆகாமல் வீடு திரும்ப வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் தலைவரோ அவர் மருத்துவமனையில் தொடர்ந்து இருந்தால் ரசிகர்கள் அவதிப்படுவார்கள் என்றும் வீண் வதந்திகள் பரவும் என்றும் சென்ற முறை தவிர்த்தார்.
ஆனால் இந்த முறை மருத்துவர்களின் அன்புக்கட்டளையை தவிர்க்க முடியவில்லை. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தலைவரின் உடல்நிலை நாளாக நாளாக மிகவும் மோசமானது! தலைவருக்கு Respiratory Infection தொற்றிக்கொண்டது! மூச்சுக்குழாய்யில் பிரச்னை வந்தது, சிறுநீரகம் பாதிப்படைந்தது. இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பாமர ரசிகன் முதல், படித்த ரசிகன் வரை குடும்பம் குடும்பமாக மனம் கலங்கினர்! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரசிகனும் கடவுளை மன்றாடி தொழுதனர்!
தனக்கென கோவிலுக்கு போகாத ரசிகனும் மணிக்கணக்கில் கோவிலில் தவம் கிடந்தான். அதன் பின்பு தலைவர் அவர்கள் மே 13 ஆம் தேதி "ராமச்சந்திரா" மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்!
அந்த சமயம் 2011 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வரும் நேரம்! ஒரு சில விஷமிகள் தலைவர் இறந்துவிட்டதாகவும், தேர்தல் முடிவுகள் வரும்வரை சொல்ல வேண்டாம் என்று மறைக்கப்படுவதாகவும் வதந்திகளை பரவவிட்டனர்! இந்த செய்தி காட்டுத்தீயை விட வேகமாக/ கேவலமாக பரவி எல்லா ரசிகர்களையும் கலங்கடிக்கச் செய்தது! அவர் மேல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் தங்களால் முடிந்தளவுக்கு வக்கிரத்தைக் கொட்டினர்.
அந்த விஷமிகள் சொல்லும் வகையில் தலைவரின் புகைப்படம் கூட மருத்துவமனையோ, தலைவரின் குடும்பமோ யாரும் வெளியிடவில்லை. அவர் எப்படி தான் இருக்கிறார், என்ன தான் உண்மையில் ஆனது என்று யாருக்கும் சொல்ல தெரியவில்லை. எல்லோரும் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தனர். ஆனால் ஒவ்வொரு சினிமா நட்சத்திரங்களும், அரசியல் ஆளுமைகளும் மருத்துவமனை விரைந்து தலைவரின் குடும்ப உறுப்பினர்களை பார்த்து நலம் விசாரித்து, ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதை பார்த்து மனசு கொஞ்சம் ஆறியது! இருந்தாலும் நம்மால் தலைவரின் முகத்தை கூட பார்க்க முடியவில்லை என்று ஒவ்வொரு சாமான்ய ரசிகரும் ஏங்கி தவித்தனர். ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக மருத்துவமனையில் சூழ்தனர்! வீடு திரும்பாமல் அந்த மருத்துவமனை வாசலிலே நிறைய ரசிகர்கள் தெருவில் உறங்கினர்! ஒவ்வொரு நாளும் தலைவரை பற்றி நல்ல செய்தி வராதா என்று மனசு புழுங்கி தவித்தனர். மீடியாக்கள் மருத்துவமனையிலேயே காத்துக் கிடந்தனர்!
தலைவர் ரஜினி என்பவர் ரசிகர்களுக்கு நல்ல நடிகர், நல்ல மனிதர், சிறந்த தலைவன், அண்ணன், அப்பா, கடவுள் என்பதை தாண்டி ஒரு வித சொல்லமுடியாத பந்தமானவர்! அவர் அனைத்து உறவுகள் கலந்த ஒரு கலவை.
நாட்கள் நகர்ந்தது...! தலைவரை மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முடிவெடுக்கப்பட்டது!
மே 28-2011: ரசிகர்களின் உணர்ச்சிவசப்பட்ட நிலையை உணர்ந்த தலைவரின் குடும்பம் தலைவரை பேசவைத்து ஒரு 1.5 நிமிட ஆடியோவை வெளியிட்டனர். சிம்ம குரலில் கர்ஜித்த தலைவன், குரல் உடைந்து பேசுவதை கேட்ட ஒவ்வொரு ரசிகனும் கண்ணீர் சிந்தினர். அவரை எதிரியாய் நினைப்பவர்கள் கூட "நல்ல மனிதன்" மீண்டு வரவேண்டும் என்று மனதார நினைத்தனர். அன்று இரவு தலைவரை ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் காட்சி இதயங்களை சுக்கு நூறாக உடைத்தது! மின்னலை போல, புயலை போல பரபர சுறுசுறுவென்று இருந்த மனிதன் நடக்க கூட முடியாமல் ஆம்புலன்ஸில் சென்றதை (முகத்தை ஒரு முறை கூட பார்க்க முடியாமல்) பார்த்த ரசிகர்கள் கதறி அழுதனர்.
ஜூன் - 2011 முதல் ஜூலை 12-2011 வரை:
அன்புத்தலைவருக்கு உயர்கட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டது. அவர் இல்லாத இந்த காலம் ஒவ்வொரு ரசிகனும் சுவாசிக்கும் மூச்சு இல்லதாதை போல் தவித்தனர். அவர் இல்லாத தமிழகம் வெறுமையானதாகத் தோன்றியது!
