படையப்பா... 90'ஸ் கிட்ஸ்களின் All Time Favorite.
எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் தலைவர் படம். தியேட்டர் அனுபவம் கூட இல்லை. "Deck" இல் பார்த்ததுதான். ஆனால் அது ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது.
சல்யூட் அடிக்கும் போது "இஷ்க் இஷ்க்" என நமக்கு நாமே Background Music கொடுப்பதில் தொடங்கி, ஸ்கூல் பேக்கை மாட்டும் பொழுது இது படையப்பா ஸ்டைல் என்று கூறியது வரை 90'ஸ் கிட்ஸை பதம் பார்த்த ஒரு படம்.
ஒவ்வொருவருக்கும் படையப்பா பற்றிய அனுபவம் ஒரு புத்தகம் பதிக்கும் அளவிற்கு இருக்கும் என்பதால் அதனுள் செல்லவிரும்பவில்லை.
ஆனால் புதன் அன்று (10/04/19) 20 வருடம் நிறைவு செய்த பின்பும் பக்கா ரஜினி material ஆக இருக்கும் இப்படத்தைப் பற்றிப் பேசி ஆக வேண்டுமே !!
இப்படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் கடைசிப் படமாக அமைந்தது. பராசக்தியில் துவங்கிய அந்தப் பயணம் படையப்பாவோடு நிறைவடைந்தது.
தேவர் மகன் திரைப்படத்திற்காக அவர் தனது உட்சபட்ச சம்பளத்தை வாங்கினார். அதைப் படையப்பாவில் முறியடித்தார் தலைவர்.
தலைவரை எம்ஜியாரோடு ஒப்பிட்டு பேசினாலும் சிவாஜி அவர்களோடு பல ஒற்றுமைகளைக் கொண்டிருந்தார் என்பது ஆச்சரியமான உண்மை !!!
உதாரணமாக இருவருக்கும் இயற்பெயர் வேறு , திரை பெயர் வேறு !!
ஆம், சின்னப் பிள்ளை கணேசன் தனது வீரசிவாஜி நாடகத்தின் போது பெரியாரால் சிவாஜி கணேசனாகப் பெயரிடப்பட்டார் !!!
நாற்பது வருடங்களாகத் திரை துறையில் நிலைத்து நின்றதாகட்டும், கருப்பு வெள்ளையில் துவங்கி வண்ணப்படங்களிலும் நடித்ததாகட்டும், இவ்விருவரும் பல ஒற்றுமையைப் பகிர்ந்து இருக்கின்றனர்.
படையப்பாவின் 20 வருட நிறைவை முன்னிட்டு , இருவருக்குமான 20 வித்யாசமான ஒற்றுமைகளைச் சற்றே அசை போடுவோம்.
1. இருவருமே 10 ஆண்டுகளுக்குள் 100 படங்களை முடித்தவர்கள்
2. கெளரவம் படத்தில் சிவாஜியின் கேரக்டர் பெயர் ரஜினிகாந்த். சிவாஜி படத்தில் ரஜினியின் கேரக்டர் பெயர் சிவாஜி.
3. அண்ணன் தங்கை பாசத்திற்கு இரு தலைமுறைகளில் எடுத்துக்காட்டாக விளங்கிய படங்கள் பாச மலர் மற்றும் முள்ளும் மலரும்.
4. இருவருமே இயக்குனர் நடிகர்கள். படங்களில் நடிப்பதை தவிர வேறு எந்த விஷயத்திலும் தலையிடாதவர்கள். தயாரிப்பாளருக்கு போதிய ஒத்துழைப்பு கொடுத்தவர்கள்.
5. இருவருமே தன்னம்பிக்கை நிறைந்தவர்கள். படங்களில் வேறு யார் நடித்திருந்தாலும் ரசிகர்களுக்குக் கவலையில்லை. படங்கள் அவர்களுக்காகத் தான் ஓடின.
6. இருவருமே நன்றி மறக்காதவர்கள். மற்ற கலைஞர்களுக்கு நிறைய உதவிகள் செய்தவர்கள். உடன் நடிக்கும் நடிக,நடிகையர்களுக்கு முக்கியத்துவம் இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வார்கள்.
7. இருவரின் படங்களிலும் ஆரம்பத்தில் ஜோடியாக நடித்துப் பின்பு தாயாகவும் சில நடிகைகள் நடித்தார்கள்.
அதே போல் மகளாக நடித்துப் பின்பு ஜோடியாகவும் சில நடிகைகள் நடித்தார்கள். இருவருக்கும் தாயாக நடித்த நடிகை பண்டரிபாய் அவர்கள்.
8. இருவருடனும் ஜோடியாக நடித்த நடிகைகள் - ஸ்ரீவித்யா, லட்சுமி, சுஜாதா, சுமித்ரா, ஸ்ரீப்ரியா, ஸ்ரீதேவி, சரிதா, அம்பிகா, ராதா. இருவருடனும் லதா ஜோடியாக ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துள்ளார்.
9. தமிழ் திரையுலகில் ஏ.ஸி. திருலோகச்சந்தர் மற்றும் எஸ்.பி.முத்துராமன் ஆகியோரின் உறவு முறை குரு-சிஷ்யன் உறவு முறையாகும்.
சிவாஜியின் அதிகப் படங்களை இயக்கியவர் ஏ.ஸி. திருலோகச்சந்தர். ரஜினியின் அதிகப் படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன்.
10. தேவர் பிலிம்ஸ் இயக்குனரான எம்.ஏ. திருமுகம் அங்கிருந்து வெளி வந்த பின் இரு வெளிப்படங்களை மட்டும் 1980ல் இயக்கினார்.
