"ரஜினி ரசிகர்களிடையே பாஜக ஆதரவாளர்கள் ஊடுருவி விட்டார்கள்.. ஐயகோ” என்று ஒரு கூக்குரல் சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஆங்கங்கே தென்படுகிறது.
குரல் கொடுப்பவர்களைப் பார்த்தால் அதி தீவிர திமுக ஆதரவாளர்களாக இருக்கிறார்கள்.
சரி.. இவர்கள் யாரை பாஜக ஆதரவாளர்கள் என்று சொல்கிறார்கள் என்று பார்த்தால், யாரெல்லாம் திருட்டு திமுகவை எதிர்க்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் பாஜக முத்திரை குத்துகிறார்கள். நாம் பாஜகவையும் ஆதரிக்கத் தேவையில்லை.. திமுகவையும் ஆதரிக்கத் தேவையில்லை. ஆனால் திமுகவை எதிர்த்தால் பாஜக ஆள் என்று முத்திரை குத்துவது அயோக்கியத்தனம்.
‘நமது இலக்கு சட்டசபைத் தேர்தல்தான்’ என்று தலைவர் மிகத் தெளிவாக மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே இருக்கிறார். சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் போது நாம் யாரை எதிர்த்துப் போட்டியிடப்போகிறோம்?
‘234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி’ என்றும் தலைவர் கூறியுள்ளார். எனில் அனைத்து அரசியல் கட்சிகளையுமே எதிர்த்துத்தான் போட்டி. ஆனால் அதில் நம்மை மூர்க்கமாக எதிர்த்து வருவது எந்தக் கட்சி? நம் கவனத்தை ஏன் உருப்படாத கட்சிகளின் மீது செலுத்தி கவனச் சிதறலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்?
1996-ம் ஆண்டில் நம்மால் கிடைத்த வெற்றியைச் சுவைத்து விட்டு, “அதெல்லாம் உங்களாலே இல்லை” என்று உடனடியாக மாற்றிப் பேசிய அயோக்கியர்கள் யார்?
மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதிக்குண்டான மரியாதையை ஒரு போதும் நம் தலைவர் கொடுக்கத் தவறியதில்லை. அவர் மறைந்த தினத்தன்று நள்ளிரவு அவரது பூத உடலைப் பார்க்க ஓடோடிச் சென்று அங்கே கதவடைக்கப்பட்டு திரும்பி வந்த நினைவிருக்கிறதல்லவா?
’ஹூ ஈஸ் த ப்ளாக்ஷிப்’ என்று முரசொலியில் நேரடியாகவே தாக்கி எழுதினார்களே.
எல்லாம் முடிந்து இந்த பாராளுமன்றத் தேர்தலிலும் கூட பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொன்ன கையோடு, ‘நண்பர் ஸ்டாலின்’ என்று சொல்லி திமுகவுக்கும் வாழ்த்து சொல்லியிருந்தார் தலைவர். ஆனால் அதன் பிறகு வெளியிட்ட அறிக்கையில் கூட தனது காழ்ப்புணர்ச்சியை நேரடியாகவே வெளிப்படுத்தியிருந்தாரே ஸ்டாலின்.
திமுகவின் பொறுப்பில் உள்ள எத்தனையோ பேர், “இந்தத் தேர்தலில் ரஜினி போட்டியிடவில்லையென்றாலும், பாஜகவுக்குத்தான் அவரது ரசிகர்கள் வாக்களித்தார்கள். அரசியலுக்கு வராமலேயே தோல்வியைச் சந்தித்து விட்டார்” என்று எழுதவில்லையா?
ஆக.. அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தலைவரை மட்டம் தட்டிக் கொண்டிருக்கிறவர்களை ஜனநாயக முறையில் எதிர்ப்பதும், அவர்களின் குறைகளை மக்களிடம் எடுத்துச் செல்வதும் நம் கடமை.
என் அரசியல் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் எதிர்வரும் தேர்தலில் நமக்கும் திமுகவுக்கும்தான் நேரடிப் போட்டி. இதைப் புரிந்து கொள்ளவில்லையென்றால் உங்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று அர்த்தம்.
எஞ்சிய கட்சிகள்.. அது அதிமுகவாக இருக்கட்டும், பாஜகவாக இருக்கட்டும்.. அதெல்லாம் கணக்கிலேயே வராது.. அப்படி இருக்கும் போது நம் இலக்கு எதுவோ அதை நோக்கி செயல்பட்டு அந்த எதிரி கொச்சையான தாக்குதல் நடத்தும் போதும் நாம் நாகரிகமாக எதிர்வினை ஆற்றாமல் இருந்தால் நாம் அரசியலைப் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம். அல்லது புரிந்தும் அயோக்கியத்தனம் செய்கிறோம் என்று அர்த்தம். இப்படி அரசியல் எதிரிகளை எதிர்ப்பதற்கு பதில் சம்பந்தமின்றி திரையுலக சண்டைகளை சிலர் கிளப்பி திசைதிருப்புகிறார்கள். 43 ஆண்டுகாலமாக தமிழ்த் திரையுலகில் அசைக்க முடியாத சாம்ராட்டாக மிகப் பெரிய வெற்றிகளுக்கு ஒரே சொந்தக்காரராக திகழும் ஒப்பற்றவர் தலைவர். சில்வண்டுகளின் சிறுகூக்குரல் அவரின் சாதனைகளைச் சீண்ட முடியுமா?!