தலைவர் அவர்கள் பூரண உடல்நலம் பெற்று திரும்ப "சர்ச்சு, மசூதி, கோவில்" என்று உலகம் முழுவதும் ரசிகர்களுடன் ; குடும்பம் குடும்பமாக, நிறைய இடங்களில் பொதுமக்களும் பிரார்த்தனை செய்தனர்.
மண்சோறு சாப்பிட்டு, தீமிதித்து, , விரதங்கள் இருந்து, அக்னி சட்டி ஏந்தி, ஆயிரக்கணக்கான பால்குடங்கள் தூக்கி, அலகு குத்தி, ஆயிரக்கணக்கில் வேளாங்கனியில் மொட்டை அடித்து, பல பாதயாத்திரைகள் மேற்கொண்டு, கூட்டு பிரார்த்தனைகள், அங்கப்பிரதட்சணம் செய்து, முட்டி போட்டுக் கொண்டு மலை கோவிகளில் படி ஏறி என செய்யாத வேண்டுதல்கள் இல்லை, வேண்டாத சாமிகள் இல்லை! ரசிகர்கள் மற்றும் தமிழக மக்கள் முழுக்க முழுக்க கடவுளை மட்டும் நம்பி இருந்த நாட்கள் அவை!!!
தலைவர் அவர்கள் உடல் நலம் பெற்றுருப்பதாகவும் ஜூலை 13 ஆம் தேதி திரும்ப உள்ளதாகவும் அதிகாரபூர்வ செய்தி வெளிவந்தது! அனைத்து பிரார்த்தனைகளுக்கும் ஆண்டவன் பதிலத்து விட்டார் என்று அனைத்து ரசிகரும் மகிழ்ச்சி அடைந்தனர்! தலைவரை வரவேற்க எல்லா ஏற்பாடுகளும் தமிழகம் முழுக்க தீவிரமடைந்தது!
ஜூலை 13: தமிழகம் முழுவதிலும் இருந்து அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தலைவரின் போர்ப்படை காவலர்கள் காலையே சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தனர். தலைவர் வருவதாக சொன்ன நேரம் இரவு 09:40 pm. காலை 10 மணி முதலே டிராபிக் ஜாம்.
டிராபிக் காவலர்கள் வந்து வழியை மாற்றி மக்களுக்கு இடையூறு வராமல் உதவினர். தலைவரை வரவேற்க விமானநிலையம் முதல் போஸ் தோட்டம் வரை வழி நெடுக கட்டவுட், பேனர்கள் வைக்கப்பட்டது. மாலை 06:00 ஆனது!!! குதிரை வண்டிகள், மேளதாளங்கள், பட்டாசுகள், நடனங்கள் என்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விமான நிலையத்தை சூழ்ந்தனர். அது விமான நிலையமா அல்லது முதல் நாள் முதல் காட்சி திரையிடும் திரையரங்கமா என்று குழம்பும் அளவு அமர்க்களமாக இருந்தது.
1996ல் அமெரிக்காவிலிருந்து தலைவர் வந்த போது சென்னை விமானநிலையம் இவ்வாறான கொண்டாடத்தினை கண்டிருந்தது.... அதன் பிறகு 2011ல்தான்
சட்டம் ஒழுங்கை நிலை படுத்தும் காவலர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தலைவர் வெளியே வரும் வெளிவாயில் (GATE) நம்பரை சொல்லவில்லை. அவர் அந்த பக்கம் வருகிறார், இந்த பக்கம் வருகிறார் என்று கூட்டத்தை தந்திரமாக பிரித்தனர். பாவம் அவர்களால் 10% கூட்டத்தை மட்டும் தான் பிரிக்க முடிந்தது. 90% கூட்டம் ஏற்கனவே சரியான தகவலை அறிந்து CARGO நுழைவாயிலை அடைந்தனர். நூற்றுக்கணக்கான நேஷனல் லோக்கல் மீடியாக்கள் சூழ்ந்தன. அந்த இடமே ஒரு மிகப்பெரும் அதிர்வலையை உணர்ந்தது.
மணி 09:40 pm ஆனது! தலைவர் இறங்கினார்! அவ்வளவு தான், மரத்தின் மேல் இருந்த ரசிகன் முதல், தரையில் இருந்த ரசிகன் வரை அவர் முகத்தை பார்த்த தருணம் உணர்ச்சிவசப்பட்டு அழுது, ஆனந்த கூச்சலிட்டனர்! தெய்வத்தை பார்த்த பக்தர்கள் போல் மெய்மறந்தனர்!
காவலர்களின் தடுப்பை உடைத்து கொண்டு சீறிப்பாய்ந்தனர்! காவலர்கள் வேறு வழி இன்றி லட்டி சார்ஜ் செய்தனர். அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் தலைவரை நோக்கிப் பாய்ந்தனர்.
ரசிகர்களின் உணர்ச்சியை உணர்ந்த தலைவரும் ரசிகர்களை வணங்கி, கை கூப்பி நன்றி தெரிவித்தார்!
தமிழகம் ரஜினிக்கு உள்ள செல்வாக்கினையும், மக்கள் ஆதரவினையும் ரசிகர்களின் சக்தியையும் 1996க்குப் பிறகு மீண்டும் ஒருமுறை பார்த்தது!
தலைவர் அவர்கள் பத்திரமாக வீடு சென்று சேர்ந்தார்! ரசிகர்களும் நிம்மதியோடு வீடு சேர்ந்தனர்! இனி எல்லாம் நலமே :-)
- மனோஜ் சங்கர்
https://facebook.com/story.php?story_fbid=2300978436665776&id=100002609255833
|