அவற்றில் ஒன்று சிவாஜி நடித்த தர்மராஜா. மற்றொன்று ரஜினி நடித்த எல்லாம் உன் கைராசி.
11. சிவாஜி நடித்த "அவன் தான் மனிதன்" மற்றும் ரஜினி நடித்த "ப்ரியா" ஆகிய படங்கள் சிங்கப்பூரில் படமாக்கப்பட்டன.
12. சிவாஜி நடித்த "பைலட் பிரேம்நாத்" மற்றும் ரஜினி நடித்த "தீ" ஆகிய படங்கள் இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பு.
13. சிவாஜி ஹீரோவாக நடித்த ஜஸ்டிஸ் கோபிநாத் மற்றும் நான் வாழ வைப்பேன் ஆகிய படங்களில் ரஜினி சிறு வேடங்களிலும், ரஜினி ஹீரோவாக நடித்த படிக்காதவன் மற்றும் விடுதலை ஆகிய படங்களில் சிவாஜி சிறு வேடங்களிலும் நடித்தனர்.
14. சிவாஜியின் சொந்த படமான மன்னன் படத்தில் ரஜினியும், ரஜினியின் சொந்த படமான படையப்பா படத்தில் சிவாஜியும் நடித்தனர்.
15. சிவாஜி தலைமுறை கலைஞர்களான கண்ணதாசன், வாலி, எம்.எஸ்.வி., டி.எம்.எஸ். போன்றோர் ரஜினியுடனும் பணி புரிந்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்தனர்.
அதே போல் ரஜினி தலைமுறை கலைஞர்களான வைரமுத்து, இளையராஜா, கங்கை அமரன், ஜேசுதாஸ், எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன் போன்றோர் சிவாஜியுடனும் பணி புரிந்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்தனர்.
16. சிவாஜி தலைமுறை இயக்குனர்களான ஏ.பீம்சிங், ஸ்ரீதர், டி. யோகநந்த்,பி.மாதவன், ஏ.ஸி. திருலோகச்சந்தர், சி.வி.ராஜேந்திரன், முக்தா சீனிவாசன், கே.விஜயன் போன்றோர் ரஜினியை வைத்தும் பின்னாளில் ஓரிரு படங்களை இயக்கினார்.
அதே போல் ரஜினி தலைமுறை இயக்குனர்களான எஸ்.பி.முத்துராமன், துரை, பில்லா கிருஷ்ணமூர்த்தி, ஏ.ஜெகந்நாதன், ராஜசேகர், பி.வாசு போன்றோர் சிவாஜியை வைத்தும் ஓரிரு படங்களை இயக்கினர்.
17. இயக்குனர் பாரதிராஜா சிவாஜி மற்றும் ரஜினியை வைத்து தலா இரு படங்களை இயக்கினார். பாக்கியராஜ் இருவருடனும் தலா ஒரு படங்களில் இணைந்து நடித்தார்.
18. மெல்லிசை மாமணி வி. குமார் சிவாஜி நடித்த நிறை குடம் மற்றும் ரஜினி நடித்த சதுரங்கம் ஆகிய இருவரின் ஒரே ஒரு படங்களுக்கு மட்டும் இசை அமைத்துள்ளார்.
19. எஸ்.ஏ.சந்திரசேகரன், மனோபாலா, ஆர்.வி.உதயகுமார் போன்ற பின்னாளில் புகழ் பெற்ற இயக்குனர்கள் சிவாஜி மற்றும் ரஜினியை வைத்து தலா ஒரு படங்களை இயக்கினர்.
20. சில படப்பெயர் ஒற்றுமைகள். முரடன் முத்து-முத்து, டாக்டர் சிவா-சிவா, உயர்ந்த மனிதன்-மனிதன், ராஜா-ராஜாதி ராஜா, அன்புக்கரங்கள்-துடிக்கும் கரங்கள், தெய்வ மகன்-தங்க மகன்.
சிவாஜி அவர்கள் இன்று நம்முடன் இல்லாவிட்டாலும் அவர் விட்டுச்சென்ற இடம், வெற்றிடமாகவே உள்ளது. தலைவர் சிவாஜி அவர்கள் மீது பெரும் மதிப்புக் கொண்டிருந்தார்.
ஒருமுறை சிவாஜியை விட ரஜினிக்கு பெரிய கட்டவுட் என்று பத்திரிக்கை செய்தி வந்த போது, உடனே தன்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார்.
இருவருக்கும் உலக அளவில் ரசிகர்கள் இருந்தாலும் அவர்கள் என்றுமே எளிமையே உருவாக இருந்தனர். எவ்வளவு பெரிய நிலையில் இருந்தாலும் ஒரு நாள் கூட படப்பிடிப்புக்கு நேரம் தவறியதில்லை.
சிவாஜி கணேஷனாக இருந்தாலும் சரி, சிவாஜி ராவாக இருந்தாலும் சரி இவர்களின் ரசிகன் எனச் சொல்வதில் ஒரு தனிக் கர்வமே இருக்கிறது.
இருவரும் "படையப்பா" படத்தில் ஒரே பிரேமில் நிற்கும் போது வரும் ஒரு உணர்வு.... எந்த ஒரு சினிமா ரசிகனாலும் உணர முடியும் !!!
20 வருடங்கள் ஆனாலும் சரி, 50 ஆண்டுகள் ஆனாலும் சரி, "படையப்பா" என்றுமே திகட்டாத ரஜினியிஸமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
- ரசிகன்
|