சரி.. அரசியலில் அது ஏன் திமுகவை மட்டும் எதிர்க்க வேண்டும்? என்றும் கேட்கிறார்கள். மக்கள் விரோதப் போக்கு அரசியல் கட்சிகள் எல்லோரையும் எதிர்க்க வேண்டும்தான். ஆனால் யாரிடமிருந்து நாம் மக்களைக் காப்பாற்ற வேண்டுமோ... யார் ஆட்சி அதிகாரத்தை எப்படியாவது அடைந்து மக்களைத் துன்புறுத்துவார்களோ அவர்களைத்தான் அதிகமாக எதிர்க்க வேண்டும்.
பாஜகவுக்கெல்லாம் தமிழகத்தில் செல்வாக்கு அறவே இல்லை. அதிமுகவும் அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு அழிந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். . அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மையம் ஆகியவற்றையெல்லாம் மக்களே நிராகரித்து விட்டார்கள்.
ஒற்றை நோக்குடன் செயல்பட்டால்தான் வெற்றிக்கனியை இன்னும் அதிகமாக ருசிக்க முடியும்.
அதை நம் எதிரிகள் நன்கு புரிந்து வைத்திருப்பதால்தான் பல வழிகளில் உள் புகுறப் பார்த்து குழப்பி, திசை திருப்பி விடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதற்கு அப்பாவிகள் சிலரும் தெரியாமல் பலியாகிறார்கள். தேவையில்லாமல் இதர நடிகர்களின் ரசிகர்களையும், நடிகர்களையும் தரக்குறைவாகத் தாக்கிப் பதிவிடவும் சிலர் தூண்டி விடப்படுகிறார்கள். ஊடகங்களில் மீண்டும் மீண்டும் தலைவரை பாஜக ஆதரவு என்று முத்திரை குத்துகிறார்கள். நட்பு என்பது வேறு. ஆதரவு என்பது வேறு. நம் தலைவர் அனைவரிடமும் நட்பு பாராட்டுபவர்.
இவை எல்லாமே ஒரு குறுகிய நோக்குடன் சிலரால் திட்டமிட்டு நிகழ்த்தப்படுபவை. அவர்களின் தீய நோக்கம் ஒரு போதும் நடக்காது.
பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு வந்திருக்கிறது என்ற உடனேயே, “பிஜேபியின் B டீம்” என்ற கூக்குரலை மீண்டும் எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். ‘பாஜக ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல” என்று ஒரு வியாக்கியான விளக்கம் சொல்லி தமிழகத்தில் பாஜகவை அறிமுகப்படுத்தி வைத்ததே திமுகதான்.
“இனப்படுகொலைக்கு முக்கியக் காரணம் காங்கிரஸ். அத்துடன் ஒட்டும் இல்லை. உறவும் இல்லை” என்று சொல்லி சில மாதங்களிலேயே ஓட்டுக்காக அதனுடன் கூட்டு.
தலைவர் எல்லாருக்கும் பொதுவானவர்.
அதே வேளையில் தமிழகத்தில் கெட்டுப் போயிருக்கும் சிஸ்டத்தைச் சரி செய்யவும், குடிநீர்ப் பிரச்னை உள்ளிட்ட மக்களின் அத்தியாவசிய, வாழ்வாதாரப் பிரச்னைகளைத் தீர்க்கவும், மக்கள் தலைவரின் ஆட்சி ஒன்று மட்டுமே தீர்வு.
மக்கள் மன்றத்தில் எத்தனையோ பேர் மன்றப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டனர். வேறு கட்சிகளாக இருந்திருந்தால் உடனே ஓடிப் போய் மற்றொரு கட்சியில் சேர்ந்திருப்பார்கள். ஆனால் இங்கே அப்படி இல்லை. ஒவ்வொரு காவலரும் தலைவர்தான் முக்கியம் என்று இங்கேயேதான் இருக்கிறார்கள். இங்கேயே செயல்படுகிறார்கள். மீண்டும் இணைத்துக் கொள்ளச் சொல்லி அறவழியில் போராடுகிறார்கள். ஒரு சிலர் அப்படி மீண்டும் இணைத்துக் கொள்ளவும் பட்டிருக்கிறார்கள். இதான்... தலைவருக்குத் தானாகச் சேர்ந்த கூட்டம். தலைவருக்கு மட்டுமே இப்படி ஒரு காவலர் படை சாத்தியம்.
‘ஒண்ணும் செய்ய மாட்டோம்.. ஆனால் அங்கீகாரம் வேண்டும்’ என்று ஒரு சிலர் கிளம்பியிருக்கிறார்கள். மக்கள் மன்றத்தில் எல்லாம் தலைவருக்குத் தெரியாமல் நடக்கிறது என்றும் சிலர் கிளம்புகிறார்கள்.
இப்படியெல்லாம் கோஷம் போட்டு குழப்ப நினைக்கும் எல்லாவற்றுக்கும் பின்னால் ஏதோ ஒரு உள்குத்து இருக்கிறது. தலைவருக்கே அரசியல் கற்றுக் கொடுக்க நினைக்கும் அவர்களின் அறிவைக் கண்டு நான் வியக்கிறேன். தலைவருக்குத் தெரியாதது என்று எதுவுமில்லை.
2312மிகப் பெரும்பான்மையான தலைவரின் உண்மைக் காவலர்கள் மிகத் தெளிவாகவே உள்ளனர். அயோக்கியர்களின் பிரித்தாளும் திட்டம் எதுவுமே இங்கே எடுபடாது. ஏனென்றால் இது தலைவரின் அன்புக் கோட்டை.
- மாயவரத்தான் கி. ரமேஷ்குமார்
(இது முழுக்க ரமேஷ்குமார் சொந்தக் கருத்து)
|